1. மரணம்

வாஷிங் மெஷினில் துவைத்துப் பையில் வைத்திருந்த துணிகளை அயன் பண்ண எடுத்துச் செல்வதற்காக அயன் பண்ணுகிறவருக்கு போன் பண்ணினார் கோபால். சற்று நேரத்தில் அவர் வந்தார் . கோபால் பையைக் கொடுத்து விட்டார். டிவி  பார்த்துக்கொண்டிருந்தார். பயம் ஏற்பட்டது. தொண்டை அரிப்பது போலிருந்தது. வெந்நீர் குடித்தார். அவருடைய தந்தை ராஜகோபால் சர்மா வானத்திலிருந்து அழைப்பது போலிருந்தது. கடைசி சில மாதங்கள்  சர்மா படுத்த படுக்கையாக இருந்தார். நடமாட்டம் இல்லை. கோபால் மிகவும் சிரமப்பட்டார் . ஆள் வைத்துப் பார்க்க வசதியில்லை. இவரே மனைவியின் துணையோடு உடம்பைத் துடைத்து விடுவார். கஞ்சி மாத்திரைகளை வாயில் செலுத்தி விடுவார். மல ஜலம் எடுக்காத தனியாக ஆள் வைத்திருந்தார. கோபாலை அவர்தான் வளர்த்தார், படிக்க வைத்தார். வீடும் கட்டி அதைக் கோபால் வாரிசுப்படி அனுபவித்து வருகிறார்.  ஆனால் இப்போது அவரை நினைக்கையில் அசூயை ஆக இருந்தது . எத்தனை தலைமுறைகளை இந்த குடும்பம் கடந்திருக்கும் . அந்தத் தலைமுறைகளின் பெயர் கூட தெரியவில்லை . அது போல் பின்னால் வரும் தலைமுறைகளுக்கு கோபால் பெயர் கூடத் தெரியாதிருக்கும். அயன்காரர் துணிகளை அயன் பண்ணிக் கொண்டு வந்துவிட்டார். கோபால் பர்சிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார் . வாஷ் பேசின் சென்று கையை  சோப்பு போட்டுக் கழுவினார். துணிப் பையைப் பார்த்தார். தீடீரென்று மனதைப்   பயம் கவ்விக்கொண்டது . மனைவியை அழைத்தார். அயன் பண்ணிய துணிகளைப்  பையுடன் மீண்டும் வாஷ் பேசினில் போடச்  சொன்னார். அய்யன்காரரிடம் தொற்று இருக்குமோ என்றார் .மனைவி திட்டி கொண்டே மீண்டும் வாஷ் பேசினில் போட்டார். அந்தக் காலத்தில் அயன் பண்ணிய சட்டைகளையா  போட்டோம் என்று நினைத்துக் கொண்டார்.

2 ஜெரால்டு நிக்கல்சன்

ஒரு திண்ணையில் உட்கார்ந்திருந்த விசித்திர உடை அணிந்த வெள்ளைக்காரர் சிரித்துக்கொண்டிருந்தார் . வெள்ளைச்சாமி அவரை அணுகி அவரைப்  பற்றி விசாரித்தான் ,நான் சுரேஷ்குமார இந்திரஜித் எழுதியுள்ள  அம்பிகாவும் எட்வர்ட் ஜென்னரும் என்ற புதியநாவலில் ஒன்றுக்கும் உதவாத முக்கியமற்ற சிறு பாத்திரத்தில் வருகிறேன் . என் பெயர் ஜெரால்டு நிக்கல்சன் என்றார்.  நிஜ மனிதர்கள் கதைகளில் கதாபாத்திரங்களாக வருகிறார்கள். கதாபாத்திரங்கள் இந்திய உளவியலில் கடவுளாக மாறுகிறார்கள். உங்கள் மித்தாலஜியை  நான் ஆய்வு செய்து வருகிறேன் . பாண்டஸி எங்கும் விரவிக் கிடக்கிறது. உங்கள் பெயர் என்ன என்றார். அவன் வெள்ளைச்சாமி என்றான். நீங்கள் ஏதாவது சாகசங்கள் செய்யுங்கள். உங்களுக்கு தெய்வக்களை  வந்துவிடும். குதிரையின் மீது உங்களை உட்கார வைத்து வெள்ளை நிறம் அடித்து விடுவார்கள். இது இந்தியனின் தொல்  மனது. நான் உயிரோடு இருந்தால் நானும் வந்து உங்களை வணங்குவேன். மேலும் உங்கள் பெயரிலேயே சாமி இருக்கிறது . உங்களை வணங்குகிறேன் என்றார். அவன் மிரட்சியோடு நின்றான். சிரிப்பது ஜெரால்டு நிக்கல்சனின் இயல்பு . அவர் சிரித்துக் கொண்டிருந்தார்.