சமீபத்தில் பிக்பாஸ் (3) போட்டியாளர் மீரா மிதுன், தான் ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குநராகப் பதவி வழங்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து பலரும் அவர் போலியான விமர்சனத்திற்காக அவ்வாறு செய்வதாக கூறிவந்ததை அடுத்து தற்போது தனது பணி நியமன ஆணை மற்றும் அடையாள அட்டையை பதிவு செய்துள்ளார்.

பிக்பாஸ் தமிழ் சீசன் 3-இல் பங்கேற்ற போட்டியாளர்களுள் மிரா மிதுனும் ஒருவர். பிக்பாஸ் இல்லத்திற்குள் வருவதற்கு முன்பாகவே அவர் சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்தவர். தென்னிந்திய அழகியாக (மிஸ் சௌத் இந்தியா) அவர் வெற்றிபெற்றதை அவரே சொல்லித்தான் பலருக்கும் தெரியவந்தது. ஆனால் சில காரணங்களுக்காக அந்தப் பட்டம் அவரிடமிருந்து பறிக்கப்பட்டதை அவர் மறைத்தே வந்திருக்கிறார். சிம்பு தன்னைக் காதலித்தார் என்றும் தான் ஒரு சூப்பர் மாடல் என்றும் அவர் கூறியவை அனைத்தும் அவரை சமூகவலைத்தளத்தில் கேலிக்குள்ளாக்கியது.

மேலும் பிக்பாஸ் இல்லத்தில் அவர் தினமும் செய்த அடாவடியான செயல்கள் பல சர்ச்சைகளைக் கிளப்பின. சேரன் மீது அவர் ஒரு பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆனால் கடைசியில் கமலும் ஹௌஸ்மேட்ஸும் சேரன் தவறிழைக்கவில்லை என்று நிரூபணம் செய்தனர். தர்ஷன் தன்னைக் காதலித்தார் என்று குற்றம் சாட்டினார். ஆனால் தர்ஷன் காதலிப்பதாக எங்கும் கூறவில்லை என்பதையும் குறும்படம் நிரூபித்தது. இப்படி சர்ச்சைகளுக்குப் பஞ்சமற்ற மீரா மிதுன் ஒரு விளம்பரப் பிரியை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.  குறிப்பாக பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு அவர் சமூக வலைத்தளங்களில் தினமும் பல்வேறு காணொளிகளைப் பகிர்ந்து வந்தார். பல திரைப்படங்களில் தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறிவந்தார். சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வதும் காணொளி வெளியிடுவதும் அவரது தனிப்பட்ட விருப்பம். அவரின் சுதந்திரத்தில் நாம் தலையிடுவதும் அறமற்றது. ஆனால் சமீபத்தில் அவர் தான் ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குநராக பணி நியமனம் செய்யப்பட்டதாக வெளியிட்ட தகவலின் உண்மைத் தன்மை தான் கேள்விக்குள்ளாகிறது.

Anti Corruption Commission – Director for Chennai TamilNadu என்று அவரது பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் நியமனம் செய்யப்பட்ட செய்தி 100க்கு 100 சதவீதம் உண்மையே. ஆனால் அது அரசாங்கத்தால் அல்ல! அவரை நியமித்த Anti Corruption Commission என்பது ஒரு NGO – அரசு சாரா தன்னார்வத் தொண்டு நிறுவனம். இந்த அரசு சாரா நிறுவனத்தின் பதிவு எண் அவரது ட்விட்டர் பதிவில் உள்ள நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ ஊழல் தடுப்பு துறையின் பெயர் ’நடுவண் கண்காணிப்பு ஆணையம் – http://www.cvc.nic.in/ ’ ஆகும். தமிழக ஊழல் தடுப்புத் துறை ‘ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் – https://www.dvac.tn.gov.in/’ என்று அழைக்கப்படுகிறது. அதன் இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகளை அரசு மட்டுமே நிர்ணயம் செய்யும். எனவே மீரா மிதுன் ஒரு அரசு சாரா அமைப்பில் அந்த அமைப்பை நடத்துபவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதே உண்மை.  அரசு சாரா அமைப்பில் இயக்குநராகிவிட்டு நடவடிக்கை எடுக்கப்போகிறேன், உங்களைக் கண்காணிக்கப்போகிறேன், இனி ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்று கொடுத்துள்ள பில்டப் கொஞ்சம் டூமச் தான்.