சிங்கிஸ் ஐத்மாத்வ் என்கிற கிர்கீசிய படைப்பாளியின் படைப்புகளில் எனக்கு எப்போதும் மயக்கமுண்டு. மிக சிறிய நுணுக்கமான சிற்பம் போல, மிகச்சிறிய நுட்பமான புதினம் தனக்கு வேண்டிய உலகின் ஆகச்சிறந்த மதுவை தானே தயாரித்து கொள்ளும் ஒரு நுட்பமான மாய கலைஞன் போல காதலை அதை நிகழ்த்தும் காதலரை தன் எழுத்திலே வடித்து நடமாடவிட்ட பெருங்கலைஞன். அவரது ‘குல்சாரி’யை உங்களுக்குs சொல்ல ஆசைபடுகிறேன் அதற்க்கு முன்பாக ஜமீலாவை பேசுவோம்.

ருசியாவின் போர் இலக்கியங்கள்  போலவே போர்காலத்தில் கிராமங்களின் நெருக்கடியான வாழ்வு, ராணுவத்துக்கு போன ஆண்களின் வரவுக்காக ஏங்கி தவிக்கும் மனைவிகள், மகன்களை எதிர்பார்த்து காத்திருக்கும் தாய்களின் துயரம். அதைவிட ஆண்களற்ற வெறும் கிழவர்களும், பையன்களும் மட்டுமே மிஞ்சி நின்ற நிலத்தில் அவர்களின் கடும் உழைப்பை கொண்டு தான் படையினர் பாஸிஸ்டுகளை உலகிலிருந்தே அடித்து விரட்ட முடிந்தது.  அந்த பெண்கள்தான் தொழிற்சாலைகளில் துப்பாக்கி குண்டுகளை இடையறாமல் தயாரித்தார்கள். அவற்றை பட்டைகளில் வரிசைபடுத்தி பெட்டிகளுக்குள் அடைத்துப் போர்முனைக்கு அனுப்பினார்கள், பெண்கள்தான் வயல்களில் கிழவர்களுடன்  சேர்ந்து விதைத்தார்கள் அதை அறுவடை செய்து ரயில் நிலைய கிடங்குகளுக்கு கொண்டு சென்றார்கள். அவர்கள் அடைந்த போர்கால பெருந்துயரை  சிங்கிஸ் ஐத்மாத்வ் தன் படைப்புகளில் மிக இனிமையாக இசைமிக்க காதலோடு சொல்கிறார்.

ஜமீலாவில் 103 பக்கம் கொண்ட குறு நாவல் ஆனால் மூச்சடக்கி நீருக்கடியில் ஒரு வண்ண மீனுடன் சில மணி நேரம் வசித்த காதலின் திணறலையும், பேரின்பத்தையும் வாசிப்பில் உணர முடியும். மகிழ்ச்சியான வாழ்வில் போர் உண்டாக்குகிற நம்பிக்கையற்ற பெருந்துயரம், அந்த துயரத்தை அவர்கள் கடக்க காலம் செய்யும் கண்ணாமூச்சியென சின்னஞ் சிறு குறு நாவல் ஜமீலா. அடிப்படையில் இது இரண்டாம் உலகப்போர் காலத்தின் இலக்கியம், போரில் சிக்கிய மக்களின் வாழ்வை ஒரு பெண்ணின் மனதை நுட்பமாகப் பேசுகிற காதல் இலக்கியம்.

கூட்டுப்பண்ணையின் வேலை குழு தலைவன் இரண்டாம் உலகப்போரிலே காலை இழந்து கூட்டுப்பண்ணையை நிர்வகிக்க வந்தவனான ஒரோஸ்மாத்  ராணுவத்துக்கு சண்டையிடப்போனவனின்  இளம் மனைவியான ஜமீலாவை அறுவடையான தானியங்களை வயல்களில் இருந்து ரயில் நிலையத்துக்கு குதிரை வண்டியில் ஏற்றி செல்லும் வேலைக்கு அழைக்க வந்திருக்கிறான்,  ஜமிலாவின் மாமியார் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாள்

“ஒரு பெண்ணை வண்டியோட்ட அழைக்கிறாயே உனக்கு வெட்கமாக இல்லையா” என்று வேலை குழு தலைவனை பார்த்து ஜமீலாவின் மாமியார் கத்துகிறாள்.

