வெறும் நினைவுகளால் தோன்றிய கடவுச்சொல் என்றுதான் இத்தனை நாட்கள் அவள் நினைத்திருந்தாள். அக்கடவுச்சொல்லில் என்றும் உள்நுழைய முடியாத ஓர் உலகம் இருப்பதை அவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. விருப்பத்தின் அடையாளமாக மட்டும் எந்த ஒரு கடவுச்சொல்லும் பிறந்துவிடுவதில்லை. நிராசைகளின் ஞாபகங்கள், இழந்தவர்களின் நினைவுகள், காதலின் ரகசியங்கள் என்று ஏதோ ஒரு காரணத்தைக் கொண்டும் கூட பல கடவுச்சொல் துயரங்களின் பிம்பமாய் நிலைத்துக்கொண்டிருக்கும். என் கடவுச்சொல் எல்லாம் ஆனது. விரல் நடுங்கவும், வலிகள் நிறைந்த கண்ணீரோடும்  கடவுச்சொல்லை பயன்படுத்தியவர்கள் எத்தனை பேர். கொஞ்ச வருடங்களாக அந்த ரணத்தோடு தான் போராடிக்கொண்டிருக்கிறேன். மனதின் குரலுக்கு எத்தனை முகங்கலென்று தெரியவில்லை. அவள் இறப்பை நம்பவும் ஏற்கவும் மறுக்கிறது. அவள் இவ்வுலகில் இல்லை என்பதை மட்டும் உபயோகிக்கும் ஒவ்வொரு முறையும் அக்கடவுச்சொல் மனதிற்குள் தீர்க்கமாய் முழங்குகிறது. அதே சமயம் அவள் பெயரைக்கொண்டே என்னுடன்   என்றும்  உள்மனது ஒருபுறம் சமரசம் செய்கிறது. கடவுச்சொல்லை மாற்றவும் எனக்கு விருப்பமில்லை. யதார்த்த உலகில் நாம் நேசிப்பவர்கள் நினைவுகளின் வழியே தான் வாழவும் அவர்களின் பிரிவை உணர்த்தவும் செய்கிறார்கள்.

இரண்டு வருட இல்லற வாழ்வில் எந்த விஷயமும் இப்படி பூதாகரம் எடுத்து விலகிச் செல்வதற்கான சந்தர்பத்தை எங்களுக்குள் ஏற்படுத்தியதில்லை. ரகசியங்கள் ரகசியங்களாக இருக்கும் வரையில் தான் நமக்கான நிம்மதியை தக்க வைக்க முடியும். ரகசியங்களை உடைத்தெறியும் கணங்களில் அப்பிறவியின் பயன் ஏதுமற்றவனாகவே  உருவெடுக்கத் துவங்குகிறது. என் மனைவி பிரிந்துச் சென்ற இந்த ஒரு மாதங்களாக நான் ஏதுமற்றவனாகவே இருந்து வருகிறேன்.

எந்த ஒரு சமரசத்திற்கும் என் மனைவி இணங்குவதாக இல்லை. அவள் இவ்வளவு பிடிவாதக்காரி என்பது கூட இச்சந்தர்பத்தில்தான் தெரிந்துகொண்டேன். இதுபோன்ற விஷயத்தில் பெண்கள் அனைவரும் பிடிவாதக்காரிதான். கடந்த கால வாழ்வின் பக்கங்களை பிய்த்தெரிய முயற்சிப்பதுமல்லாமல் அவர்களின் கையெழுத்தையே அதில் பதிவிட விரும்புகிறார்கள். உணர்வுகளுக்கென்று ஒதுக்கப்பட்ட நினைவுகளின் அறையில் எப்போதாவது தான் சஞ்சரிக்க முடியும். அதில் உறவு எனும் பூட்டை கொண்டு அதை அடைக்கவும் எத்தனிக்கிறார்கள். எப்படியான சூழலிலும் நிஜ மனிதர்களின் வாழ்வில் பெரும் அங்கம் வகிப்பதே நினைவுகளின் சாளரம் என்பதை எப்படி அவளுக்கு விளங்க வைப்பேன்.

அன்று அவள் எதார்த்தமாகத்தான் கேட்டாள். அவள் அப்படிக் கேட்டதும் பழைய நினைவுகளுக்குத் திரும்பாமல் அவள் தோரணையிலேயே பதிலளித்திருக்க வேண்டும். பதில் சொல்வதற்கு நான் எடுத்துக்கொண்ட அரை நிமிடங்கள்தான் பின் வர இருக்கும் பிரச்சனைகளுக்கு அடித்தளமாய் அமைந்தது. என் பதிலை எதிர்ப்பார்த்து மிருதுவாக டிவியின் சத்தத்தை குறைக்கும்போதே எந்த அளவிற்கு அவள் ஆர்வத்தினால் தூண்டப்பட்டிருக்கிறாள் என்பதை அப்போது விளங்கிக்கொண்டேன். நெற்றியை தடவிக்கொண்டு அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று யோசித்துக்கொண்டிருந்தேன். உண்மையைச் சொல்லலாம் என்று முடிவெடுப்பதற்கு முன்பே உடல் மொழியின் வெளிப்பாடு தனிச்சையாகவே அங்கு நிறுவப்படுகிறது. மேற்கொண்டு லேப்டாப்பில் தட்டச்சு செய்ய இயலாமல் என் விரல்கள் அனைத்தும் நடுங்கிக்கொண்டிருப்பதை அவள் கவனித்தாள்.

“உன்னோட ஈமெயில் ஐடி பாஸ்வேர்ட் என்னனு தானே கேட்டேன். அதுக்கு ஏன் இவ்ளோ யோசிக்குற”

“அவசியம் தெரிஞ்சுதான் ஆகணுமா…?”

“உன்னோட மனைவிங்குறதுனால அத தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இருக்கு”

அலுவலக வேலைகள் பல இருந்தும் அதற்கு மேல் இயங்க மனம் ஒத்துழைக்கவில்லை. மடிக்கணினியை மடித்து மூடும் அதே வேளையில் என் வாழ்வின் ரகசியங்களை அவளிடம் திறக்கத் தொடங்கினேன்.

“உனக்கு ஞாபகம் இருக்கா… நமக்கு மேரேஜ் ஆனா புதுசுல ஸ்கூல் படிக்கும் போது ஒரு பொண்ண காதலிச்சேன்னு சொன்னேன்ல. அந்த பொண்ணு பேர தான் பாஸ்வேர்ட்டா வெச்சுருக்கேன்”

இப்படியான பதில் என்னிடமிருந்து வருமென்பதை அவள் யூகித்திருக்க வாய்ப்பில்லை. அவள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

“நான் ஏதோ எல்லோருக்கும் இருக்குற மாதிரி அது ஒரு பள்ளி பருவ காதல்னு சாதாரணமா நினைச்சுட்டு இருந்தேன். ஏன் அதுக்கு அப்புறம் நீ எந்த பொண்ணையும் காதலிக்கலியா?”

“யாரையும் காதலிக்க தோனல”

“சரி அந்த பொண்ணு பெயர எத்தன வருஷமா பாஸ்வேர்ட்டா வெச்சிருக்க..?”

