மனவெளி திறந்து-13 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்





கேள்வி: டாக்டர், நான் சமீப காலங்களாகவே தூக்கமின்மையால் அவதிப்பட்டு வருகிறேன். சரியான தூக்கம் இல்லாததால் பகல் நேரத்தில் எப்போதும் சோர்வாகவே இருக்கிறேன். எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை, உடல் தளர்ச்சியடைந்து விட்டதுபோல இருக்கிறது, இரவை நினைத்தாலே பயமாக இருக்கிறது. தூங்குவதற்கு எவ்வளவோ முயற்சி செய்து பார்க்கிறேன். ஆனாலும் என்னால் தூங்க முடியவில்லை. இப்படியே போனால் வேறு ஏதாவது பெரிய நோய் வந்துவிடுமோ என அச்சமாக இருக்கிறது. எனக்குத் தேவையானதெல்லாம் நிம்மதியான 6 மணி நேர தூக்கம். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

எட்வின், திருநெல்வேலி

பதில்: இன்றைய காலகட்டத்தில் தூக்கமின்மைக்கு முக்கியமான காரணம், தூக்கம் பற்றி நாம் கொண்டிருக்கும் சில தவறான நம்பிக்கைகள்தான். அதில் சிலவற்றை பார்ப்போம்:

தூக்கம் என்பது உடலுக்கு அவசியமான ஒரு ஓய்வு, ஆறிலிருந்து எட்டு மணி நேர தூக்கம் ஒரு நாளைக்கு இருந்தால்தான் உடலின் செயல்பாடு சீராக இருக்கும், இரவில் ஒருவேளை உறங்க முடியவில்லை என்றால் பகலில் உறங்கி  அந்த நாளைக்குரிய உறக்கத்தை ஈடு செய்துகொள்ள வேண்டும், தூங்காவிட்டால் மூளைக்கு ஓய்வு கிடையாது. அதனால் மூளை பாதிக்கப்படும் இவை போன்று இன்னும் ஏராளமான தூக்கத்தைப் பற்றிய தவறான நம்பிக்கைகள் நம்மிடம் இருக்கின்றன. இவை எதுவும் உண்மை இல்லை. முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டியது, தூக்கம் என்பது ஓய்வு அல்ல.

ஒரு பள்ளி மாணவனை அழைத்துவந்த அவனது பெற்றோர்தேர்வு நேரத்தில் எப்ப பார்த்தாலும் தூங்கிட்டு இருக்கான் டாக்டர், தூங்குற நேரத்துல படிக்கலாம்தானே, பரிட்சை எல்லாம் முடிஞ்சதுக்கு அப்புறம் நல்லா தூங்கட்டும்என்றார். இப்படித்தான் பெரும்பாலானவர்களின் எண்ணம் இருக்கிறது, தூக்கம் என்பது ஒரு ஓய்வு அல்ல. நமக்கு வேண்டுமானால் ஓய்வாக இருக்கலாம், நம் உடலுக்கு அல்ல. ஒவ்வொரு நாளின், உடலின் செயல்பாட்டை எடுத்துக்கொண்டால் மூளை ஒரு நாளின் அதிகபட்சமான வேலையை தூக்கத்தில்தான் செய்கிறது; அதேபோல் நம் உடலின் ஒவ்வொரு பாகமும் அதன் செயல்களையும் தூக்கத்திலேயே செய்கின்றன. தூக்கத்தில் செய்யக்கூடியது, விழித்திருக்கும்போது செய்யக்கூடியது என தெளிவான அட்டவணையுடன்தான் நமது உடல் இயங்குகின்றன. நாம் தூங்கினாலும்கூட நமது உடலும், மூளையும் உழைத்துக்கொண்டுதான் இருக்கின்றன. நாம் விழித்திருக்கும்போது சேகரிக்கும் தகவல்கள் எல்லாம் நாம் உறங்கும்போதுதான்.

