இங்கே எப்படி ராமாயணம் எனும் கற்பனைக் கதையைக் காட்டி, சக மனிதன் ஜெய் ஸ்ரீராம் சொல்லவில்லையென்றால் அவனை அடித்துக்கொல்லும் வகையில் சிலரை மிருகங்களாக அலைய விட்டிருக்கிறார்களோ, அப்படி மஹாவம்சம் எனும் கற்பனைக் கதையை இஷ்டத்துக்கு வளைத்து ஊட்டி வளர்க்கப்பட்டதுதான் சிங்கள, பவுத்த இனவாதம். நல்லவேளை, இந்தியாவுக்கு முதல் பிரதமராக நேரு கிடைத்தார். ஒருவேளை மோடி போன்ற ஒருவர் முதல் பிரதமர் ஆகியிருந்தால் என்னவாகி இருக்கும்? இத்தனைத் தொலைதொடர்பு சாதனங்கள், சமூகவலைதளங்கள் எல்லாம் இருக்கும் இந்தக் காலத்திலேயே காஷ்மீர் என்ன ஆகிறது, பல்கலைக்கழகங்கள் என்ன ஆகின்றன, எழுத்தாளர்களுக்கு என்ன ஆகிறது என்பதை நாம் பார்க்கிறோம். அப்படியென்றால் 1947ல் இப்படி ஒரு ஆட்சி இந்தியாவில் இருந்திருந்தால்? அதுதான் இலங்கை. இலங்கையைப் பற்றிப் பேசும் முன் இதைப் புரிந்துகொள்ளுதல் அவசியம்.

இலங்கையின் இன்னொரு சாபக்கேடு கையளவே உள்ள சிறிய மக்கட்தொகையில் ஏகப்பட்ட பிரிவுகள் இருப்பது. மொழிகளால் மட்டுமல்லாமல், ஒரு மொழி பேசும் மக்களுக்குள்ளேயே பூர்விக ரீதியில் சாதி ரீதியில் மத ரீதியில் மக்கள் பிரிந்திருப்பதும் அதன் சாபக்கேடுகளில் ஒன்று.

இலங்கை மக்கள்தொகையில் பெரும்பான்மை சிங்கள பவுத்தர்கள். ஆங்கிலேயர் காலத்தில் ஆங்கிலம் படித்து மிகப்பெரிய அரசியல் பதவிகளில் இருந்த தமிழர்களின் நிலை விடுதலைக்குப் பின் மொத்தமாகச் சரிகிறது. சிங்களம் எல்லா இடத்திலும் நுழைக்கப்பட, தமிழர்கள் முழுதாக ஒரங்கட்டப்பட்டார்கள். இதெல்லாம் நடந்துகொண்டிருந்தபோதே சிங்கள அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை, நிர்வாகத்திறமையின்மையை எதிர்த்தெல்லாம் அவ்வப்போது சிங்களர்களே ஆயுதப்புரட்சிகளைச் செய்திருக்கிறார்கள். இன்று தமிழர்களுக்கு எதிராக முன்னணியில் நிற்கும் ஜேவிபி கூட அப்படி உருவானதுதான். அப்புரட்சிகளையும் அப்புரட்சிகளை ஆரம்பித்தோரையும் அப்போதைய அரசுகள் கொடூரத்துடன்தான் அணுகியிருக்கின்றன. (இன்னும் சொல்லப்போனால் தமிழர்கள் ஆயுதப்போராட்டத்தில் இறங்கியதற்கு முன்னோடிகளே இவர்கள்தான்.)

அரசை எதிர்த்துக் கேள்வி கேட்போர் உடனே படுகொலை செய்யப்படுவது, பிரச்சினைக்குரிய மக்கள் திடீரென காணாமல் போவது, டயரை கழுத்தில் மாட்டி உயிருடன் எரிப்பது, இதெல்லாம் இலங்கை அரசின் அடக்குமுறைகளின் (யார் ஆண்டாலும்), இலங்கை அரசினால் தூண்டப்படும் கலவரங்களின் குணாதிசயங்களாகவே இருந்திருக்கின்றன. பொதுவாகவே வரலாறு நெடுக இலங்கை ஆட்சியாளர்களிடம் இருந்த இந்தக் குரூரம் இனப்படுகொலை அளவுக்கு பரிணாம வளர்ச்சி பெற்றதென்னவோ தமிழர்கள் ஆயுதப்போராட்டத்தைத் துவக்கிய பிறகுதான்.

