”சார் எங்களுக்கு ஒரு பாஸ் வாங்கித் தர முடியுமா”?

“ம்ம்ம்”

“நாங்க நாலே பேர் ஒரு சின்ன குட்டியானைல எங்க வீட்டுப் பொருட்கள் திருநெல்வேலி போயிடணும் சார்”

“புரியுது ஆனா, அங்கே போய் என்ன பண்ணுவீங்க?”

“தெரியல்ல சார் வாடகை குடுக்க முடியல்ல, ஓனர் அட்வான்ஸ் கழிக்க ஆரம்பிச்சிட்டார். வீட்டுக்காரருக்கும்  வேலையில்லை. கரண்ட் பில், ஸ்கூல் பீஸ்ணு எப்படி சென்னைல இருக்க முடியும்? ஊருக்குப் போனா இந்த மன நிலையாவது இல்லாமல் இருக்கும்” என்றார் ஜெசிந்தா.

ஜெசிந்தாவின் கதையை கடைசியில் கொஞ்சம் சொல்கிறேன்.

வேடிக்கை என்னவென்றால் என்னால் அந்தக் குடும்பத்திற்கு பாஸ் வாங்கிக் கொடுக்க முடியவில்லை.

சுமார் 30 பேருக்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பாஸ் வாங்கிக் கொடுத்தேன். கடந்த இரு நாட்களாக ஒரு கர்ப்பமடைந்துள்ள நண்பனின் மனைவியை ஊருக்கு அனுப்பி வைக்க பாஸ் வாங்க போராடிக் கொண்டிருக்கிறேன். அந்த பெண் கர்ப்பமடைந்து மூன்று வாரங்கள் ஆகி விட்டது.  அவரால் சென்னைக்குள் எந்த மருத்துவரையும் சந்தித்து ஆலோசனை பெற முடியவில்லை. எந்த மருத்துவமனைக்கு தொலைபேசினாலும் “வராதீர்கள்” அது ஒன்றுதான் பதில். இது போன்ற சூழலில் ஒருவருக்கு ஊர் சென்று சேர்ந்து விட வேண்டும் என்பதைத் தவிற வேறு என்ன மன நிலை இருக்க முடியும்.

ஏன் இவர்கள் கூட்டம் கூட்டமாக ஊருக்குச் செல்கிறார்கள். சென்னையில் இருந்தால் கொரோனா நம்மை கொன்று விடும் என்ற  அச்சமா?

இந்த நேரத்தில்  இதை விட வேறு எந்த பயமும் உருவாக ஒரு நியாயமும் இல்லை. ஆனால், உயிரச்சத்தை விட கொரோனா நிச்சயமற்ற தன்மையை, குழப்பத்தை, மன உளைச்சலை, எதிர்காலம் பற்றிய நம்பிக்கையின்மையை மக்களிடம் உருவாக்கி விட்டது. அதனால், அவர்கள் எங்கிருந்து வந்தார்களோ அந்த ஊர்களுக்கே திரும்பிச் செல்கிறார்கள்.

உண்மையில் மனிதகுலம் உயிரச்சம் என்னும் உணர்வுக்குள் சிக்கியிருந்தால் அது உழைப்பை இழந்து மனிதனாக உருவாகாமல் குரங்காகவே  தன்னை நிறுத்திக் கொண்டிருக்க முடியும்.

இந்த பேரிடர் காலத்தில் பதியப்பட்ட கணக்குகளின் படி தமிழகத்தில் இருந்து சுமார் இரண்டு லட்சம் வட மாநில தொழிலாளர்கள் வேறு வழியின்றி வெளியேறியிருக்கிறார்கள். தமிழகத்திற்குள்ளேயே இடம் பெறும் குடிமக்கள், அல்லது தொழிலாளர்கள் பற்றிய எந்த ஒரு பதிவுகளும் அரசிடம் இல்லை.

பிழைப்பிற்காக மக்கள் பெரு நகரங்களை நோக்கி குடியேறுவது இந்தியாவில் மட்டுமல்ல  உலகம் முழுக்க நடைபெறும் இயல்பான விஷயம். சமீபத்தில் அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் கொல்லப்பட்ட ஆப்ரிக்க அமெரிக்கரான ஜார்ஜ் பிளாய்ட் அமெரிக்காவின் டெக்ஸ்சாஸ் மாகாணம் ஹூஸ்டனில் வசித்தவர். பிழைப்புத்தேடி மின்னியாபொலீஸ் நகருக்கு வருகிறார். அவர் ஒரு பவுன்சர் நம்மூர்  ஜிம் பாய்ஸ் மாதிரி. அவரது கழுத்து காவலதிகாரியால் நசுக்கப்பட்ட போது “என்னால் சுவாசிக்க முடியவில்லை பரிவு கட்டுங்கள்” என்று சொன்னதை உலகம் பதிவு செய்து கொண்டது. ஆனால், அவரை கைது செய்ய காவல்துறை வந்த போது, தனக்கு ’கிளாஸ்ட்ரோஃபோபிக்’ இருப்பதாகச் சொல்கிறார். கிளாஸ்ட்ரோ போபியா என்பது பல நாட்களாக வெளியுலக தொடர்பேதும் இல்லாமல்  வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதால் உருவாகும் மன அழற்சி. மன நோய்க்கூறின் ஒரு பிரதான அறிகுறி.  ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கும் அவரது பதட்டத்திற்கும் அதுவும் கூட ஒரு காரணம்தான்.

