‘ம்யூசிக்கல்ஸ்’ என்கிற இசை நாடக வடிவம் நம்மிடம் இருக்கிறதா? நான் இந்தியாவில் இருந்த வரை ஹாலிவுட்டில் வெளியான சில ம்யூசிக்கல் வகை படங்கள் மட்டும் பார்த்திருக்கிறேன். முதல் முறை இங்கே பாஸ்டனில் Les Misérables ம்யூசிக்கல் பார்த்த பிறகு அன்று இரவு முழுவதும் உறக்கம் வரவில்லை. மனதிற்குள் திரும்ப திரும்ப அந்நாடகத்தின் காட்சிகளும் பாடல்களும் ஓடிக் கொண்டேயிருந்தது. அவ்வளவு நேர்த்தியான ஒரு படைப்பை அதற்கு முன் நான் பார்த்ததேயில்லை. Les Misérables ம்யூசிக்கல் வடிவில் திரைப்படமாகவும் வந்திருக்கிறது. நன்றாகவே இருக்கும். ஆனால் ம்யூசிக்கல் என்பதை நேரில் அனுபவித்துப் பார்த்தால்தான் அதன் பிரம்மாண்டம் புரியும்.

Les Misérables விக்டர் ஹூகோ எழுதிய நாவல். அதை இசை நாடகமாக மாற்றுவதே பெரும் சவால். என் நினைவிலிருந்து எழுதுகிறேன். நான் ஏழாவது படிக்கும்போது என் ஆங்கில பாடத்தில் Les Misérables நாவலின் தொடக்கப் பகுதி The Benevolent Bishop என்ற பெயரில் பாடமாக இருந்தது. அப்போது Jean Valjean என்கிற ப்ரென்ச் பெயரை ‘ஜீன் வால்ஜீன்’ என்று சொல்லுவோம் (“‘ஜீன் வால்ஜீன்’ எஸ்ஸே படிச்சுட்டியா?” என்று கேட்டுக்கொள்வோம்) உண்மையில் அதை ‘ஜான் வா(ல்)ஜான்’ என்று சொல்ல வேண்டும். நாடகம் ஆரம்பித்தவுடன் என்னுடைய பள்ளி நாள்கள் ஞாபகம் வந்துவிட்டது. ஏற்கனவே, திரைப்படமாக பார்த்திருந்ததால் உடனுக்குடன் எல்லாக்காட்சிகளையும் புரிந்துகொள்ள முடிந்தது.

நான் இந்த ம்யூசிக்கல் பார்ப்பதற்கு முன்பு வரை வேறு எந்த மேடை நாடகமும் பார்த்ததில்லை. இசை நாடகம் என்று சொல்லும் போது, நடிப்புடன் நடனம், பாடல் அனைத்தும் கலந்திருக்க வேண்டும். வெறும் பாடலாக மட்டுமே நகர்ந்து சென்றால் அது ஆப்ரா (Opera) ரகத்தில் சேர்ந்துவிடும். ம்யூசிக்கல்லை ஆப்ராவிலிருந்து பிரிப்பது வசனங்கள். ஒரு படைப்பை நாவலாகப்படிப்பதற்கும் அதையே திரைப்படமாகப்பார்ப்பதற்கு

ம், ம்யூசிக்கல் போல நிகழ்த்து கலையாக பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. நாவலில் ஒரு கதாபாத்திரம் கனவு காண்பதாக வைத்துக்கொள்வோம். அதை வார்த்தைகளில் எளிதாக விவரித்துவிடலாம். திரைக்காட்சியாக எடுக்கும் போது பல்வேறு தொழில்நுட்ப உதவியுடன் காண்பித்துவிடலாம். ஆனால் ம்யூசிக்கல் நாடகத்தில் அரங்கத்தில் எப்படி நிகழ்த்திக்காட்டுவது? இது போன்ற சவால்கள் இதில் அதிகம். ஆனால் அந்த கனவை அரங்கத்திலிருக்கும் ஒவ்வொருவரும் உணருமளவுக்கு இசையும் நடனமும் ஒன்று சேர்ந்து ஒரு மேஜிக்கை நிகழ்த்திவிடுகிறது.