“பதினாறு வருஷமா”

இன்னும் பல கேள்விகள் அவளிடத்தில் இருந்தன. பதில்களோடு சேர்த்து மேலும் விளக்கங்களை கொடுக்கவேண்டி வருமோ எனும் அச்சம் என்னுள் எழுந்தது. அவளது குணம் எனக்கு தெரியும். ரகசியங்களை அவள் விரும்புவதில்லை. அதே சமயம் நியாயம் என்று தோன்றாதவரை அந்த ரகசியங்களை மறைத்து வந்ததற்கான காரணத்தையும் அவள் ஏற்றுக்கொள்ளமாட்டாள். அவளோடு தர்க்கம் வளர்ப்பது என்னால் இயலாத காரியம். அந்த உரையாடலை அத்தோடு முடித்துக்கொள்ள கழிவறைக்கு சென்று முகம் கழுவினேன். அவள் தன் இயல்புக்கு திரும்புவது போல் படுக்கை விரிப்பை சரிசெய்து கொண்டிருந்தாள். எப்போதும் சொல்லும் “குட் நைட்” அவளிடத்தில் இருந்து காணாமல் போயிருந்தது. எதுவும் பேசிக்கொள்ளாமல் விளக்கை அணைத்துவிட்டு வலது பக்கமாக முகத்தை சாய்த்துக்கொண்டு படுத்துக்கொண்டாள். நானும் இடது பக்கம் திரும்பிப் படுத்துக்கொண்டேன். இருவருக்கு இடையிலும் ஓர் இடைவெளி உருவானதைத் தடுக்க முடியவில்லை. அந்த இடைவெளியே நாளடைவில் இருவருக்குமான விலகலை ஏற்படுத்திக்கொடுக்க அஸ்திவாரம் அமைத்ததை இப்போது உணர்கிறேன். உறக்கத்திற்காக காத்திருந்து அவ்விரவில் கடந்தகால வாழ்வின் தடங்களை தேடி சென்றுக்கொண்டிருந்தேன்.

பதினொன்றாவது படித்துக்கொண்டிருக்கும் போது அப்பாவின் யோசனைப்படி தொன் போஸ்கோ ஆசிரமத்தில் அமைந்துள்ள டைப்பிங் கிளாசில் சேர்ந்தேன். பள்ளி முடித்து தினமும் மைதானத்திற்கு விரையும் நேரமும் ஆசையும் அப்பாவின் விருப்பத்தால் அன்றோடு பறிக்கப்பட்டது. வெள்ளை காகிதத்தை சுருட்டிக்கொண்டு பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் தட்டச்சு வகுப்பிற்குள் நுழைவதும் வெளியேறுவதுமாக இருந்தார்கள். ஆசிரியர் சொல்லிக்கொடுத்தபடி என் முதல் பயிற்சியை தொடங்கினேன். என் பக்கத்து தட்டச்சு இயந்திரத்தில் ஒரு பெண் வந்ததும் நேராக பேப்பரை புகுத்து தட்டச்சு செய்வதை அப்போதுதான் கவனித்தேன்.

இரட்டை ஜடையோடு பள்ளி சீருடையில் காட்சி தந்தவள் பயிற்சி புத்தகத்திலும் விசைப்பலகையிலுமாக தன் பார்வையை செலுத்தியபடி அவள் போக்கில் தட்டச்சு செய்துகொண்டிருந்தாள். மனது ஒரு புறம் அவள் திசை பக்கம் திரும்ப தூண்டிக்கொண்டிருந்தது. மனதின் சீண்டல்கள் வயதை பரிசோதிக்க விரும்பும் போது மனதின் சொல்படி இணங்க நேரிடுவதை யாரால் தடுக்க இயலும். பயிற்சி புத்தகத்தை பார்ப்பது போல் அவள் திசை பக்கம் திரும்பி அவ்வப்போது அவளை பார்த்துக்கொண்டே இருந்தேன். ஓர் பெண்ணின் ஈர்ப்பு காற்றில் உலர்தப்பட்டிருக்கும் ஆடையை போன்று தவிக்கச்செய்யுமென்பதை அப்போதுதான் விளங்கிக்கொண்டேன். அவள் கண்களின் சுழற்ச்சியில் ஒரு ஏகாந்த மனோநிலையை உணரமுடிந்தது. தட்டச்சு செய்ய எடுத்துக்கொண்ட ஒரு மணி நேரத்தில் ஒரு பக்கம் கூட நிறைவு செய்ய முடியாத நிலைக்கு ஆளானேன். அவள் நான்கு பக்கங்களையும் அதிவேகமாக முடித்து எழுந்து சென்றாள். அதற்கடுத்த நாட்களில் அவள் வருகையை எதிர்பார்த்தபடி என் வருகையை நாள் தவறாமல் பதிவுசெய்து கொண்டிருந்தேன். தட்டச்சில் தோன்றும் எழுத்துக்களாக அவளுடனான பிரியத்தை என்னுள் மட்டும் காதல் பக்கங்கலாக உருவாக்கிக்கொண்டிருந்தேன். அவள் பெயரை எப்படியாவது அறிந்துகொள்ளும் முயற்சி மட்டும் வகுப்பு சேர்ந்த இரண்டு மாதங்கள் வரையிலும் நீடித்துக்கொண்டிருந்தது.

ஒரு முறை தட்டச்சு செய்துகொண்டிருக்கும் போது இங்க் ரிப்பன் தனது சுற்றை முடித்திருந்தது. மீண்டும் அதை பழைய இயல்புக்கு எப்படி இயங்கவைப்பது என்று தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன். ஆசிரியர் அப்போது பக்கத்துக்கு அறையில் அமைந்துள்ள டைலரிங் வகுப்பு ஆசிரியரிடம் பேசிக்கொண்டிருந்தார். எவர் உதவியாவது நாடிப்போவதை தவிர எனக்கு வேற வழியில்லை. வகுப்பை ஒரு முறை சுற்றி நோட்டம் விட்டேன். ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் டொக்… டொக்… சத்தத்தோடு தட்டச்சு இயந்திரத்தில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். நான் நீண்ட நேரமாக வெறுமனே வேடிக்கை பார்த்ததை அவள் கவனித்தாள். என்ன பிரச்சனை என்று அவள் கேட்பதற்கு முன் நானாகவே சொன்னேன்.

“ரிப்பன் நின்னுடுச்சு எப்படி மறுபடியும் வேலை செய்ய வைக்குறதுன்னு தெரியல”

சிறிதும் யோசிக்காமல் தன் இருக்கையில் இருந்து எழுந்து என் அருகே வந்தாள். அவள் இருக்கையில் அமர்வதற்கு நான் ஒதுங்கி நின்றேன். நன்கு பழக்கப்பட்டவள் போல் ரிப்பனை ரிலீஸ் செய்து முடிந்துபோன சுற்றிலிருந்து பின்னோக்கி ரிப்பனை சுற்றத் துவங்கினாள். “இந்த மிஷின் கொஞ்சம் பிராப்ளம்” என்று சொல்லி என்னை பார்க்காமல் ஆள்காட்டி விரலால் ரிப்பனை சுற்றிக்கொண்டிருந்தாள். அவள் தட்டச்சு இயந்திரத்தை கையால்வதில் கூட ஒரு நேர்த்தி இருந்தது. அதை உள்ளூர ரசித்துக்கொண்டிருந்தேன். அவளது தட்டச்சு இயந்திரத்தில் இணைக்கப்படிருந்த பேப்பரை அப்போது தான் கவனித்தேன். இடது பக்கம் ஓரம் தன் பெயரை தட்டச்சு செய்து வலது பக்கம் ஓரம் அன்றைய தேதியையும் தட்டச்சு செய்திருந்தாள். உடனே அவள் பெயரை சொல்லி அழைக்க வேண்டும் போல் இருந்தது. தட்டச்சு இயந்திரத்தை சரி செய்து எழும் நேரத்தில் அவள் பெயரைச் சொல்லி தேங்க்ஸ் என்றேன். அவள் என்னை புதிதாக பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருந்தாள். அப்பார்வையில் அனைத்தையும் வசப்படுத்தக்கூடிய ஓர் மோகம் அவள் விழிகளில் ஒளிந்திருப்பதை அப்போது கவனித்தேன். உண்மையில் என் ரத்த நாளங்களில் அவள் பார்வையைக்கொண்டு எதையோ பாய்ச்சிக்கொண்டிருந்தாள். இரண்டு புருவத்திற்கு இடையில் பதிந்த கருப்பு நிற பொட்டும் அவள் உதட்டின் நிறமும்  அவள் முகபாவனைக்கு அழகு சேர்த்தன. என் வாழ்வில் ஓர் பெண்ணை தரிசித்த முதல் நொடி அதுவாகவே இருந்தது. எதுவும் பேசிக்கொள்ளாமல் அவள் தட்டச்சு செய்ய தொடங்கினாள். உதட்டோரம் மறைந்திருந்த சிரிப்பும் அவள் பார்வையும் ஓர் மழலையின் மனதை என்னுள் விதைக்கத்தூண்டியது. ஒரே ஓட்டமாய் ஓடி சைக்கிளை எடுத்துக்கொண்டு அவள் பெயரை உள்ளுக்குள் பல முறை உச்சரித்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தேன்.

