உலகம் முழுவதும் தனது கொடுங்கரங்களால் எண்ணற்ற உயிர்களை கொன்று குவித்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சமூகத்தில் மிகப்பெரிய அச்ச உணர்வினையும், சமூகம் சார்ந்த பல சிக்கல்களையும் உருவாக்கி வைத்திருக்கிறது. இந்நிலையில் உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான கூகுள் (Google) தனது தொழில்நுட்பங்களின் அடிப்படையில்  கிடைத்த தரவுகளை கொண்டு சமூக இயக்கம்/சமூக நகர்வு அறிக்கை (Community Mobility Report) ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

உலகம் முழுவதுமுள்ள பல கூகுள் பயனாளிகளின் தகவல்களை(User Information) தொகுத்து அநாமதேயமாக்கி (Aggregated, Anonymized) ஆறு கூறுகளாக முன்னிறுத்தியிருக்கிறது.

சில்லறை வர்த்தகம் & கேளிக்கை இடங்கள் (Retail & Recreation)

மளிகை & மருந்து கடைகள் (Grocery & Pharmacy)

பூங்காக்கள் (Parks)

போக்குவரத்து இடங்கள்(Transit Stations)

வேலைபார்க்கும் இடங்கள் (Workplaces)

வீடுகள்(Residential)

பயனாளிகளின் இடப்பெயர்வினை மேற்கூறிய 6 வகைகளாக பிரித்துள்ளனர். அதற்காக பயனாளிகளின்  ஜனவரி 3 முதல் பிப்ரவரி  6 வரையிலான 5 வார தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளது. கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பயனாளிகளின் மார்ச் மாதம் 29 ஆம் தேதிவரையிலான இருப்பிடத் தகவல்கள்(Location History) , ஏற்கனவே தொகுக்கப்பட்ட தகவல்களுடன் ஒப்பீடு செய்யப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. பயனாளிகளின் தகவல்கள் அவரது கூகுள் பயனாளிகள் அமைப்பு(User Settings), இணைப்பு (Connectivity) ,தனியுரிமை (Privacy) அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது. பயனாளிகளின் கடந்தகால இருப்பிடத் தகவல்கள் மிகவும் முக்கியமாக பயன்படுத்தப்பட்டு உள்ளது.

தொகுக்கப்பட்ட 5 வார தகவல்களை திரட்டி அடிக்கோடு (Baseline) மதிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த அடிக்கோடு மதிப்பிற்கு மேலாகவும் கீழாகவும்  ஒப்பீட்டு தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அடிக்கோட்டிற்கு மேலாக தகவல்கள் இடம்பெற்றால் அந்த இடங்களில் சமூக பரவல்  இருக்கிறது என்றும் அடிக்கோட்டிற்கு கீழாக தகவல்கள் இடம்பெற்றால் சமூக விலகல் இருக்கிறது என்றும் பொது இடங்களைப் பொருத்தவரை நேரடியாக பொருள் கொள்ளலாம்.அது வீடுகளுக்கும் பொருந்தும். ஆனால் அதற்கு சமூகம் வீடுகளில் பரவியிருக்கிறது என்று பொருள் கொள்ளலாம்.

அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, ஃபிரான்ஸ், சீனா, ஈரான், இங்கிலாந்து ஆகிய நாடுகள் நோய் பரவலில் முன்னணியில் இருக்கின்றன. இறப்பு விகிதத்தின் அடிப்படையில்  இத்தாலி,  ஸ்பெயின், அமெரிக்கா, ஃபிரான்ஸ்,  இங்கிலாந்து,    ஈரான், சீனா போன்ற நாடுகள் வரிசை பிடிக்கின்றன. கூகுள் வழங்கியுள்ள அறிக்கையின்டி   அமெரிக்காவில் அடிக்கோடு மதிப்பிற்கு கீழாக 38% நபர்கள் மட்டுமே பணியிடங்களுக்கு செல்லாமல் இருக்கின்றனர். வீடுகளில் அடிக்கோடு மதிப்பிற்கு மேலாக 12% நபர்கள் மட்டுமே இருக்கின்றனர். 53% நபர்கள் கேளிக்கை நிறுவனங்களுக்கும் 22% நபர்கள் கடைகளுக்கும் 19%  நபர்கள் பூங்காக்களுக்கும் 51% பொது போக்குவரத்திற்கும் செல்வதை தவிர்த்திருக்கின்றனர். ஆனால் அதன் எதிர் மதிப்பு மக்கள் இன்னும் அந்த இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவில்லை என்பதை தெரிவிக்கிறது. அடிக்கோடு மதிப்புடன் ஒப்பீட்டு மதிப்பு 0% ஆக இருந்தால் 5 வார கணக்கீட்டு மதிப்பு அப்படியே  தொடர்கிறதென அறியலாம். அடிக்கோடு மதிப்பிற்கு மேலாகவோ கீழாகவோ   ஒப்பீட்டு மதிப்பு செல்லும் போது சமூக நகர்வு இருப்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அடிக்கோட்டிற்கு 100% மேலாக அல்லது கீழாக இருந்தால் 5 வார கணக்கீட்டு மதிப்பு முழுமையாக இருக்கிறது என்று பொருள். கணக்கீட்டு மதிப்புக்கு மேலாக இருந்தால் அந்த இடத்தில் அதே நிலை அல்லது பரவல் தொடர்கிறது எனலாம். கூட்டமாக இருந்த இடம் அதே அளவு கூட்டத்துடனோ அல்லது கூட்டமில்லாத இடம் அதே அளவு கூட்டமின்றியோ இருக்கிறது என்று பொருள்.கணக்கீட்டு மதிப்புக்கு 100% கீழாக இருந்தால்  அந்த இடத்தில் முழுமையாக சமூக விலகல் அல்லது அந்த நிலைக்கு எதிர் நிலையில் இருக்கிறது எனலாம். அதாவது கூட்டமாக இருந்த இடம் ஒருவரும் இல்லாமல் இருக்கிறது அல்லது கூட்டமில்லாத இடம் முழுமையாக கூட்டத்துடன் இருக்கிறது எனலாம்.

