கட்டுரையாளர்கள்:  சாரா ஆர். வாரன், டேனியல் மேயர்-காட்கின், நாதன் ஸ்டோல்ட்ஸ்ஃபஸ், புளோரிடா மாநில பல்கலைக்கழகம்

தமிழில்: கோகுலகிருஷ்ணன் கந்தசாமி

1930 களில் ஹிட்லருடைய வெற்றியும் நாஜி கட்சியின் எழுச்சியும் இலட்சக்கணக்கான   ஜெர்மானிய ஆண்கள் மற்றும் பெண்கள்  அளித்த வாக்குகளின் அடிப்படையில் நிகழ்ந்தது.

ஆனால் வதை முகாம் காவலர் இர்மா கிரீஸ் மற்றும் வதை முகாம் கொலைகாரர் இல்ஸ் கோச் போன்ற ஒரு சில பெண்களைத் தவிர தேசிய சோசலிச ஜெர்மானிய தொழிலாளர் கட்சியை அல்லது நாஜி கட்சியை ஆதரித்த பல  பெண்களைப் பற்றி நாம் அதிகம் அறிந்திருக்கவில்லை . சாதாரண நாஜி பெண்கள் குறித்து நம்மிடம் உள்ள சிறிய தரவுகளும் பெரும்பாலும் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை. மறக்கப்பட்டுவிட்டது அல்லது புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நாஜி இயக்கத்தின் எழுச்சி அல்லது வளர்ச்சி குறித்து நாம் அரைகுறையாகப் புரிந்து கொண்டிருக்கிறோம். இது கிட்டத்தட்ட பெரும்பான்மையாக ஆண் உறுப்பினர்களை மையமாகக் கொண்ட கட்சி என்று கருதப்பட்டுள்ளது.

1934 ஆம் ஆண்டில் ஜெர்மானிய பெண்கள் எழுதிய “நான் ஏன் நாஜியாகிவிட்டேன்” என்ற தலைப்பில் 30 க்கும் மேற்பட்ட கட்டுரைகள் பல தசாப்தங்களாக பாலோ ஆல்டோவில் உள்ள ஹூவர் நிறுவனத்தின் காப்பகங்களில் கவனிக்கப்படாமல் கிடந்துள்ளன. இந்த கட்டுரைகளை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு புளோரிடா மாநில பல்கலைக்கழக பேராசிரியர்கள் மூன்று பேர் அவற்றை மொழிபெயர்க்க ஏற்பாடு செய்தபோதுதான் அவை வரலாற்று சிறப்பு மிக்க கட்டுரைகள் என கண்டுபிடிக்கப்பட்டன. தற்போது அந்த கட்டுரைகள் டிஜிட்டல் முறையில் கிடைத்தாலும் பரவலான கவனத்தைப் பெறவில்லை.

அனைவரும் இரவுவிடுதி நடன நங்கைகளல்ல

ஹோலோகாஸ்ட் ஆய்வுகள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் அரசியல் நடத்தை ஆகியவற்றை குறித்து ஆராய்ச்சி செய்யும் அறிஞர்கள் என்ற வகையில், இந்த கட்டுரைகள் நாஜி கட்சியின் எழுச்சியில் பெண்களின் பங்கு குறித்து ஒரு நுண்ணறிவைக் கொடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். முதலாம் உலக யுத்தத்திற்கு  பின்னர் பெண்ணியம் குறித்த பெண்களின் அணுகுமுறைகள் எந்த அளவிற்கு வேறுபடுகின்றன என்பதையும் அவை சுட்டிக்காட்டுகின்றன – சுதந்திரம், கல்வி, பொருளாதார வாய்ப்பு மற்றும் பாலியல் சுதந்திரம் ஆகியவற்றில் பெண்கள் அதிக முன்னேற்றம் கொண்டிருந்த காலம்.

1933 ஆம் ஆண்டில் நாஜிக்கள் ஆட்சிக்கு வருவதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்பு ஜெர்மானிய பெண்கள் இயக்கம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்தது. 1870 களில் இருந்து சிறுமிகளுக்கான உயர்தர உயர்நிலைப் பள்ளிகள் இருந்தன, மேலும் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜெர்மானிய பல்கலைக்கழகங்கள் பெண்களுக்கும் திறக்கப்பட்டன. பல ஜெர்மன் பெண்கள் ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் நாவலாசிரியர்களாக மாறினர். 1919 இல், ஜெர்மன் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. 1933 வாக்கில், ஆண்களை விட மில்லியன் கணக்கான பெண்கள் அதிகமாக இருந்தனர் – பெர்லினில் ஒவ்வொரு 1,000 ஆண்களுக்கும் 1,116 பெண்கள் இருந்தனர் – ஹிட்லர் மற்றும் தேசிய சோசலிச வேட்பாளர்களுக்கு ஆண்களைப் போலவே  பெண்களும் அதே அளவிற்கு வாக்களித்தனர்.

