ஆணாதிக்கவாதிகளோடு போராடி வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்களுக்கு சமர்ப்பணத்தோடு தொடங்குகிறது, குஜராத்திய மொழித் திரைப்படமான Hellaro (ஹெல்லாரோ) .

குஜராத் மாநிலம் இந்திய-பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் இருக்கும் தார் பாலைவனத்து சிறு கிராமத்தில் 1975ம் ஆண்டில் நடைபெறும் கதைதான் திரைப்படத்தின் களம். இந்தியாவின் பின் தங்கிய கிராமங்களில் அன்றைய காலகட்டங்களில் பெண்களின் சமூக நிலைமையை படத்தின் வழியாக யூகிக்க முடிகிறது.பெண்களுக்கான சுதந்திரம் அருகிப் போன கிராமம். நகரத்தில் இருந்து உள்ளடங்கிய பாலை நிலம். ஊர்த்தலைவர் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.  மூன்றாவது ஆண்டாக மழையை வேண்டி திருவிழாவுக்கு தயாராகிறது கிராமம்.திருவிழாவுக்கு முன் இரவுகளில் ஆண்கள் கார்பா நடனமாடுகின்றனர்.பெண்கள் நடனமாட அனுமதிக்கப்படுவதில்லை.வழிபடுவது மட்டும் துடியான பெண் தெய்வம்…!

நிலத்துக்கு உரியவளாகப் பெண் தெய்வத்தை மையப்படுத்திய கொண்டாட்டம், சடங்குகள், நம்பிக்கைகளோடு பெண்கள் சிக்குண்டு இருக்கின்றனர்.வீட்டில் முடங்கி ஏங்கி கிடக்கின்றனர்.ஒரு கேள்வி எழுப்பக்கூட வாய்ப்பு மறுக்கப்பட்ட  அடிமை வாழ்வு..கிராமத்தில் பெண்கள் தங்களுக்குள் மனம் திறந்து பகிர்ந்துகொள்ளும் நேரமாக தினந்தோறும் காலையில் தண்ணீர் எடுக்கச் செல்லும் சில நிமிடங்கள் பயணமே வாய்க்கிறது. ஹெல்லாரோ என்றால் எதிர்பாராமல் வெடித்துக் கிளம்பும் எழுச்சி என்று பொருள். பாலைநிலத்தின் பெண்களின் வாழ்வும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட, வறட்சியான வாழ்வாகவே இருக்கிறது. வெடித்துக் கிளம்பும் மழையைப் போல எல்லாமே உருமாறும் ரசவாதம்தான் திரைக்களம்.

ஒரு நிலத்திற்கான புதிய வருகைதான் அதுகாறும் அங்கிருந்து வந்த வழக்கத்தை மாற்றியமைக்கிறது. அந்த வருகை  மனிதராக, பறவையாக, ஒரு கருவியாகக் கூட இருக்கலாம். மாற்றம் நிகழந்தேறும்போது அந்த நிலமும் மக்களும் அதற்காகவே காத்து இருந்ததைப் போல அதை ஏந்திக் கொள்கின்றனர்.ஹெல்லாரோ-விலும் ஒரு வருகைதான் மாற்றத்துக்கான காரணமாகிறது. மஞ்சரி என்ற இளவயதுப் பெண்  கிராமத்திற்குத் திருமணமாகி வருகிறாள்.நகரத்தில்  இருந்து வருகை தரும் அவளை கிராமத்துப் பெண்கள்  பல தயக்கங்களோடு ஏற்றுக்கொள்கின்றனர்.அவளின் சிந்தனையில் இருக்கும் தெளிவு மற்ற பெண்களுக்கு நம்பிக்கை வளர்க்கிறது.

ஆனால் அவள் வருகையின் தொடக்கக் காலம் எளிதானதாக இல்லை. ஒரு சுரங்கத் தொழிலில் புதிதாகப் பணியேற்கும் அடிமையின் வருகை என்ன தாக்கத்தை ஏற்கனவே இருப்பவர்களுக்கு ஏற்படுத்திவிடக் கூடும் என்ற சூழல்தான் அங்கு நிலவுகிறது. மஞ்சரியின் கணவன் கல்யாணமான இரவு அவள் எதுவரை படித்துள்ளதாக கேட்பான்.அதற்கு அவள் தரும் பதிலுக்கே அவன் மகிழ்ச்சி இழந்துவிடுவான்.அவள் ஏழாம் வகுப்பு வரை படித்திருப்பதையே அதிகம் என்று சலித்துக்கொள்கிறான்.

