கொரோனா தடுப்புப் பணிகளிலும், கொரானாவிற்கு எதிரான போரிலும் தமிழக மருத்துவத்துறை மிக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது எனவும், தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாராணமாக இருப்பதாகவும், கொரொனாவில் உண்டாகும் இறப்புகளின் வீதம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிகக்குறைவாக இருப்பதாகவும் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் ஒவ்வொரு பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆம். உண்மையில் நமது மருத்துவத்துறை மிக சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அதற்குக் காரணம் நம்மிடம் இருக்கும் வலுவான அடிப்படை மருத்துவக்கட்டமைப்பும் அதில் பணிபுரியும் மருத்துவர்களுமே!.

இந்த கட்டமைப்பு இன்று, நேற்று உருவானதல்ல, சமூக நீதியை அடிப்படையாக கொண்டிருக்கும் திராவிட கட்சிகள் பல காலங்களாய் உருவாக்கி வைத்திருக்கும் அமைப்பு இது. சமூக நீதியை வைத்து இழைக்கப்பட்ட அமைப்பு நமது அடிப்படை சுகாதார அமைப்பு. அதனால் தான் மேற்பரப்பில் திட்டமிடல்கள் எதுவும் இல்லையென்றால் கூட கட்டமைப்பு பலமாக இருப்பதால் கொரோனா மாதிரியான நெருக்கடிகளை நம்மால் சமாளிக்க முடிகிறது. உதாரணத்திற்கு இந்தியாவிலேயே மிக அதிகமான ஆரம்ப சுகாதார நிலையங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன. மிக அதிகமான மருத்துவமனை பிரசவங்கள் தமிழ்நாட்டில் தான் நடக்கின்றன. கொரோனா தொற்று உள்ளானவர்களை கண்டறிவதிலும், அவர்களின் உடன் இருந்தவர்களை தனிமைப்படுத்துவதிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களும் அதில் பணிபுரியும் மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களும் இந்த காலத்தில் ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லையென்றால் கொரோனா பணியை மேற்கொள்ள மாட்டோம் என வட இந்திய மருத்துவர்கள் போராடியதையெல்லாம் இந்த காலத்தில் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம் ஆனால் அப்படிப்பட்ட வசதிகள் ஏதும் இல்லாத சூழலில் கூட நமது மருத்துவர்கள் அதை பொருட்படுத்தாமல் தங்களது கொரோனா பணியை தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறார்கள். மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதில் கூட நிறைய தயக்கத்தைக் காட்டும் அரசின் அலட்சியத்தைக் கூட புறந்தள்ளி விட்டு இந்த நேரத்தில் நம் மக்களுக்காக நமது மருத்துவர்கள் களத்தில் நிற்கிறார்கள்.

பிற மாநில மருத்துவர்களில் இருந்து நமது மருத்துவர்கள் இப்படி வேறுபட்டிருப்பதற்கு என்ன காரணம்? மக்களுக்கான அடிப்படை மருத்துவ வசதியையே இன்னும் பூர்த்தி செய்யாமல் இருக்கும் பிற மாநில மருத்துவ கட்டமைப்பில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே துறை சார்ந்த மருத்துவர்களை நியமித்திருக்கும் அளவிற்கு நமது மாநில மருத்துவ கட்டமைப்பு வளர்ச்சியடந்து இருப்பதற்கு என்ன காரணம்? எந்த ஒரு சமரசமும் இல்லாமல் 69 சதவீத இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டதே இதன் ஒரே காரணம். இட ஒதுக்கீட்டிற்கும் இதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இட ஒதுக்கீட்டினால் ஏதோ சில பேருக்கு தானே லாபம் அதற்கும் மருத்துவ கட்டமைப்பு மேம்பட்டு இருப்பதற்கும் என்ன தொடர்பு? என்ற சந்தேகம் நிறைய பேரிடம் இருக்கிறது. அந்த தொடர்பை முதலில் தெரிந்து கொள்வோம்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை மிக அதிகம். இங்கு இடஒதுக்கீடு முழுமையாக நடைமுறையில் இருந்ததனால் ஏராளமான பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரத் தொடங்கினார்கள். இவர்கள் அனைவரும் எந்த ஒரு பின்ணணியும் இல்லாத, வசதியும் இல்லாத சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஏழை, எளிய மாணவர்கள். இவர்கள் மருத்துவ படிப்பை முடித்தவுடன் அரசு பணியில் சேர்ந்து தங்களது சொந்த ஊர்களுக்கு அருகே இருக்கும் அரசு மருத்துவமனையிலேயோ அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ பணிபுரிய தொடங்குவார்கள். மற்ற மாநிலங்களில் உள்ள உயர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களை போல இவர்கள் வெளிநாடுகளுக்கோ அல்லது நகரங்களுக்கு செல்லாமல் கிராமங்களில் பணிபுரிய சென்றதிற்கு காரணம் எளிய குடும்பத்தில் இருந்து வந்திருப்பதனால் மக்களின் மீது இயல்பாகவே அவர்களுக்குக் கரிசனமே. மேலும் இப்படி அரசுப்பணியில் இருக்கும் மருத்துவர்களுக்கு அரசாங்கம் முதுநிலை மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீடும் கொடுத்து வந்தது, இதன் வழியாக முது நிலை படிப்பை முடிக்கும் மருத்துவர்கள் திரும்பவும் அரசு மருத்துவமனைகளில் தங்களது பணியை தொடர்ந்து வருவார்கள். இதன் காரணமாக தான் மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் என அனைத்து மருத்துவமனைகளிலும் அத்தனை துறை சார்ந்த மருத்துவர்களும் இருந்து வந்தார்கள். சில கிலோ மீட்டர் பயணம் செய்தாலே மக்கள் இதய நோய் நிபுணர், சிறுநீரக நோய் நிபுணர் என அத்தனை துறை சார்ந்த மருத்துவர்களிடமும் இலவசமாக சிகிச்சையைப் பெறமுடியும். இந்த வசதி வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. அந்த வகையில் நமது மருத்துவ கட்டமைப்பு பலமாக இருப்பதற்கும், மருத்துவர்கள் உள்ளூர் அரசாங்க மருத்துவமனைகளில் பணிபுரிய தயங்காததற்கும் அவர்களுக்கு அளிக்கப்பட்ட இந்த இட ஒதுக்கீடு முக்கியமான காரணம். இப்போது இதற்கு தான் ஆபத்து வந்துவிட்டது.

