சுரேஷ்குமார இந்திரஜித்தின் இரண்டு குறுங்கதைகள் 

41 )   வசியக்  குரல்

என் தம்பிக்குப் பல பிரச்சினைகள் இருந்தன. மனைவியுடன் பிரச்சினை.; மருமகனுடன் பிரச்சினை ; மகனுடன் பிரச்சினை ; அலுவலகத்தில் பிரச்சினை ; பக்கத்துக்கு வீட்டுக்காரருடன் பிரச்சினை ; இப்படிப் பல பிரச்சினைகள் அவனுக்கு இருந்தது. மன நல   மருத்துவரிடம் செல்லும்படி நான் கூறினேன். அவன் ஆன்மீக ரீதியான மனத் தீர்வுகளை விரும்பினான். கல்கி பகவான்,,நித்தியானந்த ஸ்வாமிகள், ஜக்கி வாசுதேவ் , பங்காரு அடிகளார் என்று ஒரு சுற்றுப் போய்  விட்டு மன நிம்மதி கிடைக்கவில்லை என்று வந்து விட்டான் . “அவர்கள் தங்களையே கடவுளாக நினைத்துக் கொள்கிறார்கள்; மேலும் ஆடம்பரமாக இருக்கிறார்கள்.சடங்குகளை நம்புகிறார்கள் ” என்றான். .இப்போது புதிதாக ஒரு ஆன்மீக சாமியாரைக் கண்டுபிடித்துவிட்டான் . அவர் பெயர் மௌனகுரு என்றான். பேசுவாரா என்று கேட்டதற்குப் பேசுவார் என்றான். ” மேலும் இவர் பிரம்மச்சாரி. மற்றவர்களைப்  போல் அல்ல. ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குப் போக வேண்டும். அந்த நேரத்தில் அவர்  பேசுவார். நம் மனம் தெளிவடையும் , அமைதி கிடைக்கும். அமைதி கிடைத்தால் பிரச்சினைகள் மறையும் அல்லது அந்தப் பிரச்சினைகளைக் கையாளும் திறன் கிடைக்கும் ”  என்றான். நாங்கள் இருவரும்   மௌனகுரு இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றோம்.

மரங்கள், செடி, கொடிகள் சூழ்ந்த  ரம்யமான இடம்.. தியான மண்டபத்தை நோக்கிச் சென்றோம். மௌனகுரு வரும் நேரம் என்றார்கள். உள்ளே சென்று உட்கார்ந்தோம். 20 பேருக்குள்  இருந்தார்கள். குளிர் சாதனம் செய்யப்பட்ட அறை . ஒரு சிறு சத்தம் கூட இல்லாத அமைப்பில் அறை இருந்தது. நாங்கள் அனைவரும் தரையில் அமர்ந்திருந்தோம். மௌனகுரு வந்து அவர் இருக்கையில் அமர்ந்தார். நிசப்தம் என்னைத் தொந்திரவு செய்தது. நான் தனியாக இருக்கும்போது கூட ரேடியோ அல்லது டி வி சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும்.அவர் பேச ஆரம்பித்தார். ” நான் என்பது என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள் ; அகந்தை மனதுக்கு எதிரி; வாழ்க்கை பெருங்கடல் போன்றது. அதில் கப்பல் போல நாம் செல்லவேண்டும். ” என்று ஆரம்பித்து தத்துவார்த்தமாகப் பேசினார். எனக்கு அவர் பேசியதில் எதுவும் புதியதாகத் தெரியவில்லை. ஆனால் நிசப்தத்தில் ஒலித்த அந்தக் குரலில்  வசியம் உள்ளதாக உணர்ந்தேன்.

வெளியே வந்தோம். தம்பியைப் பார்த்தேன். ” ஒரே விஷயத்தை ஒவ்வொருவரும் அவர்கள் மொழியில் சொல்கிறார்கள்; மனச் சாந்தி   கிடைக்கவில்லை ” என்றான். ஏமாற்றத்துடன் இருந்த அவன்  அடுத்து தேர்வு செய்த இடத்திற்குப் போகலாம் என்றான். நாங்கள் அந்த இடத்தைவிட்டு  அகன்றோம்.

42) உயிர் கொடுப்பவர்கள்

அவன் தேர்வு செய்திருந்த இடத்திற்குச் சென்றோம். பழைய இடம் போல ரம்யமான சூழ்நிலை. ஆனால் அமைப்பு வேறுபட்டு இருந்தது. குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். ஒரு வெள்ளைக்கார பெண் அவர்களுடன் இருந்தாள் . சிரித்த முகத்துடன் இருந்தாள். எங்களை பார்த்ததும் ” தன்  பெயர் இந்துமதி ” என்று  அறிமுகம் செய்து கொண்டாள் ” அய்யாவை பார்க்க வந்தீர்களா ‘ என்று கேட்டாள் . நன்றாகத்  தமிழ் பேசினாள்.குழந்தைகளைப்பற்றி விசாரித்தோம். இவர்கள் அனைவரும் அனாதைக்  குழந்தைகள் என்றும் இவர்களுக்கு உணவு உடை தங்குமிடம் கொடுத்து கவனித்து வருவதாகவும்  கூறினாள். அவளை பற்றிக் கேட்டதற்கு “தொண்டு ” செய்வதாகக் கூறினாள் அய்யாவிடம் அழைத்துச் சென்றாள்.

அய்யா தூய வெள்ளை வேட்டி அணிந்திருந்தார். தூய வெள்ளைத்  துண்டைப் போர்த்தியிருந்தார்.அவர் முன்னால்  அமர்ந்தோம். முதியோர்களையும்  வைத்துப் பராமரிப்பதாகக் கூறினார். தியானமண்டபம் இருப்பதாகவும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை பத்து மணிக்கு சொற்பொழிவு செய்வதாகவும் கூறி எங்களை வரச்  சொன்னார். அடிக்கடி ”  ஈஸ்வரோ ரக்சதோ “என்று தன்னையறியாமல் சொல்லிக்கொண்டார். ” உணவு  கொடுத்தோரே உயிர் கொடுத்தோர் ”  என்றார். பிறகு நடராஜரைப் பார்ப்போம் என்று எங்களை கூட்டிச் சென்றார். நடராஜர் சிலை முன்பாகச்  சற்று நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்தோம். பிறகு அவர் எதோ சில சமஸ்கிரித ஸ்லோகங்களை  சரளமாக அதற்கான உச்சரிப்புடன் கூறினார்.. சற்று நேரத்தில் நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம்

” நம் அப்பாவிற்கு வேலை இல்லாத காலம். .நாம் சிறு பையன்கள். காலையில் நீராகாரம்தான் உணவு. அப்பா அரிசி கொண்டு வந்தால்தான் மதியச்  சாப்பாடு. அப்பாவை எதிர்பார்த்து வாசலில் நாம் அம்மாவுடன் காத்திருப்போம். தூரத்தில் தெரு ஆரம்பத்தில் தோளில் அரிசிப் பையை வைத்துக்கொண்டு அப்பா வருவது தெரியும். நானும் நீயும் கத்திக்கொண்டே  குதிப்போம். அம்மா சிரிப்பாள். உனக்கு நினைவிருக்கிறதா தம்பி ” என்று கேட்டேன். தம்பி கண்களைத் துடைத்துக் கொண்டான். ” நான் எதையும் சமாளிப்பேன் ” என்றான். நான் அவனை முதுகில் தட்டிக்கொடுத்தேன்.