அனைவருக்கும் அனைவரும் எதிரி

ஹூவர் நிறுவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கட்டுரைகள்  சில அவர்கள் ஏன்  நாஜியை ஆதரித்தனர் என்பதற்கான நுண்ணறிவைத் தருகின்றன.

முதலாம் உலகப் போரின் முடிவிற்கும் ஹிட்லரின் அதிகாரத்திற்கும்  இடையிலான காலகட்டத்தில் அதிபர் ஈபர்ட் தலைமையிலான வீமர் சகாப்தத்தின் அணுகுமுறைகளில் அதிருப்தி இருந்தது

பெண்களின் எழுத்தில் தெளிவாக உள்ளது. கட்டுரை எழுதியவர்களில் பெரும்பாலோர் அரசியல் அமைப்பின் சில அம்சங்களுடன் தங்கள் வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஒருவர் பெண்களின் வாக்குரிமையை “ஜெர்மனிக்கு ஒரு தீமை” என்று அழைக்கிறார், மற்றொருவர் அரசியல் சூழலை “தவறானது” என்றும் “அனைவருக்கும் அனைவரும் எதிரி ” என்றும் விவரிக்கிறார்கள்.

பெர்லினுக்கு வெளியே வசிக்கும் 54 வயதான மார்கரெத் ஷ்ரிம்ப்ஃப், தனது அனுபவத்தை விவரிக்கிறார்:

“நான் கம்யூனிஸ்டுகள் முதல் தேசியவாதிகள் வரை அனைத்து… கட்சிகளின் கூட்டங்களில் கலந்து கொண்டேன்; ஃப்ரீடெனாவ் [பெர்லின்] என்னுமிடத்தில்  நடந்த ஜனநாயகக் கூட்டமொன்றில் முன்னாள் காலனித்துவ மந்திரி, டெர்ன்பர்க் என்ற யூதர் பேசிக் கொண்டிருந்தபோது ,  ‘ஜெர்மானியர்கள் உண்மையில் என்ன திறன் கொண்டவர்கள்?; முயல்களை இனப்பெருக்கம் செய்யலாம். ’ என்றார். நான் அதனைக் கேட்டேன்.

அன்புள்ள வாசகர்களே, பெரிதும் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மக்கள், அதாவது ஆண்கள் இந்த யூதரிடம் எதிர்ப்புத் தெரிவித்ததாக நினைக்க வேண்டாம்.  ஒரு ஆண் கூட சத்தம் போடவில்லை, அவர்கள் அமைதியாக இருந்தார்கள்.  ஒரு பரிதாபகரமான, பலவீனமான ஒரு சிறிய பெண் தன் கையை உயர்த்தி, யூதரின் வெட்கக்கேடான கருத்துக்களை வலுக்கட்டாயமாக எதிர்த்தார்; இதற்கிடையில் அந்த யூதர் மற்றொரு கூட்டத்தில் கலந்து கொள்ள ஓடிவிட்டார்.

இந்தக் கட்டுரைகளை முதலில்  கொலம்பியா பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர்  தியோடர் ஆபெல் தான் சேகரித்தார். அவர் நாஜி பிரச்சார அமைப்பின் ஒத்துழைப்புடன் தாராளமான பரிசுகளுடன் கட்டுரைப் போட்டியை ஏற்பாடு செய்தார். ஏறக்குறைய 650 கட்டுரைகளில், சுமார் 30 கட்டுரைகளை பெண்கள் எழுதியுள்ளனர். ஆபேல் அந்த 30 கட்டுரைகளையும் ஒதுக்கி வைத்து, அதில் அவற்றை தனித்தனியாக ஆராய  விரும்புவதாக அடிக்குறிப்புகள் எழுதினார். ஆனால் அதனை அவர் ஒருபோதும்  செய்யவில்லை. 1938 இல் வெளியிடப்பட்ட ” ஹிட்லர் ஏன் அதிகாரத்திற்கு வந்தார்?” என்ற அவரது புத்தகத்திற்கு ஆண்களின் கட்டுரைகள் மட்டுமே அடிப்படையாக அமைந்தது. அதுவே நாஜிக்கள் அதிகாரத்திற்கு  வந்தது பற்றி உலகளவில் ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது.

ஆபெலின் கண்டுபிடிப்புகளைச் சுருக்கமாக, வரலாற்றாசிரியர் இயன் கெர்ஷா , ஹிட்லர் அதிகாரத்தை அடைந்தது  பற்றிய தனது புத்தகத்தில் எழுதினார். ஹிட்லரின் அறைகூவல்கள் மற்றும் அவரது இயக்கம் எந்தவொரு தனித்துவமான கோட்பாட்டின் அடிப்படையிலும் இல்லை என்பதை அந்தப் புத்தகம் காட்டியது.

ஆண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் பிரிக்கமுடியாத “தேசிய சமூகம்” – வோல்க்ஸ்ஜெமின்சாஃப்ட் -எனும் நாஜிக்களின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டனர் என்றும், கிட்டதட்ட அதேபோன்ற விகிதத்தினர் தேசியவாத, தேசபக்தி மற்றும் ஜெர்மானிய கருத்துக்களால் தூண்டப்பட்டதாகவும் அவர் முடிவுக்கு வந்தார் . எட்டில் ஒரு பகுதியினர் தான் யூதர்கள் மீதான பழமைவாத கருத்தியல் வெறுப்பினை அடிப்படையாக கொண்டிருந்தனர்.