என் கனவு தேசம் என்று குறிப்பிடும் நியூயார்க் நகரத்தின் ப்ராட்வே எனும் இடத்தில், ஒவ்வொரு நாளும் இதுபோன்ற பல நூறு ம்யூசிக்கல் நாடகங்கள் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன. இந்த வைரஸ் பிரச்சனை எல்லாம் முடிந்த பிறகு, கண்டிப்பாக ஒரு ப்ராட்வே ம்யூசிக்கல்ஸ் பார்க்க வேண்டும். இதில் பங்குபெறும் கலைஞர்கள் எத்தனை முறை இதை பயிற்சி செய்திருக்க வேண்டும் என்று ஆச்சர்யமாக இருக்கும். ஒருவர் ஒரு வசனம் பேசிக்கொண்டே இன்னொரு இடத்துக்கு நகரும் போது மற்றொரு கதாபாத்திரம் அங்கிருக்கும் வேறொரு பொருளை நகர்த்த வேண்டும். உதாரணமாக, ஆவேச வசனம் பேசி வரும் ஒரு கதாபாத்திரம் ஒரு நாற்காலியில் ஏறி அடுத்தப்பக்கம் குதிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்ளுங்கள். மேடையின் ஒரு புறமிருந்து அவர் ஆவேசமாக பேசிக்கொண்டு வரும் அதே வேளையில், இன்னொருவர் அந்தக் காட்சிக்கு பொருந்துகிறதுபோல உள்ளே வந்து நாற்காலியை உரிய இடத்தில் வைக்க வேண்டும். இதில் எது ஒன்று இல்லை என்றாலும் அந்தக் காட்சியே சிதைந்துவிடும் அபாயம் இருக்கிறது. உழைப்பு மட்டுமே இவ்வகை நாடகங்களை நம்முடன் ஒன்றவைக்கிறது.

மேற்குலகம் எங்கும் சினிமா ஆதிக்கம் செலுத்தினாலும் இன்னும் மேடை நாடகங்களுக்கான வரவேற்பு குறையவில்லை. அதற்கு மிகச் சிறந்த உதாரணமாக ஆகதா கிறிஸ்டியின் ‘மௌஸ்ட்ராப்’ நாடகத்தைச் சொல்லலாம். 1952ல் வெளியான இந்நாடகம் லண்டன் வெஸ்ட் என்ட் தியேட்டரில் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இது கொலை சம்பந்தமான மர்மங்களை பின் தொடரும் நாடகம். ஒவ்வொருமுறை நாடகம் நிறைவடைந்த பின்பு, சுவாரசியத்தை காப்பாற்ற நாடகத்தின் முடிவை வெளியில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுவார்களாம். அந்தளவுக்கு சுவாரசியமான நாடகம். 1967ல் வெளியான தமிழின் ‘அதே கண்கள்’ படம் இதன் தழுவல் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், நிச்சயமாக சொல்லமுடியவில்லை. 2010ல் இந்த நாடகத்தின் மர்மங்களை விலக்கி, குறிப்பாக யார் கொலைகாரன் என்பதை வெளிப்படையாகக் கூறி விக்கிபீடியாவில் வெளியிட்டுவிட்டார்கள். இந்நாடகம் ஐம்பத்தியெட்டு ஆண்டுகள் தொடர்ந்து அரங்கேறியது. பல்வேறு விமர்சகர்களும் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களும் அதன் சுவாரசியத்தை அதுவரை பாதுகாத்து வந்திருக்கிறார்கள் என்பது முக்கியம். 2010ல் வெளியான விக்கிபீடியா பதிவுகள் குறித்து பெருமளவில் பேசப்பட்டது. ஆனால், அதன் பிறகும் கூட தொடர்ந்து அந்நாடகம் அரங்கேறி வருகிறது. கொரோனா காரணமாக இப்போதைக்கு நிறுத்தப்பட்டிருக்கிறது.

