சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் -17 &18

17) டான்சர்

நான் அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு விமானத்தில்  திரும்பிக் கொண்டிருந்தேன். விமானம் இன்னும் கிளம்பவில்லை. நான் என் இருக்கையில் அமர்ந்து விட்டேன். கடைசி நேரத்தில் ஒரு பெண் வந்து  என் பக்கத்துக்கு இருக்கையில் அமர்ந்தாள். எங்கோ பார்த்த மாதிரி இருந்தது . நினைவுக்கு வரவில்லை . விமானம் கிளம்பியது. நான் பேச்சுக் கொடுத்தேன். அவர் ஒரு பெரிய கம்பெனியில் தணிக்கைத்  துறையில் முக்கிய அதிகாரியாக இருப்பதாகத் தெரிவித்தார் , அவர் என்னைப்  பற்றி  விசாரித்தார. நான் ரியல் எஸ்டேட் மற்றும் அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கட்டும் தொழில் செய்வதாகத் தெரிவித்தேன். சென்னையில் சிவாஜி கணேசனைப் பார்க்க இருப்பதாகவும் வேறு சில சொந்த வேலைகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் , ‘ நீங்கள் சினிமாவுடன் தொடர்புடையவரா ‘ என்று விசாரித்தேன். ‘ஆம் நானொரு நடிகையாக இருந்தேன் . என் பெயர் சுந்தரவல்லி ‘ என்றார். எனக்கு அப்போதுதான் அவர்  நடித்த சினிமாக்கள் ; அவர் தோற்றங்கள் நினைவுக்கு வந்தன, நான் உங்கள் படங்களைப் பார்த்திருக்கிறேன் .நல்ல டான்சர்’  என்றேன. ‘ நல்ல நடிகையில்லையா ‘ என்றார், ‘ அப்படி அர்த்தமில்லை, டான்சில் நீங்கள் எக்ஸ்பெர்ட் ‘ என்றேன். அவர் சிரித்துக் கொண்டார். ‘ அவர் டான்ஸ் ஆடிய பல பாடல்களை நினைவு கூர்ந்தேன் . அவர் மகிழ்ச்சி அடைந்தார்.

இடையில் விமானம் மாற வேண்டிய இடம் வந்தது. இருக்கையிலிருந்து எழுந்து வாசலை நோக்கிநடந்தோம். அப்போதுதான் நான் கவனித்தேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு ஒரு கால் அகற்றப்பட்டு செயற்கைக் கால் பொருத்தப்பட்டிருந்தது. அதற்குப் பின் அவரிடம் நான்  டான்ஸ் பற்றிப் பேசவில்லை.

18 ) நினைவுக் கிடங்கு

எனக்கு வயது 72, என் நினைவுக் கிடங்கில் ஏகப்பட்ட காட்சிகள் , உணர்வுகள் கிடக்கின்றன. எது மேலெழுந்து என்னை வருத்தும் அல்லது குழப்பும் என்று என்னால் கணிக்க இயலாது. அலுவலகம் சம்பந்தப்பட்ட காட்சிகள், குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகள் தனிப்பட்ட வாழ்வு சம்பந்தப்பட்ட காட்சிகள்.- இவற்றில் ஏதாவது சில காட்சிகள் வரும். ஆனால்  ஒரு காட்சி மட்டும்  என்னையறியாமல் அடிக்கடி வரும். எனக்கு அவமானம் தரும் அல்பமான காட்சி அது.  நான் தினமும் ரிக்சாவில் செல்லும் ஒரு மாணவியைப் பார்ப்பேன். நான் அவளைப்  பார்க்க நிற்பது  அவளுக்குத் தெரியும். நான் அப்போது கல்லூரி மாணவன். அவளுக்கு சிரித்த முகம். என்னைப் பார்ப்பாள். சங்கோஜம் தரும் அக்காட்சியை நான் எவ்வளவோ தவிர்க்க முயன்றும் என்னால் முடியவில்லை. அக்காட்சி என்னைப்  பரிகசிப்பது போல் தோன்றினாலும் நான் அதைப் பொறுத்துக் கொண்டுதான் இருக்கிறேன்  என் நினைவுக் கிடங்கின் மேலே அக்காட்சி இருக்கிறது போலும். அக்காட்சி  என் நினைவுக் கிடங்கிலிருந்து அகற்றப்படும் நாளை நான் கொண்டாடுவேன் என்று உறுதி எடுத்திருக்கிறேன். இது ஒரு புறம்  இருக்கட்டும். இப்போது என் நினைவில் மேலெழுந்த காட்சியைச் சொல்கிறேன். அக்ரஹாரத்தில் இருக்கும் பழமையான பிராமண வீடு. சுவர் உளுத்திருக்கிறது. மேலே உத்திரமும் லேசாக அரிக்கப்பட்டிருக்கிறது. சின்ன வீடு . ஒரு பெரியவரும் ஒரு இளம் பெண்ணும் வசிக்கிறார்கள். சுவரில் சினிமா நடிகை பத்மினியின் கலர் படம் ஒட்டப்பட்டிருக்கிறது. நினைவுக் கிடங்கிலிருந்து வந்த இந்தக் காட்சியை எங்கே நான் கண்டேன் என்பதைப்  பல முறை முயற்சி  செய்தும் அறியமுடியவில்லை.

அந்தக் காட்சி என்னைத் துன்புறுத்துவதாக உணர்ந்தேன். இந்தக் காட்சியை நான் எப்போது எங்கே  கண்டேன் என்பதை நான் அறியாமல் என்னால் நிம்மதியாக இருக்க முடியாது.. பெரிய போராட்டமாக இருந்தது. அந்த இளம் பெண்ணின் முகம்  மங்கலாகத்  தெரிந்தது . கூர்மையான நாசி. மெல்லிய உதடுகள். நான் ஒரு இழிந்த மனிதன். நான் சுமக்கும் பாவ மூட்டைகளில் இதுவும் ஒரு மூட்டை எனக்கு நற் கதியுடன் மரணமில்லை என்பதை உணர்ந்தேன்.