இலங்கை ஆட்சியாளர்களின் போக்கைத் தொடர்ந்து கவனிக்கும்போது வன்முறையற்ற ஒரு அமைதிப்போராட்ட வழிக்கான பாதையை அங்கு சாத்தியமா என்பதை மிகவும் சந்தேகத்துடன்தான் பார்க்க வேண்டியதிருக்கிறது.

நான் முதல் பத்தியில் சொன்ன சூழலை ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். அகிம்சையை வழியாகக் கொண்ட காந்தி, அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்கள், விடுதலையடைந்ததில் இருந்து நமக்கு வாய்த்த மதச்சார்பற்ற பிரதமர்கள், நம் அரசியலமைப்புச் சட்டம் என எல்லாம் சேர்ந்து உருவாக்கிய பலமான ஜனநாயகக் கட்டமைப்புதான் நாம் பாஜகவுக்கு எதிராக ஜனநாயக ரீதியில் அரசியல் செய்ய இன்று துணையாக இருக்கிறது. இன்று இதையெல்லாம் படிப்படியாக பாஜக உடைத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நாம் பார்க்கிறோம். (இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கிடையே இருந்த உள்முரண்களை ஒரு பொது எதிரியை முன்வைத்துப் பார்க்கும்போது நாம் தள்ளிவைக்கத்தான் வேண்டும்) ஒருவேளை இதெல்லாம் இல்லையென்றால் இன்றைய ஃபாசிச பாஜகவை எதிர்கொள்ள நாம் திக்குமுக்காடிப் போயிருப்போம். அவர்களும் கொஞ்சம்கூட கூச்சமின்றி களத்தில் இறங்கி நம்மை வேட்டையாடி இருப்பார்கள். இப்படி ஒரு நிலைதான் இலங்கையில் காலம்காலமாக இருந்திருக்கிறது என்பதையும் நாம் நிச்சயம் புரிந்து கொள்ளவேண்டும். எனவே அங்கு ஆயுதப்போராட்டம் உருவானதற்கான காரணத்தை, சூழலை நம்மால் ஓரளவிற்கு புரிந்துகொள்ள முடிகிறது. இதுவரையில் சரி.

ஒரு ஆயுதப்போராட்டம் என்றானபின் அது போகும் பாதைதான் அதன் வெற்றியைத் தீர்மானிக்கிறது. அது வெற்றியடைந்த நாடுகளை எல்லாம் பாருங்கள். உதாரணத்திற்கு க்யூபாவை எடுத்துக்கொள்ளுங்கள். இறுதிவரை போராட்டம் என்பது மக்களுக்காகத்தான் என்ற நிலைப்பாட்டில் காஸ்ட்ரோ உறுதியாக இருந்தாரே தவிர எந்தச் சூழலிலும் போராட்டத்தை ‘பெர்சனல்’ ஆக்கி, போராட்டத்துக்காகத்தான் மக்கள் என்ற நிலையை அவர் கொண்டுவரவே இல்லை. ஆயுதத்தை எடுத்த எத்தனையோ பேர் மண்டேலா, காஸ்ட்ரோ போல இறுதியில் மக்கள் தலைவர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். கிம் சங் போல பைத்தியக்காரத்தனமான சர்வாதிகாரிகளாகவும் ஆகியிருக்கிறார்கள். ஆயுதப்போராட்டத்தின் போக்கு என்பது போர்க்கள வெற்றிகளோடு சேர்ந்து பன்னாட்டு உறவுகளில் பெறும் வெற்றி, ஆயுதப் போராட்டத்தால் பல்லாண்டுகளாக நிம்மதி இழந்து இருக்கும் பொதுமக்களின் ஆதரவைத் தக்கவைப்பது, மாறும் உலகச் சூழல்களுக்கேற்ப தானும் மாறிக்கொள்வது, யாருக்காக போராடுகிறோமோ அவர்களைவிடவும் போராட்டமே முக்கியம் என்கிற மூர்க்கத்தனமான நிலைப்பாட்டுக்கு வராமல் இருப்பது என எத்தனையோ விஷயங்கள் அடங்கும். இதில் எல்லாம்தான் இலங்கையில் நடந்த ஆயுதப்போராட்டம் மிக மோசமாகத் தோற்றிருக்கிறது.