சினிமா நடிகர்கள் எப்படிக்கொண்டாடப்படுகிறார்களோ அவ்வாறே மேடை நாடகக் கலைஞர்களும் கொண்டாடப்படுகிறார்கள். நாம் திரும்பவும் ம்யூசிக்கல்ஸ்க்கு வருவோம். ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ‘லயன் கிங்’ ம்யூசிக்கலாகதான் முதலில் வெளியானது. என் அமெரிக்க நண்பர்கள் பலரும் நினைவுகூறும் முதல் ம்யூசிக்கல் ‘லயன் கிங்’தான். இவ்வகை இசை நாடகங்களில், காட்சியுடன் ஒன்றித்துக் கதாபாத்திரங்களின் மனநிலையை பார்வையாளர்கள் உணரும்படி செய்துவிடுகிறார்கள். Les Misarablesல் ஒரு காட்சி வருகிறது. பெண் ஒருத்தி வறுமையின் காரணமாக தன் தலைமுடியை விற்கிறாள். அப்போது அங்கு வரும் பணக்காரன், அவளின் பற்களை பார்த்துவிட்டு பல்லை கொடுத்தால் பணம் தருவதாக கூறுகிறான். சில பற்களையும் பிடுங்கி விற்கிறாள். அடுத்து அங்கு வரும் விபச்சாரி ஒருத்தி இன்னும் இவள் அழகாக இருப்பதால் விபச்சாரத்துக்கு இழுக்கிறாள். காசு கிடைக்கும் என்று தன் உடலையும் விற்கிறாள் இந்தப் பெண். கடைசியில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் தன் மகளை ( அவள் பெயர் கோஸட்) நினைத்து அழுது ஒரு பாடல் பாடுவாள். இதயமிருக்கும் யாவருக்கும் அந்தப் பாடலை கேட்டபின் இதயம் உருகி கண்களின் வழி ஓடும். இதே போல பல தருணங்கள் Les Misérablesல் உள்ளது. இன்னொரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. நாடகத்தின் மையம் 1789லிருந்து 1799 வரை நடைபெற்ற ப்ரென்சு புரட்சி. நாடகத்தில் புரட்சியை சித்தரிக்கும் காட்சிகள் தத்ரூபமாக இருந்தது. பார்வையாளர்கள் மத்தியில் ஒரே பரபரப்பாகிவிட்டது. உண்மையாகவே வெடி சப்தம் கேட்டது. எனக்கோ ஹிட்ஸ்காக்கின் ஒரு படம் நினைவுக்கு வந்தது. பெயர் நினைவில் இல்லை. அதிலுள்ள கதாபாத்திரத்தை நாடக அரங்கில் வைத்துக் கொலை செய்வதாக ஏற்பாடாயிருக்கும். அதன்படி இசைக் குழு சிம்பலினை ஒலிக்கும். அதே சமயத்தில் வில்லன் துப்பாக்கி கொண்டு அந்தக் குறிப்பிட்ட கதாபாத்திரத்தைச் சுடுவான். சிம்பலின் ஒலியில் சுடும் சப்தம் பொருந்தியிருப்பதால் யாருக்கும் எந்த சந்தேகமும் வராது என்று இந்த ஏற்பாடு. அந்தப் படத்தில் சிம்பலின் வாசிப்பது ஹிட்ஸ்காக்தான். அதே போல இந்தப் புரட்சி காட்சியிலும் ஏதும் அசம்பாவிதம் ஆகிவிடுமோ என்று கொஞ்சம் பதறித்தான் போனேன். அந்தளவுக்கு தத்ரூபமாக இருந்தது.

தொடர்ந்து இசை நாடக வடிவில் வந்தப் படங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். பூனேவில் கடைசியாண்டு தத்துவம் முடித்த சமயம் எம்மா வாட்ஸன் நடித்து வெளியான Beauty and the Beast வெளியானது. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சமீபத்தில் விமான பயணம் ஒன்றில் The Greatest Showman பார்த்தேன். அருமையான பாடம். கொரோனா பிரச்சனைகள் முடிந்த பின் எப்படியாவது இரண்டு இசை நாடகங்களை பார்த்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறேன். ஒன்று The Hunchback of Notre Dame. எனக்கு மிகவும் பிடித்த கதை. இன்னொன்று The Phantom of Opera. இதை இதுவரை எத்தனை முறை பார்த்திருப்பேன் என்று கணக்கேயில்லை. முக்கியமாக இதன் பாடல்கள் என்றென்றைக்கும் என் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும். படமாக பார்த்தபோது ஏற்பட்ட உணர்வெழுச்சி லண்டனில் ஓர் அரங்கத்தில் நிகழ்த்திய காணொளியை பார்த்தபோதும் ஏற்பட்டது. இதைப்பற்றி எழுத ஆரம்பித்தவுடன் இதன் தொடக்க காட்சியை கூறிவிட வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது. பாரிஸில் ஒரு ஆப்ரா அரங்கத்தின் பொருள்களை ஏலம் விடுவதிலிருந்து நாடகம் தொடங்குகிறது. அந்த அரங்கின் மைய அலங்கார விளக்கை ஏலம் விடும்போது மக்களின் நினைவுகள் பின்நோக்கி நகர்ந்து அங்கு நடந்த அசம்பாவிதத்தை விளக்குவதாக நாடகம் அமைகிறது. படமாக பார்த்தபோது இந்தக் காட்சி பெரும் சிலிர்பை ஏற்படுத்தியது. இசை ஒரு புதிய பரிமாணத்துடன் நம்மை மயக்கிவிடும். நான் சொல்வதை நம்பவில்லை என்றால் இணையத்தில் தேடினால் இந்த முழுநாடகத்தையும் பார்த்துவிட முடியும், பார்த்தால் நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும். In sleep he sang to me என்ற பாடல் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று. அதுவும் கடைசியில் Sing for me என்று Phantom கூற கிறிஸ்டின் பாடும் ஆலாபனைக்கு நிகர் இவ்வுலகில் எதுவுமிருக்கிறதா என்று தெரியவில்லை. எனவே சாவு வரும் முன் ஒருமுறையேனும் The Phantom of Operaவை நேரில் பார்த்துவிட வேண்டும்.

