ராஜா கைய வச்சா- 14

ராகங்களின் ராணி என்று கல்யாணி ராகத்தைச் சொல்லலாம். ராஜாவின் ராணி என்றும் கூறலாம். அந்த அளவுக்குப் பல சிறந்த பாடல்களை இந்த ராகத்தில் தந்திருக்கிறார் அவர். அழகினை ,சௌந்தர்யத்தை வர்ணிக்க ஏற்ற ராகம்!

எழுத்தாளர் லா.ச.ராவை சௌந்தர்ய உபாசகர் என்பார்கள். அழகினை ரசிப்பதைத் தெய்வீக அனுபவமாக ஆக்கி வார்த்தைகளில் கொண்டுவந்தவர் அவர். அவரும் அந்தத் தெய்வீகத் தன்மையை விவரிக்க வார்த்தைகளின் போதாமைய உணர்ந்தவர். வார்த்தைகளால் முடியாத விஷயத்தை ஈடுகட்ட இசை உதவுகிறது.

சௌந்தர்ய லஹரி என்ற பெயரிலேயே அம்பாளின் தெய்வீக அழகை வர்ணித்தவர் ஆதிசங்கரர். அழகின் அலைகள். அபார கவித்துவமும் சொல்லழகும் கூடியவை அவ்விவரிப்புகள். அந்த சௌந்தர்ய லஹரியிலிருந்து இரண்டு சுலோகங்களை எடுத்துத் தனது இரண்டு மிகச்சிறந்த பாடல்களுக்குப் பயன்படுத்தி இருக்கிறார் இளையராஜா. ஒன்று அம்பாளை வர்ணிப்பது இன்னொன்று சிருங்கார ரசமாய்க் காதலியின் அழகைக் கண்ணில்லாதவன் வர்ணிப்பது. இரண்டு பாடல்களுக்கும் இசைஞானி பயன்படுத்திய ராகம் கல்யாணி.

ஒரு பாடலுக்கு முன் ஒரு கவிதையையோ, செய்யுளையோ, சுலோகத்தையோ ஆலாபனையாகப் பாடுவதைத் தொகையறா என்பார்கள். இரண்டு பாடல்களிலும் தொகையறாவாக சௌந்தர்யலஹரி சுலோகங்கள் இடம்பெறுகின்றன. இரண்டு பாடல்கள் இடம்பெற்ற படங்களும் ஒரே வருடம்தான் வெளிவந்தன. 1982ஆம் வருடம்.

அதில் முதல்பாடல் இடம்பெற்றது தாய் மூகாம்பிகை திரைப்படத்தில் . அந்தப் பாடல் அனைவருக்கும் தெரிந்த பிரபலமான ‘ஜனனி ஜனனி’ பாடலே. கல்யாணி ராகத்திற்கான ரெஃபரன்ஸ் பாடலாகவே ஆகிவிட்டது. இசைஞானியின் குரலிலேயே அமைந்தது. அவர் பாடிய பாடல்களிலேயே ஆகச் சிறந்தது என்றால் மிகையில்லை .

’ஜனனி ஜனனி’ பாடலின் தொடக்கத்தில் இடம்பெறுவதுதான் சௌந்தர்ய லஹரியின் முதல் சுலோகம். திரைப்படத்திலும் அதை ஆதிசங்கரர் பாடுவது போன்றே அமைத்திருப்பார். சக்தி இல்லாமல் சிவனால் ஒரு அணுவைக்கூட உருவாக்க முடியாது எனச் சொல்கிறது. மிகத்துல்லியமான வடமொழி உச்சரிப்புடன் அதை ஸ்ருதி சுத்தமாக இசைஞானி பாடலின் தொடக்கத்தில் எடுத்துக் கல்யாணி ராகத்தில் ஆலாபனையில் ஒரு உலா போய் வருவார். ‘சிவசக்தியாம் யுக்தோ’ என எடுக்கும்போதே சிலிர்க்க வைக்கும்.இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்குக்கூட இசை நம்பிக்கை இருந்தால் தெய்வீக அனுபவத்துக்கு நிகரான அனுபவம் அளிக்கிறார்.

தொடர்ந்து வருகிறது ஜனனி ஜனனி என்ற பாடல். திருவிளையாடல் திரைப்படத்தில் கண்ணதாசன் சிவனை ஒன்று இரண்டு என வரிசைப்படுத்திப் பாடியது போல் வாலியின் வரிகளில் ஒன்று இரண்டு என அம்மனைப் பற்றி வர்ணிக்கிறது இப்பாடல்.  ஒவ்வொரு சரணத்துக்கு இடையிலும் வீணையும் புல்லாங்குழலும் பிரதானமாக ஒலிக்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக பாடலில் உயர்ந்து ‘ சக்தி பீடமும் நீ’ என்ற இடத்தில் உச்சத்தைத் தொட்டுக் கொஞ்ச நேரம் அங்கேயே சஞ்சாரம் செய்து வருவார். உடன் தீபன் சக்ரவர்த்தி, கிருஷ்ண சந்தர் ஆகியோரின் கோரஸ் குரல்களின் பக்கபலம் வேறு. மெதுவாக ஆரம்பித்து படிப்படியாக அலங்கரித்து உச்சத்தில் கோபுரத்தில் கலசத்தை வைப்பது போல் ஒரு உணர்வில் லயித்துப் பின் மெதுவாகக் கீழிறங்கி வந்தி அமைதி அடையும்  அனுபவத்தை அளிக்கிறது இசை.

