கடந்த ஜூலை மாதம் வரையில் 22.018 கோடி ஆதார் செயல்படுத்தப்பட்ட பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன என்று இந்திய தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI) தெரிவித்துள்ளது. இதன்மூலம் 200 மில்லியன் ஆதார் செயல்படுத்தப்பட்ட பணப்பரிவர்த்தனைகள் என்ற இலக்கை எட்டியுள்ளது. மேலும் இந்த பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.9685.35 கோடிகள் ஆகும். கடந்த ஜூன் மாதம் 19.433 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றிருந்தன. இவற்றின் மொத்தமதிப்பு ரூ.8867.33 கோடிகள் ஆகும்.

ஆதார் செயல்படுத்தப்பட்ட பணப்பரிவர்த்தனைகள் என்பது ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் மற்றும் பீம் ஆதார் ஆகியவற்றின்மூலம் நடக்கும் பரிவர்த்தனைகள் ஆகும். நிதிசார் உள்ளடக்கலை அதிகரிக்கும்பொருட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் ஆதார் கட்டாயமாக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு பல எதிர்ப்புகள் இருந்தபோதும் தற்போது பலரும் ஆதார் இணைக்கப்பட்ட பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.

கடந்த ஜூலை நிலவரப்படி 6 கோடியே 65 இலட்சம் மக்கள் ஆதார் செயல்படுத்தப்பட்ட இயங்குதளங்களின்மூலம் வங்கிச் சேவைகளைப் பெறுகிறார்கள் என்று தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI) தெரிவித்துள்ளது.

மைக்ரோ ஏடிஎம்கள்:

Micro ATM

எஃப்.ஐ.எஸ் கொடுப்பனவு தீர்வுகள் மற்றும் சேவைகள் நிறுவனத்தின் ஏ.டி.எம் சார் சேவைகளின் நிர்வாக இயக்குநர் திருமதி ராதா ரமா தோராய், ‘அதிகரித்துவரும் பரிவர்த்தனைகளுக்கு ஏற்றார்போல ஏடிஎம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். தற்போது பெருநகரங்களில் இலட்சம்பேருக்கு 50 ஏடிஎம்களும் மற்ற நகர்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் இலட்சம் பேருக்கு 5 ஏடிஎம்களுமே செயல்பாட்டில் உள்ளன. இவை போதாது. எனவே அதிக மக்கள் ஆதார் செயல்படுத்தப்பட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்வது மைக்ரோ ஏடிஎம்கள் பயன்பாட்டின் தேவையை அதிகரிக்கிறது. ஏடிஎம்கள் நிறுவுதலில் உள்ள நடைமுறைச் சிக்கல்களும் மைக்ரோ ஏடிஎம் பயன்பாடு அதிகரிக்கக் காரணம் ஆகிறது’ என்று தெரிவித்தார்.

அரசு மைக்ரோ ஏடிஎம்கள் பயன்பாட்டை ஊக்கப்படுத்தி வருகிறது. நாடெங்கும் பல இடங்களில் மைக்ரோ ஏடிஎம்கள் வழங்கப்பட்டன. மைக்ரோ ஏடிஎம் என்பது POS இயந்திரங்களைப் போன்றது தான். ஏடிஎம்களில் நாம் பெறும் சேவைகளில் அனைத்தையும் மைக்ரோ ஏடிஎம்களிலும் செய்ய முடியும்.

அதிகரிக்கும் மைக்ரோ ஏடிஎம் பயன்பாடு:

மைக்ரோ ஏடிஎம்களில் 33 மில்லியன் பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு மொத்தம் ரூ.8,774 கோடி ஆகும். பிஓஎஸ் டெர்மினல்களில் ரூபே (RuPay) கார்டுகள் பயன்படுத்தப்பட்ட மில்லியன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மதிப்பு மொத்தம் பரிவர்த்தனைகள் ரூ.8,723 கோடிகள்.

ஆதார் செயல்படுத்தப்பட்ட பணப்பரிவர்த்தனைகள் பெரும்பாலும் நகர்ப்புற மக்களால் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் இவற்றின் பயன்பாடு அதிகரிக்கவில்லை என்பதே கள நிலவரம். மக்கள் பலரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளைக் கண்டு அஞ்சும் நிலை தான் இன்னமும் நிலவுகிறது. டிஜிட்டல் இந்தியா என்ற கொள்கையைக் கொண்டுள்ள இந்த அரசு அம்முடிவில் பின்வாங்குவதாக இல்லை என்பதால் மக்களிடம் தக்க விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தி அவர்களுக்கு இதன் பயன்பாடுகளுக்கான பயிற்சியை வழங்க வேண்டும் என்பதே பலரின் வேண்டுகோளாக இருக்கிறது.