அந்த நேரம் ஜமீலாவால் அன்புடன் கிச்சினே பாலா (சின்னப் பையன்) என்றழைக்கும் போர்முனைக்கு சென்றுவிட்ட அவளது கணவனின் தம்பி பதினைந்து வயது சையத் வருகிறான்….. குழு தலைவன் ஜமிலாவின் மாமியாருக்கு ஒரு ஆலோசனை சொல்கிறான்.  ’’பயப்படாதீங்க  இந்த பையன் இரட்டை குதிரை பூட்டிய வண்டியை ஜமீலாவுக்கு தர விரும்புகிறேன் அவளுடன் சேர்ந்து சையத்தும் வேலை செய்யட்டும். பாதுகாப்பாக இருக்கும். கூடவே போர் முனையிலிருந்து திரும்பி வந்துள்ள சாதுவான இளைஞன் தானியாரையும் இவர்களுடன் அனுப்புகிறேன்’’ என்கிற ஏற்பாட்டின் அனுமதி பெறுகிறான்.

ஜமீலாவிற்கும் அவள் கணவனுக்குமான இல்லற வாழ்க்கை நான்கே மாதங்கள்தான். அதற்குள் போர் வந்து அவர்களை பிரித்துவிட்டது.  ஒரு வசந்த விழாவின் போது குதிரைசவாரிப் போட்டியில் ஜமீலாவை முந்த முடியாத முடியாத கோபத்தில் அவளை கடத்தி வந்து தன் மனைவியாக்கிக்கொண்டவன்  போர் முனையிலிருந்து கடிதம் எழுதும் போது அவளைப் பற்றி தனி அக்கறையோடு எழுதாதவன்.

இந்த நிலையில் கணவனை பிரிந்துவிட்ட துயரத்தை மீறி ஜமீலா வழக்கமான மருமகளைப்போல இல்லாமல் சுதந்திரமானவளாக, அதே நேரம் மிக வெளிப்படையானவளாக அவளது கதாபாத்திரம் வடிக்கப்பட்டிருக்கிறது.

ருஷ்ய இலக்கியவாதிகளில் காதல் சொட்டும் படைப்புகளை தந்தவர் சிங்கிஸ் ஐத்மாத்தவ் என்கிற பேருக்கேற்ப இந்த புதினமும் காதலின் இன்னிசையால் தீட்டப்பட்டதே. பேரழகும் குழந்தை தனமும் வாயாடியுமான தனது அண்ணியை  போரிலிருந்து திரும்பி வரும் இளம் ஜிகித்களின் மயங்கிய பார்வையிலிருந்து காப்பாற்றும் அல்லது அவர்களை பொறாமையுடன்  முறைக்கும் கிச்சினே பாலாவாக அவளோடு ஓடிபிடித்து விளையாடும் மச்சினனாக சையது கதாபாத்திரம் அவளது அழகில் மயங்கி அவளை கவர விரும்பும் ஆண்களிடமிருந்து அவளைக் காப்பாற்ற சையத் போராடுகிறதை பார்த்து ஜமீலாவுக்கு எரிச்சலும் ,சிரிப்புமாக வரும். ஒரு இடத்தில் அவள் இப்படி நினைத்துக்கொள்வதாக சிங்கிஸ் எழுதுகிறார்.

“அட மட்டிப்பயலே! நான் மட்டும் விரும்பிவிட்டால் அப்புறம் என்னை கட்டுபடுத்த யாரால் முடியும்?  குடும்பம் முழுதுமே என்னை கண்காணித்தாலும் நான் விரும்பியவற்றை என்னால் செய்ய முடியும்!”

கிராமங்களில் எல்லா ஆண்களும் போர்முனைக்கு போய்விட்டதால் ஒரு சில ஆண்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் கிராமத்தில் தனிமையின் துன்பத்திலிருக்கும் பெண்களுக்கெதிரான ஆணாதிக்க மனோபாவம் கொஞ்சம் தூக்கலாகவே கிராமத்தில் நிலவுகிறது.

