ஆயிரம் சொற்கள் -2

நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திப்பது வாழ்வின் அழகிய தருணங்களில் ஒன்று. மேலோட்டமாய்ப் பார்த்தால் இதென்ன பிரமாதம் என்று கூடத் தோன்றலாம். இல்லை அன்பரே இதற்குள் பல விஷயங்கள் உண்டு. பக்கத்தில் அமர்ந்து படித்த வகுப்புத் தோழமை அடுத்த வீட்டில் குடியிருந்து ஒன்றாக விளையாடிய சினேகம் தொடங்கித் தொடர்ச்சியாகச் சென்று வரக்கூடிய பலசரக்குக் கடையில் பொட்டலம் கட்டுபவர் வரைக்கும் நம் வாழ்வில் பலரும் பல கதாபாத்திரங்கள். காலத்தின் காட்சி மாற்றத்தில் அவர்களில் பெரும்பாலோர் விடைபெற்று வேறு நபர்கள் வந்து நிறைவது சகஜம். நாம் யாரையெல்லாம் நிரந்தரமாய் நினைவில் வைத்திருக்கிறோம் என்பது சுவாரசியம். மறத்தல் என்பதும் நினைத்தலின் பகுதி தான். பலரையும் நாம் அவரவர் பின்புலத்தோடு சேர்ந்தே நினைவில் இருத்தியிருப்போம். சீருடையோடு பார்த்தால் தான் போஸ்ட்மேனை அடையாளம் தெரியும். மருந்துக் கடையின் கல்லா அருகே அமர்ந்திருப்பவரை மார்க்கெட்டில் சந்தித்தால் கூட மனம் விழிக்கும். யாரிவர் என்று திகைக்கும்.  இடம் மாற்றிப் பார்ப்பது தருகிற செல்லக் குழப்பம் அது.

நம்மில் பலரும் நினைவின் முனையில் நின்றுகொண்டிருப்பதாகவே கருதுகிறோம். என்னை நினைவிருக்கிறதா என்பது இந்த உலகத்தின் மிக முக்கியமான கேள்விகளில் ஒன்று. பல நூறாண்டுகளாக மொழியின் மேனியில் அனுதினமும் யாராவது யாரிடமாவது கேட்டுக் கொண்டே இருக்கக் கூடிய கேள்வி. நினைவு மேலாண்மையின் ஆகச்சுவையான பங்குபாகம் நாம் மறக்கும் விஷயங்களிலில் தான் அடங்குகிறது. யாரெல்லாம் நினைக்கப் படுகிறார்கள் யாரெல்லாம் மறக்கப் படுகிறார்கள் என்பது ஒளியுடன் உறையும் இருள். ஒரு குழந்தையின் ஆவலோடு என்னை நினைவிருக்கிறதா என்று கேட்கையில் விறுவிறுவென வருடங்களைப் பின்னோக்கித் தள்ளிச் சென்று மனமென்னும் கலயமொத்தத்தையும் அலசிப் பார்த்து என்ன செய்தாவது அவர்களது சீட்டை துல்லியமாக எடுத்துத் தருகிறது மனக்கிளி. அந்த நிமிடத்தில் ஒருவர் அடையும் ஆசுவாசம் இருக்கிறதே பல பவுன் தங்கத்துக்கு நிகரானது அது.

மறப்பது மனித இயல்பு. ஆனாலும் அதனைத் தனியுறவின் பகுதியாகக் கொள்வது மனத்தின் அடைவு. எப்படியெல்லாம் பழகினோம் என்னை நீ எப்படி மறந்தாய் என்பது வலி முகிழும் கடல். சென்னை பன்னாட்டு முனையத்தில் காத்திருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. எனக்கு மூத்தவளை வரவேற்பதற்காகச் சற்று நேரமிருக்கும் போதே அந்த இடத்தை அடைந்திருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த பொதுக் கூடங்களில் விமான நிலையத்தில் காத்திருக்கும் சமயங்களைச் சொல்லியாகவேண்டும். வேற்றுக் கிரகவாசிகளைப் பார்ப்பது போல் அத்தனை விதவிதமான மனித தரிசனம் அங்கே தான் கிடைக்கும். நிலையத்தின் வாசலில் இருக்கிற காஃபி ஷாப்பில் எனக்கென்று ஒரு குவளையைப் பெற்றுக் கொண்டு அருகிலேயே நின்றபடி பானம் பருகினேன். அந்தக் காட்சி அங்கே தொடங்கிற்று.

