விசு (01 07 1945 – 22 03 2020)

தமிழ் சினிமாவுக்கும் நாடக மேடைக்குமிடையிலான உறவு நெடுங்கால நதி. சமூக சினிமாக்கள் உருவாகப் பெரும் காரணமான ஒரு தலைமுறை திராவிட சித்தாந்தவாதிகளின் திரையுலகப் பங்கேற்பு தமிழ் சினிமாவின் போக்கினை மடைமாற்றிய மாபெரும் காரணி. அதற்கடுத்தாற் போல் அமெச்சூர் டிராமா பற்றாளர்கள் சினிமாவிலும் நுழைந்து கவனம் ஈட்டியது நிகழ்ந்தது. அப்படியான காலத்திலிருந்து சினிமாவுக்குள் நுழைந்து சக்சஸ் ஆன கடைசி மனிதராகவே விசுவைச் சொல்லலாம்.

விசு வசனகர்த்தா. அவருடைய அபாரம் எளிய திறந்த எந்தவகையிலும் சஸ்பென்ஸ் த்ரில் என எந்த அம்சமும் அற்ற குடும்ப முரண்கதைகளைக் கடைசி  ஸீன் வரைக்கும் அமர்ந்து பார்க்கச் செய்தது. பேச்சு சாமர்த்தியம் மிக்க கதாமாந்தர்களை எதிரெதிர் துருவங்களாக பல ரவுண்ட் ஆடிப்பார்க்கிற சீட்டுக் கச்சேரிகளைப் போன்றே தன் திரைக்கதைகளை அமைத்தார். ஒரே இழையாக நெடுகப் பயணிக்கிற கதைகளை விட உதிரிச்சரடுகளை இங்குமங்குமாகப் பிரித்தும் கோர்த்தும் அவர் சொல்ல விழைந்த கதாபாணியைத் தமிழ் சமூகம் ஏற்றுக் கொண்டது. தன்னை வரவேற்கும் வாசல்களைத் தவிர்த்து அவர் கோலமிட முயன்ற புயல் கடந்த பூமி நாணயம் இல்லாத நாணயம் சிதம்பர ரகசியம் ஆகிய படங்கள் பெரிதாகக் கைதரவில்லை.

மணல் கயிறு ஒரு சகாப்தம். எட்டு கட்டளைகள் போடுகிற  கிட்டுமணியின் குடும்ப நண்பர் நாரதராக அதகளம் செய்தார் அந்தப் படத்தில் இடம்பெற்ற ராஜாமணி விசுவுக்கு மூத்த அண்ணன் கிஷ்மு தம்பி தவிர கமலாகாமேஷ் எஸ்.வி.சேகர் மனோரமா பூபதி சூரியகோஸ் ரங்கா எனப் பலரும் கற்சித்திரங்களாகப் பதிந்தார்கள்.கல்வெட்டுக்களாய் நிகழ்ந்தார்கள். எளிய மனிதர்களின் மனோபாவங்களை வெளிப்படுத்துகிற வரைபடக் கோடுகளாகவே தன் கதைகளெல்லாவற்றையும் காணத் தந்தார் விசு. மணல் கயிறு இயகுனர் கணக்கில் விசுவின் முதல் ஆட்டம். தமிழ்த் திரையின் மாபெரும் வெற்றிச்சித்திரங்களில் ஒன்றானது.

