யாத்வஷேம் -நாவல்- கன்னட மூலம்: நேமிசந்த்ரா தமிழில்: கே. நல்லதம்பி- விலை ரூ.  399.00

ஹிட்லர் வரலாற்றில் மறைந்துபோயிருந்தான். ஒரு அரக்கனை உலகம் மறந்திருந்தது. 1995 இந்த நாவலைநான் தொடங்கிய தருணம், பெங்களூரில் ஹிட்லர், யூதர்களைப் பற்றிய புத்தகங்கள் கிடைப்பது அரிதாகஇருந்தது. ஆனால் சட்டென்று இப்போது ஹிட்லர் தெரிகிறான். வீதிவீதிகளில், புகழ்வாய்ந்த புத்தகக்கடைகளில், எங்கும் ஹிட்லரின் ‘மை கேம்ப்’ பளபளக்கும் பிரதிகள் கிடைக்கின்றன. எங்கிருந்து மறுபடியும்
இந்த உற்சாகம்- ஏன் அவன் ‘வெற்றி’ ஆர்வத்தைத் தூண்டுகிறது. யாருக்கு இலட்சியமாகிறான்? ஹிட்லர்மறுபடியும் பாராட்டுக்குரியவனாகிறானா? கேள்வி என்னை வாட்டுகிறது. பயமுறுத்துகிறது.12  வருடங்களுக்கு முன்பு, கோரிப்பாளையத்து இந்த யூதர்களின் சமாதிகள், எனக்குள் ஒரு கதையைப்
பிறக்கவைத்தன. ஹிட்லரின் மண்ணிலிருந்து காந்தியின் மண்ணிற்கு வந்த குட்டி யூதச் சிறுமியின் கதைஅது. இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில் நான் பார்த்த யூதர்களின் உலகை நாவலில் திறந்துகாட்டமுயன்றேன். அன்று பற்றி எரிந்தது ஜெர்மனி, நின்று பார்த்தது உலகம். இன்று ஹிட்லர் எங்கேவேண்டுமென்றாலும் பிறக்கலாம். அமெரிக்காவில், ஜெர்மனியில், இஸ்ரேலில், ‘அகிம்சையே உயர்ந்ததர்மம்’ என்று முழங்கும் இந்தியாவில் கூட, ‘நம் நடுவில் எங்கு வேண்டுமென்றாலும் பிறக்கலாம்’, நமக்குள்பிறந்துவிடக்கூடிய ஹிட்லரைத் தடுக்கும் பொறுப்பு நம்முடையது’ என்ற நம்பிக்கையின் பின்னணியில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
– நேமிசந்த்ரா
நூல் அறிமுகம்: செலினா 

யாத்வஷேம், கன்னடத்தில் எழுதப்பட்ட இந்த நாவல் என்னை ஈர்க்க அதிமுக்கிய காரணமாக இருந்தது அது ஒரு யூதப் பெண்ணின் கதை என்பதுதான். யூதர்களின் மீது, அவர்களின் கதைகளின் மீது, ஹோலோகாஸ்ட் நாட்கள் மீது எனக்கு எப்போதுமே ஒரு ஆர்வமுண்டு.  குரலற்று ஒடுக்கப்பட்டவர்களின் குரல் ஒரு நாள் நீரின் ஆழத்திலிருந்து மேலெழும்பி வந்து உலகத்திற்கு தன் கதைகளைச்சொல்லும்போது அது தரும்  கிளர்ச்சி திகிலானது,  இந்தியாவில் யூதர்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குப் புதிய தகவலாக இருக்கவில்லை. எனக்கு மிகப்பிடித்த ஆங்கில‌ கவிஞ‌ர் நிசிம் எழிக்கில் மஹராஷ்ட்ராவில் பிறந்த யூதர் என்பது தெரியும். ஆனால் இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜிபடைகளின் கோரப்பிடியிலிருந்து தப்பி இந்தியாவை நோக்கி சில யூத குடும்பங்கள் தஞ்சம் அடைந்தார்கள் என்பது புதிய தகவலாக இருந்தது

