சுரேஷ்குமார இந்திரஜித் குறுங்கதைகள் 49 & 50

49 )தனிமை

நான் என் நண்பரின் வீட்டுக்குச் சென்றேன். வீட்டில் அவர் மட்டும் தனியாக இருக்கிறார். மனைவி ஆறு மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். இரண்டு மகன்களும் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசிக்கிறார்கள். தெருவில் ஒரு வீட்டிலிருந்து உணவு கொடுத்து விடுவார்கள். மாதா மாதம்  பணம் கொடுத்துவிடுகிறார். தனிமையில்தான் அவர் காலம் கழிகிறது. நீண்ட நாட்களுக்குப்பின் அவரைச்  சந்திக்கிறேன். உள்ளே ஏதோ பாட்டுச்   சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. அழைப்பு மணியை அடித்தேன். கதவு திறந்தது. எனக்கு அவரை அடையாளம் காண சிரமமாக இருந்தது. தாடியும் மீசையும் அடர்ந்த தலைமுடியும் இருந்தது. அவர் என்னை உள்ளே அழைத்தார். அவருடைய கோலத்தைப்பற்றி நான் ஏதும்   கேட்கவில்லை. பொதுவாக நலம் விசாரித்தேன். வீட்டைவிட்டு வெளியே  சென்று   இருபது நாட்கள் இருக்கும் என்றார். பொதுவாக உடல் நலம் நன்றாக இருப்பதாகத் தெரிவித்தார். வெளிநாட்டில் மகன்களுடன் இருப்பதில் விருப்பமில்லை என்றார். பழைய சினிமாப பாட்டுக்கள் கேட்டுக்கொண்டிருப்பேன் என்றார். திடீரென்று எழுந்து நின்று ‘ அவ இருக்கா   என்னை காப்பாத்த ‘ என்று வணங்கினார். சுவரில் அவருடைய மனைவியின் படம் பெரிதாக மாட்டப்பட்டு மாலை போடப்பட்டிருந்தது. ‘ அவ தெய்வமாயிட்டா அவதான் என்னை வழி நடத்தறா ‘ என்றார். ‘ நீங்கள் தனிமையில் இருக்கக் கூடாது. வீட்டைவிட்டு வெளியே  வரவேண்டும்.இல்லாவிட்டால் மன அழுத்தம் ஏற்படும் ‘ என்றேன். ‘மனமாவது அழுத்தமாவது.

எல்லாத்தையும் அவ பாத்துக்குவா ‘ என்றார்.

எனக்கு வருத்தமாக இருந்தது. இப்போதே அவர் கிட்டத்தட்ட மனநோயாளி போல இருக்கிறார். இன்னும் நாட்கள் சென்றால் எப்படி ஆவார் என்றே அனுமானிக்க முடியவில்லை. நான் பழங்கள் வாங்கிச் சென்றிருந்தேன். அவற்றை அவரிடம் கொடுத்தேன். அவற்றை அவர் வாங்கி அவருடைய மனைவி படத்தின் முன் உள்ள மேஜையில் வைத்துப் படையல் செய்து வணங்கினார் . ‘ அவ வெளியே  போகச் சொன்னால்தான் வெளியே  போவேன். உத்தரவு வாங்கணும்ல ‘ என்றார். ‘தனிமை ஒரு மனிதனை எப்படியெல்லாம் மனப்பிறழ்வு செய்துவிடுகிறது” என்று யோசித்துக்கொண்டே அவரிடம் விடை பெற்றுக்கொண்டேன். அவர் ‘ அடிக்கடி வாங்க ‘ என்றார். நான் தலையை ஆட்டிவிட்டு வெளியே வந்தேன். அவருடைய நிலையை நினைக்கும்போது எனக்கு பரிதாபம் ஏற்பட்டது.

