பிறந்து சில நாட்களேயான குழந்தையைப் பார்த்து

 “எதுவும் எழுதப்படாத புது சிலேட்டே…

எனக்குத் துக்கமாக இருக்கிறது”

என்று தன் ஊற்று எனும் கவிதையை முடிக்கிறார் கவிஞர் வே.நி. சூர்யா. இப்போதெல்லாம் எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் இந்தக் கவிதை முன்னால் வந்து நிற்கிறது. வாழ்தல் அத்தனை பாரமாக மாறிவிட்டது. நாகரீகம் என்ற ஒற்றைச்சொல் அடிவாரத்தில் குடியிருப்பவனின் தலையில் சரிந்த மலையெனத் தெரிகிறது. நாகரீகம் என்பது ஒரு வார்த்தை மட்டுமல்ல.. அது சில தலைமுறைகளின் தோளேறி அழுத்தும் பெருஞ்சுமை. நாம் சுமந்துகொண்டு இருக்கிறோம் நம் மூதாதையர்களைவிட அதிகமாய்.. நம் சந்ததியர்களைவிட குறைவாய்.. இன்னும் எத்தனை காலம் இந்நிலையென்று அறிய நம் யாருக்கும் வாய்ப்பில்லை என்பதே மனதைக் கொஞ்சம் ஆற்றுப்படுத்தும் செய்தி.

வாழ்தல் இனிது என்பதை வாய்மொழியாகவும், இதெல்லாம் ஒரு வாழ்க்கையா? என்பதை மனவெளியிலும் நம்மில் பலரும் உச்சரித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இத்தனை கட்டாயங்களுக்க மத்தியிலும் நாம் வாழத்தான் வேண்டியிருக்கிறது. வாழ்தல் என்பதற்கு உயிர்ப்புடன் இருத்தல் என்பது பொருள் அல்ல. இரண்டிற்கும் கொஞ்சம் வேறுபாடுகள் உள்ளன. காலத்தின் எத்தனையோ மாற்றங்களுக்குப் பிறகும் இன்னும் மனித இனத்தை எந்திரத் தன்மையிலிருந்து மீட்டு மனிதனாகவே நிலைத்திருக்கச் செய்திருப்பது கலை.  இயல்பில் கலைமனம் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களால் மானுட இனத்தை சிரிக்கவோ சிந்திக்கவோ அல்லது ரசிக்கவோ செய்யமுடிகிறது.  சாதனையாளர்கள், செயல்வீரர்கள், மக்கள் தலைவர்கள் குற்றவாளிகள், குழந்தைகள் என சமூகத்தில் யாவருமே கலையின் ரசிகர்கள். ஒவ்வொரு தனி மனிதனின் மொத்த வாழ்வியல் காலத்தையும் சோதனைக்கு உட்படுத்தினால் அவர்கள் கலையில் லயித்த கணங்களில் ஒரு வானவில் வண்ணமயமாகப் பிரதிபலிக்கும். தொன்றுதொட்டு நாம் கலை ரசிகர்கள் கலையின் பிள்ளைகள். நம் முன்னோர்களின் இறை வழிபாட்டில்கூட ஆயுதங்களுக்கு நிகராக இசைக்கருவிகள் கொண்டிருந்த உருவச் சிலைகளே அதிகம். எல்லா சமயத்தவரும் இசையும் பாடலும் இறைவனை அடையும் வழியென நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