இந்த நாவல் பெங்களூரு கோரிப்பாளையத்தில்  இந்து முஸ்லிம் சமாதிகளுக்கிடையே உள்ள  யூத விஞ்ஞானி ஒருவரின் சமாதியிலிருந்து துவங்குகிறது.நாஸிகளின் வேட்டையிலிருந்து  தப்புகிற ஒரு விஞ்ஞானியும் அவரது 12 வயது மகளும்  பெங்களூரு வந்தடைகிறார்கள். இரண்டு மதங்கள்இருக்கும் ஐரோப்பாவில் இனவெறுப்பின் துன்பங்களை அனுபவித்தவர்கள் எத்தனையோ மதங்களும், சாதிகளும், பிரிவினைகளும் இருக்கும் இந்தியாவில் நுழைகிறார்கள்.

ஆரம்பத்தில் அவர்களை கிறிஸ்தவர்கள் என அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் நினைக்கிறார்கள். “இல்லை நாங்கள் ஜியூஷ்” என்றதும் புரியாமல் குழம்புகிறார்கள். அவர்கள் பைபிள் படிப்பதும், குல்லா அணிந்து மேற்கு திசை நோக்கி தொழுவதும், உருவ வழிபாடு செய்யாததும் மேலும் அவர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

ஐரோப்பாவின்  ஜெர்மனியில் ஹிட்லர் யூதர்களை இனப்படுகொலை செய்யும் அரசியலெல்லாம் யாருக்கும் புரியவில்லை.  யூதச்சிறுமி ஹ்யானா மோசஸ் ஊமை மொழி பேசி  அக்கம்பக்கத்திலுள்ள குழந்தைகளுடன் நெருக்கமாக வெகு நாட்கள் எடுக்கவில்லை.பக்கத்து வீட்டு சிறுமி சுமியுடன் தோழியாகிறாள். அவர்களின் வீட்டிற்கு செல்கிறாள் அவளின் உடன்பிறந்தவர்களுடன் விளையாடுகிறாள். ஹ்யானாவுக்கு  இந்திய சமூகத்தின் சாதிகள், முக்கோடி தெய்வங்கள் பற்றி ஒன்றும் புரிவதில்லை. ஹிட்லர் என்ற பெயரையே கேள்விப்படாத, போர் பற்றி எதுவும் அறியாத தனது சமவயதையொட்டிய குழந்தைகள் அந்த வயதின் மகிழ்வுடன் விளையாடுவது அவளை  கலங்கச்செய்கிறது, ஹிட்லரின் நிழலில்லாமல் வளரும் இவர்களின் பால்யம் அவளை சிலிர்க்கச் செய்கிறது. .

நெதர்லாந்தில் ஜெர்மன் ராணுவம் தனது ஜீப்பில் ஏற்றிச்சென்ற‌ தன் அம்மா, அக்கா, 2 வயது குட்டி தம்பிக்கு என்னவாயிற்று என தெரியவில்லை. அவர்களை தொலைத்து வந்த ரணங்கள் ஆறாமல் ஒவ்வொரு நாளும் அவளை பின்தொடர்ந்தது. நாஜி முகாம்களுக்கு செல்ல மட்டுமே வாய்ப்பிருந்த அவர்கள் தற்போது உயிருடன் இருக்கிறார்களா என்றுகூடத் தெரியவில்லை.