எனக்கும் அக்காவுக்கும் சேர்த்து அப்பா புதிதாக கம்ப்யூட்டர் ஒன்றை வாங்கி வைத்திருந்தார். இருவது ரூபாய் கொடுத்து பிரவ்சிங் சென்டர் செல்லும் அக்காலகட்டத்தில் எங்கள் வீட்டில் புதிதாக கம்ப்யூட்டர் வாங்கியிருந்ததை நண்பர்கள் ஆச்சிரியத்தோடு பார்த்தார்கள். அன்றிரவு கம்ப்யூட்டரில் அவளது பெயரையே ஓயாது தட்டச்சு செய்து ரசித்துக்கொண்டிருந்தேன். அக்கா நேரம் கிடைக்கும் போது புதிதாக மின்னஞ்சல் முகவரியை உருவாக்கச் சொல்லியது நினைவுக்கு வந்தது. நினைவில் தோன்றியதும் எனக்கான மின்னஞ்சல் முகவரியை உருவாக்கத் துவங்கினேன். மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி முடித்ததும் கடவுச்சொல் தேர்வு செய்வதற்கான நேரம் வந்தது. எவ்வித யோசனையுமில்லாமல் ஒவ்வொரு வார்த்தையாக விசைப்பலகையில் அழுத்தி அவளது பெயரையே கடவுச்சொல்லாக்கினேன். ஓர் சாதாரண கடவுச்சொல்லில் இப்படியான பேரின்பத்தை அனுபவிக்க முடியுமென்பது கூட அதுவரை நான் அறிந்திராத விஷயமாக இருந்தது. அவளைக்காட்டிலும் அவள் பெயரையே அதிகம் நேசித்தேன். இளஞ்சிவப்பிலான சிசுவின் பாதத்தை ஆசை தீர வருடும் போது கிடைக்கும் பேரின்பத்தை அக்கடுவுச்சொல்லில் உணர்ந்தேன். என் வாழ்வின் அனைத்திற்குமான திறவுகோலாய் அவளது பெயரே இருந்தது.

தட்டச்சு வகுப்பு முடிந்ததும் அவளுக்காகக் காத்திருக்கத் துவங்கிய நேரத்தில் தான் அவளுடன் நட்பு பாராட்ட முடிந்தது. ஒருவர் பற்றிய ஒருவர் விஷயங்களை அறிந்துகொள்ளும் போது தான் சென்னையிலுள்ள அவள் பெரியம்மா வீட்டில் தங்கி படித்து வருவதை தெரிந்துகொள்ள முடிந்தது. நாளுக்கு நாள் தன்னை காரணமாக வைத்து பெரியம்மாவிற்கும் பெரியப்பாவிற்கும் வீட்டில் சண்டை வலுத்துக்கொண்டு வருவதாகவும், அதனால் தன் பள்ளி படிப்பு முடிந்ததும் தன் சொந்த ஊருக்கே சென்று கல்லூரி படிப்பை தொடங்கப் போவதாகவும் சொல்லிக்கொண்டிருந்தாள். அவ்விஷயத்தை அறிந்ததிலிருந்தே பிரிவின் வதையை உணரத் துடங்கினேன். எஞ்சி இருக்கும் நாட்களிலாவது அவளுடனான நினைவுகளை சேமிக்கத் தோன்றியது.

ஒரே பிரிவில் இருந்ததால் இருவருக்கும் ஒரே நேரத்தில் தட்டச்சு தேர்வில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் அமைந்தது. பொதுவான ஒரு பள்ளியில் அரசால் ஒருங்கிணைக்கப்பட்ட அத்தேர்வில் கலந்துகொள்ள பல தட்டச்சு நிறுவனங்களிலிருந்தும் ஆட்கள் வந்திருந்தார்கள். தேர்வுக்கு வந்தவர்கள் பயிற்சி புத்தகத்தை வைத்துக்கொண்டு சக நண்பர்களிடமும் ஆசிரியரிடமும் ஆலோசனை கேட்டுக்கொண்டிருந்தார்கள். நான் அவர்களிடம் தனித்து ஓர் மரத்தின் அருகில் அவளுக்காக காத்திருந்தேன். தேர்வு தொடங்கும் ஒரு பத்து நிமிடத்திற்கு முன்பு பள்ளிக்குள் நுழைந்தவள் நான் நின்றிருப்பதை பார்த்ததும் என் அருகில் வந்தாள். அன்று அவள் சிவப்பு நிற சுடிதார் அணிந்திருந்தாள். தன் காதிற்கு மேல் தலை முடியை இரண்டு பக்கமும் சிறிதாக பிரித்து மொத்த கேசமும் அதன் வசப்படுமாறு முடித்திருந்தாள். அவளது நீண்ட கேசம் காற்றின் தத்தளிப்பில் பிரவாகமெடுத்து பின்பக்கமாக பரவியிருந்தது. நிச்சயம் அவள் கோவிலுக்கு சென்று வந்திருக்க வேண்டும். விபூதியோடு சேர்த்து நெற்றியில் பதிந்திருந்த குங்குமம் அதைத் தான் சாட்சியம் சொல்லியது.

“என்ன தனியா வந்து நின்னுட்டு இருக்க எக்ஸாம் நினைச்சு பயமா இருக்கா என்ன…?”

நான் பதில் ஏதும் சொல்லாமல் அவள் காதில் அசைந்துகொண்டிருந்த சிவப்பு நிறத் தோடையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

“சரி… இந்தா கோவிலுக்கு போயிட்டு வந்தேன் பிரசாதம் வெச்சுக்கோ…”

காகிதத்தில் மடித்திருந்த கோவில் பிராசத்ததை தனது கை பையிலிருந்து எடுத்து நீட்டினாள். நான் வேண்டாமென்று மறுத்தேன்.

“ஏன் வெச்சுக்கிட்டா என்னவாம்”

சட்டென்று அவளாகவே என் நெற்றியில் பத்தித்தாள். அவள் விரல் பதிந்த அந்த நெற்றிப்பொட்டு ஸ்பரிசத்தில் மீண்டும் ஒரு பிறவி எடுத்ததுபோல் இருந்தது. தேர்வுக்கான அழைப்பு மணி அடிக்கவும் அனைவரும் நகரத் தொடங்கினர். பதற்றத்திலிருந்து தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியாத நேரத்தில் தான் அனைவராலும் தேர்வை எதிர்கொள்ள முடிந்தது. தேர்வு முடித்து வெளிவந்ததும் வினாத்தாளை கையில் வைத்துக்கொண்டு அனைவரும் செய்த பிழையை சுட்டிக்காட்டி விவாதிக்கத் தொடங்கினார்கள். வகுப்பின் கடைசி நாள் அதுவென்பதால் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பேசி கை குலுக்கி விடை பெற்றோம்.

