சுரேஷ்குமார இந்திரஜித் குறுங் கதைகள் – 11 &  12

11 ) அம்மா 

மனைவியின் முன் கை கூப்பி நின்றிருந்தார் நாகராஜ. தீடீரென்று அவள் காலில் விழுந்து விட்டார. மனைவி சலனமில்லாமல் நின்றிருந்தாள். அப்படியே அவரை விட்டுவிட்டு அடுத்த அறைக்குச் சென்று கதவை லேசாகச்  சாத்திக் கொண்டாள். நாகராஜன் படுக்கையில் சாய்ந்தார்.

வாழ்க்கையில் எதுவுமே சரியாக அமையவில்லை என்ற துக்கம் மனம் முழுக்க நிறைந்திருந்தது. தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட்டார. சரியான வேலை அமையவில்லை. பிரைவேட் கம்பெனியில் வேலை. பெரிய சம்பளம் இல்லை. திருமணமான சில மாதங்களில் அம்மா இறந்துவிட்டாள். மனைவிக்கு அரசாங்க வேலை கிடைத்தது. குழந்தை பிறக்கவில்லை. பரிசோதனை செய்து கொள்ள மறுத்துவிட்டாள். அவளே பிறருக்குத் தெரியாமல்  பரிசோதனை செய்து அவளிடம் உள்ள குறை காரணமாக மறைத்து விட்டாளோ என்னவோ.

மனைவி பென்ஷன் வாங்குகிறாள. நாகராஜனுக்கு வருமானம் என்று ஏதுமில்லை. ஒரு பைசா கூடக்  கிடையாது. ஏதாவது தேவை என்றால் அவளிடம் போய் இளித்துக் கொண்டு நிற்க வேண்டும். அவளுக்கு எங்கிருந்து இவ்வளவு அங்காரமும், அகந்தையும்,கோபமும், அலட்சியமும் கொஞ்சம் கொஞ்சமாக வந்து சேர்ந்தது என்று தெரியவில்லை. சண்டை எப்படி உருவாகும் என்பதை எப்போதுமே கணிக்க முடியாது. சண்டை வந்துவிடும். நாகராஜன் எங்கே போவார். சாப்பாட்டுக்கே வேறு வழியில்லை. மனைவி போட்டால்தான் உண்டு. மனைவி  சலனமில்லாமல் பிடிவாதமாக இருப்பது  அவரைப்  பணிய வைத்து விடும். வீட்டைவிட்டு ஓடிப்போவது என்றால் உடல் சரியில்லாத நிலையில் எங்கே செல்வது; சோற்றுக்கு என்ன செய்வது.

அவள் அடுக்களைக்குள் சென்று பாத்திரங்களைப்  புழங்கும் சத்தம் கேட்டது. அம்மாவை நினைத்துக் கொண்டார். கஷ்டப்பட்டிருந்தாலும்  சிறு வயதிலேயே வாழ்க்கை நின்று போயிருக்கக் கூடாதா என்றுநினைத்தார். கதவு திறக்கும் சத்தம் கேட்டது. மனைவி உள்ளே நுழைந்து காபி டம்ளரை ஸ்டூலில் சத்தமாக வைத்து விட்டுச் சென்றாள். இந்தக் காபியைக்  குடிக்க வேண்டுமா? டம்ளரில் இருந்த காபியை பாத்ரூமில்  கொட்டினார். ‘ மதியம் எப்படியும் அவள் சமைத்த சாப்பாட்டைச் சாப்பிட்டுத்தானே ஆக வேண்டும் ‘ என்று நினைத்துக் கொண்டார். அம்மா நினைவு வந்தது .

 12 ) அபகரிப்பு 

கைலாசத்துக்கு வாதம் வந்து படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர் பேசுவதில் ஒரு சில வார்த்தைகள் மட்டும் புரியும். நடமாட்டம் இல்லை. ஒரு மகன் மன நிலை சரியில்லாமல் இருக்கிறான். ஒரே மகள் திருமணமான ஒரே மாதத்தில் விதவையாகி வீட்டுக்கு வந்து விட்டாள். இன்னொரு மகனுக்கு விபத்தில் ஒரு காலை எடுத்துவிட்டார்கள். அவனுடைய மனைவியும் மஞ்சள் காமாலையில்  இறந்து விட்டாள். காலை இழந்தவனுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. கைலாசத்தின்  மனைவியும் மகளும் அந்தக் குழந்தையைப் பார்த்துக் கொள்கிறார்கள். ஏராளமான நிலங்கள். காலை இழந்த மகன் நிலங்களைக் கவனித்துக் கொள்கிறான். அவன் நிலச்சுவான்தார். இந்த நிலங்கள் எல்லாம் கைலாசம் அவருடைய அக்கா கோமதியிடமிருந்து அபகரித்தது .’ குடும்பம் நாசமாகப் போய்க் கொண்டிருக்கிறது. அக்காவிடம் மன்னிப்புக் கேட்டு நிலங்களை அவள் பெயருக்கு மாற்றக் கொடுத்துவிடுவோம்’ என்று குடும்பத்தாரிடம் கைலாசம் சொல்லிப்பார்த்தார். யாரும் கேட்கவில்லை. ‘ அக்கா சொத்தை அபகரிச்ச  பாவி ‘ என்று அவர் குழறிய  குரலில் புலம்புவதை அவரின் மனைவி அடிக்கடி  கேட்டிருக்கிறாள். அவர் இறுதிக் காலத்தில் இருக்கிறார். குற்ற உணர்ச்சி வதைக்கிறது.

வாசலில் கோமதி வந்து தம்பியைப் பார்க்க நின்றாள். கைலாசம் குடும்பத்தினருக்கு அவளை உள்ளே விடலாமா வேண்டாமா என்ற யோசனை. காலை இழந்த மகன் ‘ பார்த்துவிட்டுப் போகட்டும் ‘ என்றான். கோமதி உள்ளே வந்தாள் . ஒருவரும் அவளிடம் பேசவில்லை. கைலாசம் படுத்துக் கிடக்கும் இடத்தருகே கோமதி சென்று  பார்த்தாள் .எல்லோரும் சுற்றி நின்றிருந்தார்கள் . அக்காவைப்  பார்த்த அடுத்த கணம் அவர் ‘நான்  பாவி ‘ என்று  குழறிக் கொண்டே படுக்கையிலிருந்து தரையில் விழுந்தார். கோமதியின் காலடியில் கைலாசம் கிடந்தார். அவர் கை அவள் பாதத்தின் மீது கிடந்தது. அவர் திரும்ப  எழவே  இல்லை. கோமதி கண்களைத்  துடைத்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியேறினாள்..