தன் வலியின் இரவுகளைப் பகிர்ந்து கொண்ட, பரந்த உலகில் தனக்கென இருந்த ஒரே உறவான ஹ்யானாவின் அப்பா மோசஸ் இந்தியா வந்த இரண்டே வருடத்தில் மாரடைப்பின் காரணமாக இறந்துவிடுகிறார். ஹ்யானாவின் வாழ்வின் வெளிச்சத்தின் கடைசி கதவும் சாத்திக்கொண்டது. ஆனால் மோசஸ் நம்பி வந்த இந்தியா ஹ்யானாவை கைவிடவில்லை. அருகிலிருந்த ஒரு கன்னட ஒக்கலிக குடும்பம் ஹ்யானாவை வளர்க்கிறார்கள். தான் தினமும் விளையாடிய அந்த வீட்டின் ஒரு அங்கமாக மாறுகிறாள் ஹ்யானா. அந்தப் பெரிய வீட்டிற்கு சுமையாக இல்லாத ஹ்யானா, அனிதாவாக வளர்கிறாள்.அவளின் விளையாட்டுத்தன‌ங்கள் மறைகின்றன. சதா ஏதாவது வேலை செய்து கொண்டே இருக்கிறாள். சொந்த நாட்டை விட்டு உயிர்ப்பிழைக்க வந்தபோது ஆதரவளித்த இந்த நாட்டிற்கும், அவளை வளர்க்கும் குடும்பத்துக்கும் என்றுமே கடன்பட்டுள்ளதாக திரும்ப திரும்ப நினைத்துக்கொள்கிறாள்.

விட்டு வந்த நினைவுகள் அவளை தூங்க விடுவதில்லை. போர் முடியுமா?, யாராவது  தன்னை இந்தியாவிலிருந்து தன் நிலத்திற்கு அழைத்து செல்வார்களா? கேள்விகளால், கனவுகளால்  நிரம்புகின்றன‌ அவளது நாட்கள். வருடங்கள் கடக்கின்றன. தான் வாழ்ந்த அந்த வீட்டின் மருமகளாகிறாள் ஹ்யானா. அவளைத் திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை தான் தான் வீட்டில் சொல்லியிருந்தாலும் ஹ்யானாவிற்கு திருமணத்தில் விருப்பம் இருந்ததா என்பது கூட கணவன் விவேக்கிற்கு தெரியாது. குடும்பத்தை இழந்து அந்நிய நாட்டில் தனித்து விடப்படுகிற அவள் தன்னை அரவணைத்துக்கொண்ட இந்த குடும்பத்தின் நன்றிக்கடனை தீர்க்க திருமணத்திற்கு சம்மதித்தாளோ என்றுகூட தோன்றியது.

 இதனிடையே ஐரோப்பாவில் போர் முடிந்திருந்தாலும் அவளின் உள்ளத்து போருக்கு முடிவே இல்லாததை அருகிலிருந்தே கவனித்தான் பள்ளிக்கூட ஆசிரியனான விவேக்.