இந்த புதினத்தின் எழுத்து மிக வசீகரமானவை  என் இருபதுகளில் வாசித்து மலைத்த புத்தகம் இப்போது வாசிக்கும் போதும் இதயம் கரைந்து நரம்புகள் சிலிர்க்கிறது. ஒரிடத்தில்  சையத் இல்லாத சமயத்தில் ஒருவன் வயல்காட்டில் ஜமீலாவை பிடித்து தன் ஆசைக்கு இணங்க சொல்வான் .ஜமீலா அவனை வலுவாகப்பிடித்து உதறித்தள்ளிவிடுவாள்.அந்த இடத்தில் புதின ஆசிரியர் பயன்படுத்தும் வார்த்தையை பாருங்கள்.

ஜமீலாவால் உதறித் தள்ளப்பட்டவன்  புல் தரையில் மல்லாக்க கிடந்தபடி சொல்வான்

“உறியிலே உயரத் தொங்கும் மாமிசம் கவிச்சியடிக்கிறது என்கிறதாம் பூனை! உனக்கும் என் மேல் ஆசை இருக்கிறது ஏன் வீண் பிடிவாதம்” என்பான்.

அதற்கு ஜமீலா “நூறு ஆண்டுகள் படை வீரனின் மனைவியாக தனித்து வாழ்ந்தாலும் உன் போன்றவர்கள் முகத்தில் காறி துப்பக்கூட ஆசைப்படமாட்டேன் கழிசடை பயலே” என்பாள். இப்படியா நகரும் கதையில் கஸாக் ஸ்தெப்பி புல் வெளியில் இருவரும் தானியங்கள் நிறைந்த வண்டியை ஓட்டிச் செல்கிறார்கள்.  இந்த இடங்களை வாசிக்கும் போது அந்த நிலத்தின் சூழலை ஆசிரியர் விவரிக்கும் அழகில் வாசகன் மயங்கி திளைப்பதை தவிர வேறு வாய்ப்பே இல்லை. அதே நேரம் பல துயரங்களுக்கு மத்தியில் ஒரு பெண் எப்படி சிரிக்கிறாள், தனது மன காயங்களை எப்படி? ஆற்றிக்கொள்கிறாள் என்பதை மிக அற்புதமாக சாறுபிழிந்து தருகிற புதினமிது.

போரில் விளைந்த காயத்தால் இடது கால் ஊனமுற்று தன் சொந்த கிராமத்துக்கு திரும்பிய அனாதையான தானியாரும், ஜமீலாவும் என்பதாக .இங்கிருந்து புதினம் பனியில் சறுக்குவது போல் வழுக்கி செல்லும் மாய தன்மையை பெறுகிறது. அவர்களுடன்  எப்போதும் உர்ரென இருக்கும் தானியாரும் அவர்களுடன் தானியத்தை  ரயில் நிலையத்துக்கு ஏற்றி செல்கிறான். அவன் யாருடனும் பேசாதவன் எப்போதாவது ஜமீலாவை முறைத்து பார்ப்பதோடு சரி. அவளும் அதை கண்டும் காணாதவள் போல இருந்துவிடுவாள். தானியார் யாருடனும் பேசுவதில்லை. மிக அமைதியாக  ஆனால் தனக்கிட்ட வேலைகளை மட்டும் கச்சிதமாக முடிக்கிறவன். தானியத்தை ரயில் நிலையத்துக்கு ஏற்றி செல்லும் போது கூட ஜமீலாவுடனும், சையத்துடனும்கூட அவன் பேசுவதில்லை, கடினமான வேலையைகூட அவன் ஒருவனே செய்கிறான். அவனது கலகலப்பற்ற தன்மை பையன்களுக்கு அவன் மீது வெறுப்பேற்படுகிறது . ஏற்கனவே அனாதையான அவன் இன்னமும் தன்னை அனாதையாகவே வைத்துக்கொண்டு யாரிடமும் பழகாமல் இறுக்கமாக இருக்கிறான். தானியார் வேலை முடிந்ததும் படுபயங்கர ஓசையுடன் பாய்ந்தோடும்ஆபத்தான ஆற்றங்கரையில் இரவு தங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறான். என்பது சையத்தை மனம் கலங்க வைக்கிறது.  இந்த சூழலில் தனியருக்கும் ஜமீலாவுக்குமிடையில் ஒரு அன்பின் செடி முளைப்பதை சயத்தால் உணர முடிகிறது.

