சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள்

3) நெடுஞ்சாலை

 சரவணனுக்கு மிகவும் தொந்திரவாக இருந்தது . அவனுக்குத்  தன்னை இன்னொருவர் இடத்தில்  வைத்துப் பார்க்கும் பழக்கம் உண்டு. அவனுடைய துரதிர்ஷ்டம் அவன்  நெடுஞ்சாலைகளில் நடந்து செல்லும் தொழிலாளர்களின் குடும்பங்களில் ஒன்றாக தன்  குடும்பத்தை வைத்துப் பார்த்தான். நடந்து நடந்து அவனுக்குக்  கால் வீங்கிவிட்டது . அவர்களின் குழு 30 நபர்களைக் கொண்டது . மனைவி நடக்க முடியாது என்று சொன்னபோது தூக்கிச் சுமந்தான் . நல்ல வேளையாக அவர்களுக்கு குழந்தைகள் இல்லை . மனைவி ஷர்மிளா  கருவுற்றிருந்தாள்  ‘ஊரில் இருந்த தன்னை இங்கு வேலை பார்க்கும் இடத்திற்கு வரச்சொல்லி கஷ்டப்படுத்தி விட்டதாக ‘ கணவனை திட்டி கொண்டே இருப்பாள். கரு கலைந்துவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் அவளுக்கு இருந்தது. கூட இருந்த ஒரு பெண் துணியும் தண்ணீரும் வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருந்தாள். இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை .

வழியில் இருந்த ஒரு மடத்தில் தங்கினார்கள். ரொட்டி கொடுத்தார்கள். மடத்தில் அனுமார் சிலை இருந்தது. மடத்துக்காரர்கள் அனுமனை வழிபடுகிறவர்கள். மடத்தின் தலைவராக இருப்பவர் வெள்ளை ஆடையும் சிகப்பு நிறத்தில் தலைப்பாகையும் கட்டியிருந்தார். அவர்கள் முன் தோன்றி ‘வருத்தப்படாதீர்கள், உங்கள் தலையெழுத்து இப்படி அமைந்திருக்கிறது ;. விதிப்படி எல்லாம் நடக்கிறது; முன் பிறவியில் செய்த தீவினை இப்போது துன்புறுத்துகிறது ; ‘ என்றார். -சரவணனுக்குத் தோன்றியது – இந்த நிலைக்கு வேறு யாரும் காரணமில்லை நாம்தான் காரணம் என்று காலம் காலமாக உளவியல் சலவை நடைபெறுகிறது – அவன் சொல்லிக் கொண்டான் – நடந்தது எல்லாம் கொடுமையாக நடந்தது,  நடப்பது எல்லாம் மிக்க கொடுமையாக  நடக்கிறது , நடக்கப்போவது எல்லாம் மிக மிக கொடுமையாக இருக்கும்  –

வீட்டில் இருந்த சரவணன் மீண்டும் தன்  நிலைக்கு வந்து தெருவை வெறித்துப் பார்த்தான்

4)சங்கீதம்

 பிரபல பாடகி சபாவில் பாடிக் கொண்டிருந்தாள் . அருமையாகப் பாடினாள்  கல்பனா ஸ்வரங்கள் பிரவாகமாய் வந்தன. சந்திரமுகி கச்சேரியில் உட்கார்ந்திருந்தாள். பாடகி பல பாட்டுக்கள் பாடினாள். வந்திருந்த பார்வையாளர்கள் ரசித்தார்கள். ஒரு சிறு கூட்டம் சங்கீதத்தை பற்றிக்  கவலையில்லாமல் ஒன்றை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தது. பாடகி ஒரு பாட்டைப் பாடினாள். அந்தக் குழுவில் உள்ளவர்கள் கூச்சல் போட்டார்கள் . எழுந்து நின்று ஆட்சேபித்தார்கள். மேடையை நோக்கி வந்தார்கள் . பாடகியைப் பாட விடமால் தடுத்தார்கள். பாடகிக்கு எதற்காக  தடுக்கிறார்கள் என்றே புரியவில்லை. பிறகுதான் புரிந்தது . அவளுக்கு அவமானமாக இருந்தது. உள்ளூர அபத்தமாகவும் தெரிந்தது. காரியதரிசி கச்சேரி தொடராது, முடிந்து விட்டது என்று அறிவித்து விட்டார். பார்வையாளர்கள் கலைந்தார்கள் . சந்திரமுகியும் எழுந்து வெளியே வந்தாள். அருகில் இருந்தவரிடம் என்ன காரணம் என்று கேட்டாள். அவர் சொன்னார். சந்திரமுகி சிரித்துவிட்டாள்.