தொடக்க வருடங்கள் விசு ஒரு எழுத்துக்காரராகப் பணியாற்றியது அரியதோர் காலம்.1977 ஆமாண்டு கே.பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளியான பட்டினப் பிரவேசம் அதே பெயரிலான விசுவின் நாடகம். படத்தின் டைடில்ஸில் கதை வசனம் விசு என்று மின்னியது, வித்யாசமான படம் என்ற கவனப்பரவலைப் பெற்றது.துரை இயக்கத்தில் சதுரங்கம் ரஜினியின் ஆரம்பகாலப் படங்களில் மென்மையான கதாபாத்திரத்துக்காகத் தனித்துத் தோன்றிய ஒரு படமானது. மதனோற்சவம் ரதியோடுதான் பாடல் சூப்பர்ஹிட் அடித்தது. சிவசங்கரியின் ஒரு சிங்கம் முயலாகிறது நாவலைத் திரைக்கதையாக விசு உருக்கொடுத்தார் முக்தா சீனிவாசன் இயக்கத்தில் அவன் அவள் அது உருவானது.தமிழிலும் கன்னடத்திலும் உருவான மழலைப் பட்டாளம் நடிகை லட்சுமி இயக்கியது. தமிழ் வெர்ஷனுக்கான வசனங்கள் விசு எழுதினார். தில்லுமுல்லு மராத்தி இந்தி மொழிகளைத் தாண்டி தென்னகம் புகுந்த கோல்மால் படம். தமிழில் அதன் திரைக்கதை வசனத்தை விசு எழுதினார். இன்று வரை அதுவொரு கல்ட் க்ளாசிக் ஆகத் தீராமற் பொங்குகிற கலைநதி. நெற்றிக்கண் படம் விசு விஸ்வரூபம் எடுத்த இன்னொரு ரஜினி படம். சிவாஜி நடிப்பில் கீழ்வானம் சிவக்கும் விசு எழுதிய இன்னொன்று. எஸ்.பி.முத்துராமன் இயக்கிய குடும்பம் ஒரு கதம்பம் ஒரு ட்ரெண்ட் செட்டர் இயக்குநராக நிலை நின்ற பிறகும் ரஜினி ஏவீஎம் கூட்டில் நல்லவனுக்கு நல்லவன் மிஸ்டர் பாரத் ஆகியவையும் விசு எழுதியது.

ஏவீஎம் தயாரித்த சம்சாரம் அது மின்சாரம் தமிழுக்கு சிறந்த பொழுதுபோக்கு சித்திரத்துக்கான ஜனாதிபதி பதக்கத்தைப் பெற்றுத் தந்து தேசிய விருது பெற்றது.விசு உருவாக்கிய கற்பனைப் பாத்திரங்கள் நிஜங்களை நிகர் செய்தார்கள். மக்கள் திரும்பத் திரும்பப் பார்த்தாலும் சலிக்காத பெருமைக்குரிய படங்களில் ஒன்றென இன்றளவும் சம்சாரம் அது மின்சாரம் திகழ்கிறது.

விசு திருமதி ஒரு வெகுமதி பெண்மணி அவள் கண்மணி வேடிக்கை என் வாடிக்கை  வரவு நல்ல உறவு காவலன் அவன் கோவலன் என்றெல்லாம் அடுத்தடுத்து அடித்து ஆடினார். நடிகராகவும் ஊமைவிழிகள் மிஸ்டர் பாரத் மெல்லத் திறந்தது கதவு தாய்க்கு ஒரு தாலாட்டு மன்னன் ஆகிய படங்களிலெல்லாம் தனக்கென்று தனித்த அடையாளத்தை உருவாக்கினார்.

விசு தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் என்ற பேரில் தொடங்கி நிகழ்த்திய மக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது. அரசியல் ஆர்வமும் கொண்டிருந்த விசு சிலபல வருடங்களாக உடல்நலமின்றி இருந்தார்.

விசு திறமைக்கும் வெற்றிக்குமான சாமான்ய முயற்சியாளர்களின் நம்பிக்கை மனிதர். எழுதியும் பேசியும் சிந்தித்தும் சினிமாவுக்குள் ஒரு மனிதனால் எத்தகைய உயரங்களை அடையமுடியும் என்பதற்கான உதாரணமாகத் திகழ்ந்தார். நகைச்சுவை என்பது கலைகளில் அரியவொன்று. அதில் தன் பெயரை அழுத்தந்திருத்தமாகப் பதித்துச் சென்ற நல்மணி விசு. வாழ்க அவர் புகழ்.