பெகாசஸ் ஸ்பைவேர் (ஒற்றியறி மென்பொருள்) பற்றிய செய்தி உலகையே பற்றி எரியச் செய்கிறது. குறிப்பாக இந்தியாவில் தேசிய பாதுகாப்பு சார்ந்த எந்த அச்சுறுத்தலும் இருப்பதாக நிரூபிக்கப்படாத ஆளும் பி.ஜே.பி அமைச்சர்கள் முதல் செய்தியாளர்கள் வரை பலரது செல்பேசியிலும் இந்த ஸ்பைவேர் செருகப்பட்டு, அவர்களின் அத்தனை செயல்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது த வயர் உள்ளிட்ட ஊடகங்களின் அம்பலத்தால் தெரிய வருகிறது. அந்தரங்கத்தை பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் ஐ ஃபோன்கூட இதில் தப்பவில்லை. செல்பேசிகளில் கள்ளத்தனமாக இணைக்கப்படும் இந்த உளவுக் கருவி அவர்களின் உரையாடல்கள், கேலரி, செல்லுமிடம் ஆகியவற்றை மட்டுமே பதிவு செய்து வேவு பார்ப்பதில்லை. செல்பேசி செயல்படாதபோதுகூட, அதாவது ஆன் செய்யாதபோதுகூட, அதை இயக்கி வேவு பார்க்க முடியும்.

இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ என்ற நிறுவனம் தயார் செய்து, அரசுகளுக்கு மட்டும் விற்கும் ஸ்பைவேர்தான் பெகாசஸ். வழக்கமாக அரசாங்கங்கள் செய்யும் உளவு வேலை போன்றது அல்ல இது. வழக்கமான உளவு வேலை என்றால் அதற்கு சில நெறிமுறைகள் உண்டு. யாரின் செல்பேசியை டேப் செய்யப் போகிறோம் என்று ரகசிய கோப்புகள் உருவாக்கப்பட்டு, உயரதிகாரிகள் அனுமதி பெற்று உளவு நடத்தப்படும். முறைகேடுகளைத் தடுக்க, அந்தப் பதிவுகள் பாதுகாப்பாக வைக்கப்படும். ரத்தன் டாடாவும் நீரா ராடியாவும் பேசிய அத்தகைய ஒரு ஆடியோதான் தேசத்தையே அதிர வைத்தது. அந்த ஆடியோ பதிவுகளில் ஒரு இடத்தில் நீரா ராடியா எடை போட்டுவிட்டாரா என்பது பற்றிய பகிர்வும் கசிந்தது. இது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு சார்ந்த எவ்வித முறைகேடுகளையும் சுட்டிக் காட்டும் உரையாடல் அல்ல, அந்தரங்கமான ஒன்று என நினைவில் கொள்ளவும். வெறுமனே செல்பேசி உரையாடல்களை டேப் செய்வதிலேயே இத்தகைய அந்தரங்க மீறல்கள் நடக்கும்போது பெகாசஸ் போன்ற ஸ்பைவேர் பற்றி நினைத்து பாருங்கள். அதற்கு இந்திய சட்டத்தில் இடமே இல்லை.

ஒரு மத்திய பி.ஜே.பி அமைச்சரின் மனைவி, வேலைக்காரர்கள்கூட பெகாசஸ் ஸ்பேர்வேர் உளவுக்கு ஆளாகியிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. கர்நாடகாவில் ஜே.டி.எஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது முதல் முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வழங்கிய சர்ச்சைக்குரிய தீர்ப்புகள் வரை இதன் தாக்கம் இருந்தது என சந்தேகிக்கப்படுகிறது. பெகாசஸ் உளவு பற்றிய சர்ச்சை ஒரு கற்பனை, பரபரப்புக்காக கிளப்பப்பட்டிருக்கிறது என இந்திய ஐ.டி அமைச்சர் கூறுகிறார். இந்தியாவில் அரசியல்வாதிகள், செய்தியாளர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களின் செல்பேசி எண்கள் பெகாசஸ் மூலம் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் போன்ற ஊடகங்கள் சொல்கின்றன.

தேசங்களை ஆட்சி செய்யும் அரசுகளுக்கு மட்டுமே பெகாசஸ் ஸ்பைவேர் விற்கப்படுவதாக அதைத் தயாரித்து விற்கும் என்.எஸ்.ஓ கூறுகிறது. இந்திய அரசு பெகாசஸ் உடன் எந்த ஒபந்பந்த போட்டதாக ஒப்புக்கொள்ளவும் இல்லை, மறுக்கவும் இல்லை. அதனால் இந்த இரண்டு கேள்விகளுக்கும் இந்தியாவை ஆளும் பி.ஜே.பி அரசு பதில் சொல்லியாக வேண்டும். இந்திய அரசு அதிகாரபூர்வமாக பெகாசஸ் மூலமாக செல்பேசிகள் மீது ஸ்பைவேர் தாக்குதல் நடத்தியதா அல்லது இந்திய அரசின் அனுமதி இல்லாத வேறு தேசம் ஏதேனும் இந்தத் தாக்குதலை நடத்தியதா… இரண்டில் எது நடந்திருந்தாலும் அது ஏற்கப்பட முடியாத குற்றம்.