கலையின் பல்வேறு முகங்களில் கவிதை தனித்துவம் வாய்ந்தது. ஒரு கவிதை செய்யும் மாயம் என்பது வார்த்தைகளால் விவரிக்க முடியாத உள்ளுணர்வு. பேச்சுமொழி பழகாத குழந்தை அழும் காரணத்தை  யூகிக்க முடியாததுபோல் கவிதை நமக்குள் என்ன செய்யும் என்பதையும் அறுதியிட்டுக் கூறமுடியாது. அது ஒரு சாகாத வரம் பெற்ற உயிர். தடித்த அட்டைக்குள்ளும்.. அலமாரி வரிசைகளின் நெருக்கத்திலும் இயக்கமற்று இருந்தாலும் அது என்றும் துடித்துக் கொண்டுதான் இருக்கும். என்றேனும் பக்கங்களைப் புரட்டும் ஒரு வாசகனின் ஆயுள் முழுவதுமாக அவன் வாசித்த ஒரு நல்ல கவிதை அவனைப் புரட்டிக்கொண்டே இருக்கும். அப்படியான சில கவிதைகளை உள்ளடக்கிய ஒரு தொகுப்பாகவும், சமீபத்திய யாவரும் பதிப்பக வெளியீடாகவும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது கவிஞர் சுபா செந்தில்குமார் எழுதிய ” கடலெனும் வசீகர மீன்தொட்டி” எனும் கவிதைத் தொகுப்பு. எனது வாசிப்பு அனுபவத்தின் வாயிலாக சக நண்பர்களிடம் பல்வேறு கவிதைகள் குறித்து உரையாடுவது மனதுக்கு இதமாகவும் புத்துணர்வு தரும் செயலாகவும் இருக்கும். இந்தத் தொகுப்பின் கவிதைகளையும் அதன் வசீகரத்தையும் வாசித்து வியந்திருக்கிறேன். அதேபோல் நூலாசிரியர் மறைமுகமாகச் சொல்லியிருக்கும் சில கவிதைகளின் மர்மத்தை கண்டடையும் சிந்தனையின்றி சோம்பலாகவும் இருந்திருக்கிறேன். வாசிப்பின் பக்கமாய் சாமான்யர்களைத் திசைதிருப்பும் கடமை நிகழ்கால படைப்பாளிக்கு உண்டு என்றே நினைக்கிறேன். “கடலெனும் வசீகர மீன்தொட்டி ” பலதரப்பட்ட வாசகர்களையும் ஈர்க்கும் தொகுப்பாகவே வடிவமைக்கப்பட்டிருப்பது இந்நூலின் பலம் எனலாம்.\

இந்தத் தொகுப்பிலிருந்து ஒரே ஒரு சொல்லை எடுத்துக்கொள்ளச் சொன்னால் நான் சந்தனப்பாலை எனும் சாக்லேட்டை எடுத்துக்கொள்வேன். அந்த ஒரு சொல்லுக்குள் எத்தனை குளிர்ச்சி.. எத்தனை வெப்பம்.. எத்தனை மணம்.. எத்தனை துகள்கள்.. இன்னும் எத்தனை எத்தனை என வியந்துகொண்டே இருக்கிறேன். இனி எப்படி பாலை நிலத்தை தனித்து மனதில் நிறுத்துவேன்.. நீரற்ற அதன் நீள அகலத்தை எப்படி வெறுப்பேன்?.. அச்சொல் இடம்பெற்ற கவிதையோ அல்லது அச்சிடப்பட்ட பக்கமோ நினைவில் இல்லை. ஆனால் அந்த ஒரு சொல் என்னுடனே பயணிக்கின்றது.

முதுகிலிறங்கும் பின்னலின்

 இரட்டை நெளிவின்

 மையப்புள்ளி பற்றி

 மேலேறும் விரலொன்றின்

 மெல்லியதொரு அழுத்தத்தில்

 அள்ளி முடித்த

 முடிச்சுகள் அவிழ்த்தல் இன்பம்

நிலை கலையாத கூந்தலை

கலைத்தலை விடவும்

அலைவன விலக்கி

அரைமுகம் அளத்தலைவிடவும்

பின்னி வரச்சொன்னாயே எனும்

மோகப் பொய்யொன்றில்

மேவி நிறைகிறது காமம்

கூடல்நிமித்தம் எனும் இக்கவிதையில் காமம் கமழ்கின்றது. காமத்தை எழுதும்போது பலருக்கும் விரல்களில் விரசம் ஒட்டிக்கொள்கின்றது. ஆனால் நூலாசிரியர் அக்கவிதையை வெகு இயல்பாய் விரசமின்றி படைத்திருக்கிறார். ஒரு பெண் படைப்பாளியின் தொகுப்பில் பெண்ணியம் இல்லாமல் போய்விடுமா? பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை இவரின் வளர்சிதை போன்ற கவிதைகள் கண்ணீரோடு பேசுகின்றன. பலவின்பால் எனும் விலங்குகளின் கலவி மற்றும் மனிதர்களின் கீழ்மையான மனப்போக்கு பற்றிய கவிதையை

வீதியில் வசிப்பதற்கும்

வீடுகளில் வசிப்பதற்கும்

ஒரு சாலையளவே இடைளெி

என்று முடிக்கிறார். இந்த வரிகள் தரும் அதிர்வு கவிதைகளில் மட்டுமே சாத்தியம்.