ஒருவனுடைய வருமானத்தை தடுத்து விட்டாலே அவன் சமூகத்தனிமைக்குள் சென்று விடுகிறான். தனியாக அவனை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. வருமானம் பிடுங்கப்பட்ட மக்கள் சந்திக்கும் பதட்டத்தையே சென்னை குடியேறிகள் சந்திக்கிறார்கள். இங்கே சென்னை பூர்வகுடிகளுக்கே வாழும் உரிமை இல்லாத போது குடியேறியவர்களுக்கு என்ன உத்திரவாதத்தை அரசு கொடுக்கும்?

மனிதர்கள் வாழத் தகுதியில்லாத அண்டார்டிக்காவைத் தவிற உலகின் பெரும் பகுதி நாடுகளை கொரோனா பாதித்திருக்கிறது என்று பொதுவாகச் சொன்னாலும், வல்லரசுகள், வளர்ச்சியடைந்த நாடுகளை கொரோனா பதம் பார்த்திருக்கிறது எனச் சொல்லலாம்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உருவான கொள்ளை நோய்களுக்குப் பின்னர் உலகம் சந்திக்கும் பெரிய மருத்துவ நெருக்கடி இதுவேதான்.

நமது அண்டை நாடான பாகிஸ்தான் 3,093 பாதிப்புகளுடன் 13-வது இடத்திலும், ஏழை நாடான பங்களாதேஷ் 1,343  இழப்புகளுடன் 17-வது இடத்திலும், கொரோனா முதன் முதலாக கண்டறியப்பட்ட சீனா 4,634 இழப்புகளோடு 20-வது இடத்திலும், வெறும் இருபது பேரை பறி கொடுத்து நேபாளம் 70-வது இடத்திலும் இருக்கிறது.

அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா கொரோனா பெருந்தொற்றில் ஆசியாவின் மையமாக உருவாகியிருக்கிறது. உலக அளவில் நான்காவது இடத்தில் இருக்கும் இந்தியாவை தொற்று துவங்கிய நாட்களில் ஆச்சரியமாகப் பார்த்த நாடுகள் இப்போது அச்சத்துடன் பார்க்கத்துவங்கி விட்டன. காரணம் 85 நாட்களுக்குப் பின்னரும் கூட கொரோனா பற்றிய எந்த ஒரு மருத்துவ கொள்கையும் இல்லை. மருத்துவம், மருத்துவ உபகரணங்கள் வாங்குதல், கொரோனாவுக்கே அடிப்படையான பரிசோதனை, என பெரும் குழப்பம் நிலவுகிறது இந்தியாவில்.

இது ஆரம்பக்கட்டம் எனும் போது இந்த நோய்ப்பரவல் திவீரம் பெற்றால் இந்தியா என்ன ஆகும் என அறிஞர்கள் சுட்டிக்காட்டி வருகிறார்கள்.இந்தியாவில் அமல் படுத்தப்பட்ட ஊரடங்கு தோல்வியில் முடிந்து விட்டது தெரிகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஊரடங்கு பயன் கொடுக்கவில்லை. ஏன் பலனளிக்கவில்லை என்ற கேள்வி முக்கியமானது. அந்த கேள்விக்கான பதிலை நாம் ஆராய வேண்டும்.

அனைத்து நாடுகளுமே ஊரடங்கை மிகக்கடுமையாக கையாண்டன. ஆனால், போலீசை விட்டு மக்களை அடித்து உதைத்து கொடுமை செய்த அரசுகளை இந்தியாவில் மட்டும்தான் பார்க்க முடியும். இந்த கொரோனா பேரிடரை உலக நாடுகளும் இந்தியாவும், தமிழக அரசும் எப்படி கையாண்டது.

நமது அருகில் இருக்கும் மலேஷியா மிகக்கடுமையாக ஊரடங்கை கையாண்ட நாடு. யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்றது. அதற்கு முன்னால் குடி மக்கள் ஒவ்வொருவருக்கும் இந்திய பணமதிப்பிற்கு முப்பதாயிரம் ரூபாய்கள் வழங்கியது. இது போக வரிச்சலுகை, கடன் சலுகைகளும் இருந்தது.

