( இது சில தினங்களுக்கு முன்பு எழுதப்பட்ட கட்டுரை.  இந்த பெயர்ப்பு வெளிவரும் தருணத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இன்னும் அதிகரித்துவிட்டது)

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 315ஐ தொட்டிருக்கும் நிலையில், ஒரே நாளில் 60 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த வேகத்தில் நோய் பரவுவது அடுத்து வரும் வாரங்களில் இந்தியா சந்திக்கப் போகும் ஆபத்தைக் காட்டுகிறது. நம்மிடமுள்ள புள்ளி விவரங்களின்படி பார்த்தால் நரேந்திர மோதியின் அரசு என்ன செய்ய வேண்டுமென்பது கண் முன்னால் தெளிவாகத் தெரிகிறது.

இந்தியாவில் மிக வேகமாகப் பரவும் கொரோனா

இந்தியாவில் முதல் 50 பேரை 40 நாட்களில் தொற்றியது கொரோனா. அதற்கடுத்த ஐந்து நாட்களில் 100 பேரைத் தாக்கியது. அடுத்த மூன்றே தினங்களில் 150. அதன் பிறகு இரு நாட்களில் 200 பேருக்கு கொரோனா தொற்று. நோயின் பரவல் உச்சத்தை நோக்கி வேகமாக நகர்கிறது என்பதை இது காட்டுகிறது.

ஐந்து நாட்களில் பாதிப்பக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது. இரண்டே நாட்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் அமெரிக்காவின் நிலையை நோக்கி இந்தியா நகர்வதைக் காட்டுகிறது இந்த புள்ளி விவரம்.

தென் கொரியாவில் முதல் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட 10 நாட்களில் இத்தாலியில் முதல் பாதிப்பு தெரிந்தது. அதற்கடுத்த 20 நாட்களில் இத்தாலியில் புதிதாக 10 பேரையே தொற்றியது. அதே காலக் கட்டத்தில் தென் கொரியாவில் தொடர்ச்சியாக கிருமித் தொற்று அதிகமாகிக்கொண்டே இருந்தது. ஆனால் அதற்கடுத்த ஒரே வாரத்தில் இத்தாலியில் நூறு மடங்கு அதிக பரவல் ஏற்பட்டது. அதே ஒரு வார காலக் கட்டத்தில் தென் கொரியாவின் கிருமித் தொற்று விகிதம் சரியத் தொடங்கியது. ஆனால் இத்தாலியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருந்தது. மருத்துவ-சுகாதாரத் துறையால் சமாளிக்க முடியாத அளவுக்கு அதன் பெருக்கம் இருந்தது. இத்தாலியில் ஏற்பட்டது போன்ற நோய்ப் பெருக்க விகிதத்திலிருந்து இந்தியா தன்னைத் தற்காத்துக்கொள்ள வேண்டும். அதைச் செய்ய வேண்டுமென்றால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட சமூக இடைவெளித் திட்டம் கடுமையாக அமல்படுத்த்பட வேண்டும்.

இந்தியாவில் நமக்குத் தெரிய வருவது எல்லாம் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்று மட்டுமே என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தனது அரதப் பழசான பரிசோதனை முறையிலிருந்து இந்தியா மாறினால்தான் நிஜமான கொரோனா தொற்று விகிதம் நமக்குத் தெரியும். எல்லாவித மூச்சுப் பிரச்சனை உள்ளவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்வது என்ற மோதி அரசின் நடவடிக்கை, அத்தகைய புதிய செயல்திட்டங்களின் துவக்கமாக இருக்கும்.

இந்தியாவில் வெடித்துக் கிளம்பவிருக்கும் நோயாளிகள் எண்ணிக்கை

கொரோனாவின் இந்த தொற்று விகிதத்தின்படி, உலக சுகாதார அமைப்பு கூறும் 3.4% மரணம் என்பதன் அடிப்படையில் பார்த்தால் மே இறுதிக்குள் இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்படலாம். அதில் 30,000 பேர் துரதிர்ஷ்டவசமாக மரணத்தை சந்திக்க நேரலாம். தொற்றின், மரணத்தின் விகிதத்தை குறைத்து மதிப்பிட்டால் கிடைக்கும் எண்ணிக்கை இது. உயிரியலையும் புள்ளியலையும் இணைக்கும் துருவத்திலிருந்து கணிப்புகள் வெளியிடும் நிபுணர்களின் கருத்துப்படி இந்த எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கலாம்.

திடீரென ஒரே நாளில் எண்ணிக்கை மடமடவென உயர்வது இந்த எண்ணிக்கையை இன்னும் அதிகமாக்கிவிடலாம் என்பதால் இப்போதைக்கு இப்படித்தான் இருக்கும் இவ்வளவுதான் இருக்கும் என தெளிவாகச் சொல்ல முடியாது. ஏனென்றால் கொரோனா பரிசோதனை இன்னும் பல தரப்பினரை எட்டவே இல்லை.  இதுவரை கண்டுபிடிப்பட்டதைவிட எட்டு மடங்கு அதிக பாதிப்பு இறுக்கலாம் என வைத்துக்கொண்டால் மே மாதத்திற்குள் 1.7 லட்சம் பேர் உயிரிழக்க நேரலாம் என்கிறார் இந்தியா மென்பொருள் தொழில்முனைவரான மாயாங்க் சாப்ரா.