மத்தகம் எனும் மற்றுமொரு கவிதையில் யானையை ” மிச்சமிருக்கும் அடையாளங்களுடன்” என்று எழுதியிருக்கிறார். யானையின் எல்லா பாகங்களும் அப்படியேதான் இருக்கிறது.  எந்த வகையிலும் அதன் உடலில் ஊனமில்லை. ஆனால் யானை தன் வனத்தையும் இனத்தையும் மற்றும் இயல்பினையும் இழந்திருக்கிறது. இந்த இழப்பினைத்தான் கவிஞர் மிச்சமிருக்கும் அடையாளங்கள் என்று வகைப்படுத்துகிறார்.  சமீபமாக யானை பற்றிய செய்திகள் நம்மை வருத்தமடையச் செய்கின்றன. தேவையான உணவுகளின்றி காட்டு யானைகள் தும்பிக்கை முளைத்த எருமை மாடுகள்போல் மெலிந்து காணப்படுகின்றன.  சுற்றுச்சூழல் மற்றும் சமூகம் குறித்த அக்கறை படைப்பாளிகளுக்கு அதிகம் தேவை என்பதை இப்படியான கவிதைகள் மூலம் நூலாசிரியர் நமக்கு உணர்த்துகிறார்.

வெளிநாடுகளிலிருந்து இங்கு வந்து குடும்பத்தைப் பிரிந்து பொருள் ஈட்டும் தொழிலாளர்களைப் பற்றி ” பொருள்வயிற் பிரிதல்” எனும் கவிதை பேசுகின்றது. பொருளாதாரத் தேவையின் பொருட்டு அயல்நாடுகளுக்குச் செல்லும் இளைஞர்களின் தொலைந்துபோன இளமையின் ஆதங்கத்தை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இக்கவிதை. மேலும் இரட்டைத் தலையுடன் வாழ வித்திக்கப்பட்டவன் எனும் வரி மிகச்சரியாக இவர்களின் வாழ்வியலோடு பொருந்திப் போகின்றது.

கடலெனும் வசீகர மீன்தொட்டி எனும் கவிதையில்

“தனித்திருக்கும் தன்னுடல் சிலுப்பி

நிறைந்திருக்கும் வெற்று காற்றை

பெருங்காமத்தில் தவிப்பவனின் அவசரத்தோடு

அள்ளி அள்ளி விழுங்குகிறது

சுவாசித்தலுக்குக் காத்திருக்கும் ஆண்மீன்”

என்று ஒரு பத்தி வருகிறது. இந்த ஒரு பத்தி மட்டுமல்லாது அந்த முழு கவிதையும் மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும் தன்மையுடனும் வாசித்த பிறகு முழு நிறைவுடனும் இருக்கிறது.

“கிடத்தப்பட்டிருக்கும் பேழையில்

தன் உடல் பரப்பி அமர்கிறது

காற்றின் நளின அசைவுகளில்

முயங்கிக் கழித்து களிப்புற ஒரு குமிழி”

ஒரு குழந்தை ஊதி விழையாடும் நீர்க்குமிழிகள் எப்படி கீழிறங்கி அரைவட்டமாக அமர்கின்றன என்பதை எப்படியெல்லாம் வர்ணித்திருக்கிறார் நூலாசிரியர். அதுவும் மரணத்தின் சாயல் என்ற தலைப்பின் கீழான கவிதையில், மனித வாழ்க்கையும் ஒரு காற்றடைத்த குமிழியைப்போல்தானே?.. முயங்கி களித்து ஒரு பேழையில் அடங்கும்வரை . இந்த நான்குவரிகள் போதுமானதாய் இருக்கின்றன. பல சகாப்தங்களின் சிறு குறிப்பாக நம்மை திகைக்கச் செய்கின்றன.

“கசிந்தூறும் நீர் எறும்புகள்

பின்னிரவில் சிதறிக்கிடக்கும்

நிலவின் துணுக்குகளைக் கவ்விச்சென்று

பசித்திருக்கும் பள்ளங்களில்

சேமித்து வைக்கின்றன”

இயல்பிலேயே நானொரு அழகியல் ரசிகன். வானத்து மழைநீரை பள்ளத்தில் நிரப்புவதற்கு எறும்பு, நிலா, பசியென கவிஞர் யாரையெல்லாம் அழைத்து வருகின்றார் பாருங்கள். இங்குதான் கவிஞர்கள் சாமான்ய பார்வைகளிலிருந்து வேறுபடுகிறார்கள். “இரைப்பையில் நிறையும் மழை” என்ற தலைப்பில் நீளும் இக்கவிதையில் மேலும் அன்பு, வறுமை மற்றும் ஆதரவற்ற நிலை குறித்தும் பேசியிருக்கிறார் நூலாசிரியர்.