கரைந்து கொண்டிருக்கும் நொடிகளை நினைத்தும் அவள் பிரிவை நினைத்தும் மெல்ல மனம் சிதிலமடைந்துகொண்டிருந்தது. எதுவும் பேசாமல் சைக்கிளை தள்ளிக்கொண்டு வந்தேன்.

“ஏன் அமைதியாவே வந்துட்டு இருக்க… ஏதாவது பேசு… இதுக்கு அப்புறம் எப்போ பார்ப்போம்னே தெரியாது”

“அத நினைச்சு தான் நான் எதுவும் பேசாம வந்துட்டு இருக்கேன்”

பேருந்து நிலையத்தை நெருங்கியதும் பிரிவின் எல்லைக்குள் இருவரும் நின்றிருப்பதை உணர்ந்தோம். அவள் காத்துக்கொண்டிருந்த பேருந்தும் கொஞ்ச நிமிடங்களில் வந்தது. எதுவும் பேசிக்கொள்ளாமல் ஜன்னலின் இருக்கையின் அருகில் அமர்ந்தவள் நான் நின்றிருக்கும் திசை பக்கம் திரும்பினாள்.

“பாய் பா… பாப்போம் ஆல் தி பெஸ்ட்… ப்ளஸ் டூல நல்ல ஸ்கோர் பண்ணு”

அவள் கையசைத்துக்கொண்டே என்னிடமிருந்து பிரிந்து சென்றாள். அவள் கண்கள் லேசாக கலங்கி இருப்பதை பார்த்ததும் அந்நேரத்தில் ஏனோ அவளுக்கு திருப்பி கையசைக்க எனக்கு தோன்றவில்லை.

விடிந்ததும் தினசரி வேலைகளை அவள் கவனிக்கத் துவங்கினாள். அவள் என் மீது கொண்ட ஊடல் விடிந்த பின்பும் கூட தணியாமல் இருந்தது. முகம் திருப்பி கூட என்னிடம் பேச பிடிக்காமல் வீட்டின் வேலைகளை செய்துகொண்டிருந்தாள். நான் எப்போதும் போல் அலுவலகத்திற்கு  செல்ல தயாராகிக்கொண்டிருந்தேன். பிளாட்டிலிருந்து வெளிவந்து லிப்டுக்காக காத்துக்கொண்டிருக்கும் நேரத்தில் சட்டென்று எதிரில் வந்து நின்றாள்.

“உன்கிட்ட ஒன்னு கேட்கணும்”

“ம்.. கேளு”

“அந்த பொண்ணுக்கு அப்புறம் யாரையும் காதலிக்க தோணலனு சொன்னியே… நமக்கு மேரேஜ் ஆகி ரெண்டு வருஷம் ஆகுது. இந்த ரெண்டு வருஷமா என்ன கூட காதலிக்காம தான் இருந்தியா..?”

என் மனைவியின் வருகைக்கு பிறகு தான் பழைய காதலியின் நினைவுகளிருந்தே என்னால் வெளிவர முடிந்தது. வெறும் நடைபாதையாக நீண்டுக்கொண்டிருந்த என் வாழ்வில் வசந்தம் எனும் பூக்களை விதைத்தவள் அவள். நினைவுகளை சுமந்துகொண்டிருப்பவனால் எதிர் நிற்கும் அன்பை உணர இயலாது என்று நினைத்துவிட்டால் போலும்.

“அந்த பொண்ணுக்கு அப்புறம் எந்த பொண்ணையும் காதலிக்க தோணலனு சொன்னேனே தவிர என் மனைவிய காதலிக்கலனு சொல்லல… நான் வரேன்”

சொல்லி முடித்ததும் லிப்டிற்காக காத்திருக்காமல் படியில் இறங்கி நடந்தேன். என் மனைவி பற்றிய சிந்தனையிலேயே கார் ஓட்டிக்கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்தேன். லேப்டாப்பை ஆன் செய்து மின்னஞ்சலை திறக்கும் நேரத்தில் அவளிடமிருந்து அழைப்பு வந்தது.

“ஆபிஸ்க்கு போயாச்சா…?”

“ம்.. இப்போ தான் வந்தேன் சொல்லு”

“எப்படி இருந்தாலும் ஆபிஸ்க்கு போனதும் மெயில் லாக்யின் பண்ணுவ… அப்போ உன்னோட பழைய காதலியோட ஞாபகம் வரும்ல”

கோவம் தலைக்கேறியது பதில் சொல்ல பிடிக்காமல் அழைப்பை துண்டித்தேன். தொடர்ந்து என் எண்ணிற்கு அழைத்துக்கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில் போனை ஸ்விட்ச் ஆப் செய்து வேளையில் கவனம் செலுத்தினேன். இரவு வீட்டிற்கு வந்ததும் அழைப்பை எடுக்காமல் அவள் உதாசினப்படுத்தியாக சண்டையிட்டாள். அதற்கு பிறகான நாட்களில் இருவருக்கும் இடையிலான பிரச்சனை வலுக்கத் துடங்கியது. நேசிப்பவர்களின் மேல் வைத்திருக்கும் அன்பை எதை வைத்து எடை காண முடியுமென்று எனக்கு தெரியவில்லை. சர்பங்களின் தீண்டலாக அந்த கடவுச்சொல் அவளை நச்சரித்துக்கொண்டிருந்தது போலும். அன்பாக சிரித்துப் பேசி என்னுடன் மகிழ்ந்து கொண்டிருந்தவள் நாளடைவில் என்னை வெறுக்கத் தொடங்கினாள்.  என் விரல் நுனியில் மட்டுமே பழைய காதலியின் நினைவுகளை என்னால் தேக்கி வைக்க முடிந்தது. கடவுச்சொல்லைக் காரணம் கொண்டு தான் எந்த ஒரு விவாதத்தின் முடிவும் தொடக்கமும் அமைந்தது. பழைய நினைவுகளுக்கு மட்டுமே திரும்பிச் செல்லக் கூடிய  ஒரு கடவுச்சொல் என் இல்லற வாழ்விற்குள் புகுந்து  இருவருக்குமான உறவை பிளவு படுத்துமென்று அப்போது நான் எதிர் பார்க்கவில்லை.. கோவித்துக்கொண்டு தன் பிறந்த வீட்டிற்கு சென்றவள் இப்போது வரை திரும்பவில்லை.

