தீராத பாதைகள்-2

உலகமே கரனோவின் தாக்குதலால் நிலைகுலைந்து கிடக்கிறது. இந்த சூழலில்தான் மனிதர்களின் வக்கிரத்தையும் பார்க்க முடிகிறது. சானிடைசர்களை பதுக்கி வைப்பது, முககவசங்களை பதுக்குவது, அல்லது இவற்றை கொள்ளை லாபத்திற்கு விற்பது இப்படி எத்தனையோ வகைகளில் மனிதர்கள் தங்களை நிரூபித்துக்கொள்கிறார்கள். அமெரிக்கா இந்த சூழலில் புதுவகை பிரச்சனையைச் சந்திக்கிறது. டாய்லட் டிஷு உடனுக்குடன் காலியாகிவிடுகிறது. ஒரேகான் மாகாணத்தில் டாய்லட் டிஷு நிறைய கடைகளில் தீர்ந்து போகிறது. அதனால் பதற்றமடைந்த மக்கள் அவசர உதவி எண்ணான 911 டயல் செய்து பிரச்சனையை பதிவு செய்கிறார்களாம். ஒரு நாளுக்கு நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்பு வருவதால் அந்த மாகாணம் பொது மக்களுக்கு இப்படி அவசர உதவி அழைப்பை தவறாக பயன்படுத்த வேண்டாமென கேட்டுக்கொண்டுள்ளதாம். இப்படி கரனோ பற்றி பேசிக்கொண்டிருந்தால் சலிப்பாக இருக்கிறது. அதனால் கொஞ்சம் இசையை நோக்கி திரும்பலாமா?

மூன்று இசை தேவதைகளைப் பற்றி சொல்வதற்கு முன் எனக்கும் ஐரிஷ் இசைக்குமான உறவை சொல்லிவிடலாம் என நினைக்கிறேன். ஐரிஷ் ரீல் (Irish Reel) என்று நடனத்திற்கான பிரத்யேக இசை ஒன்று உண்டு. தமிழ் சினிமாவில் ஒரு சில பாடல்களில் இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். இசையால் மட்டும்தான் நம் உள்ளத்தில் ஊடுருவி ரசவாதங்கள் செய்யமுடியும். அப்படியாக முதல்முறை கேட்டபோது மனதிலிருந்து அகல மறுத்துவிட்டது ஐரிஷ் இசை. பனி பெய்துகொண்டிருந்த ஒருநாள் நண்பன் ஒருவன் The Corrs இசைக்குழுவை எனக்கு அறிமுகம் செய்து வைத்தான். Corrs என்பது ஒரு குடும்பப் பெயர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் மற்றும் அவர்களின் சகோதரன் ஒருவன் சேர்ந்து ஒரு இசைக்குழுவை துவங்கியதால் குடும்ப பெயரையே குழுவின் பெயராக வைத்துக்கொண்டார்கள். குழுவில் பாடகி ஆன்ட்ரியா, தாள வாத்தியம் கரோலின், வயலின் ஷரோன் மற்றும் கிட்டார் வாசிக்க சகோதரன் ஜிம். இதில் யார் மூத்தவர் இளையவர் என்ற விவரத்தை ஒதுக்கிவிடுவோம். ஏறக்குறைய இவர்கள் அனைவரும் எழுபதுகளில் பிறந்தவர்கள். 1990களில் இளமை துடிப்புடன் இவர்களின் கச்சேரி உலகமெங்கும் கொண்டாடப்பட்டது.

ஷரோன் இந்த குழுவில் மிகவும் முதிர்ச்சியாகத் தெரிவாள். பக்குவமாக வயலினின் இசையுடன் குழுவின் வழிகாட்டி போல் நடந்துகொள்வாள். அதிராமல் அதே சமயம் அழகாக மனதை வசீகரிப்பவளாக இருப்பாள். அடுத்து கரோலின். Bodhrán என்ற மேளம் இவளது கையில் இருந்தால் போதும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அதுபோக ட்ரம் செட்டிலும் அம்மணி புகுந்து விளையாடுவாள். ஒவ்வொரு கச்சேரியிலும் இவள் வாசிக்க வேண்டும் என்று நடுவில் ஒரு பகுதியை ஒதுக்கியிருப்பார்கள். அந்த கொஞ்ச நேரத்தில் பார்வையாளர்களை கவர்ந்துவிடுவாள். இவளது வாசிப்பில் ஒரு நளினம் இருக்கும் அதில் ஒரு முரட்டுத்தனம் தெரிவதாலேயே இவளைப் பலருக்கும் பிடிக்கும். இந்த இருவரையும்விட ஆன்ட்ரியாவுக்குதான் அதிக ரசிகர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவள் டின் விசில் வாசிக்கும்போது இருக்கும் துள்ளல் பேரழகு. நிகழ்ச்சியின் போது இடுப்பை ஆட்டி துள்ளி நடனமாடுகையில் ஆன்ட்ரியா தேவதையை போலவே இருப்பாள். இவ்வளவு வசீகரங்கள் மேடையில் இருந்தால் பாவப்பட்ட ஜிம்மை யார்தான் கண்டுகொள்வார்கள்? ஆனால் கிட்டார் வாசித்து இசைக்கு அழகூட்டி அடக்கமான பையனாக இருப்பான் ஜிம்.