தானியாரை சீண்டி ஜமீலா தான் பேச தூண்டுகிறாள். பதிலாக புன்னகையற்ற ஓரிரு வார்த்தைகளோடு சரி….

அவர்கள் மலையிலிருந்து  தானியங்கள் நிறைந்த பார வண்டிகளை ஓட்டிச்செல்கிறார்கள்  அங்கே கிடங்கின் வாயிலில் ஒவ்வொரு தானியக்கதிரும் போர்முனைக்கே என்று எழுதப்பட்டிருக்கிறது. உம்மனா மூஞ்சி தானியாரை சீண்ட அவர்கள் செய்த குறும்பால் அவன் கனமான தானிய மூட்டையை தனியொருவனாக தன் பாதிக்கப்பட்ட காலோடு தூக்க முடியாமல் தூக்கிச்செல்லும் சூழல் உண்டாக அது குறித்து அவன் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் வழக்கம் போல இருக்க ஜமீலா அதற்காக வருந்துகிறாள். இந்த இடம் ஹெமிங்வேயின் கடலும் கிழவனும்  எனக்கு நினைவுக்கு வந்தது. மனிதன் நினைத்துவிட்டால் அவனை எதாலும் தோற்கடிக்க முடியாது என்பதை தானியார் நிருபித்து காட்டுகிற பகுதி. சாரத்தில் மூட்டையை தூக்க முடியாமல் தூக்கிச் செல்லும் அத்தியாயத்தை வாசிக்கிறவர்களால் உணரமுடியும். காதலின் கண்ணிகள் எங்கெங்கே மனிதரில் முளைத்தெழுகிறதென்று யாருக்கு தெரியும், எவ்வளவு இறுக்கமான பெண்ணோ ஆணோ வாழ்வில் எதோ ஓரு சந்தர்ப்பத்தில் அதை காதலின் இனிய பாதையை கடந்தே தீருவார்கள். அப்படிட்தான்  ஜமீலாவுக்கும் , தானியாருக்கும் நிகழ்கிறது.

போர் முனையிலிருந்து கணவன் அனுப்புகிற கடிதம் அதை ஜமீலா ஆவலாக வாங்கிப்பார்க்கிற காட்சி ஊரையே விசாரித்து எழுதுகிறவன் அவளை பற்றி ஒரு வரி மட்டும் எழுதுகிறான். அதனால் அவளுக்குள் எழும் ஏக்கம், வெறுமையென  எல்லாவற்றையும் இந்த தானியாரும் கவனிக்கிறான்.   கூட்டுப்பண்ணை வயலில் வேலை செய்ய போர் முனையில் காயமுற்று நலமடைந்து திரும்பிய இளம் ஜிகித்துகளுடன் வயல் வேலை முடிந்த பொழுதில் ஆற்றங்கரையில் ஜமீலாவின் குதுகலமான ஆட்டம், கொண்டாட்டம் ஜமீலாவை கட்டி தழுவி முத்தமிட துடிக்கும் ஜிகித்துக்கள் அதன் விளைவாக சையத்துக்கு ஏற்படும் பொறாமை, அதனால் தானியருக்குண்டாகும் மன புகைச்சல்,

அதை சையத்தும் உணருகிறான் ஆனால் தன் அண்ணிக்கும் மாற்றான் ஒருவனுக்கும் இடையில் அங்கு ஓளிரும் இயல்பான ஒன்றை அவன் உணர்வதால் வெறும் பார்வையாளனாக இருந்துவிடுகிறான். தானியத்தை ரயில் நிலைய கிடங்கில் இறக்கிவிட்டு குதிரை பூட்டிய காலி வண்டியில் அழகிய இரவில் கிராமத்துக்கு திரும்பும் வழியில் ஜமீலா பாடுகிறாள். திடீரென தானியாரை பாட சொல்கிறாள். அவனும் பாடுகிறான். அவன் அத்தனை அற்புதமாக பாடுவான் என அவர்கள் எதிர்பார்த்திருக்வில்லை. அவ்வளவு அருமையான குரலில் பாடி அவர்களை வியப்பூட்டுகிறான். சையத் அவனது குரலில் மயங்கி திகைக்க  ஜமீலா தனது வண்டியிலிருந்து இறங்கி தானயாரின் வண்டியில் ஏறி அவனருகே தோளுரச உட்கார அந்த காதலின் இயற்கையான காட்சியை அப்படியே வரைய வேண்டுமென சையத் விரும்புகிறான். பிறகு வரையவும் செய்கிறான். தானியார் குரலில் இயற்கை அந்த இரவிலும் உயிர்த்தெழுகிறது