மார்ச் மாதம் கொரோனா ஆரம்பிப்பதற்கு முன் The Fidler of the Roof பார்க்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. இந்த இடத்தில் ம்யூசிக்கல் பார்க்க ஆகும் செலவைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். எந்த ஒரு கதையாக இருந்தாலும் அவ்வளவு நேர்த்தியாக நடிப்பார்கள் என்று சொன்னேன் அல்லவா? அதனால் அதற்கு ஏற்ப விலையும் சற்று உயர்வாகதான் இருக்கும். Les Misérables பார்க்கச் சென்றபோது நான் கொடுத்த தொகையும் அதிகம்தான். ஆனால் அந்த இசை நாடகத்திற்கு முன்பிருந்த வாழ்க்கை வேறு அதன் பிறகான வாழ்க்கை வேறு என்று சொல்லுமளவுக்கு பெரும் மாற்றத்தை என் வாழ்வில் ஏற்படுத்திவிட்டது. அதற்கு செலவு செய்யாமல் காசு சேர்த்து என்னவாகப் போகிறது? Les Misérables மட்டுமல்ல மற்ற இசை நாடகங்களுக்கும் அது பொருந்தும். இன்னொன்றும் நினைவுக்கு வருகிறது. இசை நாடகங்களில் அமெரிக்கர்களால் பெரிதும் விரும்பப்படுவது Hamilton. ஹமில்டன், அதிபர் வாஷிங்டன் அவர்களின் ஆட்சிக்காலத்தில் துணையதிபராக இருந்தவர். இன்று அமெரிக்க பத்து டாலர் பணத்தில் இவரது படம்தான் அச்சிடப்பட்டுள்ளது. இவரது வாழ்வை மையப்படுத்தி எழுதியதுதான் இந்த ஹமில்டன். மற்றவையிலிருந்து எனக்கு ஹமில்டன் மிகவும் பிடிக்க காரணம் இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் Hip Hop இசை. சமீபத்தில் அமெரிக்க நண்பர் ரிக், அவரது வீட்டுக்கு ஹமில்டன் நாடகம் பார்க்க என்னை அழைத்திருந்தார். அப்போது அவர் சொன்ன விஷயம் ஆச்சரியமாக இருந்தது. மற்ற இசை நாடகம் போல் ஹமில்டன் இன்னும் திரைப்படமாக வெளிவரவில்லை. ஆனால் இதை எழுதி இயக்கி நடித்த Lin-Manuel Miranda அப்படியே இதன் அரங்கேற்றத்தை திரையரங்கில் வெளியிட நினைத்திருந்தாராம். ஆனால் கொரோனா எல்லாவற்றையும் கெடுத்துவிட்டது. ஜூலை 4 (அமெரிக்க சுதந்திர தினம்) வேறு நெருங்கிக்கொண்டேயிருந்தது. திடீரென Disney Plus தளத்தில் வெளியிட முடிவெடுத்தார். நாடகத்தின் அத்தனை உரிமங்களையும் தன்னிடமே வைத்துக் கொண்டு அதை ஒளிபரப்ப மட்டுமே Disney க்கு உரிமம் வழங்கியிருக்கிறார். ஜூலை 4 படம் வெளியாகும் நேரத்தை டிஸ்னி நிறுவனம் அறிவித்தது. அமெரிக்காவில் மூன்று வெவ்வேறு நேரங்கள் இருப்பதால் எல்லோரும் அலாரம் வைத்துக்கொண்டு சரியான நேரத்திற்கு எழுந்து பார்த்திருக்கிறார்கள். நான் வசிக்கும் பாஸ்டனில் வெளியான நேரம் அதிகாலை 3 மணி. பலருக்கும் நாடகம் ஓடவில்லை. எல்லோரும் ஒட்டு மொத்தமாக பார்க்க ஆரம்பித்ததால் இணையத்தில் பெரும் தடங்கல் ஏற்பட்டிருக்கிறது. கிட்டதட்ட 75 மில்லியன் டாலர்கள் சம்பாதித்திருக்கிறார்கள். இதுவாது பரவாயில்லை. பாஸ்டனில் சில வருடங்களுக்கு முன் இந்நாடகத்தை பார்க்க ஒரு குடும்பம் 21,000 டாலர்கள் செலவழித்திருக்கிறார்கள். கலை என்பதுதான் இங்கே முக்கியமே அன்றி காசு இல்லை. ஆனால் நிகழ்த்து கலைகள் இன்றும் உயிர்ப்புடன் அதுவும் இவ்வளவு வரவேற்புடன் இருப்பதை பார்க்கையில் ஆனந்தமாக இருக்கிறது.

