காதலின் பாடல்கள் 2

இன்னும் வர்லியா நீ..? என்று ஃபோனில் கேட்கிறாள் அவள். அவர்கள் காதலர்கள். அடுத்த தினத்தின் மாலை ஒரு கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளத் தன் மனதிற்கு இனியவனை அழைத்திருந்தாள் “நீ ஒரு சோம்பேறி.உனக்குப் பல யோசனைகள் இருக்கும். வருகிறேன் என்று சொல்லி விட்டு வராமல் இருந்து விடுவதை வழக்கமாகக் கொண்டவன்..” என்றெல்லாம் அடுக்கத் தொடங்கியவளிடம் “இதோ பார் என் அன்பே…உன்னை விட உகந்தது உயர்ந்தது உன்னதமானது உயிர்ப்பானது உவப்பானது உவகையானது உன்மத்தமானது என்று எதுவுமே இருக்க முடியாது இந்த உலகத்தில். என்னைப் போய் சந்தேகிக்காதே..நாளை பார் நேரம் தவறாதவர்களின் ராஜபுத்தகத்தில் என் படத்தைத் தான் முகப்பிலேயே இருத்துவார்கள். அப்படிக் கடைப்பிடிப்பேன் நேரத்தை” என்றெல்லாம் முந்தைய தினத்தின் சத்தியத்தின் உடலெங்கும் வண்ணங்களைப் பூசி அனுப்பியிருந்ததை வழக்கம்போலவே மறந்து போயிருந்தான்.

அப்போது தான் கணிப்பொறியின் திரையில் நகரத்தின் எதிர்ப்புறம் கொண்டாட்டக் களத்திலிருந்து லைவ் ரிலே தொடங்கியிருக்க “என்னடா இது, கூட்டம்” என்று ஆர்வமாய்ப் பார்க்கத் தொடங்கியவன் “அடடா…இது என்னவள் இல்லையா…?நான் அங்கிருக்கவேண்டியவனாயிற்றே” என்று லேசாய் நினைத்துக் கொண்டிருக்கையிலேயே அவளிடமிருந்து அழைப்பு வருகிறது.

“இன்னும் வர்லியா நீ..?” என்கிறாள் அவள்

“அடச்செல்லக்குட்டி..பக்கத்துல வந்துட்டேன்டா…இன்னும் அஞ்சு நிமிஷத்துல உன் முன்னாடி வந்து நிற்பேன் பாரேன்” என்று அவன் சொன்னது ஒரு பொய் அல்ல கோடிப் பொய்களுக்குச் சமமான மாபெரும் பொய்மூட்டை.

“பார்க்கலாம்…அஞ்சு நிமிஷம் தானே..?வந்து சேரு…”என்று ஃபோனை துண்டிக்கிறாள்.

காதலன் தன் அறையைப் பூட்டிவிட்டுக் கிளம்புகிறான்.இல்லையில்லை அந்தத் திசையைப் பூட்டிலிட்டுக் கிளம்புகிறான்.எதை அணிந்தான் என்று எதற்குமே தெரியாது. அவன் கிளம்பிய வேகம் மின்னல்களை விடவும் விரைவாக இருந்தது.வழியில் அமர்ந்திருக்கும் அன்னையைத் தாண்டிச் செல்பவன் திரும்ப வந்து ஒரு முறை அவள் கன்னத்தில் முத்தி விட்டுக் காற்றில் தாவுகிறான். படிகளில் இறங்க வேளை இல்லாத புலிகேசி கைப்பிடிக் கம்பியில் சரிந்து இறங்கிச் சாலையில் பாவுகிறான்.

இதுவொன்றும் உடைபட்ட இதயங்களுக்கான பாடலல்ல

மறைந்த நம்பிக்கைகளுக்கான மௌனப் பிரார்த்தனையும் அல்ல

கூட்டத்தில் ஒருமுகமாக மட்டும் நானிருக்கமாட்டேன்

நீ என் குரலைக் கேட்பாய்

நான் பெருங்குரலில் கத்தும்போது

இது என் வாழ்க்கை

கொண்டாட்டக் களத்தில் எல்லோரும் ஆடிக் களிக்கின்றனர். இங்கே ஒருவன் தன் உயிரைப் பெருக்கி உயிரால் வகுத்தபடி விதியின் கழுத்தைப் பற்றி நெரிக்கிறான். நிமிடங்களுக்குப் பதிலாக நொடிகளும் மணியொன்றுக்குப் பதிலாக ஐந்தே நிமிடங்களுமாகத் திருத்தி அமைக்கப் பட்ட காலப் பேழைக்குள் தத்தளிக்கிற சருகாக ஒற்றை இறகாகத் தன்னை உணர்ந்தபடி சீறிப் பறக்கிறான் காதலானவன்.தண்ணீருக்கான குழாயின் வெளிப்புறத்தில் தவழ்ந்திறங்கி ஓடுகிறான்.