இன்னொரு மனிதரின் வருகையும் கதையின் நிரலில் வருகிறது. பெண்கள் நீரெடுக்கச் செல்லும் காலைப்பொழுதில் பாலை மணலில்  மயங்கிக் கிடக்கும் ஒருவனுக்குக் கிராமத்துக் கட்டுப்பாடுகளை மீறித் தண்ணீர் தந்து காப்பாற்றுகின்றனர் மஞ்சரியும் கூட இருக்கும் சில பெண்களும்..அதற்குக் கைம்மாறாகத் தன் கையில் இருக்கும் வாத்தியத்தில் டோல் வாசிக்கிறான் அந்த நடுத்தர வயது மனிதன்.

அந்த இசைதான் அவர்களின் அடிமை வாழ்வினை அறுத்தெரியப் போகும் ஆயுதம் என்பதை அறியாமலேயே பெண்களின் கால்கள் தானாக ஆடத் தொடங்குகின்றன.தண்ணீர் எடுத்தல், ஆதரவற்ற மனிதனின் டோல் இசை, நடனம் இவையெல்லாம் வழக்கமான ஒன்றாக மாறுகிறது .

டோல் இசைக்கும் மனிதனுக்கான பின்னணிக் கதை ஒரு துயரக் காதை.அந்த பாத்திரத்தை சர்ரியலிசப் பாணியில் கையாண்டு இருப்பது இயக்குநரின் தனிச்சிறப்பு.பாலைவனத்தின் இடையே கிராமம் அமைக்கப்பட்டிருக்கும் விதமே கலை நேர்த்தி.அன்றாட அரசியல், பெண்ணடிமை, ஆணவக் கொலை, மூட நம்பிக்கைகள் எனப் படம் கலைத்துப் பேசும் விஷயங்கள் நிறைய.

தாங்கள் ஆடி வழிபடுவது பெண் கடவுளுக்கே ஆகாது என்று பெண்களே நம்பும்படியாக ஒரு கருத்தை ஆண் சமூகம் எவ்வளவு சிரத்தையாகக் கட்டமைத்து உருவாக்குகிறது?! பெண் என்பவள் உபரி, அவள் வாழ்வது ஆண்களுக்குத் தொண்டாற்றவே…அவளுக்கென ஒரு வாழ்வு இல்லை. குழந்தைகள், ஆண்கள், பாழாய்ப்போன நம்பிக்கைகளுக்குள் உழன்றே தொலைந்து போகிறாள்.

பெண் தன்னைத்தானே கண்டறிந்துகொள்ளத் தொடங்கும்போது எல்லா தளைகளிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்கிறாள். ஹெல்லாரோ படத்தில் தன் போராட்டத்திற்கான ஆயுதமாக இசையை, நடனத்தைத் தேர்வு செய்கிறாள். கைகளை உயர்த்திக் குரல் கொடுப்பது மட்டுமல்ல புரட்சி. இசைக்கேற்ப நடனமாடுவதும் புரட்சியின் வகைமைகளில்தான் வரும் என்று சாட்சியாகிறார் இயக்குநர் அபிஷேக் ஷா.

திரைப்படத்தில் அமைக்கப்படும் குறியீட்டுக் காட்சிகள் திரைக்கதையோடு இசைந்து போகும்போது அதன் வெளிப்பாடு பிரமாதமாகிவிடுகிறது. அவ்வாறான காட்சிகள் படம் நெடுக வருகின்றன.டோல் கலைஞராக வருபவர் உள்ளிட்ட துணைக் கதாபாத்திரங்களும் நேர்த்தியான நடிப்பை தந்துள்ளனர்.தன்னைச் சுற்றி இருள் சூழ்ந்த போதும் கிடைக்கும் சிறு வெளிச்ச கணங்களில் வாழ எத்தனிக்கும் வாழ்வை மஞ்சரி பாத்திரத்தின் வழி தந்துள்ள ஷ்ரத்தா டேங்கர் ,2019ஆம் ஆண்டுக்கான தேசிய விருது பெற்றுள்ள இப்படத்திற்காக நடிப்பு வகைமையில் நடுவர் சிறப்பு விருதை பெற்றுள்ளார்.