அவள் என்னிடமிருந்து விடைபெற்ற பிறகு பெரிதாக எந்த ஒரு சந்திப்பும் எங்களுக்குள் நிகழவில்லை. தோன்றும் நேரங்களில் சைக்கிளை எடுத்துக்கொண்டு அவள் குடியிருப்புப் பகுதியை சுற்றிக்கொண்டிருப்பதிலேயே என் இளமை பருவ காதல் நாட்களை பெருமளவில் கழித்துக்கொண்டிருந்தேன். எப்பொழுதாவதுதான் சாளரம் வழி அவள் முகத்தை பார்க்க முடியும். அதுவும் நீண்ட நாட்களுக்கு நீடிக்கவில்லை. ஜன்னல் அருகில் இருந்தபடியே வீட்டுப் பக்கம் வரவேண்டாமென்று பயந்த முகத்துடன் கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள். என்னால் அவள் எந்த பாதிப்பிற்கும் உள்ளாவதை நான் விரும்பவில்லை. அவள் வீட்டுக்கு செல்வதை அன்றோடு நிறுத்திக்கொண்டேன். இருந்தும் அவள் முகத்தை தேடியே ஒவ்வொரு பொழுதும் கழிந்துகொண்டிருந்தது. சில நாட்கள் பள்ளிக்கு செல்வதை கட் அடித்துவிட்டு அவள் பள்ளிக்கு சென்று வாசலில் அவளுக்காக காத்திருக்கத் துடங்கினேன். படிப்பில் கவனம் செலுத்தாமல் சதா எந்நேரமும் அவளுக்காக காத்திருப்பதை அறிந்து வெறும் பார்வையாலே என்னை கண்டித்தாள். அனைத்து ஸ்வரங்களையும் தன் கண்களின் ஜாடைகளைக்கொண்டே அவளால் அபிநயம் பிடிக்க முடிந்தது. ஒரு புறம் ப்ளஸ் டூ தேர்வுகள் நெருங்கிக்கொண்டிருந்த அதே நேரத்தில் அவளிடம் கடைசிவரை மனம்விட்டு பேச முடியாத சூழல் அமைந்துவிடுமோ எனும் பயம் உடல் முழுவதும் பீடித்திருந்தது. அப்பாவிடம் அடம்பிடித்து நோக்கியா 1100 வாங்கிக்கொண்டேன். கைப்பேசி கைக்குள் தஞ்சம் அடைந்ததும் அவள் குரலையாவது தக்க வைக்க முடியும் எனும் நம்பிக்கை எழுந்தது. பிளஸ் டூ தேர்வுகள் நடந்துகொண்டிருந்த சமயத்தில் அவளை பார்க்க அவள் பள்ளிக்கு சென்றேன். தன் சக தோழிகளுடன் சேர்ந்து பேருந்திற்காக அவள் காத்துக்கொண்டிருந்தாள். நான் நின்றுகொண்டிருப்பதை கவனித்ததும் முகத்தை கோவமாக வைத்துக்கொண்டு என்னை முறைத்துக்கொண்டிருந்தாள். பேருந்து நிலையத் தூணில் பென்சிலைக்கொண்டு என் செல் நம்பரை அழுத்தமாக எழுதிவிட்டு அங்கிருந்து நகர்ந்தேன். நிச்சயம் என் செல் நம்பரை அவள் கண்டடைந்திருப்பாள். நான் அவளை கடைசியாக பார்த்ததும் அன்று தான்.

அவள் குரலுக்காக காத்திருக்கத் துடங்கினேன். தேர்வு முடிந்து முடிவின் அறிவிப்புகளும் வெளிவந்தது. இருந்தும் அவளிடமிருந்து எந்த ஒரு அழைப்பும் வந்தபாடில்லை. என் தேர்வின் முடிவை அறிந்துகொள்ளவாவது என் எண்ணிற்கு அழைப்பாள் என்று காத்திருந்ததும் நிறைவேறாமல் போனது. காத்திருப்பின் ஏமாற்றம் மனதை வெறுமைக்கொள்ளச் செய்தது.

அவள் முன்னமே சொன்னது போல் அவள் படிப்பு முடிந்ததும் பெரியம்மா குடும்பம் வீட்டை காலி செய்து சொந்த ஊருக்கு சென்றிருந்தது. அதையும் நீண்ட மாத முயற்சிக்கு பிறகு தான் அறிந்துகொண்டேன். கானல் நீராய் அவள் நினைவுகளில் வெதும்பிக்கொண்டிருப்பதை தவிர என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. சோர்ந்து போகாமல் தினம் அவள் முகத்தை Orkutல் தேடிக்கொண்டிருந்தேன்.

ஒரு முறை கல்லூரி பேருந்தில் வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருக்கும்போது என் எண்ணிற்கு அழைப்பு வந்தது. நான் அழைப்பில் இருப்பது யாரென்று நீண்ட நேரம் கத்திக்கொண்டிருந்த பிறகே அக்குரலை கேட்க முடிந்தது. அவளே தான்…! மெல்லிய குரலில் என் பெயரை சொல்லி அழைத்து நான் தானாவென்று உறுதிப்படுத்திக்கொண்டாள். என் காத்திருப்பும் நம்பிக்கையும் வீண் போகவில்லை. என்னைப் பற்றி, என் படிப்பை பற்றி என் சுய துக்கங்களை பற்றி விசாரித்துக்கொண்டிருந்தாள். உண்மையில் என் வாழ்வின் எல்லா தேடல்களிலும் அவள் மட்டுமே வியாபித்திருந்தாள். அவள் இருப்பைத் தேடி அந்நொடியே அலைந்து திரிய வேண்டும் போல் இருந்தது. எதுவும் பேசிக்கொள்ளாமல் அவள் குரலையே கொஞ்ச நேரத்திற்கு கேட்டுக்கொண்டிருந்தேன்.

“என்ன எதுவும் பேச மாட்டேங்குற… உன்ன ரொம்ப காக்க வெச்சுட்டேனா. மன்னிச்சுடு ப்ளீஸ்… நானும் ரொம்ப நாலா உனக்கு கால் பண்ணி பேசணும்னு தான் இருந்தேன். ஆனா ஊருக்கு வெளில வந்தா மட்டும் தான் உன்கிட்ட பேச முடியும். இப்போ கூட காலேஜ்க்கு எதிர்ல இருக்க டெலிபோன் பூத்ல இருந்து தான் பேசுறேன். இனிமேல் அடிக்கடி கால் பண்ணுறேன் சரியா…”

அவள் கிராமத்திலிருந்து தினமும் மூன்று மணி நேரம் பயணம் செய்து டவுனில் உள்ள கல்லூரிக்கு வந்து படிப்பதாக தெரிவித்தாள். கிராமப்புறங்களில் செல்போன் அந்த அளவிற்கு புழங்காத காலம் தன் பேருந்து செலவிற்கு போக மிஞ்சி இருக்கும் சில்லரைகளைக்கொண்டு தான் அவளால் என்னுடன் பேச முடிந்தது. கல்லூரி முடிந்ததும் எதிரில் உள்ள பூத்தில் தினமும் பத்து நிமிடங்களாவது என்னிடம் பேசாமல் அவள் வீட்டிற்கு திரும்பியதில்லை. அவள் ஊரின் பெயர், கல்லூரியின் பெயர், அவள் கிராமத்தின் பெயர் என்று நேரில் வந்து சந்திப்பதற்கான சாத்தியங்கலுள்ள விஷயங்களைப் பற்றியே அவளிடம் அதிகம் பேசிக்கொண்டிருந்தேன். என்னிடம் பேசுவதற்கு அவளிடம் பல சங்கதிகள் இருந்தன. அவள் கிராமத்தைப் பற்றி கல்லூரியில் நடந்த விஷயத்தைப் பற்றி, பேருந்தை தவறவிட்டு போனதைப் பற்றி இப்படி தினமும் ஏதாவது விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டே இருந்தாள்.