அடுத்த நடக்கவிருக்கும் பாதிப்பின் வீரியத்தைப் பலர் உணரவே இல்லை. இந்தியாவில் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு வேலை பாதுகாப்பு என்று எதுவும் கிடையாது என்ற பின்னணியில் இந்த அறியாமையைப் பார்க்க வேண்டும். அதனால் கேரளாவும் பிற மாநிலங்களும் அறிவித்திருப்பது போன்ற இழப்பீட்டுத் திட்டங்களை நாடு முழுவதும் சரியாக அமல்படுத்த வேண்டும். இதை அடுத்து வரும் சில மாதங்களுக்குச் செய்தாக வேண்டும்.

இந்தியாவின் மருத்துவ வசதிகள் போதுமானதாக இருக்குமா?

2017ன் புள்ளி விவரத்தின்படி இந்தியாவில் 1,000 பேருக்கு 0.5 படுக்கைகளே உள்ளன. அடுத்து வரும் மாதங்களில் இந்தியாவின் மருத்துவ மையங்கள் பிதுங்கி வழிந்துகொண்டு இருக்கும். இந்த நோய்த் தொற்று விகிதத்தின்படி ஜூன் முதல் வாரத்தில் புதிய நோயாளிகளுக்கு படுக்க மருத்துவப் படுக்கைகளே இருக்காது. மருத்துவ படுக்கை எண்ணிக்கையை இருமடங்காக்கினால்கூட சாப்ராவின் கணிப்பின்படி ஏப்ரல் முடிவிலேயே நோயாளிகளுக்கு படுக்கை இருக்காது.

இந்தியாவில் உள்ள ஐ.சி.யு படுக்கை எண்ணிக்கை, வெண்டிலேட்டர் பற்றிய புள்ளி விவரம் நம்மிடம் இல்லை. ஆனால் பெரிதும் பற்றாக்குறையாகவே இருக்கிறது என்றே கருதப்படுகிறது. இந்தியா முழுவதும் 70,000 ஐ.சி.ஐ படுக்கைகள் இருப்பதாக ஒரு கணிப்பின்படி தெரிகிறது. மே இறுதியில் கொரோனா தொற்று ஏற்பட்ட 10ல் ஒருவருக்கு ஐ.சி.யு படுக்கை தேவைப்பட்டால்கூட இந்தியாவின் ஐ.சி.யு படுக்கைகள் நிரம்பி வழியும்.

பணக்கார நாடுகளே இதில் தடுமாறியிருக்கின்றன. யாருக்கு ஐ.சி.யு படுக்கை கொடுப்பது என்பதில் இத்தாலிய டாக்டர்கள் முடிவெடுக்க முடியாத முடிவுகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மருத்துவ சப்ளைகளை செய்வதற்கு ராணுவத்தின் உதவியைக் கோர வேண்டியிருந்தது. அமெரிக்காவும் அந்த நிலையை நோக்கித்தான் தள்ளப்பட்டிருக்கிறது. இந்தியாவில் 40,000 வெண்டிலேட்டர் இருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. “போதுமான வெண்டிலேட்டர்கள் இருக்கின்றன” என்று சொல்வதைத் தாண்டி, கூடுதல் வசதிகளை ஏற்படுத்துவது பற்றி மோதி அரசு எதுவும் இதுவரை பேசவில்லை.

சில மாநிலங்கள் சமாளிக்க முடியாமல் தடுமாற வேண்டியிருக்கும்

மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளில் இந்திய மாநிலங்களிடையே வேறுபாடுகள் இருப்பது நிஜம். மருத்துவ அவசர நிலைகளை சமாளிப்பதில் ஏழை மாநிலங்கள் எப்போதுமே தடுமாறுவதுண்டு. உங்களுக்குத் தெரியுமா? கேரளா போன்ற இந்தியாவின் சிறந்த மாநிலங்களின் உடல் நலம் சார்ந்த புள்ளி விவரங்கள் பிரேசில், அர்ஜென்டைனா போன்ற நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளுக்கு சமமாக உள்ளது. அதே சமயத்தில் ஒடிசா போன்ற ஏழை மாநிலங்களில் உடல் நலம் சார்ந்த புள்ளி விவரம் சியாரா லியோன் போன்ற பாதாளத்தில் இருக்கும் நாடுகளுக்குச் சமமமாக உள்ளது. இது 2019ல் நிதி ஆயோக் வெளியிட்ட புள்ளி விவரம் தெரிவிக்கும் தகவல்.

பிஹாரில் 1 லட்சம் பேருக்கு அரசு மருத்துவமனை படுக்கையே உள்ளது. கோவாவில் அதுவே 20. இத்தாலியில் 1,280 பேரில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் மாவட்ட மருத்துவமனைகளில் மருத்துவ நிபுணர் பணி இடங்களில் 71 சதவீதம் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் மருத்துவமனையில் சேரும் 64 சதவீத காச நோயாளிகள் மட்டுமே உயிர் பிழைத்துத் திரும்புகிறார்கள். பிஹாரின் உயர் மருத்துவ மையங்களில் 15 சதவீதம் மட்டுமே இயங்கும் நிலையில் உள்ளன.இந்த மாநிலங்களின் மோசமான மருத்துவ சேவையின் நிலையை உயர்த்த மோதி அரசாங்கத்தால் என்ன செய்ய முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இவ்வளவு காலம் கடந்த பிறகும் அதைச் செய்ய முடியுமா என தெரியவில்லை.

ஏதாவது செய்ய வேண்டிருந்தால் அது நேற்றே செய்யப்பட்டிருக்க வேண்டும்.

(கட்டுரையாளர் சென்னையை மையமாகக் கொண்டு தரவுகள் அடிப்படையில் இயங்கும் பத்திரிகையாளர். கட்டுரையிலுள்ள கருத்துக்கள் அவரது சொந்த கருத்துகள்.)

 

நன்றி:

At current rate, India can see 30,000 COVID-19 deaths by May, no hospital bed by June: Data