சிங்கள அரசு எப்படி அங்கு ஒரு இனப்படுகொலையே நடக்காததைப் போல ஒரு பிம்பத்தை இலங்கையிலும், உலக நாடுகள் மத்தியில் காட்டிக்கொள்கிறதோ, அதேபோலத்தான் புலிகள் மீது எந்தத் தவறுமே இல்லை என்கிற ஒரு பிம்பத்தை இங்கிருக்கும் சில பிழைப்புவாதிகள் செய்கிறார்கள். இரண்டுமே வரலாற்றைத் திரிக்கும், பொய்யாகப் பரப்பும், மக்களை ஏமாற்றும் அயோக்கியத்தனங்கள்தான். ஐநாவின், ஐநா அதிகாரிகளின் சாட்சியங்களில் தங்களுக்குத் தேவையானதை மட்டுமே எடுத்து தமிழுலகுக்குக் காட்டும் வேலையை இங்கிருக்கும் புலி ஆதரவாளர்கள் பலர் செய்துகொண்டே இருக்கிறார்கள். சிங்கள அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டது எவ்வளவு உண்மையோ, இறுதிப்போரில் புலிகள் மக்களைக் கேடயங்களாக புலிகள் பயன்படுத்தினார்கள் என்பதும் அவ்வளவு உண்மை. இதை நாம் பேசித்தான் ஆக வேண்டும். மக்களை வெளியேற விடாமல் கூடவே கூட்டிக்கொண்டு அலைந்தால் ராணுவம் தாக்காது, தாக்கினாலும் உலக நாடுகள் மத்தியில் அது நமக்கு சாதகமாத்தான் முடியும், குழந்தைகள் இறந்தால் உலகத்தின் பார்வை நம் பக்கம் திரும்பும் என எத்தனையோ காரணங்களுக்காக புலித் தலைமை இதில் ஈடுபட்டதை அவ்வளவு எளிதில் நாம் கடந்துபோய்விட முடியாது. இறுதிப்போரில் ஐநாவின் தமிழ் ஊழியர்களைக் கூட புலிகள் வெளியேற விடவில்லை என்பதை எத்தனையோ சாட்சிகள் வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார்கள்.

புலிகள் தங்கள் படையில் சிறுவர்களைச் சேர்த்தது, ஒருகட்டத்தில் பொதுமக்களிடம் தங்களுக்கான ஆதரவு குறைந்தபோது வலுக்கட்டாயமாக சித்ரவதை செய்தும், பனைமட்டைகளால் பெற்றோர்களை அடித்து மிரட்டியும் சிறுவர்களை இழுத்துப்போனது என ஏராளமான சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதையெலலம் மறைத்து பதிவிடும்  திருமுருகன் காந்தியைப் போன்றவர்கள் பதிவிடுவதெல்லாம் சொல்லில் அடங்காத ஏமாற்றுவேலை, பிழைப்புவாதம்.

