உருக்குலைந்த காலத்தின் கண்ணாடியை

எங்கள்முன் யார் திருப்பி வைத்தது?

 

“அம்மா, நீ சொல்வதைக் கேட்கிறேன்

ரூமைவிட்டு வெளியில் வரமாட்டேன்”

குழந்தை மழலையில் உறுதி தருகிறது

இல்லை குழந்தையே!

நீ அடம்பிடிக்க வேண்டும்

இத்தனை சட்டென

ஏற்றுக்கொண்டிருக்கக்கூடாது

மூன்று வயதுக் குழந்தை

ஒரு வருடத்தில்

முப்பது வயது ஆளாகப் பேசுகிறதென்றால்

இங்கே இந்தக் கண்ணாடியில்

நாம் காண்பது எதை?

 

இந்நாட்களுக்கான ஒரு பாடல்

நான்

இறந்துபோன என் மனைவியின் உடலை

சைக்கிள் கேரியரில் கட்டிச் செல்லும்

கணவனாக இருக்கிறேன்

நான்

நேற்றிலிருந்து சடலமாய்க் கிடக்கும் அம்மாவைத்

தொட்டுத் தொட்டு விளையாடும்

இரண்டு வயதுக் குழந்தையாக இருக்கிறேன்

நான்

சட்டெனச் செத்துப்போய்விட்ட

என் அப்பாவின் சிதைக்குள்

குதிக்கப்போகும்

சின்னப் பெண்ணாக இருக்கிறேன்

நான்

நேற்று அம்மாவை இழந்தபின்

இன்று அப்பாவை இழக்காதிருக்க

மருந்துக்காகத் தெருத் தெருவாக

ஒற்றை மகளாக அலைகிறேன்

 

நான் இவை மட்டுமல்ல

நான்

பிணங்கள் சூழ்ந்திருக்கும் உயர்நீதிமன்றத்தில்

ஆக்சிஜன் டேங்கரை ஏற்பாடு செய்வது

எந்த அரசின் பொறுப்பு என விஸ்தாரமாக வாதிடுகிறேன்

நான்

என் மாநிலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்று

குறை கூறுபவர்களை

உடனடியாகக் கைது செய்ய உத்தரவிடுகிறேன்

நான்

தொலைக்காட்சியில் உங்களிடம் பேச

விரைவில் தோன்றுவேன்

அதுவரையில் தூங்குகிறேன்

 

நான் இவை மட்டுமல்ல

நான்

கிலோமீட்டருக்கு நான்காயிரம் ரூபாய் வாங்கும்

ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கிறேன்

நான்

காத்திருக்கும் நோயாளிகளின்

வரிசையை மீறி விதிகளை மீறி

மருத்துவமனையில் படுக்கைகளை

ஏற்பாடு செய்கிறேன் சமூக சேவகியாய்

நான்

தீயணைப்பு சிலிண்டர்களில்

கார்பன் டை ஆக்சைடை நிரப்பி

நோயாளிகளிடம் விற்கிறேன்

 

நான் இவை மட்டுமல்ல

வேறு பல வடிவங்களில்

இருக்கிறேன் இத்தேசத்தில்

இப்போது

உறைந்திருக்கும் தொண்டையோடு

ஒரு பறவையாக வினோதமாக அலறுகிறேன்

மரக்கிளையில் தத்தியபடி

அழுகிய கனிகளையே மரங்களும் தரத்தொடங்கிவிட்ட

இத்தேசத்தில்

 

தினப் பொழுது

காலை

ஏழு இறந்துவிட்டாரா, நம்பவே முடியவில்லைகள்

 

முன் மதியம்

ஐந்து மனமார்ந்த அஞ்சலிகள், இரண்டு இரங்கல்கள்

 

பின் மதியம்

ஒரு நலம்பெறப் பிரார்த்திக்கிறேன்

ஒரு பயப்படாதீர்கள்

 

மாலை

மூன்று அவருக்குமா, ஆறு கண்ணீர்த் தாரை எமோஜிகள்

 

முன்னிரவு

ஆன் செய்யப்படாத தொலைக்காட்சியின் முன்

மௌனமாக உட்கார்ந்திருத்தல்

 