இப்போதில்லாவிட்டால் எப்போதுமில்லை

நான் அமரனாக என்றும் வாழ்ந்துகொண்டே இருக்கப்போவதில்லை

உயிரோடிருக்கையில் வாழ்ந்துகொள்ள விரும்புகிறேன்

என் இதயம் திறந்திருக்கும் ஒரு நெடுஞ்சாலை

ஃப்ராங்கி சொன்னாற் போல

“அதை நான் என் வழியில் செய்கிறேன்.”

உயிரோடிருக்கையில் வாழ்ந்துகொள்ள விரும்புகிறேன்

இது என் வாழ்க்கை

கிடைத்த வாகனத்தின் கதவு பற்றி ஏறிச் சிறிது தூரம் சென்று திரும்பவும் தான் செல்லவேண்டிய திசையுணர்ந்து சாலையில் தாவுகிறான்.அவன் விழுகிற இடத்துக்குச் செல்ல நாய்களோடு வந்து கொண்டிருக்கிறாள் ஒரு மாது. அந்தப் பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டே தாண்டிச் செல்கிறான் நாயகன்.

இது தன் நிலையில் பிடிவாதமாக நின்றவர்களுக்கானது

ஒருபோதும் பின்வாங்காத டாமிக்கும் ஜினாவுக்குமானது

இதைப் பிழையின்றிப் புரிந்துகொள்ளுங்கள் – நாளை என்பது கடினமானது

அதிர்ஷ்டம் என்பதற்கே அதிர்ஷ்டம் இருப்பதில்லை

உங்கள் வாய்ப்புகளை நீங்களே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்

இது என் வாழ்க்கை

நாய்கள் துரத்துவதைத் தன் முன்னகர்தலுக்கான உந்துசக்தியாக எண்ணிக்கொண்டே மலர்ந்த முகமும் அசட்டுச் சிரிப்புமாக அவையத்தில் தன்னைத் தன் காதல் கொண்டு முந்தியருக்கச் செய்தபடி ஓடுகிறான்.நாய்களிடமிருந்து தப்புகிறவனை வழிமறிக்கும் அந்த ஊரின் வஸ்தாதுகளைப் பார்த்து பயந்து கொண்டே பயப்படாத புன்னகையொன்றால் தன்னை மறைத்தபடி அவர்களைக் கடந்து ஓடுகிறான். சாலை இன்னும் நீள்கிறது. நாய்கள் விடாப் பிடியாகத் துரத்துகின்றன. ஒரு கட்டத்தில் பெரிய மாடியிலிருந்து கீழே குதித்துத் தன்னை மறந்து எழுந்தோடுகிறான் உண்மையாகவே நெடுந்தூரம் அவனிருப்பது. வெகுதூரம் அவன் செல்லவேண்டியது. காதல் என்று வந்து விட்டால் காலம் கைகட்டும் என்பார்கள் அல்லவா..? அவனிடம் நம்புவதற்குக் காதலைத் தவிர வேறொன்றுமில்லை.

தன் காதலை அவன் மிச்சமின்றி நம்புகிறான். உயிரைத் தீயும் திரியுமாக்கித் தீபத்துக்கான அகலாய்த் தன் உடலை ஏந்திக் காற்றைக் கிழிப்பவனுக்கு முன் புயலும் கைகட்டும் என்றால் மெய் தானே..? காதல் வெல்கிற கதைகளில் கடவுளுக்கும் கௌரவத் தோற்றம் தானே எஞ்சும்..? அவன் தொழுகிற தெய்வமாகவே காதல் மாறிவிட்ட பிறகு அவன் நம்ப முடியாத ஒன்றாகவே மாறுவதில் வியப்பென்ன..? அந்த ஓட்டம் அசாதாரணம்..அந்த ஓட்டம் ஓடுகிறான் அவன்.

ஓடிக்கொண்டே வந்து ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொள்கிறவர்களுக்கு மத்தியில் ஓடித் தண்ணீர் பாட்டிலைத் தன் வாயில் கவிழ்த்துக் கொண்டு தாகம் தீர்த்துக் கொண்டபடியே கூட்டத்தை அதன் மொத்த ஓட்டத்தைத் தாண்டித் தன் திசையில் விரைகிறான். அவன் வெல்வதற்கான பந்தயத்தில் அவன் மட்டும் தானே ஓட முடியும்..? எனவே ஓடுகிறான்.

உன் பெயரை அழைக்கும்போது நிமிர்ந்து நின்றிருப்பது நல்லது

வளையாதே, உடையாதே, அன்பே பின்வாங்காதே

இது என் வாழ்க்கை

இப்போதில்லாவிட்டால் எப்போதுமில்லை

நான் அமரனாக என்றும் வாழ்ந்துகொண்டே இருக்கப்போவதில்லை

உயிரோடிருக்கையில் வாழ்ந்துகொள்ள விரும்புகிறேன்

என் இதயம் திறந்திருக்கும் ஒரு நெடுஞ்சாலை

ஃப்ராங்கி சொன்னாற் போல

“அதை நான் என் வழியில் செய்கிறேன்.”