என்ன ஒரு சர்ப்ரைஸ் என்றவாறே பெரிய சப்தத்தோடு கூவியபடி அவனும் அவளும் சந்தித்துக் கொண்டார்கள். எத்தனை வருடங்கள் ஆயிற்று என்பது தொடங்கி முதல் சில நிமிடங்கள் பொதுவான விசாரணை இன்ன பிற இத்யாதிகள் எல்லாம் இனிதே நிறைவுற்றன. ஏண்டா நான் உன்னைத் தேடின அளவுக்கு நீயும் என்னைத் தேடவே இல்லை என்றாள் அவன் அதில் லேசாய்த் தாக்குற்றவனாய்த் தான் வெளிநாடு போன பிறகு நண்பர்கள் பலரது தொடர்பையும் இழந்து விட்டதை எடுத்துரைத்தான். உன்னை நான் எந்தெந்த வழிகளிலோ தேடிக் கொண்டே தான் இருந்தேன். நீ சமூக வலைதளங்களில் கூட இல்லவே இல்லை என்றான். சர்றே உரத்த குரலில் அவள் “நானும் உன்னைப் பழைய முகவரிகளில்  தேடினேன் பொதுவானவர்களிடம் உன்னைப்பற்றி விசாரித்துக் கொண்டே இருந்தேன்” என்பதை எல்லாம் சொல்லிக் கொண்டே வந்தவள் லேசாய்க் கண்கலங்கி ஒரு பெண்ணால் கூடப் படித்த ஒரு நண்பனை இதற்குமேல் வேறு எப்படி தேட முடியும் கொஞ்சமாவது யோசித்துப்பார் நீ என்னை இன்னும் தேடி இருக்க வேண்டாமா நீ என்னை வந்தடைவது நான் உன்னை வந்தடைவதை விடவும் சுலபம் தானே?” என்று தழுதழுத்தாள். ஓரிரு மௌன நொடிகளுக்கப்பால்

சட்டென்று அவள் “இரு இரு என்ன நீ என்னைய பாக்யலக்ஷ்மின்னு என் முழுப்பேரைச் சொல்லிக் கூப்டுட்டு இருக்கே…? நீ எப்பவும் என்னை வேற ஒரு பெட்நேம்ல தானே கூப்டுவே..அதை மறந்திட்டியா?” என்றாள்.
அவன் முகம் லேசாய் இருண்டது. உண்மையாகவே அவன் அந்தப் பெயரை முற்றிலுமாக மறந்திருந்தான் போலும். தனக்குள் தடுமாறினான். தேடிப் பல தூரம் ஓடித் திரும்பினான். பற்களால் உதடொன்றைக் கடித்தான். கையை மடக்கி இறுக்கிக் கொண்டான். அவனை மீறி அவன் பதற்றம் லேசாக வழியலாயிற்று.
அவன்  பதவி இழந்த மன்னனைப் போல் அந்த இடத்தில் நின்று கொண்டிருந்தாள் அவளால் அவன் ஞாபகத்தில் தான் தன் பெயர் மறுக்கப்படுவதை தாங்கவே முடியவில்லை இருவருடைய நினைவுகளை நிரடி எத்தனையோ தகவல்களை அவன் அடுக்கினாலும் அவளுக்குப் போதவே இல்லை. இதெல்லாம் இருக்கட்டும் என் பெயர் அதை நீதானே எனக்குச் சூட்டினாய். இப்போது அதை எப்படி மறந்தாய் சாவியைத் தொலைத்தவன் கதவுகளை உடைக்கிறாற் போல் அவன் சொன்னதெதுவும் பலனளிக்கவில்லை.

ராஜ சிலம்பு வேறு தனது சிலம்பு வேறு என்று முழங்கி வென்ற கண்ணகியின் முன் செயலறுந்து தோற்ற பாண்டிய மன்னனாகவே அவன் நின்றான்.

