சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் – 5 & எண் 6

5 ) கடல் நீலம்

சந்திரன் கடற்கரையில் அமர்ந்திருந்தான் . கடலின் நீலவண்ணம் அவனுக்குப் பிடிக்கும் . ‘நீலவண்ணத்தில் ஆடைகள் அணிந்து வா ‘ என்று அடிக்கடி சங்கீதாவிடம் அவன் கூறுவான். சங்கீதா  என்பது பொய்ப்பெயர். அவளின் நிஜப்  பெயர் வேறு. ‘நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டிருந்தால்  வாழ்க்கை எப்படியிருந்திருக்கும் ‘ என்று அவள் கேட்டபோது அவன் சொன்னான் ‘ இப்போது இருந்திருக்கும் ஈர்ப்பு இருந்திருக்காது ‘ என்றான் . இப்படித்தான் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது . ஒரு நாள் ‘ கணவரை விவாகரத்து செய்துவிடவா? ‘ என்று கேட்டாள் .

‘அவர் ஒப்புக்கொண்டால் 6 மாதத்தில் கிடைக்கும் . இல்லையென்றால் இழுத்துக்  கொண்டேயிருக்கும்.  இப்படியான உறவுத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை ‘ என்றான்.  அவள் ஒன்றும் பேசவில்லை. பிறகு ‘மாட்டிக்கொண்டால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் ‘ என்றாள் .  நீல வண்ணத்தில் சேலை அணிந்திருந்தாள். கடல் நீலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மீண்டும் மீண்டும். கடல் நீலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.’ கடல் நீலத்துக்குள் நான் கரைந்து போவேன் ‘ என்றாள்.

அந்தக் கற்பனை அவளுக்கு உவப்பாக இருந்தது . சந்திரன் கடற்கரையில் அமர்ந்து கடல் நீலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

6 ) வழுக்குப் பாறை

கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு மீசை முழுக்க வெள்ளையாக இருந்தது. தலை முடியில் நரை ஒடியிருந்தது. அவளுக்குத்  தலை முடி பெரும்பாலும் வெள்ளையாக இருந்தது. தீடீரென்று கிழவனும் கிழவியுமாக ஆகி விட்டதை இருவரும் உணர்ந்தார்கள். சோகமாக இருந்தது. கிழத்  தோற்றத்தை மறைத்து இருந்திருக்கிறோம் என்பதை நினைத்த போது ஏற்பட்ட உணர்வு விசித்திரமாக  இருந்தது. கருப்பு நிற முடி மாயத் தோற்றங்களை உருவாக்குகிறது. கிழத் தன்மையை மாற்றி நல்ல தோற்றத்தைக் கொடுக்கிறது .கிழவனும் கிழவியுமாக இருப்பது கொடுமையானது .

அவர்கள் இருவரும்  ஒரு காலத்தில் உண்மையான கரு முடியுடன் இளமையாக இருந்த கால கட்டத்தை நினைவுக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டார்கள. நினைவுகள் வழுக்குகின்றன . நினைவுகள் பெரும் வழுக்குப்பாறை . நிலைக் கண்ணாடியில் அவனும்  அவளும் தனித் தனியே  தங்கள் தோற்றத்தைப் பார்த்துக் கொள்கிறார்கள். நிலைக் கண்ணாடி உண்மையான தோற்றத்தைத்தான் காட்டும். மாயக் கண்ணாடி விசித்திரக் கதைகளில் மட்டுமே வரும். இருவரும் தங்கள் கற்பனைகளில் மாயக் கண்ணாடியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.