மூளையில் சேமிக்கப்படுகின்றன ஒரு பகலில் எவ்வளவு நேரம் ஒருவர் படித்தாலும், படித்த அத்தனை தகவல்களும் உறக்கத்திலேயே நமது மூளையில் சேகரிக்கப்படுகின்றன. அதனால் படிக்கும் ஒரு மாணவனுக்கு உறக்கமும் அவசியமான ஒன்று. அதேபோல தூக்கத்தை பொறுத்தவரையில் இவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் கிடையாது. ஒவ்வொருவரின் உடல்வாகுக்கு ஏற்றவாறு அந்த உடலே எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ளும்; சுருக்கமாக சொல்வதென்றால் தூக்கத்தைப் பொறுத்தவரையில், எவ்வளவு நேரம் தூங்குகிறோம் என்பதைவிட எவ்வளவு நன்றாக தூங்குகிறோம் என்பதுதான் முக்கியமானது. உடல் போதுமானதாக உணர்ந்தால் இரண்டு மணி நேர தூக்கம் கூட நார்மல்தான். அதனால் 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்று என்று நாம் ஒரு கருத்தை உருவாக்கிக் கொண்டு தூங்கவில்லை, தூங்கவில்லை எனது வருந்துவது அவசியமற்றது; அது ஒரு பதட்டத்தைத்தான் கொடுக்கும்.

நீங்கள் குறிப்பிட்டிருப்பது இதுதான் இத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்று உங்களுக்குள் ஒரு எண்ணத்தை உருவாக்கி வைத்திருக்கும் நீங்கள், அத்தனை மணி நேரம் தூங்க முடியாதபோது நீங்கள் கொண்டிருக்கும் இந்த எண்ணம் ஒரு பதட்டத்தை உருவாக்குகிறது, தூக்கத்தின் முதல் எதிரி பதட்டம்தான். நீங்கள் கொண்டிருக்கும் இந்த எண்ணத்தின் விளைவாகவே இந்தப் பதட்டம் உங்களைத் தூங்கவிடாமல் செய்து கொண்டிருக்கிறது. அதேபோல தூக்கம் என்பது இயல்பாக வரக்கூடியது. தூக்கத்தையும் பசியையும் நம்மால் கட்டாயப்படுத்தி வர வைக்க முடியாது, அப்படி கட்டாயப்படுத்தினால் இவை இரண்டுமே வராமல் போவதற்குரிய சாத்தியங்கள்தான் அதிகம். அதேபோல இத்தனை மணி நேரம் தூங்கவில்லை என்றால் உடல் ஆரோக்கியம் கெட்டுப் போய்விடும் என்று நீங்கள் நினைப்பதும்கூட ஒரு தவறான நம்பிக்கையே.

இரண்டு மணி நேர ஆழ்ந்த தூக்கத்தில்கூட உடல் தனக்குத் தேவையான பணிகளைச் செய்து முடித்துக்கொள்ளும் நிலையில் அதை உணராமல் நீங்கள் கொண்டிருக்கும் இதுபோன்ற எண்ணங்கள் உங்களுடையப் பதட்டத்தை மேலும் அதிகரிக்கும் அதன் விளைவாக உடல்ரீதியான ஒவ்வொரு செயலையும் நீங்கள் அந்தப் பதட்டத்தில் வழியாகவே பார்க்கும்போது உடலின் சின்னச்சின்ன வாதைகள்கூட உங்களுக்கு மிகப் பெரியதாக தெரியும், அதனால் எப்போதும் இதே நினைப்பிலேயே நீங்கள் இருப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகும். அதனால்தான் எதிலும் ஆர்வமின்மை, கவனமின்மை போன்றவை ஏற்படுகின்றன. உங்கள் பிரச்சினைக்குத் தீர்வாக நீங்கள் செய்ய வேண்டியவை என்னவென்றால் தூக்கம் தொடர்பாக நீங்கள் கொண்டிருக்கும் அத்தனை நம்பிக்கைகளையும் தூக்கிப் போடுங்கள். தூக்கத்தை இயல்பாக வர அனுமதியுங்கள். தூக்கம் இல்லாத நேரத்தில் அதற்காக வருத்தப்பட தேவையில்லை, அதை எப்படி ஈடு செய்வது என்பது உங்கள் உடலுக்கு நன்றாகவே தெரியும் அதனால் அந்தப் பாரத்தை நீங்கள் சுமப்பதை விட்டுவிட்டு உங்களது வழக்கமான வேலைகளைப் பார்க்க தொடங்குங்கள். நீங்கள் உண்மையில் தூக்கத்தைப் பற்றிய எந்தக் கவலைகளும் இல்லாதிருக்கும்போது ஒரு கோடை காலத்து மழையைபோல தூக்கம் உங்களை தேடிவரும்.

முந்தையை கேள்வி -பதில்:https://bit.ly/2HuYG5d

கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: manamkelvipathil@gmail.com


Tags:
தூக்கமின்மை, டாக்டர். சிவபாலன் இளங்கோவன், மன அழுத்தம், உடல் நலம், தூக்கம், மனநலம், உடல் தேர்வு, மன அதிர்ச்சி