மக்களுக்காக, மக்கள் உரிமைக்காக துவங்கப்பட்ட ஒரு ஆயுதப்போராட்டம் மக்களையே புறந்தள்ளிவிட்டு ஒரு தனிமனிதனின் போராக மாறியதுதான் இந்த அவலத்திற்குக் காரணம் என்பதை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். கொஞ்சம் ஜனநாயகத்தன்மை, காதுகொடுத்துக் கேட்கும் தன்மை, பன்னாட்டு சூழல்களைப் புரிந்துகொள்ளும் அறிவு, அதற்கேற்ப மாறிக்கொள்ளும் போக்கு என்பதெல்லாம் கொஞ்சம் இருந்திருந்தால் இந்த ஆயுதப்போராட்டம் இப்படி முடிந்திருக்காது, இத்தனை மக்களின் தியாகமும் வீணாகியிருக்காது. போர் நடந்தபோது இதையெல்லாம் எடுத்துச் சொன்னவர்களுக்கும் சரி, இப்போது சொல்பவர்களுக்கும் சரி எளிதாக ’துரோகி’ என்கிற ஒரு முத்திரையை இவர்கள் மிக எளிதாகக் குத்திவிடுகிறார்கள்.

அதேநேரத்தில் புலிகள் மீதான விமர்சனங்களில் ஒரேடியாக மூழ்கிப்போய் இனப்படுகொலையே புலிகளால்தான் நடந்தது எனச் சிலர் சொல்வதையும் நாம் ஏற்க முடியாது. புலிகள் ஒருவேளை சிங்கள மக்களைக் கேடயமாகப் பயன்படுத்தி இருந்தால் இலங்கை ராணுவம் அவர்களைக் கொன்றிருக்குமா? செல்லடித்திருக்குமா? கண்டிப்பாக மாட்டார்கள். மாட்டிக்கொண்டது தமிழ் மக்கள் என்பதால், தங்களின் புலி வேட்டையில் கண்டபடி பலியான பொதுமக்களின் உயிர்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்பதுதான் உண்மை. இனவெறி பிடித்த ஒரு கொலைகார ராணுவத்திற்கு புலிகள் தங்களின் தவறான முடிவுகளால் பாதையமைத்துக் கொடுத்துவிட்டார்கள் என்பதுதான் நிஜம். ஒருவேளை புலிகளில் யாராவது ஒரு பெரிய தலைமை எஞ்சியிருந்திருந்தால் இதை ஒத்துக்கொண்டிருக்கக் கூடும். புலிகளின் அழிவுக்குப் பின், பிழைப்புவாதிகள் எல்லாம் புலிகளுக்காகப் பேசத் துவங்கியது இன்னொரு வரலாற்று கொடுமை!

ஈழத்திற்காக வருடாவரும் மெழுவர்த்தி ஏந்துகிறவர்கள், தவறாமல் காங்கிரஸை திமுகவைத் திட்டுகிறவர்கள் இனப்படுகொலைக்கான நீதி கிடைக்க இதுவரை என்ன செய்திருக்கிறார்கள்? இனப்பகை முடிப்போம், மறக்கமாட்டோம் மன்னிக்கமாட்டோம் என்ற சொற்றொடர்களை எல்லாம் இன்று கேலிப்பொருள் ஆக்கியிருப்பதுதான் இவர்கள் செய்த இரண்டு சாதனைகளில் ஒன்று. இன்னொரு சாதனை என்ன தெரியுமா? ஒரு மாநிலக்கட்சியான திமுகவை, அதன் தலைவரைத் திட்டித் திட்டி, ராஜபக்சே என்கிற போர்க்குற்றவாளியை மொத்தமாக மறக்கடித்தது.

வரலாற்றை வெறும் உணர்ச்சிக் கண்ணோட்டத்தில் அணுகினால் அதிலிருந்து பாடங்களைக் கற்கவே முடியாது. அதிலும் தெரிந்தே பொய் சொல்லும் ஆட்களிடம் பயிலும் வரலாறு குப்பைக்குச் சமம். நம்மைப் பெருமைப்படுத்தும் வகையில் நமக்கு வசதியாக பொய்களை விசாரணைக்கு உட்படுத்தாமல் நம்பிக்கொண்டே இருப்பது நம் சிறிய மூளையின் பெரிய ஈகோவிற்குத் தீனி போடுமே தவிர, சாதிவெறியைப் போல ஒன்றுக்கும் உதவாத ஒரு வெற்றுப் பெருமையை வளர்த்துவிட உதவுமே தவிர, வருங்காலத்தைச் செம்மையாக அமைத்துக்கொள்ள உதவாது.