பல நேரங்களில் நாம் மற்றவர்களுக்காக சில அளவீடுகள் வைத்திருக்கிறோம். அவைகளை முன்வைத்தே நம் மதிப்பீடுகள் அமைகின்றன. உடைகள், நடை, பேச்சுமுறை, அமரும் முறை என்று அந்த பட்டியல் நீளம். சமீபத்தில், டெல்லியில் குட்டை பாவாடை அணிந்து வந்திருந்த பெண்ணை அவரது உடைக்காகவே பாலியல் வன்புணர்வு செய்யலாம் என்று கூறியிருக்கிறார் நடுத்தர வயதுப் பெண் ஒருவர். தொடர்ந்து பதிவுசெய்யப்பட்ட அந்தக் காணொளிக் காட்சி இணையத்தில் வைரல் ஆகியது. மறுபடியும், இங்கே உடையை முன்வைத்து மதிப்பிட்ட ஒரு சம்பவம்!

நமது சமூகத்தில் நிறைந்திருக்கிற பால் வேறுபாடுகளின் ஆழம் அவ்வளவு எளிதில் சமன்படுத்தக் கூடியதல்ல, ஒடுக்கப்பட்ட பாலினத்தவர்களுக்கான மறுக்கப்பட்டு வரும் அடிப்படை உரிமைகள் குறித்து துளி அறிவும் இல்லாதவர்களாய்த்தான் நாமிருக்கிறோம். நமது மனங்களில் வேரூன்றப்பட்டிருக்கும் மற்றவர்களுக்கான இப்படியான மதிப்பீடுகள் எவ்வளவு மோசமான உடலரசியலைக் கொண்டிருக்கிறது!

இந்த உடலரசியலை விடாமல் பற்றிக்கொண்டிருப்பதற்கான முக்கிய கருவிகளாகப் பெண்களையே பயன்படுத்திக் கொள்வதுதான் இந்தப் பால்வேறுபாடுகளின் வீச்சு. தலைமுறைகளாக வளர்த்தெடுக்கப்பட்ட, ஊன்றப்பட்ட உடல் குறித்த விதிகள் கண் முன்னே காணாமல் போவதைப் பொறுத்துக்கொள்ள முடியாத வெளிப்பாடுகள்தான் இம்மாதிரியான நிகழ்வுகள். பெண்ணுடலை வெறுக்கும் மனநிலைக்கு ஒரு பெண்ணையே தயார்ப்படுத்துவதுதான் இந்த பால் பேத அடக்குமுறைகள் உயிர்த்திருப்பதற்கான முக்கிய எரிபொருளாய் இருக்கிறது. தன் சொந்த உடலை வெறுக்க, மறைக்க சொல்லித்தருவதுதான் இதன் அடிப்படை. சதாசர்வ காலமும் உடல் குறித்த, விலகப் போகும் உடை குறித்த எச்சரிக்கை விளக்குகள் மூளைக்குள் எரிந்துகொண்டே இருக்க ஒரு பெண்ணைப் பயிற்றுவிப்பது அம்மாக்கள், பாட்டிகளின் கடமையாக இருந்தது. இந்தத் தலைமுறையில் தன்னுடல் குறித்த வெறுப்புணர்வைப் பல பெண்கள் விட்டொழித்திருப்பது நிச்சயம் அருமையான விஷயம்.

உடைகளின் அடிப்படையில் வன்புணர்விற்கான சாத்தியக்கூறுகளை சொல்லும் இந்தக் கருத்திற்குக் கிளம்பிய எதிர்ப்புகள் இன்னும் எதன் எதன் அடிப்படையில் நமது மற்றவர்களுக்கான மதிப்பீடுகள் அமைந்துள்ளனவோ அவற்றின் பக்கமும் திரும்ப வேண்டும். சாதாரணமாக நமது அழகுக்கான விளக்கங்கள், ஆண் பெண் என்ற பாலுக்கான வரையறைகள் எத்தனை பிற்போக்குத்தன்மாய் இருக்கின்றன என்பதை யோசித்துப் பார்க்கும் அவசியம் இப்போதாகிலும் நமக்கு உரைக்க வேண்டும். இரு பால் வகைப்பாட்டுக்குள் சிக்கிக்கொண்டு, அதையும் மேற்கொண்டு வரையறைகளால் பெரும் சிக்கலாக்கி வைத்திருக்கும் நாம் நான்-பைனரி (Non-binary), ட்ரான்ஸ்(trans) மனிதர்களின் தேவைகளை எப்போது புரிந்து கொள்ளப் போகிறோம்?

ஒரு பெரிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. காலம் காலமாக ஏற்றப்பட்ட எத்தனையோ விஷயங்களை, பால், காதல், காமம் என எல்லாவற்றின் மீதுமான நமது சாயங்களை உரித்துப்போட வேண்டியிருக்கிறது. அதற்குத் தேவையான தெளிவான பார்வையும், திறந்த அறிவும்தான் வேண்டும். இதற்கு இடைப்பட்ட பயணத்தில், இப்படியான சம்பவங்களை எதிர்கொள்ளும்போது நடுத்தர வயதுடைய அந்தப் பெண்ணையே மொத்த குற்றத்தையும் செய்தவர் என்பதுபோல் நம் விமர்சனங்கள் அமைவது எப்படி சரியாகும்? அவரைத் தொடர்ந்து மட்டம் தட்டுவதும், அவரின் குடும்பத்தையும் இதில் இழுப்பது நிச்சயம் அருவருக்கத்தக்கது. எல்லோருக்குமான உரிமைகளை ஏற்பதும், அதைப் புரிந்துகொள்வதும்தான் ஒரே தீர்வு.