https://youtu.be/PFPX9OgqEG4

ஆன்மீக அனுபவமும் அப்படித்தான். காதலும், காமமும் கிட்டத்தட்ட அது போன்ற அனுபவமே. அதைத்தான் இதே பாணியில் இசைஞானி இசையமைத்த இரண்டாவது பாடலில் நாம் காணலாம். படம் பயங்கரத் தோல்வி அடைந்திருந்தாலும் அதன் பாடல்கள் இன்றும் காலத்தை வென்று நிற்கின்றன. என்னைப் பொருத்தவரை கல்யாணி ராகத்தில் ராஜா இசையமைத்த பாடல்களிலேயே ஆகச்சிறந்த பாடல் இதுதான் எனக் கூறுவேன். அது காதல் ஓவியம் திரைப்படத்தில் வந்த ‘நதியில் ஆடும் பூவனம்’ என்னும் பாடல்தான்.

இதிலும் பாடலின் தொடக்கத்தில் தீபன் சக்கரவர்த்தி குரலில் சௌந்தர்ய லஹரியின் சுலோகம் இடம் பெறுகிறது. அவித்யா என்றால் வித்தைக்கு எதிர்ப்பதம் . அதாவது அறிவீனம். அந்த அறிவின்மை என்னும் இருட்டை அழிக்கும் சூரியனாக அம்மனை ஆதிசங்கரர் வர்ணிக்கிறார். தீபன் சக்ரவர்த்தி இந்த சுலோகத்தை தொகையறாவாகப் பாடிக் கொண்டிருக்கும்போதே பின்னணியில் அதி அற்புதமான ஆலாபனையாக கல்யாணி ராகம் ஒலிக்கிறது ஜானகியின் குரலில். கலகலவென ஓடிப் பொங்கிப் பிரவாகிக்கும் ஆறாய் அருவியாய் நம் காதுகளை நிறைக்கிறது ஜானகியின் குரல்.

தொடர்ந்து வைரமுத்துவின் அபாரமான வரிகளுடன் பாடல் தொடங்குகிறது. ஜானகிக்குக் குரலிலும் பாவத்திலும் ஈடுகொடுக்க எஸ்பிபியால்தானே முடியும். ‘காம தேவன் ஆலயம் ‘என எடுக்கும்போதே நமக்குக் கிறுகிறுக்கும். சரணங்களுக்கு இடையில் ஸ்வரங்களும் ஜதிகளும் பாடுகிறார். பின்னணிக் கருவிகளின் துணையுடன் ஒரு விருந்தையே தொடர்ந்து படைக்கிறார் ராஜா.

ராகம் மட்டுமல்ல பாடல் முழுதும் ‘தகிட தகதிமி’ என்ற ஏழு எண்ணிக்கையில் அமைந்த மிஸ்ரம் என்ற தாளக்கட்டில் இந்தப் பாடலில் தாள லயமும் இன்பத்தை அள்ளி அளிக்கிறது.

ஆதிசங்கரரின் சௌந்தர்ய லஹரியில் அம்மனின் அழகின் தெய்வீக போதையில் இளையராஜாவின் உன்னத இசை தந்த போதை,எஸ்பிபி -ஜானகியின் குரல் தரும் போதை,வைரமுத்துவின் வரிகள் தரும் போதை எனப் போதைமயம். படத்திலும் இப்பாடலில் பலர் கஞ்சா அடித்துப் போதையில் இருக்கின்றனர்.

அதைவிட அதிக போதை அப்பாடல்…
லஹரி என்றால் அலைகள். லாகிரி என்றால் போதை. இப்பாடல் ஒரு ஆனந்த லாகிரி

ஆன்மீகம், இசை, பித்து மனம், காதல், காமம், கவிதை, போதை எல்லாமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இவற்றுக்கான இடங்கள் மூளையில் அருகருகே இருப்பவை . இவை எல்லாமே தரும் பரவசம் ஒன்றே. அதுதான் சௌந்தர்ய ஆராதனை!!

https://youtu.be/0q7RAnfUY0c

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. '' மோகம் என்னும் தீயில் என் மனம்''- டாக்டர் ஜி ராமானுஜம்
  2. சுந்தரி கண்ணால் ஒரு சேதி-டாக்டர் ஜி.ராமானுஜம்
  3. இளையராஜா: நம் காலத்து நாயகன்- டாக்டர். ஜி.ராமானுஜம்
  4.  கமலம் பாத கமலம்!- டாக்டர் ஜி.ராமானுஜம்     
  5. பார்த்தவிழி பார்த்தபடி-டாக்டர். ஜி.ராமானுஜம்
  6. "காற்றில் எந்தன் கீதம்"- டாக்டர் ஜி. ராமானுஜம்
  7. "தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி"- டாக்டர் ஜி. ராமானுஜம்
  8. 'தூங்காத விழிகள் இரண்டு' -டாக்டர். ஜி.ராமானுஜம்
  9. “அந்தி மழை பொழியும் வசந்த காலம் '' : டாக்டர் ஜி.ராமானுஜம்
  10. 'ராகங்களைப் பார்த்த ராஜா பார்வை!' - டாக்டர்.ராமானுஜம்
  11. 'தலையைக் குனியும் தாமரையே' - டாக்டர் ஜி.ராமானுஜம்
  12. என்றைக்குமே இந்த ஆனந்தமே! - டாக்டர் ஜி.ராமானுஜம்
  13. இசையில் தொடங்குதம்மா... - டாக்டர்.ஜி.ராமானுஜம்