உயிரோடிருக்கையில் வாழ்ந்துகொள்ள விரும்புகிறேன்

இது என் வாழ்க்கை

நகர சாலைகள் பரபரப்பு விரையும் கார்கள் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டே எல்லோரைப் பார்த்தும் மந்தகாசமாய்ப் புன்சிரிப்பொன்றை உதிர்த்துக் கொண்டே ஓடுகிறான் ஓடுகிறான் அந்த நகரத்தின் எல்லை நோக்கி ஓடுகிறான். தன் கோட்டுப் பையிலிருந்து பேஜரை எடுத்து இன்னுமா வந்து சேரலை என்று அவனுக்கொரு குறுஞ்செய்தியைத் தட்டி விட்டவண்ணம் நடனத்தைத் தொடர்பவளின் கண்கள் மட்டும் ஏமாற்றத்தின் திசையிலிருந்து எடுத்தபாடில்லை.

தன்னை விட வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறான் காதல்யுவன். அவனாலேயே அவனைப் பிடிக்க முடியாதென்று தோன்றுமளவுக்கு இருக்கிறது அவன் வேகம். அப்படி ஓடிச் செல்வதில் தனக்கொன்றும் துயரமில்லை எதுவுமே துன்பமில்லை மற்றும் தனக்கு இதைத் தவிர வேறொரு உயரமில்லை என்று எண்ணி விரைபவன் பாலத்திலிருந்து கீழே பார்க்கக் கூட நேரமில்லாமல் குதித்த்த்த்தே விடுகிறான்.

மனித எத்தனத்துக்கு அப்பாற் பட்ட ஒன்று அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கிறது.தாவ முடியாத உயரமல்ல தாவக் கூடாத அபாயம் என்பதைப் பொருட்படுத்தாமல் குதிக்கிறவன் ஒருகணம் காற்றில் உறைகிறான். அகிலம் அந்த இடத்தில் உறைகிறது.அவன் குதிக்கிற இடத்தை நோக்கி பெரிய டாங்கர் லாரி வந்தேவிட்டது..அதற்கு முன்பு ஒரு நூலிழை அளவு இடமிருக்க அங்கே குதிக்கிறான். அங்கிருந்து உருண்டு அதே வாகனத்தின் சக்கரங்களிலெல்லாம் சாலைசகுனம் கருதி வைக்கக் கூடிய எலுமிச்சம்பழங்களில் ஒன்றைப் போல் நசுங்கிவிடுகிற அளவுக்குப் பக்கத்தில் சென்று மறுபடி வெளிவந்து தப்புகிறான். திரும்பிப் பார்க்க அவனுக்குத் திசையேதும் இல்லை. அவனுடைய உலகம் அவனுக்கு முன்புறம் இருப்பது மட்டுமாகத் தான் இருக்கிறது. அந்தரமாவது ஆழிருள் வனமாவது எதையும் கண் கொண்டு பார்ப்பதற்குக் கூட அவனிடம் நேரமில்லை.

இன்னுமிரண்டு சாலைகளைத் தாண்டிக் கொண்டாட்ட களத்தினை நோக்கிய சாலையினுள் ஓடிச் சென்று கூட்டத்திற்கு நடுவே நிற்கிற தன் ஒரே ஒரு அவளது முன்பாக நின்று சிரிக்கிறான். அட சொன்ன மாதிரியே வந்துட்டியே டியர் என்று அவள் அவனை மெச்சியபடியே கட்டிக் கொள்கிறாள்.அவனது வீட்டில் அவன் அணைக்க மறந்த கணிப்பொறித் திரையில் இப்போது கட்டிக் கொண்டிருக்கும் அவர்கள் தெரிவதோடு பாடல் நிறைகிறது.

“எதுக்குப்பா இந்த ஓட்டம்?” என்று யார் கேட்டாலும் அவனிடமிருப்பது ஒரே ஒரு பதில் தான்.

 இட்ஸ் மை லைஃப் இது என் வாழ்க்கை!!!

Jon Bon Jovi-Richie Sambora-Max Martin ஆகிய மூவரும் எழுதிய இந்தப் பாடல் காற்றை ஆண்டது. இருபத்தியோரு வருடங்களுக்கு முன்னால் மே 8ஆம் தேதி 2000 ஆம் தினத்தில் வெளியான கிரஷ் என்ற ஆல்பத்தில் 7ஆவது பாடலாக இடம்பெற்றது. அரீனா ராக் வகையிலான பாப் பாடலான இதனைப் பாடியவர் ஜான் பான் ஜோவி. காதலின் சொல்ல முடியாத தருணங்களைப் பாட்டின் வழியே சொல்ல முனைந்த பாடல் இது.

காதல் தீராது

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. காதலின் பாடல்கள் : ஆத்மார்த்தி