பல வருடங்களுக்கு முன்பு ஐரோப்பாவின் பெர்லினில் வாழ்ந்தபோது அங்கு யூதர்கள் ஒடுக்கப்பட்டு, அங்கிருந்து தப்பினால் ஒழிய உயிர் வாழ முடியாது எனுமளவு அரசியல் வானிலை மிகமோசமான போது ஒரே இரவில் சிறு மூட்டையுடன் 3 தலைமுறைகளாக வேரூன்றி வாழ்ந்த மண், அவர்கள் வாழ்ந்த வீடு, அதன் நினைவுகள் , பொருட்கள் என எல்லாவற்றையும் விட்டு விட்டு டச்சு மண்ணான  ஆம்ஸ்டர்டேமில் குடியேறுகிறது ஹ்யானாவின் குடும்பம். அங்கு வாழ்ந்த    2 வருடங்களில் அவளுக்கு போர், வெறுப்பு போன்ற வார்த்தைகளின் அர்த்தங்கள் புரியத்துவங்கியிருந்தது.அங்கு ஹிட்லரின் நாஜிப்படைகளின் அச்சுறுத்தல் இல்லாமல் 2 வருடங்கள் வாழ்வை பற்றிய நம்பிக்கைகளுடன் கனவுகளுடன், வாழ்வை எதிர்கொண்டது ஹ்யானாவின் குடும்பம். இந்த  இரண்டு வருடங்களில்,  ஒவ்வொன்றைப் பற்றியும் தன் பெற்றோரிடம் விடாது கேள்விகளை கேட்டு வந்த சிறுமி ஹ்யானா, ஒரு கட்டத்தில் கேள்விகளை கேட்பதை நிறுத்தியிருந்தாள். ஹிட்லரின் நாஜிப்படைகள் டச்சு மண்ணையும் ஆக்கிரமித்த பின்னர் அங்கும் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது, பொது இடங்களில் யூதர்களுக்கு அனுமதி இல்லை என்பது போன்று பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. . என்ன நடக்கிறதென்றே புரியாத ஹ்யானா, தனக்கு மிகப்படித்த ஐஸ்க்ரீம் கடையில் “யூதர்களுக்கு தடை”என்ற அறிவிப்பு பலகையின் முன்பு அழுதபடியே நிற்கிறாள். படிப்படியாக பெர்லினில் நடந்த அத்தனையும் நெதர்லாந்திலும் அரங்கேறுகிறது. மீண்டும் நாஜிகளின் கோரப்பிடியிலிருந்து உயிரைக்காப்பாற்றிக் கொள்வதற்காக  இரவில் கைகளால் எடுக்க முயன்ற பொருட்களுடன்  வெளியேறுகிறது ஹ்யானாவின் குடும்பம். குடும்பமாக மொத்தமாக வெளியே சென்றால், மாட்டிக்கொள்வார்கள் என்பதால் ஹ்யானாவும் அவளது தந்தை மோசசும் முன்செல்கிறார்கள். பின்னால் ஐந்து நிமிட தொலைவில் வந்த அம்மாவையும், ரெபெக்காவையும், குட்டித்தம்பியையும் பிடித்துக்கொள்கிறது ஜெர்மன்ராணுவம். நடுங்கிய மோசஸ் வாழ்வில் தனக்கென மிஞ்சியிருந்த  ஹ்யானாவை இறுக்கி அணைக்கிறார், கடும் போராட்டங்களுக்கு நடுவே இந்தியா வந்தடைகிறார்கள் இருவரும். பெற்றோருடன் அவர்களது அணைப்பில் வாழ்ந்த முதல் 10 வருட வாழ்க்கையோடு அவளது வாழ்வும் உறைந்து நின்றுவிட்டதாக தோன்றியது ஹ்யானாவிற்கு.

இந்த வரலாறை இந்த கதையை தான் தினமும் நினைத்துக் கொண்டு இந்தியாவில் வாழ்கிறாள் ஹ்யானா.

பல வருடங்களுக்கு பிறகு ஹ்யானாவுக்கும் விவேக்கிற்கும் மகன் பிறக்கிறான். எந்த கடவுள், மதம், சாதி, குலத்தை சார்ந்த பெயராகவும் இல்லாத விஷால் என பெயர் சூட்டுகிறார்கள். விசுவின் முகத்தில் தான் சாவின்  மரண வாயிலில் விட்டுவந்த இரண்டு வயதுகுட்டித்தம்பி ஐசாக்கை காண்கிறாள் அனிதா. ஆனாலும் அனிதாவின் நேற்றுகள் மாறாமலிருந்தன. வலியின் காயங்கள் ஆறாமல் இருந்தன. ஒருநாள் அவனை அள்ளியெடுத்து  கொஞ்சும்போது, “வளர்ந்து பெரியவனானதும் என்னை வெளிநாட்டுக்குஅனுப்பி வைப்பான் என் மகன், இல்லடா விசு?” என அவள் மனதின் ஆசைகள் தன்னை அறியாமலேயே வெளிப்பட்டன. இத்தனை வருட திருமண வாழ்க்கையில் அவளின் மனதில் இப்படி ஒரு ஆசை இருந்ததையே உணர்ந்திறாத விவேக் கலங்கினான்.  சொல்லப்போனால் அப்போதுதான் அவளின் கடந்த கால வாழ்க்கையை  அவ்வளவாக தெரியாததையே உணர்ந்தான் விவேக். . ஜெர்மன் படையின் ஆக்கிரமிப்பால் நாஜிகளின் பிடியில்  குடும்பத்தை பற்கொடுத்து மீதமிருப்பவளையாவது காப்பாற்ற வேண்டும் என  ஹ்யானாவைத் தூக்கிக் கொண்டு அவளது தந்தை இந்தியாவில் பெங்களூருவை வந்தடைந்தது மட்டுமே விவேக்கிற்கு தெரியும். ஆறாத காயத்தை பிரித்து பார்த்து பார்த்து அவள் கலங்கப்படுவதை பார்க்க அவன் விரும்பவில்லை. அதனால்தான் அதற்கு மேல் அவனும் எதையும் அவளிடம் கேட்கவுமில்லை. ஆனால் தவறாது மோசஸின் சமாதிக்கு ஹ்யானாவுடன் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்

