சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் 13 & 14

13 ) இல்லாத காதல்

அவளும் அவனும் பூங்கா பெஞ்சில் உட்கார்ந்திருந்தார்கள். அவள் தன்னுடைய கதையைச் சொல்லிக் கொண்டிருந்தாள். திருமணமான பெண்களின் வாழ்க்கை பெரும்பாலும் சரியாக அமைவதில்லை. பொறுமையின் மேல் வாழ்க்கை நின்று கொண்டிருக்கிறது. வேறு வழி இல்லை என்பதால் பொறுமையாகத்தானே இருக்க வேண்டியிருக்கிறது. அவனுடன் அவள் பள்ளியில் உடன் படித்தவள். ஒரே தெருவில் குடியிருந்தார்கள்.

அவன், அவளைக்  காதலிக்கத்தானே செய்வான். அவன், அவளைக் காதலித்தான்.  அதாவது மனதுக்குள்ளே காதலித்தான். அவன் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே அவளுக்குத் திருமணமாகிவிட்டது. திருமணத்திற்கு அவன் சென்று சாப்பிடாமல் வந்துவிட்டான். அவள், கணவனுடன் வெளியூர் சென்றுவிட்டாள். நீண்ட நாட்களுக்கு அவன் மனசு சரியில்லாமல் இருந்தான். பல காலம் கழித்து அவன் , அவளை ஒரு கடையில் பார்த்தான். அவள் தன்னுடைய மகளையும் அழைத்து வந்திருந்தாள். நம்  விருப்பத்திற்குரிய பெண்ணைப்  பல காலம் கழித்துப் பார்க்கும்போது அவள் தோற்றம் மாறி  நம் மனதிலிருந்து  மறையத் துவங்குவாள். ஆனால் அவள்,அவனுடைய விருப்பத்திற்குரிய தோற்றத்தில் இருந்தாள். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள் . அவன், அவளுக்கு உதவக்கூடிய நிலையில் இருந்தான்.

பேசிக் கொண்டிருக்கும்போது அவள், ‘ நீங்கள் அந்தக் காலத்தில் என்னை விரும்பினீர்களா? திருமணம் செய்து கொள்ள நினைத்தீர்களா ‘ என்று கேட்டாள். அவன் மெளனமாக இருந்தான் . ‘ நீங்கள் என்னைக் காதலித்தீர்களா?’ என்று கேட்டாள். ‘ இல்லை எனக்கு அந்த எண்ணமே இல்லை ‘ என்று அழுத்தமாகக் கூறினான்.

14 ) தாம்பத்யம்

கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்று சம்பாதித்தால்தான் குடும்பம் நடத்த முடியும் என்ற நிலை. இந்த வைரஸ் காலத்தில் வேலை இல்லாமல் இருந்தார்கள். ரேஷன் அரிசியைப்  பொங்கி கஞ்சி வைத்துக் குடித்து விடுவார்கள். தொட்டுக்க கொள்ள பச்சை மிளகாய்.. மகனுக்கு வாய்க்கு ருசியாக ஒன்றும் செய்து போட முடியவில்லை. பக்கத்தில்தான் அம்மா வீடு இருந்தது. அங்கேயும் இதே நிலைதான், டாஸ்மாக் கடை திறந்து விட்டார்கள். அவன் தவித்துக் கொண்டிருந்தான். கையில் பணம். இல்லை. அவனுடைய தவிப்பைப் பார்க்கும்போது அவளுக்கு பாவமாக இருக்கும். இன்று இருவருக்கும் தனித்தனியே சித்தாள் வேலை கிடைத்துவிட்டது. அவனுக்கு வேலை முடிந்து கூலிப் பணம் கிடைத்துவிட்டத. டாஸ்மாக் கடைக்குச் செல்ல மனம் துடித்தது . குடும்ப நிலையை யோசித்து வீட்டுக்குத் திரும்பினான்.

மனைவி ஏற்கனவே வேலை முடிந்து வீட்டுக்கு வந்திருந்தாள். அவன் முகம் வாடியிருப்பதை அவள் பார்த்தாள்.’ என்ன மாமா ஒரு மாதிரி இருக்கே ‘ என்றாள். அவன் ‘ ஒன்றுமில்லை’ என்றான். ‘ இதுக்குதானே மாமா’ ‘ என்று சொல்லி ஒரு மது பாட்டிலை பையிலிருந்து எடுத்துக் காண்பித்தாள். ‘ என் தம்பியை விட்டு வாங்கி வரச்  சொன்னேன் ‘ என்றாள். ‘ நம்ம பையன் எங்கே ‘ என்றான். அவனை எங்க அம்மா வீட்டிலேயே இருக்கச் சொல்லிட்டேன் ‘  என்றாள் . .