எதிர்க்கட்சியினரை உளவு பாத்ததற்காக ஒரு காலத்தில் அமெரிக்க அதிபர் நிக்சன் பதவி விலக நேர்ந்தது. ஆனால் இது வெறும் உளவு அல்ல, தாக்குதல். ஒருவரின் செல்பேசியின் மீது நடத்தப்படும் இந்தத் தாக்குதல் அவரது அந்தரங்கத்தின் அத்தனை மாண்புகளையும் சிதைக்கிறது. அத்தனை உரிமைகளையும் பறிக்கிறது. இந்திய தேசத்தின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் மீது அல்ல, சாதாரண பிரஜைகள், நீதிபதிகள், அரசியல்வாதிகள், செய்தியாளர்கள் மீது இத்தகைய தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

புலனாய்வு செய்தியாளர்களில் பலருக்கு நீண்ட காலமாகவே ஒரு பழக்கம் உண்டு. புதிய செல்பேசி வாங்கியவுடன், கருவியைத் திறந்து, அதன் கேமராவையும் மைக்கையும் நிரந்தரமாக நீக்கிவிடுவார்கள். யாருடனாவது செல்பேசியில் பேசுவதென்றென்றால் இயர்ஃபோன் மூலமாக பேசுவார்கள். ஆனால் செல்பேசியில் ஸ்பைவேர் இருந்தால் இயர்ஃபோன் மூலமாக பேசும்போதுகூட அதை ஒட்டுக் கேட்க முடியும். ஆனால் செய்தியாளர்களுக்கு அதைவிட பெரிய பிரச்சனைகள் உண்டு. பிறர் ஒட்டுக் கேட்டு பயன்படக்கூடிய அளவுக்கு முக்கியமான விஷயங்களை அவர்கள் செல்பேசி உரையாடல்களில் பேசுவதில்லை.

தங்களுக்குத் தகவல் தரும் முக்கியமான நபர்களை சந்திக்கும் இடங்களில் ஸ்பேவேர் மூலம் கேமராவை ஆன் செய்து தகவல் தருபவர்களின் புகைப்படங்களை எடுக்க முடியும். மைக் ஆன் செய்து அந்த உரையாடல் முழுவதையும் பதிவு செய்ய முடியும். செல்பேசியை அணைத்து மேஜை மீது வைத்திருந்தால்கூட இதைச் செய்ய முடியும். அதைத் தவிர்க்க, கேமராவையும் மைக்கையும் நீக்குவதே ஒரே வழி என புலனாய்வு செய்தியாளர்கள் கருதுகிறார்கள். ஏனென்றால் இது வெறுமனே அவர்கள் சார்ந்த பாதுகாப்பு, ரகசிய காப்பு, அந்தரங்க விஷயம் மட்டுமல்ல, அவர்களுக்கு அதிமுக்கியமான தகவல்களைத் தரும் நபர்களின் பாதுகாப்பு, ரகசிய காப்பு சார்ந்ததும்கூட.

செல்பேசியும் இணையமும் ஆட்சி செய்யும் காலத்தில் எங்கும் நிறைந்திருக்கின்றன கேமரா கண்களும் ஒலிவாங்கி காதுகளும். எவர் மீதும் நம்பிக்கை இல்லாத மன்னர் அதன் வழியே நம்மை உற்றுப் பார்க்கிறார். மன்னர் செல்பேசியின் வழியாக உள்நுழைந்து தன்னைத் தான் பார்க்கிறார் என எல்லோரும் உணர்ந்து கேமராவின் கண்களை இப்புறமிருந்து உற்று நோக்கும் வேளையில் மன்னர் அந்த எதிர்பாராத காரியத்தைச் செய்கிறார். எப்போதும் வரும் பருவ மழையில், எப்போதும் இல்லாமல் தனது குடையை தானே விரித்துக்கொண்டு ஏழு ஆண்டுகளில் பார்க்காத பத்திரிகையாளர்களை சந்திக்க செல்கிறார். இந்திய தேசத்தை வீழ்த்த வந்த 54 இன்ச் மார்பு கொண்ட பெகாசஸ் குதிரையை நோக்கி வாய் பிளந்தபடி மைக் நீட்டிக்கொண்டு ஒடுகிறார்கள் செய்தியாளர்கள்.