மூன்றில் இரண்டு பங்கு கட்டுரைகள் யூதர்கள் மீது ஒருவித வெறுப்பை வெளிப்படுத்தினாலும், ஏறக்குறைய ஐந்தில் ஒரு பகுதியினர் மட்டுமே ஹிட்லர் என்ற தனிமனிதனால் உந்துதல் பெற்றனர்,  ஈர்க்கப்பட்டனர். கட்டுரைகள் நாஜி தலைவரால் கவர்ந்திழுக்கப்படும் காரணத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை  வெளிப்படுத்துகின்றன.

ஹிட்லரின் வழிபாட்டு முறை

ஆண்களைப் பொறுத்தவரை,  ஹிட்லர் வழிபாட்டு முறை ஜெர்மனியின் ஆளுமைமிக்க தலைவராகவும் ஜெர்மானியர்களை வழிநடத்தக் கூடியவராகவும் ஹிட்லரை காணவைத்தது.

பெண்களைப் பொறுத்தவரை தங்களை பலவற்றில் ஒதுக்கி வைத்திருந்த கூட்டத்தினால், நாஜிசத்தின் கூறுகளால் அவர்கள் வசீகரிக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. பெண்களின் கட்டுரைகள் மத வழிபாடு மற்றும் ஹிட்லர் வழிபாட்டு முறைகளை ஒன்றாக குறிக்கின்றன. பெண்கள் நாஜி சித்தாந்தத்தை விட வறுமை போன்ற பிரச்சினைகளுக்கு நாஜிக்களால் முன்மொழியப்பட்ட தீர்வுகளால்  அதிகமாக ஈர்க்கப்பட்டார்கள்.

ஜெர்மனி சிப்பாயின் மனைவி, 38 வயதான ஹெலன் ராட்கே தனது கட்டுரையில், “எனது வீட்டு வேலைகள் அனைத்தையும் மறந்து தாயகத்திற்கு எனது சேவையைச் செய்வது தெய்வீகக் கடமை” என்று விவரிக்கிறார்.

இல்லத்தரசி மற்றும் தனியாக கல்வி கற்பிக்கின்ற ஆசிரியரான ஆக்னஸ் மோல்ஸ்டர்-சர்ம், ஹிட்லர்,  ஜெர்மனியின் மரியாதை, ஜெர்மனியின் அதிர்ஷ்டம் மற்றும் ஜெர்மனியின் சுதந்திரத்திற்காக கடவுளால் கொடுக்கப்பட்ட மீட்பர் என்று  கூறுகிறார்.

மற்றொரு பெண் தனது வீட்டிலிருந்த கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்கிய நட்சத்திரத்தை மாற்றிவிட்டு ஹிட்லரின் புகைப்படத்தை மெழுகுவர்த்திகளால்  அலங்கரித்தார். ஆண்களும் பெண்களும் தேசிய சமத்துவம் என்னும் செய்தியை நற்செய்தி போல் பகிர்ந்து  புதிய உறுப்பினர்களை மாற்றம் செய்தனர் என்று குறிப்பிடுகின்றனர். அத்தகைய ஒரு பெண்மணி தனது குடும்பத்தை நாஜிசத்திற்கு “மாற்றுவதற்கான” ஆரம்பகால முயற்சிகளை “கல்லில்  விழுந்த விதையாக” துளிர்கள் கூட முளைக்கவில்லை. பின்னர் அவர் தனது அஞ்சல் ஊழியருடனான உரையாடல்கள் மூலம் நாஜிசத்திற்கு “மாற்றப்பட்டார்” என்று குறிப்பிடுகிறார்.

ஹிட்லர் குறித்து பெண்கள் எழுதிய கட்டுரைகள் வரலாற்று ஆர்வங்களாக, சான்றுகளாக மட்டுமல்லாமல், சமூக துயரத்தின் போது சாதாரண மக்களை எவ்வாறு தீவிரவாத சித்தாந்தத்திற்கு ஈர்க்கப்படுவார்கள்  என்பதற்கான எச்சரிக்கையாகவும் செயல்படுகிறது.

அமெரிக்காவிலும் பிற நாடுகளிலும் தற்போதைய அரசியல் சூழலை விவரிக்க இதே போன்ற மொழிதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை, இன்றும் சிலர் செய்வது போல,  பெண்கள் தங்கள் சமூகத்தின் அனைத்து தீமைகளையும் என்ன விலை கொடுத்தாவது தங்கள் தேசத்தை மீட்டெடுப்பதன் மூலம் தீர்க்க முடியும் என்று நம்பியிருக்ககூடும்.

நன்றி:

https://theconversation.com/why-did-women-vote-for-hitler-long-forgotten-essays-hold-some-answers-134481