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான தமிழக அரசின் நுழைவுத்தேர்வு நீக்கப்பட்டு கடந்த மூன்று வருடங்களாக மத்திய அரசின் நீட் தேர்வு மட்டுமே நடைபெறுகிறது. இந்தியாவிலேயே அதிக மருத்துவக்கல்லூரிகளை கொண்ட மாநிலமான தமிழ்நாட்டில் மட்டும் மொத்தம் 1900 முதுநிலைப் படிப்பிற்கான இடங்கள் இருக்கின்றன. இத்தனை இடங்களும் நமது வரிப்பணத்தில் இயங்கும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் இருக்கின்றன. இருந்தும் இதில் இருந்து ஐம்பது சதவீத இடங்களை அதாவது 950 இடங்களை நாம் அகில இந்தியத் தொகுப்பிற்கு கொடுக்கிறோம். மீதியுள்ள 950 இடங்களில் நமது மாநில மாணவரகளுக்கு கொடுக்கப்படுகிறது. முதலில் அரசு மருத்துவர்களுக்கான ஐம்பது சதவீதம் இடஒதுக்கீடு இரண்டு ஆண்டுகளாக நிறுத்தப்பட்டது.

அதே போல நாம் கொடுக்கும் 950 இடங்களுக்கு 27 சதவீத OBC இட ஒதுக்கீட்டையும் நீக்கியிருக்கிறது மத்திய அரசு. அதே நேரத்தில் EWS என சொல்லக்கூடிய பொருளாதாரத்தில் நலிவடைந்த(?) உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு கொடுக்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோரும், மிகவும் பிற்படுத்தப்பட்டோரும் பெரும்பான்மையாக இருக்கும் தமிழ்நாட்டில் இதனால் கிட்டதட்ட 500 முதுநிலை படிப்பிற்கான இடங்களை OBC மாணவர்கள் இழக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் யார்? சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த ஏழை, எளிய மாணவர்கள். அரசு மருத்துவர்களுக்கான ஐம்பது சதவீத இடஒதுக்கீட்டையும் பறித்து விட்டு, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டையும் பறித்திருக்கிறது மத்திய அரசாங்கம். இந்த நகர்வு நீண்ட நாள் நோக்கில் தமிழக மருத்துவத்துறைக்கு மிகவும் ஆபத்தான ஒன்று. ஏனென்றால் அரசு மருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லையென்றால் அவர்கள் அரசுப்பணிக்கு வருவதற்கு ஆர்வம் காட்ட மாட்டார்கள். அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டையும் பறித்து விட்டு அந்த இடங்களை உயர் சாதி ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டால் அவர்களும் நிச்சயம் அரசுப்பணிக்கு வரமாட்டார்கள். சென்னையில் சொந்த வீடும், காரும், மாதம் 10 லட்ச ரூபாய் வருமானமும் கொண்ட மாணவன் ஒருவன் கோட்டப்பட்டி மலைப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்து பணிபுரிவான் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

உண்மையில் இந்த இடஒதுக்கீட்டு பறிப்பு இன்னும் சில காலங்கள் தொடர்ந்தால் நமது அரசு மருத்துவமனைகளில் துறை சார்ந்த மருத்துவர்களுக்கான பஞ்சம் வந்துவிடும், அது சாதாரண ஏழை, எளிய மக்களுக்கு மிகப்பெரிய மருத்துவ சிக்கலாக வந்து நிற்கும். நாம் இத்தனை நாள் பார்த்து பார்த்து எழுப்பிய மருத்துவ கட்டமைப்பு நொறுங்கிச் சிதைவதை நம் வாழ்நாளிலேயே நாம் பார்க்கக்கூடும். அந்த நிலை வராமல் இருக்க வேண்டுமானால் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும். சமூக நீதியின் மண்ணான தமிழ்நாட்டில் இருந்து தான் சமூக நீதிக்கான போராட்டங்கள் வெவ்வேறு காலகட்டத்தில் தொடங்கியிருக்கின்றன, முன்னெப்போதையும் விட மிகவும் உறுதியாக இந்த காலகட்டத்தில் சமூக நீதியை மீட்டெடுபதற்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கான தேவை இருக்கிறது. அதை நாம் செய்யவில்லையென்றால் நமது ஆசான்களுக்கு நாம் செய்யும் மிகப்பெரிய வரலாற்று துரோகம் ஆகிவிடும்.