ஐய்ரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தை எடுத்துக் கொண்டால்  மார்ச் 12-ஆம் தேதி முழு ஊரடங்கை அறிவித்த சுவிஸ் ஜூன்   11-ம் தேதி மூன்று கட்டங்களாக ஊரடங்கை தளர்த்தி விட்டது. 300 பேர் வரை கூடி பொது நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்னும் அளவுக்கு தளர்த்தி விட்டது. மிக மிக கடுமையான ஊரடங்கை கடைபிடித்த சுவிஸ்  ஊரடங்கு காலத்தில் 80% ஊதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்கியது. சமூக ரீதியாக  அரசிடம் இருந்து பணம் பெறுவது தனி. தனது எல்லைகளை திறந்து விட்ட சுவிஸ் அரசு இத்தாலி எல்லையை மட்டும் மூடி வைத்திருக்கிறது.

பிரான்ஸ் தனது ஊரடங்கை தளர்த்தி விட்டது. பள்ளிகள் பொது மக்கள் கூடும் இடங்கள், கேளிக்கை விடுதிகளை வருகிற 21-ஆம் தேதி முதல் திறக்கலாம் என அறிவித்துள்ளது. பிரான்ஸ் அரசும் மக்களுக்கு இந்த பேரிடர் காலத்தில் உரிய இழப்பீடு வழங்கியது.

இத்தாலி,ஸ்பெயின், டென்மார்க் என உலகின் பெரும்பான்மை நாடுகள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டிய மக்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கியிருக்கிறது. 80 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட  ஜெர்மனி பதினைந்தாயிரம் முதல் முப்பதாயிரம் யூரோ வரை நட்டத்திற்கு ஏற்ற மாதிரி இழப்பீடு கொடுத்தது.

இந்த நாடுகள் அனைத்துமே ஊரடங்கு காலத்தில் உரிய அனுமதியின்றி வெளியில் வந்த மக்களுக்கு மிகக்கடுமையான தண்டத்தொகையை விதித்தது. ஆனால் அதற்கு முன்னால் மக்களுக்கு கொடுக்க வேண்டியதை இயன்ற அளவு கொடுத்தது.

ஆனால்,  இந்திய அரசு ஒவ்வொரு குடிமக்களுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் அதற்குரிய தொகை இந்திய அரசிடம் இருக்கிறது என்று கதறிய போதும் மோடி 20 லட்சம் கோடி அளவுக்கு பேக்கேஜ் திட்டங்கள் அறிவித்துக் கொண்டிருந்தார். அதில்  புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ஐந்து கிலோ சுண்டல் வழங்கப்படும் என்பது போல ஏதோ  ஒன்று இருந்தது.

சுதேசி பொருளாதாரம் என்பது இந்துராஷ்டிரத்தில் தோல்வியடைந்த சிந்தனை முறை. காரணம் அது உற்பத்தியோடு தொடர்புடையதாக இல்லாமல் கலாச்சாரத்தோடு தொடர்புடையதாக இருந்தது. அதைத்தான் இப்போது  சுய சார்பு பொருளாதாரம் என்கிறார் மோடி. உலக நாடுகளோ மக்களின் வாங்கும் திறனை தக்க வைத்துக் கொண்டது அதுதான் முதலாளித்துவ நலன்.

மக்களிடம் பணப்புழக்கம் இருந்தால் மக்களின் வாங்கும் திறன் தக்க வைக்கப்படும் அது முதலாளித்துவ நலன்களை பாதுகாக்கும் என்று யோசித்த அரசுகள் மக்களுக்கு பணம் கொடுத்தன. தொழிலதிபர்களுக்கும் இழப்புக்கு  ஏற்ப பணம் கொடுத்தன. ஆனால்,. இந்திய அரசு முதலாளிகளுக்கு பணம் கொடுக்கிறது. முதலாளிகள் மூலமாக பணம் மக்களுக்கு வரும் என மோடி அரசு நம்புகிறது. இது போன்ற கோமாளித்தனங்களை உலகில் வேறு எங்கும் பார்க்க முடியாது. முதலாளிகளுக்கு பணம் கொடுக்கும் போது அது பதுக்கலுக்கும், மக்களுக்கு பணம் கொடுக்கும் போது அது பணப்புழக்கத்திற்கும் வழி வகுக்கும் என்ற எளிமையான அணுகுமுறை கூட இல்லாத அளவுக்கு மோசமாக அரசாக இருக்கிறது.