நள்ளிரவு

பேயாவது ஒரு தரம் வந்துவிட்டுப் போகலாம்

 

பின்னிரவு

இதோ காலை அரும்பிவிடும் எல்லாம் சரியாகிவிடும்

பழைய பறவையின் ஒரு கீச்சொலி

பழைய உலகம்தான் இது

பழைய நானும் பழைய உயிரோடிருக்கிறேன்

 

ஏன் காலை வந்ததெனக்

கேட்க வைக்கும்

இன்னொரு காலை

ஏன் இந்த நாள் வந்ததெனக்

கேட்க வைக்கும்

இன்னொரு நாளின் முகப்பு

 

இறந்தவளின் முயற்சி

எனக்குக் கொரோனா

நேற்று முன் தினம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்

நான் பணியாற்றிய அதே வார்ட்

முதலில் நான் கவலைப்படவில்லை

எல்லாரையும் போல

பின்னர் மூச்சுத் திணறல்

நேற்று இறந்துவிட்டேன்

இன்று

என் எண்பத்திரண்டு வயதுத் தந்தை

அவருக்கு நான் ஒரே மகள்

வீட்டு மொட்டை மாடிக்கு வந்தார்

தற்கொலைத் திட்டமெல்லாம் இல்லை

கண்ணீர்த் திரையிட்டதில்

அவருக்குக்

கைப்பிடிச்சுவர் தெரியவில்லை

கீழே குதித்துவிட்டார்

 

என் தந்தை தைரியசாலி

 

இப்போது அவர் மருத்துவமனையில்

படுத்த படுக்கையாய்

நான் இருந்த அதே மருத்துவமனை

அவர் படுக்கையை

நான் சுற்றிச் சுற்றி வருகிறேன்

எலும்புகள் சில்லுச் சில்லான

தளர்ந்த கைகளையும் முடிச்சிட்ட கால்களையும்

தடவித் தருகிறேன்

அப்பா என்னைப் பார் என்கிறேன்

அவரால் என்னைப் பார்க்க முடியவில்லை

அந்த அறைக்கு வெளியே

வராந்தாவின் கைப்பிடிச் சுவர்

அவர் கண்ணீர் திரையிட்டு

அதை மறைக்கிறது

 

என் தந்தை  தைரியசாலி

 

குத்துமதிப்பாக அதன் திசையில்

ஒரே பாய்ச்சலாகப் பாய்கிறார்

அந்த மருத்துவமனையில் தங்கியிருக்கும்

ஒவ்வொரு நாளும்

ஒரு வேளை அதன்பின்னரும்

அவர் பின்னால் ஓடிச் சென்று

அவரைத் தடுப்பேன்

முயற்சியில் ஒரு நாள் தோற்கும் வரை

 

என் தந்தை தைரியசாலி

 

(சென்னையில் கொரோனா வார்டில் பணிபுரிந்து 

தொற்றுக்குள்ளாகி மரணமடைந்த செவிலியர் சசிகலாவுக்கு அஞ்சலி)

 

அச்சப்படுதலின் இன்றைய பொருள்

என் நண்பர்கள் என்னிடம்

“உனக்கு ஒன்றும் ஆகாது பயப்படாதே” என்கிறார்கள்

எனக்காக நான் அச்சப்படவில்லை என்பதை

எப்படிச் சொல்வது?

என் சொற்கள் மங்கிவிட்டன

ஒருவேளை ஒருவேளை

நான் செத்து நிரூபிக்கலாம்

எனக்குச் சாக அச்சமில்லையென

நிஜத்தில்

எனக்கு இனி இருக்கத்தான் பயம்

என் தேசம் நீர்க்கோலமாகக் கலைந்துவிட்டது

என் கண்முன்னே என் வாழ்நாளில்

இல்லை

தேசம் என்று வரைபடத்தைச் சொல்லவில்லை நான்

இப்படி ஒவ்வொன்றையும்

விளக்கவேண்டியிருக்கிறது

ஆனாலும் புரியப்போவதில்லை

எதற்கு அச்சப்படுகிறேன் என

என்னைப் போல் அச்சப்படுபவர்களுக்காவது

புரியுமா?