முதலில் அயர்லாந்தில் பிரபலமான இந்த இசைக்குழு, 1994ல் பாஸ்டனில் நடந்த உலககோப்பை கால்பந்தாட்ட போட்டிகளில் வாசிக்க சிறப்பு அழைப்பை பெற்றார்கள். அதன்பிறகு 1996ல் அட்லான்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் வாசிக்க அழைக்கப்பட்டார்கள். அப்போது பிரபலமாக இருந்த செலின் டியோனுடன் சேர்ந்து நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். இந்த மூன்று சகோதரிகளை ஏதோ ஒரு மயக்கத்தில் தேவதைகள் என அழைத்ததாக நினைக்க வேண்டாம் இங்கே இருக்கும் இணைப்பில் இவர்களின் Toss the feathers என்ற இசையைக் கேட்டுப்பாருங்கள்

இது Joy of Life

இந்த வருடம் நான் அடிக்கடி செல்லும் க்ரீன் ப்ரயர் பாரை மூடிவிட்டார்கள். முன்பு அங்கே திங்கள் கிழமை இரவில் பாரம்பரிய இசைக்கருவிகளுடன் ஐரிஷ் இசை வாசிப்பார்கள். ஒருமுறை Haste to the wedding வாசிக்க ஆரம்பித்தவுடன் “இது Haste to the wedding!” என்று ஆர்வத்தில் கத்திவிட்டேன். பக்கத்திலிருந்த ஒரு பெண் “உனக்கு எப்படி இந்த பெயர்கள் தெரியும்?” என்று தயங்கித் தயங்கி கேட்டாள். அந்த தயக்கத்திற்குக்ல் காரணம் என் நிறம்தான் என்று புரிந்துவிட்டது. மனிதர்களுக்குதான் நிறமிருக்கிறது இசைக்கு இருக்கிறதா என்ன? அந்த அளவிற்கு Haste to the wedding மனதோடு தங்கிவிட்டதற்கு காரணம் Corrs இசைக்குழுவின் இந்த அரங்கேற்றம்தான்

டைடானிக் திரைப்படத்தில் ஏழைகள் (அயர்லாந்து நாட்டவர்கள்) இருக்கும் மூன்றாம் வகுப்பு தளத்தில் அவர்களின் கொண்டாட்டத்தை காண்பிப்பார்கள். தொடக்கத்தில் அயர்லாந்து மக்கள் அப்படிதான் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்கள் வாழ்வியலோடு கலந்துவிட்ட இசை அவர்களை உற்சாகமாக வைத்திருந்தது. அதற்கு Corrs ஒரு உதாரணம். இன்றும் The Corrs இயங்கிகொண்டுதான் இருக்கிறது. ஆனால் காலம் அவர்களது அழகை வற்றவைத்துவிட்டது. அவர்களின் தற்போதைய புகைப்படத்தை பார்க்கும்போது காலம் என்னும் மாயநதியிலிருந்து எப்படியாவது தப்பித்துவிடவேண்டும் என்று பதற்றம் தொற்றிக்கொள்கிறது. ஆனால் அப்படி யாராலும் தப்பித்துவிட முடியாது என்ற உண்மையையும் ஏற்றுக்கொள்ளதான் வேண்டியிருக்கிறது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
  2. இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
  3. கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
  4. ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
  5. பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
  6. "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
  7. வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
  8. Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
  9. இசை நாடகங்களும் படங்களும் – வளன்
  10. கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
  11. அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
  12. கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
  13. சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
  14. பெண்களுடனான உரையாடல்- வளன்
  15. புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
  16. ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
  17. மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
  18. Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
  19. Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
  20. தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
  21. இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
  22. வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
  23. ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
  24. 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்