மக்களின் வாங்கும் திறன் வீழ்ச்சியடையும் போது சந்தை இயல்பாகவே வீழ்ச்சியடையும், அது ஒரு நகரத்தின் வீழ்ச்சி, வாழ்வின் வீழ்ச்சி அப்படி வீழ்ச்சியடையும் மக்கள்தான் கூட்டம் கூட்டமாக சென்னையை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழக அரசு ரேஷன் கார்ட் வைத்திருப்போருக்கு ஆயிரம் ரூபாயும் சாப்பிடவே முடியாத கேவலமான அரிசியையும் கொடுத்தது. தமிழக மக்கள் தொகை ஏழு கோடிக்கும் மேல் தமிழகத்தில் ரேஷன் கார்ட் வைத்திருப்பவர்கள் வெறும் இரண்டு கோடி பேர்.ஏழு கோடி மக்களை ஊரடங்கி இருக்கச் சொல்லும் தமிழக அரசு. ரேஷன் கார்ட் வைத்திருப்போருக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் என்று சொல்வது எத்தனை பெரிய மோசடி?

ரேஷன் கார்ட் இல்லாதவர்கள் இந்த ஆயிரம் ரூபாய் கூட கிடைக்காமல் மிகப்பெரிய இழப்புகளோடு அல்லாடுகிறார்கள். கொரோனா கைவிட்ட இந்த நகரத்தில் வாழ்வைத் தேடி எங்கெங்கோ   ஓடுகிறார்கள்.

கொரோனாவை உலக நாடுகள் மருத்துவ ரீதியான பிரச்சனையாக, சிவில் சமூகம் தொடர்பான பிரச்சனையாக அணுகிய போது இந்திய அரசும், தமிழக அரசும் கொரோனாவை சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக அணுகினார்கள். ஊரடங்கு அறிவித்து விட்டு மக்களை காவல்துறையை வைத்து கையாண்டார்கள். இந்த சில மாதங்களில் மட்டும் 13 கோடி ரூபாய் தண்டம் வசூலித்திருக்கிறது. நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு, கைது, வாகங்கள் பறிமுதல் என  கோடிக்கணக்கான மக்கள் காவல்துறை வன்முறையில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். காவல்துறையினருக்கும் இந்த கொரோனாவில் இருந்து விடுதலை இல்லை. காவல்துறை என்பதால் கொரோனா தொற்றாமலும் இல்லை. ஒரு காவல்துறை அதிகாரி பலியாகி இருக்கிறார். சுமார் 800 காவல்துறை அதிகாரிகளும் கீழ் மட்ட காவலர்களும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

இரண்டு செவிலியர்கள் மரணித்திருக்கிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் மரணித்திருக்கிறார். தோராயமாக ஒரு மணி நேரத்தில் இரண்டு கொரோனா மரணங்கள் தமிழகத்தில் நடக்கும் அளவுக்கு நிலமை மோசமடைந்துள்ளது. தமிழக அரசு காவல்துறையை வைத்து கொரோனாவைக் கையாண்ட விதம் இதுதான். இந்த அணுகுமுறையால்தான் ஊரடங்கு முழு தோல்வியடைந்து கொரோனா பாதிப்பு சமூகப்பரவல் என்னும் நிலையை அடைந்தது.

இன்று முதல் முழு ஊரடங்கு அமலாக இருக்கும் நிலையில், காவல்துறை அறிவிப்புகள் மேலும் மேலும் பீதியூட்டுகிறது. சென்னைக்குள் வாழ்வை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் வெளியேறிச் செல்லும் பல்லாயிரம் சனங்களில் ஒருவர்தான் ஜெசிந்தாவும்.

இக்கட்டுரையின் துவக்கத்தில் நான் குறிப்பிட்டது அவரைத்தான். தனியார் பள்ளி ஆசிரியை. ஊதியம் வெறும் 12,000 ரூபாய்தான்.  கணவர் ஒரு வாகன உதிர்ப்பாகம் தயாரிப்பு கம்பெனி வேலை. கொரோனாவுக்கு முன்னரே வேலை தள்ளாடி இப்போது சுத்தமாக கம்பெனி மூடப்பட்டு விட்டதாம். கொரோனா வைரஸ் தனியார் பள்ளிகளை  முடக்கி விட்டது. அவர்கள் செயலிகள் மூலம் ஆன் லைன் வகுப்பை துவங்கி விட்டார்கள்.  ஜெசிந்தாவையும் ஆன் லைன் வகுப்பை எடுக்கச் சொல்ல அவரும் தனது போனில் எடுத்திருக்கிறார்.  போன மாசம் பள்ளி நிர்வாகம் கொடுத்த ஊதியம் 6,000. பாதி ஊதியத்தைக் கொடுக்க திணறிப்போன  ஜெசிந்தா அந்த பணத்தை எடுத்துக் கொண்டு தன் கணவன் பிள்ளைகளோடு கிளம்பியிருப்பார். அவர்களை சுமந்து செல்லும் அந்த குட்டியானை  பரனூர் சுங்கச்சாவடியை கடந்திருக்கும் அல்லது கடந்து செல்ல முடியாமல் காவல்துறையிடம் சிக்கியிருக்கவும் கூடும்?