அனிமேஷனில் வெளியான Moana, Frozen, Coco போன்ற ம்யூசிக்கல் படங்கள் குழந்தைகளுக்கும் பதின்பருவத்தினருக்குமான தயாரிப்புகள். இவை அனைத்தையும் இன்னும் எத்தனை முறை வேண்டுமானாலும் பார்க்கலாம். ஹாரி பாட்டரும் ம்யூசிக்கல் வடிவில் ஒருமுறை பாஸ்டனில் நிகழ்த்தினார்கள். பார்க்க தவறிவிட்டேன். அமெரிக்காவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களைப் பற்றி எழுதும் போது How the Grinch stole the Christmas ம்யூசிக்கல் பற்றி எழுதுகிறேன். அனைவரும் பார்க்க வேண்டிய இன்னொரு முக்கியமான ம்யூசிக்கல் Charlie and the Chocolate factory. ம்யூசிக்கல் என்பது கதையும் இசையும் நடனமும் கலந்த ஒரு அற்புதமான காக்டெயில். குறிப்பிடப்பட்டுள்ள படங்களை பார்த்தால் நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.

சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் நம்முடைய சிலப்பதிகாரத்தை ம்யூசிக்கலாக அமைக்க விருப்பம் தெரிவித்திருந்தார். கண்டிப்பாக வரவேற்கத்தக்கது. ஆனால் காப்பியங்களை ம்யூசிக்கல் செய்வதைவிட, நவீன இலக்கியங்களை ம்யூசிக்கலாக இயற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும். அரு.ராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி’ நாவலை ம்யூசிக்கலாக்கினால் அற்புதமாக இருக்கும்.

 

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சூன்யக்காரிகளின் வேட்டை நிலம் - வளன்
  2. இசைப்பேரழகிகளும் உன்மத்த இசைஞர்களும் – வளன்
  3. கலங்க வைத்த ஹாலிவுட் பேய்ப்படங்கள் -வளன்
  4. ட்ரம்பிற்கு கோயில் கட்டியவர்-வளன்
  5. பாம்புக்கடி பியரும் ஹேலோவீன் திருவிழாவும்-வளன்
  6. "கொஞ்சம் சாப்பாட்டுப் புராணம்" - வளன்
  7. வெறுப்பிற்கு எதிராக ஆனந்த் பட்வர்த்தனின் மூன்று படங்கள் - வளன்
  8. Chick-fil-A : அமெரிக்காவை ஆக்ரமித்திருக்கும் பர்கர் உணவகம்- வளன்
  9. கிசுசிசு எழுதுவது எப்படி?- வளன்
  10. அதிகாரத்தின் முகங்கள்: அமெரிக்காவும் இந்தியாவும்- வளன்
  11. கொரோனா போதையும் பாரதி பாட்டும்- வளன்
  12. சிக்கன் பக்கோடா கேட்ட மனுஷ்- வளன்
  13. பெண்களுடனான உரையாடல்- வளன்
  14. புதிர்வட்டப்பாதையில் சுழலும் பாதாள உலகின் இளவரசி- வளன் ( அமெரிக்கா)
  15. ஹிட்லரின் விஷவாயுக்கூடத்திலிருந்து எழுதிய கடிதம் - வளன்
  16. மூன்று திரைப்படங்கள்: பாசிச இருளினூடே மானுட வெளிச்சம் – வளன்
  17. Twilight Zone: கற்பனைகளின் விளையாட்டு-வளன்
  18. Black Mirror: அதிரவைக்கும் அறிவியல் புனைவுகள்- வளன்
  19. தடை செய்யப்பட்ட சிரிப்பு - வளன்
  20. இயேசு சிரித்தார்: சில அற்புதமான திரைப்படங்கள்- வளன்
  21. வேட்டையாடமுடியாத திமிங்கலம் – வளன் (அமெரிக்காவிலிருந்து)
  22. ஓம்னியா : மனித குல மீட்பிற்கு ஒரு இசைப்போர்- வளன்
  23. மூன்று இசை தேவதைகள் - வளன்
  24. 'ஓ க்ரேஸ் இந்த இரவில் என்னை இறுக்கி அணைத்துக்கொள்' - வளன்