அந்த இடத்தில் எதோவொரு பேரழிவு நிகழப் போகிறதோ என்கிற அச்சத்தை உருவாக்கியபடி அவர்களிடையே அதற்கடுத்த மௌனம் நிகழ்ந்தது. விளையாடப் போன குழந்தையைத் தேடிய திசைகளிலெல்லாம் கிடைக்காமல் போகையில் ஏற்படுகிற கணநேரப் பதற்றம் அதே குழந்தை வேறோரு திசையைத் திறந்துகொண்டு இயல்பாக வந்து சேர்கிற நிமிடத்தில் ஆனந்தக் கலக்கமாக மாறி வெடிக்கும் பேரொலிச் சொல் ஒன்றைப் போல் சட்டென்று அவனுக்கு அந்தப் பெயர் நினைவுக்கு வந்து சேரவே ********* தானே என்று அந்தச் செல்லப் பெயரை உரக்கக் கூவினான். போதுமா என்னவோ ரொம்பத் திட்டுறியே..என்றபடியே தன் மீட்சியைத் தாளவொண்ணாமல் லேசாய்க் கலங்கிய கண்களோடு வேறு பக்கம் பார்த்தான். அவள் அவனை நெருங்கிச் செல்லமாக அவன் மார்பில் குத்தியபடியே என்ன இருந்தாலும் மறந்து போனது நிசம் தானே என்றவாறு சிரித்தாள். அதற்கு முந்தைய கணத்தின் இறுக்கம் தளர்ந்து இப்பவாச்சும் ஒரு காஃபி வாங்கித் தர்றியா என்று அதே செல்லப் பேரை நாலைந்து முறை விளித்தவாறே அவன் பொய்க் கோபம் காட்ட அவளும் சிரித்துக் கொண்டே வா என்று காஃபி ஷாப் நோக்கித் திரும்பினார்கள்.

அத்தனை நேரப் பரிவர்த்தனை மொத்தத்தையும் கவனித்துக் கொண்டிருந்த நான் சட்டென்று மொழியறியாத அன்னியன் ஒருவனது பாவனையோடு அந்த இடத்தைக் கடந்து நகர்ந்தேன்.

பெயர் என்பது வெறும் பெயரல்ல. அது உயிரின் பிரதி. அவரவர் பிம்பநிழல். மனிதனுடைய வாழ்வும் அவனது பெயரும் ஒருவலப் பறவைகளைப் போல் நெடிய தூரம் பயணிப்பவை. இடம் அடைந்த பிறகு இருவேறு திசைகளை நோக்கிப் பிரிந்து விடுவதும் வாழ்வின் வசியநேர்தல் தான்.

வாசிக்கச் சில வரிகள்

பொதுவாக, பெரிய நடிகர்களுக்கு ஒரு ‘கம்சன் சிண்ட்ரோம்’ இருக்கும். தங்களை மீறி பாலகிருஷ்ணர்கள் வந்துவிடக் கூடாது என்பதில் அவர்கள் பெருமுனைப்போடு இருப்பார்கள். அது ஜெய்சங்கரிடம் அறவே இல்லை என்பதும் அவரது தனிச்சிறப்புகளில் ஒன்று. இந்தப் பாத்திரத்தில் என்னை விட அவர் நல்லா பொருந்திவருவார். இந்தப் பாத்திரத்தை அவருக்குக் கொடுத்துவிடுங்கள் என்று கூறும் பெருந்தன்மை அவரிடம் நிறைந்திருந்தது. சக கதாநாயகனுக்கு விட்டுக்கொடுக்கும் பண்பு அவருக்கு மட்டுமே இருந்தது.
கமல்ஹாஸன் திரையுலகக் கர்ணன் ஜெய்சங்கர்- இனியன் கிருபாகரன் எழுதிய ஜெய்சங்கரின் வாழ்க்கை சரித நூலுக்கான வாழ்த்துரையில்

புதியBook
இக்கிகய் என்ற சொல் எனக்கு அபி சொல்லித் தான் தெரியும். அன்றைக்கு அசுவாரசியமாகத் தான் கேட்டுக் கடந்தேன். வேறோரு நாள் எதையோ தேடப் போய் இக்கிகய் தன் உலகத்தைத் திறந்து தரவே கொஞ்சம் நிறையவே அதனுள் பயணிக்க முடிந்தது. தமிழில் நல்ல புத்தகம் அகப்படுகிறதா என்று பார்த்தேன். சமீபத்தில் கிடைத்தது. ஜென் இத்யாதிகளில் மனப்ரியம் கொண்டவர்கள் இந்த நூலை வாசிக்கலாம். பிடித்துக் கொள்ளும்.