படத்தின் காட்சிகள் தெளிவுற அமைக்கப்பட்டுள்ளதால் பார்வையாளனுக்குக் குழப்பமின்றிப் படத்தை அணுக முடிகிறது. மக்களின் அறியாமை, பெண்களின் நிலை, விடுதலையை நோக்கிய நகர்வு எனப் படிப்படியாக நம்மைக் கைப்பிடித்துக் காட்சிகளின் வழி நடத்துகிறார் இயக்குநர். இசை, ஒளிப்பதிவு, கலை எனப் பங்களிப்புகளில் குறை இல்லாத படம்.

நாட்டுப்புற இசை வடிவத்தை அடிப்படையாக வைத்துக் காலத்தை வரைந்துகாட்டும் திரைப்படம் இது. அற்புதத்தை விளக்கிக் கொண்டே இருப்பதும் அபத்தம். திரையின் வழி அந்த அனுபவத்தை நீங்கள் பெறுவீர்கள், அப்போது உங்கள் உதடுகள் தானாத உச்சரிக்கும் அற்புதம்! அற்புதம்!

மஞ்சரியின் கணவன் அவளை ஆரம்பக்காட்சியில் எச்சரிப்பான்,”உனக்கு சிறகுகள் இருந்தால் நீயே வெட்டிக்கொள்.இல்லையேல் நானாக வெட்டினால் கூடுதலாக வலிக்கும்.!”

அவளோ தன்னை மட்டுமல்ல பெண்கள் கூட்டத்தையே சிறகுடைய பறவைகளாக்கி மேகத்தை மோதி திறப்பவளாகிறாள்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. “ஷூபாக்ஸ்” உணர்வு நதிகளின் கூடுகை - ஸ்டாலின் சரவணன்
  2. திரையில் விரியும் இந்திய மனம் -18 : 'ஷோர் இன் தி சிட்டி' நகரத்துத் திருடர்கள் - ஸ்டாலின் சரவணன்
  3. "சினிமா பன்ட்டி" கோலப்பள்ளி கிராமத்திலிருந்து ஒரு திரைப்படம் – ஸ்டாலின் சரவணன்
  4. கூடு தேடும் இரு பறவைகள் : ஸ்டாலின் சரவணன்
  5. கனிவுக்காகக் காத்திருக்கும் உறவுகள் : ஸ்டாலின் சரவணன்
  6. பதின்பருவக் குளத்தில் வீசப்படும் கற்கள் :ஷாலா : ஸ்டாலின் சரவணன்
  7. மேகங்களுக்குள் ஒளிந்திருக்கும் மலை: ஸ்டாலின் சரவணன்
  8. நின்றபடியே சுழலும் வாழ்வு : ஆனி மானி : ஸ்டாலின் சரவணன்
  9. கரை வந்து சேராத படகுகள் : ஹமீத் : ஸ்டாலின் சரவணன்
  10. துயரம் மிகுந்த பறவைகளும் பறக்கின்றன : ஸ்டாலின் சரவணன்
  11. அவள் ஒரு நதியாக இருக்கக்கூடும் : ஸ்டாலின் சரவணன்
  12. காஸி-உணர்வு யுத்தம் :  ஸ்டாலின் சரவணன்
  13. காணத்தகாதவர்களின் கதை : ஸ்டாலின் சரவணன்
  14. ஆஷா ஜாவோர் மாஹே-நகரத்துக்கான காதல் கடிதம் : ஸ்டாலின் சரவணன்
  15. இந்தி திரைப்படம்-பக்லைட்:சுயமரியாதையும் சுதந்திரமும்-ஸ்டாலின் சரவணன்
  16. Axone: இந்த நகரத்தை வெறுக்கிறேன் -ஸ்டாலின் சரவணன்
  17. "மனச் சாளரங்களை அசைக்கும் காற்று!" - ஸ்டாலின் சரவணன்