என் கல்லூரி பருவக் காதல் எந்த ஒரு சந்திப்புமின்றி டெலிப்போன் வழியாகவே வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அதுவும் ஐந்து மாதங்களுக்கு மேல் நீடித்திருக்கவில்லை. திடீரென்று அவளிடமிருந்து வரும் அழைப்புகள் நின்று போயின. அவள் தினமும் என் எண்ணிற்கு அழைக்கும் நேரத்தில் செல்போனை பார்த்தபடி அவள் குரலுக்காக காத்திருக்கத் தொடங்கினேன். ஒரு வாரமாக அழைப்பு வராததை நினைத்து மனம் குழம்பிப்போனது. துணிந்து அவள் தினமும் அழைக்கும் எண்ணிற்கு அழைத்து விசாரித்ததில் கடைக்காரர் கொஞ்ச நாட்களாக அவள் கடைக்கு வருவதில்லை என்று சொல்லி அழைப்பை துண்டித்தார். தாய் குருவிக்காக காத்திருக்கும் குஞ்சுகளை போல் என் மனம் அவள் குரலுக்காக ஏங்கத் துவங்கியது. அவள் கிராமத்தின் பெயர், தினமும் கல்லூரிக்கு செல்லும் பேருந்தின் நேரம் என்று அனைத்தும் அவள் சொல் கேட்டு என் நினைவில் பதிவாகி இருந்தது. அந்த விடயங்களைக்கொண்டே நேரில் சென்று சந்திப்பது தான் உதிசம் என்று முடிவெடுத்தேன். வீட்டில் நண்பனை சந்திக்கப்போவதாக ஏதேதோ பொய் காரணங்களைச் சொல்லி அவளை தேடி அவள் ஊருக்குச் சென்றேன்.

இரவு இரண்டு மணிக்கு டவுனில் உள்ள பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினேன். விசாரித்ததில் அங்கிருந்து அவள் கிராமத்திற்கு செல்ல இன்னொரு பேருந்து பிடிக்க வேண்டுமென்று சொன்னார்கள். காத்திருந்து மூன்று மணிக்கு அவள் கிராமத்திற்கு செல்லும் இன்னொரு பேருந்தில் ஏறினேன். பனிக்காலம் நெருங்கும் நேரம் என்பதால் உடல் முழுவதும் குளிரால் நடுங்கிக்கொண்டிருந்தது. இருந்தும் அவளை சந்திக்கும் தருணத்தை நினைத்து மனம் ஏதேதோ கற்பனையில் லயித்துக்கொண்டிருந்தது. ஆறு மணியளவில் அவள் கிராமத்தின் பேருந்து நிலையத்தை வந்தடைந்தேன். ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டும், எம்.80 வண்டியிலும் கிராமத்தார்கள் வருவதும் போவதுமாக இருந்தார்கள். வளைந்து நீண்டிருந்த தார் சாலையில் அங்கங்கே மாட்டின் சாணம் சாலையோடு சேர்ந்து காய்ந்த நிலையில் ஒட்டியிருந்தது. வைக்கோலின் வாசத்தை தவிர வேறு எதையும் அங்கு உணரமுடியவில்லை. தலையை சுற்றி துண்டை போட்டுக்கொண்டு பேருந்து நிலையத்திற்கு கீழே அமர்ந்தபடி சிலர் கதை பேசிக்கொண்டிருந்தார்கள். இன்னும் அறை மணி நேரத்தில் அவள் கல்லூரிக்கு செல்லும் பேருந்து வந்துவிடும் எனும் செய்தியை எனக்குள் நானே பல முறை நினைவுபடுத்திக்கொண்டிருந்தேன். பையை சுமந்தபடி பள்ளி மாணவர்களும் கல்லூரி மாணவ மாணவிகளும் பேருந்து நிலையத்தை நோக்கி வருவதை பார்த்தேன். பேருந்து நிலையைத்தின் ஓரம் நின்றபடி விழி அசையாது ஒவ்வொருவரையும் பார்த்துக்கொண்டிருந்தேன். இறுதிவரை அவள் வருகைக்கான எந்த ஒரு தடையமும் அங்கு தென்படவில்லை. பேருந்து வந்து நின்றதும் அங்கிருந்த மொத்த கூட்டமும் பேருந்தில் ஏறிக்கொண்டது. பேருந்து கிளம்பிய ஒரு சில வினாடிகளிலேயே அவ்விடம் வெறுமையால் சூழப்பட்டது. கல்லூரிக்கு முழுவதும் முழுக்கு போட்டுவிட்டாளா? வீட்டில் ஏதும் பிரச்சனையா? உடல் நிலை சரியில்லையா? விடை அறியாத ஏதேதோ கேள்விகளை மனது தவித்துக்கொண்டே இருந்தது. எதுவாக இருப்பினும் அவள் கிராமத்திற்குள் சென்று விசாரித்தால் மட்டுமே தீர்வுக்கான முடியுமென்று பேருத்தை நிலையத்தை ஒட்டி திரும்பும் பாதை வழியே அவள் கிராமத்திற்குள் செல்ல தயாரானேன். எதேச்சையாக பேருந்து நிலையத்து சுவர் பக்கம் திரும்பும் போது பாதி கிழிந்து காற்றில் ஊசலாடிக்கொண்டிருந்த கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒன்று கண்ணில் பட்டது. என் கடவுச்சொல்லான அந்த பெயர் சுவரொட்டியில் பதிவிட்டுருந்ததை பார்த்ததும் பாதங்கள் அங்கிருந்து நகர மறுத்தன. மனதை திடப்படுத்திக்கொண்டு மெல்ல அந்த சுவரொட்டியின் அருகே சென்றேன். பசைகள் காய்ந்து எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் கீழே தொங்கிக்கொண்டிருந்த சுவரொட்டியை நிமிர்த்திப் பார்த்தேன்.

ஒரு கணம் இவ்வுலகில் இருந்து நான் மட்டும் தனித்து நிற்பது போல் இருந்தது. உதடுகளில் புன்னகை தவழ அதே இரட்டை ஜடையில் சுவரொட்டிக்கு காட்சி பொருளானாள். அவள் பெயரை உச்சரிக்க முயற்சித்த போதிலும் தொண்டைக்கு இடையில் சிக்குண்டு ஓசையின்றி அவள் பெயர் அங்கேயே புதைந்திருந்தது. சுவரொட்டியை தடவிக்கொண்டே தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்தேன். அந்நேரத்தில் என்னால் முடிந்தது அது மட்டும் தான். அந்த சுவரொட்டியை அவள் உடலென நினைத்து அணைத்துக்கொள்ள நினைத்தும் கூட முடியாமல் போனது. மனம்விட்டு அழுவதற்கு கூட இயலாமல் ஆட்கள் யாரவது பார்க்கக்கூடுமோ எனும் பயத்தில் ஆட்கள் வரும் நேரத்தில் சுவரொட்டியை விட்டு தள்ளி நின்றும் அவர்கள் சென்று பிறகு மீண்டும் சுவரொட்டியின் முன் மண்டியிட்டும் அழுதுகொண்டிருந்தேன். எதனால் மறைந்தாள், என்ன நடந்திருக்கும், இறப்பிற்கான வயதில்லை என்று யாரிடம் முறையிடுவது  மன ஓட்டங்களில் எழும் கேள்விகளுக்கும் புலம்பல்களுக்கும் அவ்வூரில் செவி சாய்க்க ஒருவரும் இல்லை. கண்ணீரை துடைத்துக்கொண்டு அதே பாதையில் பயணப்பட்டேன். தொலைவில் சிறிய குடிசை அளவிலான ஒரு தேநீர் கடை தெரிந்தது. அதை நோக்கி நடந்தேன்.