கூகுள் வழங்கியுள்ள அறிக்கையின்டி   இந்தியாவில் அடிக்கோடு மதிப்பிற்கு கீழாக 47% நபர்கள் மட்டுமே பணியிடங்களுக்கு செல்லாமல் இருக்கின்றனர். வீடுகளில் அடிக்கோடு மதிப்பிற்கு மேலாக 22% நபர்கள் மட்டுமே இருக்கின்றனர். 77% நபர்கள் கேளிக்கை நிறுவனங்களுக்கும் 65% நபர்கள் கடைகளுக்கும் 57%  நபர்கள் பூங்காக்களுக்கும் 71% பொது போக்குவரத்திற்கும் செல்வதை தவிர்த்திருக்கின்றனர்.  அமெரிக்க மக்களுக்கும் இந்திய மக்களுக்கும் அடிப்படையில் இருக்கும் சமூக பரவல் குறித்த வேறுபாடு நோய் பரவுவதை பெருமளவில் கட்டுப்படுத்தியிருக்கிறது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. ஆனால் ஜனவரி 3 முதல் பிப்ரவரி வரையிலான 5 வார தகவல்களைக் மட்டுமே கொண்டு கூகுள் நிறுவனம் இந்த ஒப்பிட்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பிப்ரவரி 6க்கு பிறகு பல கூட்டங்களை மக்களும் அரசும் பல்வேறு காரணங்களால் உருவாக்கி இருக்கின்றன.

மேலும் சில பயனாளிகளின் தகவல்கள் 5 வார தொகுப்பு கணக்கீட்டிற்கு கிடைத்திருக்கும் அதற்கு பிந்தைய ஒப்பீட்டு கணக்கீட்டிற்கு கிடைத்திருக்காது. அதுபோலவே சில பயனாளிகளின் தகவல்கள் 5 வார தொகுப்பு கணக்கீட்டிற்கு கிடைத்திருக்காது அதற்கு பிந்தைய ஒப்பீட்டு கணக்கீட்டிற்கு கிடைத்திருக்கும். அதன் அடிப்படையில் சில தரவுகளை சேர்த்தும் சில தரவுகளை நீக்கியும் ஒப்பீடு செய்யப்பட்டிருக்கும்.அதனுடைய விளைவுகள் இந்த கணக்கீட்டை கண்டிப்பாக மாற்றக்கூடிய ஒன்று.

உலகம் முழுவதும் கிடைத்துள்ள கூகுள் தகவல்களின் அடிப்படையில் பார்க்கின்ற பொழுது மார்ச் மாதம்  8 ஆம் தேதிக்கு பிறகு  அல்லது அன்று வரை   பரவல் அதிகமாக இருந்த நாடுகள் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த நாடுகளே நோய் பரவல் மற்றும் இறப்பு விகிதம் அதிகம் கொண்டிருக்கின்றன. சீனா மற்றும் ஈரான் குறித்த தகவல்கள் கூகுள் அறிக்கையில் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவற்றுள் மிகமுக்கியமானது பயனாளிகளின் தனியுரிமை ஆகும். ஏனெனில் பயனாளிகளின் கூகுள் தரவுகளைப் பயன்படுத்தி  சில சரியான வினாக்களின் (Query) மூலமாக பயனாளிகள் குறித்த சமூக, பொருளாதார, இருப்பிட, நோய் குறித்த தகவல்களை பெறமுடியும். ஆனால் அவ்வாறு எதுவும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் கூகுள் நிறுவனம் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு சில சிறப்பு முறைகளைப் பயன்படுத்தி பயனாளிகளின் தனியுரிமையை(Privacy) உறுதி செய்துள்ளது.

சமகாலத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய நோய் பரவல் ஒன்றை எதிர் கொள்வதிலும் அதன்பொருட்டு உடல்நலம், மருத்துவம், பாதுகாப்பு குறித்து திட்டமிடுவதிலும்  நவீன தொழில்நுட்பங்களும், செயற்கை நுண்ணறிவு முறைகளும் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் உலகமுழுவதும் நிகழக்கூடிய  பேரிடர்களில் நாம் செயல்படும் முறைகளில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.