50 ) அறைக்குள் வந்த இளம்பெண்

நானும் என்னைக்  காட்டிலும்  குறைந்த வயதுடைய நண்பரும்  மது அருந்திக்கொண்டிருந்தோம். ஒரு வெற்றிகரமான படத்தில் நடித்து வாய்ப்பில்லாமல் இருக்கும் அந்தக் குட்டை நடிகையைத்தான் அழகி என்றும் கிளர்ச்சி ஏற்படுத்தக் கூடியவள் என்றும் அவர் பேசிக்கொண்டிருந்தார். நான் சினிமாவுடன் தொடர்பு உள்ளவன். சில பெரிய இயக்குனர்களை எனக்குத் தெரியும். இடையில் சிலர் வந்து போனாலும் கருப்பு வெள்ளைப் பட சரோஜாதேவிதான் எனக்கு அழகாகத் தெரிகிறார். இதை நான் சொன்னால் என்னை வேற்றுக் கிரகவாசி என்று நினைப்பார் என்று பேசாமலிருந்தேன். அழைப்பு மணி அடிக்கும் சத்தம் கேட்டது. கதவைத்  திறந்தேன். ஒரு இளம்பெண்  நின்றுகொண்டிருந்தார். உள்ளே வரச்  சொன்னேன். இந்திக்காரி மாதிரி இருந்தாள். இந்திக்காரி என்றாலே அழகு, சிகப்பு  நிறம் என்றாகிவிட்டது. தமிழ் நன்றாககப்  பேசினாள். அவள் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள். என் மூலமாக பட வாய்ப்பு வேண்டும் என்றாள். நாங்கள் குடிப்பதை நிறுத்தியிருந்தோம். அதைக் கவனித்த அவள் நீங்கள் குடித்துக்கொண்டே பேசலாம் என்றாள். நாங்கள் குடிப்பதைத் தொடர்ந்தோம்.

ஏற்கனவே இந்திக்காரி மாதிரி தோன்றியிருந்த அவள் இப்போது ஆந்திராக்காரி மாதிரி தோன்றினாள். பிறகு மலையாளக்காரி மாதிரி தோன்றினாள். நண்பர் ‘ நீங்கள் நன்றாகத் தமிழ் மொழி பேசுகிறீர்கள் .உங்கள் தாய் மொழி என்ன ‘ என்று கேட்டார். ‘ என் தாய் மொழி தெலுங்கு ‘ என்றாள்.’ நல்ல  வேளை தமிழ் இல்லை ‘ என்றார் நண்பர். அவள் சிரித்தாள் .’ சற்றுநேரத்தில் வந்துவிடுகிறேன் ‘ என்று சொல்லி வெளியே சென்றாள். நாங்கள் அவள் வருகைக்காக குடித்துக்கொண்டே காத்திருந்தோம். அவள் வரவே இல்லை. ‘ ஒரு பெண் வந்து பேசிவிட்டுச் சென்றது உண்மையா மாயத் தோற்றமா’ என்று நண்பரைக் கேட்டேன். ‘ உண்மை என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆனால் அவள் திரும்ப வரவில்லையே எனவே உண்மை என்பது சந்தேகத்திற்குரியது ‘ என்றார் நண்பர். நாங்கள் இப்படிப்  போதையில் குழப்பிக்கொண்டிருக்க அவள் உள்ளே வந்து ‘ சாரி ‘ என்றாள். ‘ நீங்க திரும்ப  வந்ததின் மூலம் இந்த நிகழ்வு  புதிர்த்    தன்மையை இழந்துவிட்டது ‘என்றேன். நண்பரும் அதை ஆமோதித்தார். ‘ சற்று நேரத்தில் வந்துவிடுகிறேன் ‘ என்று சொல்லி தயவுசெய்து நீங்கள் திரும்பவும்  வெளியே சென்று விடுங்கள்.மீண்டும் தயவுசெய்து வராதீர்கள் ‘ என்றேன். அவளும் அவ்வாறே செய்தாள். பிறகுதான் நாங்கள் நிலைக்கு வந்தோம்.