தரையோடு புதைந்திருந்த மரபெஞ்சின் மீது அமர்ந்தேன். எரவானம் முழுவதும் புகையால் கருமை பூத்திருந்தது. குடிசை ஓரம் சாய்ந்திருந்த வானொலியில் ராஜா பாடிக்கொண்டிருந்தார். தினசரி செய்தித்தாளை வாசித்துக்கொண்டிருந்தவரை தவிர ஒருவரும் அங்கு இல்லை. கண்ணாடி டம்ளர்களை கழுவதும் அதை அடுக்குவதுமாக கடைக்காரர் வேலை செய்துகொண்டிருந்தார். நேரிடையாக அவளைப் பற்றி விசாரிக்க எனக்கு போதிய தைரியமில்லை. தேநீர் ஒன்று சொல்லிவிட்டு செல்போனில் யாரோ ஒரு நண்பனுக்கு ஆறுதல் சொல்வது போல் நடித்தேன். கண்ணீரால் என் குரலை முழுவதும் இழந்திருந்தேன். கடைக்காரர் நம்பும்படி நடிக்க வேண்டிய தேவை இருந்ததால் இல்லாத ஒரு அழைப்பிடம் ஏதேதோ வார்த்தைகளை சொல்லி ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தேன். சொல்லப்போனால் அது எனக்கு நானே சொல்லிகொண்ட ஆறுதல் தான். கடைக்காரரிடம் தேநீர் வாங்கும்போது

“ச்ச… எங்க பாத்தாலும் சின்ன சின்ன பொண்ணுங்கதான் இறந்து போறாங்க… நண்பனோட தங்கச்சி ரெண்டு மாசத்து முன்னாடி இறந்து போய்டுச்சி…  அவளையே நினைச்சுட்டு வேல வெட்டிக்கு போகாம அழுதுட்டு இருக்கான். எப்படி அவன பழைய நிலைமைக்கு கொண்டு வர்றதுன்னே தெரில…”

செல்போனை பேண்ட் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு புலம்பியடி தேநீரை மெல்ல உறிஞ்சினேன்.

“ஐயோ… பாவமே…! எங்க ஊர்ல கூட ரெண்டு வாரத்துக்கு இப்போ தான் தம்பி ஒரு சின்ன பொண்ணு செத்துடுச்சு… பாவம் காலேஜ்ஜூ படிக்குற புள்ள”

அவள் இறப்பை அறிந்தும் அறியாதது போல் நடித்தேன். அவள் இறப்பின் காரணம் அறிந்துகொள்ள நடிப்பை நீடிக்கவேண்டியிருந்தது. அதிசயித்தவனாய் தேநீரை மரபெஞ்சின் மீது வைத்துவிட்டு.

“காலேஜ் படிக்குற பொண்ணா…! எப்புடினே”

“ரெண்டு மூனு நாளா வயித்த வலின்னு ரொம்ப அவஸ்த்த பட்டுடுட்டு இருந்துச்சு…   கோயிலுக்கு கூட்டிட்டு போறது மந்திருக்குறதுன்னு என்ன என்னமோ செஞ்சி பாத்தாங்க. ஒன்னும் சரி ஆகல… வலில ரொம்ப துடிக்ககுறானு  டவுன் ஹோஸ்பிட்டளுக்கு தூக்கிட்டு ஓடும் போது தான் பொண்ணு பாதி வழிலியே உசர உட்டுடுச்சு… பாவம்”

வெளிவர துடிக்கும் கண்ணீரை எவ்வளவு நேரத்திற்கு தடுத்து வைத்திருக்க முடியுமென்று தெரியவில்லை. முடிந்த மட்டும் உணர்ச்சிகளின் பலம் கொண்டு கண்ணீரை தடுத்தேன். இயல்பான பரிதாபத்தை முகத்தில் தோற்றுவித்துக்கொண்டு

“ப்ச்… பாவம் முன்னாடியே ஹோஸ்பிட்டல்ல சேர்த்து இருந்தா பொண்ணு புழைச்சு இருக்குமோ”

“எங்க ஊருக்கார பசங்க எங்க திருந்துறானுங்க… உடம்புல எந்த கோளாறு இருந்தாலும் முதல்ல சாமிகிட்ட ஓடனும்ங்குறதத் தான் விதியா வெச்சு இருக்கானுங்க… பாவம் என்னோட பொண்ணு வயசு தான் அந்த பொண்ணுக்கும். அந்த பொண்ணு உடம்ப புதைக்க தூக்கிட்டு

போகுறத பார்க்கும் போது என் உடம்புல ஓடிட்டு இருந்த ரத்தம் எல்லாம் வத்திடுச்சு. நானும் கொஞ்ச நேரத்துக்கு கடைய மூடிட்டு சாவு பின்னாடியே போயிட்டேன். அந்த பொண்ணு மனசுல என்னென்ன ஆசை எல்லாம் வளத்துட்டு இருந்துச்சோ… அந்த கடவுளுக்குத் தான் தெரியும்”

சொல்லி முடித்ததும் மரக்கட்டையின் ஆணியின் மீது தொங்கிக்கொண்டிருந்த முருகன் கேலண்டரில் அன்றைய நாளுக்கான  தேதியை கிழித்தார். கடையில் கொதித்துக்கொண்டிருந்த பால் என் மனதை பிரதிபலிப்பதாய் இருந்தது. அதற்கு மேல் என்னால் முடியவில்லை அங்கிருந்து உடனே நகர வேண்டும் போல் இருந்தது. கடைக்காரருக்கு தெரியாமல் தேநீரை கீழே ஊற்றிவிட்டு பணத்தை கொடுத்ததும் அங்கிருந்து கிளம்பிச் சென்றேன்.

அவள் நிழலின் தடத்தையாவது காண முடியாத என்றிருந்தது. ஊருக்கு வெளிய அமைந்த சுடுகாட்டை நோக்கி ஓடினேன். அழுதுகொண்டே ஓடினேன். உடலில் உள்ள ரத்தம் முழுவதும் கண்ணீராய் வடியும் அளவிற்கு. அவள் ஏற்படுத்திச்சென்ற அந்த பிரிவு கிட்டத்தட்ட ஓர் மரண போராட்டத்தை என்னுள் சம்பவித்துக்கொண்டிருந்தது. இடுகாட்டை வந்தடைந்ததும் நிலைத் தடுமாறி கீழே விழுந்தேன்.  கருவேல முட்களும் செடிகளுமாக அங்கங்கே படர்ந்திருந்தன. மூக்கில் வழிந்துகொண்டிருந்த சளியும் கண்ணீரும் என் முகத்தை அலங்கோலப்படுத்தியது. ஒவ்வொரு சமாதியின் முன்பும் போய் நின்றேன். புதையுண்டிருந்த அவள் உடலின் இருப்பிடத்தை கண்டடைய முடியும் எனும் நம்பிக்கை இருந்தது. ஒவ்வொன்றையும் கடந்து என்னவளை தேடிக்கொண்டிருந்தேன். கடைசியாக கண்ணில் பட்டது அந்த சமாதி. பதினாறாம் நாள் சாங்கியம் செய்ததற்கான அடையாளங்கள் தென்பட்டன. புதையுண்ட பிறகும் மஞ்சள் குங்குமத்தால் அவள் இருப்பிடத்தை அலங்கரித்திருந்தார்கள். என்னை நான் ஆற்றுப்படுத்திக்கொள்ள எனக்கிருந்த ஒரே வழி என் வலியை முழுவதும் கண்ணீரைக்கொண்டு விடுவிப்பது தான். அச்சமாதியின் முன் இரண்டு கால்களையும் முடக்கிக்கொண்டு தலை சாய்த்தபடி அழுதேன். உன்னை தேடிவந்த என்னை ஏன் ஏமாற்றிச் சென்றாய் என்று வானத்தை பார்த்தும், வீசும் காற்றின் திசை பக்கம் திரும்பியும் கத்திக்கொண்டிருந்தேன். என் விழியின் புலன்களுக்கு அவள் தென்படவில்லை என்றாலும் நிச்சயம் எங்கேயோ நின்று என்னை பார்த்துக்கொண்டிருப்பாள் என்றே தோன்றியது. அவள் கதறலின் கண்ணீரும் அழுகையின் ஓலமும் யாரும் அறிந்திராத ஒன்று. நிச்சயம் மரணிக்க இருக்கும் கடைசி நிமிடங்களில்லாவது என்னை நினைத்திருப்பாள்.