 

“வார்த்தைகளை

எய்து முடித்தபின்

நிராயுதபாணியாய்

 போரை தொடர்கிறது

மௌனம்”

கூடலை மட்டுமே செய்து கொண்டிருப்பது காதல் இல்லை. ஊடல் ஒரு குளிர்காலத்தின் அனல். விலக்க விலக்க வளரும் மோகம். கோபத்தில் காதல் எக்காளமிடும்..  இன்னும்,  இன்னும் ஊடல் சொல்லி நாள்பட்ட திராட்சை ரசத்தின்  மதிப்பைபோல் போதையை அதிகரிக்கச் செய்யும். காதல் வெறும் இளவரசன்தான்.  ஊடல் கொள்ளும்போதுதான் பேரரசனாகப் பட்டம் சூடி கொள்கின்றது.

சமகாலத்தின் ஆளுமை கவிஞர்கள் முதல் பலரும் இந்த தொகுப்பினைப்பற்றி எழுதியிருக்கிறார்கள் சில மேடைகளில் பேசியிருக்கிறார்கள். யாரும் பேசாத சில கவிதைகளைப் பற்றி இக்கட்டுரை கொஞ்சம் பேசுகின்றது. இன்னும் கையாளப்படாத பல கவிதைகள் நூலினை இதுவரை வாசிக்காத வாசகர்களுக்காகத் தொகுப்பில் காத்திருக்கின்றன.

கவிஞர் பிறந்த நிலத்தையும் தற்பொழுது வாழும் நிலத்தையும் நீர்வழிப் போக்குவரத்தில் இணைக்கும் ஒரு மாலுமியாக வாசகர்களை இரு கரைகளுக்கும் பயணிக்க வைக்கிறார். குடும்ப உறவுகள் குறித்த நெகிழ்ச்சியான கவிதைகள் சிலவும் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கின்றன. எந்த விமர்சகராலும் நிராகரிக்க முடியாத அளவிற்கு அந்தக் கவிதைகள் அனைவரின் மனதிலும் கொஞ்சம் அன்பின் ஈரத்தைக் கசிந்திடச் செய்கின்றன.

ஒரே வாசிப்பில் முழுவதுமாக உள்வாங்கிவிட முடியாத தொகுப்பாக இருக்கின்றது. நூலாசிரியர் தனது என்னுரையில் தன் படைப்புகளை தும்பைப் பூக்களோடு ஒப்பிடுகிறார். இவரது தோட்டத்து தும்பைப் பூக்களுக்கு அநேக நிறங்கள். வெள்ளைக் காகிதத்தில் கறுப்பு எழுத்துகள்தான் என்றாலும் கவிதைகள் எங்கும் வண்ணமயம். நூலாசிரியர்  சில இடங்களில் விவரித்துச் சொல்ல முடியாத அதிர்வுகளை உணர்ந்திட வைக்கிறார். ஒவ்வொரு வாசகரும் சரியாக உணர்ந்திருப்பார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. கவிஞர் சுபா செந்தில்குமார் தனது கவிதைகளில் எளிமை குறித்தும் கொஞ்சம் யோசிக்கலாம் என்பதை அவரது படைப்புகளை பற்றி விளக்கம் கேட்ட வாசகர்கள் சார்பாக ஒரு கோரிக்கையாக முன்வைக்கிறேன்.

கவிஞர் தன் வரிகளுக்காக அதிகம் உழைத்திருக்கிறார். ஆனால் சில படைப்புகளின் மையக்கருத்துகள்  அதன் அவசியம் குறித்து நம்மை யோசிக்கச் செய்கின்றன. ஒரு வாசகனாக முக்கால்தரம் மனதுக்கு நெருக்கமான தொகுப்பாகவும் கொஞ்சம் கேள்விக்குறிகளை எழுப்பும் படைப்பாகவும் என் மனவெளியில் பதிந்திருக்கிறது கடலெனும் வசீகர மீன்தொட்டி. தனது முதல் தொகுப்பிலேயே பரவலான கவிதை விரும்பும் இதயங்களின் பார்வையைப் பெற்றிருக்கிறார் கவிஞர் சுபா செந்தில்குமார்.

கவிதைகளை வகைமைப்படுத்தி சில உப தலைப்பின்கீழ் வரிசைப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. என் சாளரத்தின் வெளியே நான் பார்த்த இந்த கவிதை மேகங்களை உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன். நீஙகள் உங்களின் சாளரம் வழியாக இந்த மேகங்களிடம் உரையாடலாம் சண்டையிடலாம்.. நூலாசிரியர் மற்றுமொரு சாளரம் வழியாக இன்னும் பல கவிதைகளை நமக்கு தருவாரென நம்புவோம். நம் சாளரக் கதவுகள் என்றுமே அடைக்கப்படுவதில்லை காத்திருப்போம்.

 

பிரதிகளுக்கு:

https://www.discoverybookpalace.com/kadalenum%20vaseekara%20meenthotti