சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்  7 – 8

7 ) ரோஜா மலர்கள்

எழுத்தாளர் ரஞ்சன் அந்த நாட்டிற்கு இலக்கியம் பேசச்  சென்றிருந்தான். விமான நிலையத்தில் வரவேற்க வந்திருந்தார்கள். ரஞ்சனை அடையாளம் கண்டு நெருங்கி வந்து கை  கொடுத்தார்கள். கவுன் அணிந்த இரண்டு பெண்கள் நீண்ட காம்புடன் உள்ள ரோஜா மலரைத் தந்தார்கள். அவன் கையில் இரண்டு ரோஜா மலர்கள். அவற்றை என்ன செய்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. அந்த இரண்டு பெண்களும் சிரித்த முகத்துடன் இருந்தார்களே தவிர அவன் சிரமத்தை உணரவில்லை. அவற்றைக்  கையில் வைத்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான். வலது கையிலிருந்து இடது கைக்கு மாற்றிக் கொண்டான் . அனைவரும் வாகனத்தை நோக்கிச் சென்று ஏறிக்கொண்டார்கள். அந்த ரோஜாமலர்களை  சீட்டில் தன்  அருகே வைத்தான்.  தங்கும் இடத்தை அடைந்தார்கள் . மறந்து விட்டதாகப் பாவித்து ரோஜாப் பூக்களை விட்டுவிட்டு நடந்தான். லக்கேஜை ஒருவர் எடுத்து வந்தார். சற்று நடந்திருப்பான் .அந்தப் பெண்கள் இருவரும் அந்த ரோஜாமலர்களை எடுத்து தனக்குப் பின்னால் வந்து கொண்டிருப்பதைக் கண்டான். மறந்து விட்டீர்கள் என்று கூறி இருவரும் அந்த ரோஜாமலர்களை அவனிடம் கொடுத்தார்கள். அவன் சாரி சொல்லி ரோஜாமலர்களை வாங்கிக் கொண்டான். அறைக்குச் சென்றார்கள்.ரோஜாமலர்களை அங்கிருந்த டிரெஸ்ஸிங் டேபிளில் வைத்தான்.

இலக்கியம் பேசுவார்கள் என்று நினைத்தான். ஆனால் அவர்கள் வடஇந்திய தென்னிந்திய நடிகர் நடிகைகளை பற்றிப்  பேசினார்கள். அவனை ஓய்வெடுக்க சொல்லி அவர்கள் சென்று விட்டார்கள். அந்த ரோஜாமலர்கள் காலையில்  வாடியிருக்கும் என்று நினைத்து தூங்கி விட்டான். காலையில் எழுந்து பார்த்தான். அந்த ரோஜாமலர்கள் வாடவில்ல . கூட்டத்திற்கு அழைத்துச் செல்ல அவர்கள் வந்த போது அவன் இது பற்றிக் கேட்டான் . அவர்களில் ஒருத்தியான அந்தப் பெண் கூறினாள் ‘எங்கள் நாட்டை விட்டுச் சென்ற பின்னர்தான் இந்த ரோஜாமலர்கள் வாடும். இது எங்கள் அன்பின் வெளிப்பாடு . இந்த மலர்களுக்கு அன்பு என்று இன்னொரு பெயர் உண்டு ‘ அவன் அவர்களை முட்டாள்கள் என்று நினைத்தான. எரிச்சலூட்டும் வசனம் பேசுகிறார்கள் என்றும் நினைத்தான்.

8 ) சுபம்

எழுத்தாளர் சகாதேவன் மேடையில் உட்கார்ந்திருந்தார் பார்வையாளர்களுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சி

‘நீங்கள் எப்படி எழுத்துத் துறைக்கு வந்தீர்கள் ‘

‘ நாங்கள் 5 வீடுகள் இருக்கும் போஷனில் குடியிருந்தோம். நடை பாதையில் கொடி கட்டியிருப்பார்கள். அதில்  துணிகளைக் காயப்  போட்டிருப்பார்கள். தரையில் துணியை விரித்து அதில் வடகம் காயப்  போட்டிருப்பார்கள். மல  ஜலம் கழிக்கக்  காந்திருந்துதான் செல்ல வேண்டும். இந்த நிலைதான் என்னை எழுத வைத்தது .

‘ வேறு காரணம் ?’

‘வேறு காரணம் என்றால் எங்கள் போர்சனுக்கு எதிரே இருந்த புளிய மரத்தையும் சொல்லலாம் ‘

‘சமூகக் காரணம் என்ன”

‘ அடுத்த கட்டிடத்தில் உள்ள போர்சனில் ஒரு பெண் இருந்தாள். அவளை எனக்குப் பிடிக்கும். அதுதான் சமூகக் காரணம் ‘

‘சமூகக் கொடுமைகளைக் காணும்போது என்ன தோன்றும் ‘

‘உங்களை போல் நானும் கவலைப்படுவேன்.கொந்தளிப்பேன் ‘

‘ அந்தக்  கொடுமைகளைக் களைய என்ன செய்வீர்கள் ‘

‘ நான் கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்து முதல் அமைச்சராகிக் களைய நினைத்திருக்கிறேன் ‘

கை தட்டல்கள்.

– சுபம்.