சுடுகாட்டை விட்டு வெளிவந்து பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தேன். அவள் கல்லூரிக்கு செல்லும் பேருந்து வந்ததும் அதில் ஏறிக்கொண்டேன். கல்லூரி தோற்றத்தின் முகப்பையே கொஞ்ச நேரத்திற்கு பார்த்துவிட்டு எதிரில் இருந்த டெலிபோன் பூத்திற்கு சென்றேன். இங்கிருந்து தானே என் எண்ணிற்கு அழைத்துப் பேசுவாள். என் கண் முன்னே என் எண்ணிற்கு அழைத்து பேசுவது போல் கற்பனை செய்தேன். அவள் இவ்வுலகில் இல்லாத போதிலும் வாழ்வின் கடைசி ஆசையாக மீண்டும் அவள் என் எண்ணிற்கு அழைத்துப் பேசும் கடைசி சந்தர்ப்பம் அமையாதா என்று அந்த டெலிபோன் பூத்தை பார்த்தபடி ஏங்கினேன். நேராக கடைக்குச் சென்று மிருதுவாக அந்த டெலிபோனை எடுத்து காதில் வைத்தேன். அவளின் மூச்சுக்காற்று இன்னமும் அந்த டெலிபோன் துவாரங்களில் சுவாசித்துக்கொண்டிருப்பதாக தோன்றியது. இதழை அழுத்தப் பதிந்து கண்களில் நீர் வழிய அதில் முத்தமிட்டேன்.

அவள் இறப்பை அறிந்துகொள்ளாமல் வாழ்வின் கடைசி தேடல் அவள் மட்டுமே என்று நீடித்திருந்தால் இப்பிறவி பூரணம் அடைந்திருக்கும். முடிந்தாலும் முடியாமல் போனாலும் சந்திக்கும் துயரங்களை கடந்து போவதை தவிர மனித குலத்திற்கு வேறு நியதி கிடையாது. அனுபவத்தால் ஏற்பட்ட பிரிவுகளே எவர் வாய்மொழி இல்லாமலும் கற்பிதம் செய்கிறது. நினைவுகளின் வழி என்னுடன் காலம் முழுதும் பயனிப்பாள் என்று பஸ் ஏறி வீட்டிற்கு வந்தேன். கொஞ்சம் நாட்களுக்கு பிறகு கல்லூரி பிராஜக்ட் சம்மந்தமாக என் மின்னஞ்சலை லாக்கின் செய்ய வேண்டியிருந்தது. அவள் பெயரை தட்டச்சு செய்ய இயலாமல் விரல்கள் அனைத்தும் வலு இழந்திருந்தன. எவ்வளவு போராடியும் என்னால் முடியவில்லை. விசைப்பலகையின் மீது விழுந்து மேசையை குத்திக்கொண்டு அழுதுகொண்டிருந்தேன். சத்தம் கேட்டு அக்காவும் அப்பாவும் வந்தார்கள். அக்காவை அரவணைத்துக்கொண்டு கொண்டு அழுது தீர்த்தேன்.

அக்காவும் அப்பாவும் என் நிலை அறிந்து பரிதவித்தார்கள். அக்காவின் யோசனையும் அரவணைப்பும் மெல்ல என் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது. அப்போது அக்கா என்னிடம் கேட்டுக்கொண்டது இது தான்

“எந்த ஒரு தருணத்திலேயும் உன் பாஸ்வோர்ட் மாத்தாத… அவ உன்கூட இருக்குறாங்குறதையே அந்த பாஸ்வோர்ட் தான் உனக்கு உணர்த்தும்.

எனக்கும் என் மனைவிக்கு இடையிலான தற்காலப் பிரிவு நிரந்தரமாகிவிடுமோ எனும் பயம் ஒவ்வொரு நாளின் உறக்கத்தையும் கெடுத்துக்கொண்டிருந்தது. என் வாழ்வில் இன்னோர் பிரிவை சந்திக்கும் மனோத்திடம் என்னிடமில்லை. நேரில் சென்று எப்படியாவது அவளை அழைத்து வந்துவிடலாம் என்று முடிவெடுத்து கிளம்பும்  நேரத்தில் செல் போனிற்கு அழைப்பு வந்தது. என் மனைவி அழைத்திருந்தாள். அவளிடமிருந்து அழைப்பு வந்ததை நினைத்து புன்னகைக்கும் நேரத்தில் எதற்காக அழைத்திருக்கிறாள் என்று சந்தேகிக்கவும் தோன்றியது.

“எப்படி இருக்க?”

“ம்.. இருக்கேன் நீ எப்படி இருக்க?”

“என்ன தனியா விட்டு போயிட்டு இப்போ எப்படி இருக்கணு கேட்டா எப்படி?”

“ஹ்ம்ம்… ஸாரி கொஞ்சம் வீட்டுக்கு வந்து கூட்டிட்டு போ உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு”

“நிஜமாலுமே அங்க தான் கிளம்பிட்டு இருக்கேன்… என்ன விஷயம்னு சொல்லு ப்ளீஸ்…”

“ஏன் அவசரப்படுற நேர்ல தான் வாயேன்”

“திடீர்னு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்குனு சொன்னா நான் என்ன நினைக்குறது. என்ன விஷயம்னு சொல்லு”

“சரி சொல்லுறேன் அவசரப்படாத”

கொஞ்ச நேரத்திற்கு எதுவும் பேசிக்கொல்லாமல் அமைதியாக இருந்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்.

“காலைல ஹாஸ்பிடலுக்கு போனேன்…  இனிமேல் நான் கவனமா இருக்கனுமாம். எனக்கு உன்கூட இருந்தா தான் நல்லா இருப்பேன்னு தோனுச்சு”

“உடம்புக்கு என்ன பிரச்சன..?. ஏன்… இத்தன நாளா உங்க அப்பா அம்மா உன்ன சரியா கவனிக்கலியா…?”

“ச்சி.. கன்சீவ்ஹா இருக்கேன்டா லூசு”

சொல்லிவிட்டு அவள் போக்கில் சிரித்துக்கொண்டிருந்தாள். என்ன பேசுவதென்று கூட தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தேன். உடனே என் மனைவியை சந்தித்து ஆரத் தழுவிக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.

“வந்துட்டே இருக்கேன்…  I love You…”

“ஸாரி மா… உன்னோட பீலிங்க்ஸ் என்னால புரிஞ்சுக்க முடியுது. நீ அந்த பாஸ்வேர்ட் மாத்துறியோ இல்லையோ அது உன் இஷ்டம்… ஆனா நாளைக்கு நமக்கு பிறக்கப் போற குழந்தைக்கு மட்டும் அந்த பாஸ்வேர்ட்ட பேரா வெச்சுடாத. I love You… நான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன் சீக்கிரம் வா”

அந்த கடவுச்சொல்லில் மறைந்துள்ள அவள் பெயரை இதுவரை என் மனைவி என்னிடம் கேட்டது இல்லை. நானும் இதுவரை யாரிடமும் சொன்னது இல்லை. ஏன் உங்களிடமும் கூட…