இக்கிகய்-நீண்ட ஆயுளுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கான ஜப்பானிய இரகசியம்
ஹெக்டர் கார்சியா மற்றும் பிரான்செஸ்க் மிரயியஸ் இருவரும் எழுதியதைத் தமிழில் பி.எஸ்.வி குமாரசாமி பெயர்த்திருக்கிறார். மஞ்சுள் பிரசுர வெளியீடாக வந்திருக்கிற இதன் விலை 350 ரூ.
இக்கிகய் IKIGAI என்பதன் விளக்கம் “ஒவ்வொரு தினமும் நாம் உற்சாகமாகத் துள்ளியெழுவதற்கான காரணம்”

பழைய புஸ்தகம்

மணிமேகலை பிரசுரம் எத்தனையோ வினோதமான புத்தகங்களை வெளியிட்டிருக்கிறது. எண்பதுகளில் வெளியான இந்த ஒன்றும் அந்த வரிசையில் வரும். சமரசம் செய்வது எப்படி என்பது இதன் தலைப்பு. உறவு நட்பு அலுவல் எனப் பல தளங்களிலும் முரண்பாடுகள் நிகழ்வதிலிருந்து வாழ்க்கை எனும் பட்டுத் துணி கிழியத் தொடங்குகிறது. அதைத் தையலிட்டுப் புனரமைப்பதற்கான தங்க ஊசியிலிட்ட நூலின் பெயர் தான் சமரசம். பேச்சுவார்த்தை பேசாமௌனத்தை எங்கனம் நெகிழ்த்த முடியும் என்பதை எடுத்து உரைக்கிறது. பெயர் தெரியாப் பண்டத்தை மெனு கார்டில் நிரடித் தேர்ந்தெடுத்து ருசிக்கிற அதே சுவையோடு நகர்ந்து நிறைகிற நூல். கிடைத்தால் வாசிக்கவும். கிடைக்காவிட்டால் பொறாமையோடு திகழவும்

பாட்டுப்புத்தகம்

செவ்வான மேகங்கள் குழலாகுமா
செந்தூரம் விளையாடும் முகமாகுமா
நடை போடுமா இசை பாடுமா
நடந்தாலும் அவை யாவும் நீயாகுமா
-கண்ணதாசன்

கன்னட சூப்பர்ஸ்டார் விஷ்ணுவர்த்தன் நாயகனாக நடித்து நேரடித் தமிழ்ப் படமாக 1973 ஆமாண்டு வெளியான படம் அலைகள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ஜெயச்சந்திரன் பாடிய பொன்னென்ன பூவென்ன கண்ணே பாடல் ஒரு செல்ல வருடல். பாடிய குரல் ஒயின் தூறல். இடையிசை வழிந்தோடுகிற காலைவெய்யில். மொத்தத்தில் இந்தப் பாடலொரு தீராமுத்தம்.

https://www.youtube.com/watch?v=lEAdIPWUHDY&t=146s

இந்தக் கணத்தின் கவிதை

நீ..ளு..ம்
யாமம்
பாடும் கஜல்
உனது பெயர்

ஜான்ஸி ராணி ஈஸ்ட்ரோஜன் கவிதைகள் வாசகசாலை வெளியீடு விலை ரூ 80

தொடரலாம்

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. உங்களுக்கு என்னவெல்லாம் பிடிக்காது : ஆத்மார்த்தி
  2. வழியெலாம் மழை -ஆத்மார்த்தி
  3. சைக்கிளில் சுற்றி வருபவரின் பாடல்: ஆத்மார்த்தி