எந்தன் மலைகளே—என் வெண் நீல மலைகளே

தந்தையர் நாடே__அவர் முந்தையர் நாடே

எந்தன் வாழ்க்கை தொட்டிலே 

என்று கஸாக்கிய_கிர்கீசிய கலப்புள்ளதொரு மயக்கும் இசையுடன் பாடுகிறான். அவன் குரலுக்கு வில்லோ செடி கூட்டங்கள் கூட இலை சிலுப்பி ரசிக்கிறது.

அன்றிலிருந்து  பேரழகி ஜமீலாவும் அவளது கணவனின் தம்பியான கிச்சினே பாலாவும்  தானியத்தை ஏற்றிக்கொண்டு வண்டியில் போகும் போது தானியாரின் இசைமிகுந்த குரலை கேட்க ஏங்குகிறார்கள்.

சமீப காலமாக தன் அண்ணியை தானியார் வெறித்துப் பார்பதையும் பிறகு அவர்களுக்கிடையில் நிகழும் கமுக்கமான உரையாடலையும் அவன் கேட்டாலும்…..அவர்கள் கொஞ்சம் சிரித்துக்கொள்ளட்டும் என்று நினைக்குமளவு அவன் மனதில் மாற்றம் உண்டாகும் அற்புத மாயத்தை  சிங்கிஸ் ஐத்மாத்தவ் எழுத்தால் நிகழ்த்துகிறார் ஜமிலாவை  உலக படைப்புகளில் வைத்து பேச தோன்றும் அத்தியாயம் அது. வாசித்துப்பாருங்கள்.

ஒரு கட்டத்தில் இளவேனிலென ஒளிரும் ஏக்கமொன்று  ஜமீலாவின் விளங்காத கண்களில் நிழலாடுகிறது…அதை சையத் பார்த்துவிட்டுப்படுகிற மனதுயரை சிங்கிஸ் ஐத்மாத்தவ் என்கிற எழுத்துக்கலைஞன் மாசுமறுவற்ற ஓவியத்தை எப்படித்தீட்டியிருக்கிறான் என்று வாசிக்கும் போது உணர்வீர்கள். இக்குறும் புதினம் படைப்பிலக்கியத்தில் ஒரு அதிசயமென்பேன்.

திரு. பூ. சோமசுந்தரம் அவர்களின் மொழிபெயர்ப்பு அபாரமானது என்பேன்.  வாய்ப்புள்ளவர்கள்  அவசியம் வாசியுங்கள்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. சகோதரிகள் : கரன் கார்க்கி
  2. அலெக்சாந்தர் புஷ்கினின் ’கேப்டன் மகள்’- கரன் கார்க்கி
  3. ‘’தாக்குங்கள்.. பெத்யூன் நம்முடன் இருக்கிறார்’’: ஒரு மருத்துவப் போராளியின் கதை- கரன் கார்க்கி
  4. உண்மை மனிதனின் கதை |  பரீஸ் பொலெவோய்- கரன் கார்க்கி
  5. ருஷ்ய புரட்சியைப் பேசுகிற ஒற்றைப் புத்தகம்: ‘உலகை குலுக்கிய பத்து  நாட்கள்’ - கரன் கார்க்கி
  6. சிங்கிஸ் ஐத்மாத்தவின் முதல் ஆசிரியன்: இரண்டு பாப்ளர் மரங்கள் - கரன் கார்க்கி
  7. லேவ் தல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு: அழிவற்ற அறத்தின் குரல் - கரன் கார்க்கி.
  8. நடப்பது என்பது எனக்கு வாசிப்பதுபோல, வாசிப்பது எனக்கு மண்ணில் நடப்பதுபோல - கரன்கார்க்கி
  9. லெனினுக்கு மரணமில்லை - கரன்கார்க்கி
  10. 1. புத்தகங்களைத் திருடுகிறவன்