விசு வளர்கிறான், தான் யூதள் என்பதை தெரியப்படுத்தவே விரும்பாத ஹ்யானா,  தனது வலிநிறைந்த கதையை ஒருபோதும் தன் மகனிடம் சொல்லியிருக்கவில்லை. ஐஐடியில் படித்து தொண்ணூறுகளில் மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் சேர்கிறான். வெளிநாட்டுக்கு போக வேண்டும் என்கிற அம்மாவின் ஆசையை புரிந்து கொள்கிறான். வெறுமனே சுற்றிப்பார்க்க செல்லும் வெளிநாட்டு பயணத்திற்குத்தான் ஆசைப்படுகிறாள் அம்மா என்றே நினைக்கிறான் விசு. பொருளாதாரத் தேவையில் நிறைவடைகிற விசு தன் அம்மா செல்ல விரும்பும் இடங்களுக்கு அனுப்பி வைக்கிறான்

ஹிட்லரால் படுகொலை செய்யப்பட்ட 60 லட்சம் பேரில் தன் குடும்பத்தில் யாராவதுஉயிருடன் இருப்பார்களா என்ற ஆசையுடன், அவர்களை சந்திப்போமா எனும் ஆயிரம் கேள்விகளுடன் தான் குடும்பத்துடன் வாழ்ந்த ஆம்ஸ்டர்டேம் நோக்கி விவேக்குடன்  புறப்படுகிறாள் ஹ்யானா.  தான் வசித்த பழைய வீட்டுக்கு செல்கிறாள். எவ்வளவோ மாறியிருக்கிறது. முப்பத்தி இரண்டாயிரம் பேரைக் கொன்ற டகாவ் உள்ளிட்ட நாஸி கேம்ப்களுக்கு செல்கிறார்கள். எங்கும் தன் குடும்பம்பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. மாறாக மரண ஓலத்தின் மௌன சாட்சியங்கள் மட்டுமே இருந்தன.

அடுத்ததாக  2 வருட இடைவெளியில், தனது குடும்பம் பற்றி ஏதாவது தகவல் கிடைக்கும்  எனும் நம்பிக்கையுடன்,  நாஜி முகாம்களில் பலியானவர்களின் பொருட்கள் சேகரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அமெரிக்காவின்  வாஷிங்க்டன்ஹோலோகாஸ்ட் மியூசியம் செல்கிறார்கள்.  நாஜி முகாம்களிலிருந்து சேகரிக்கப்பட்டு அங்கு வைக்கப்பாட்டிருக்கும் செருப்புக்குவியலில் தனது அக்கா ரெபெக்காவின் 15வது பிறந்தநாளுக்கு அப்பா வாங்கி கொடுத்த சிவப்பு நிற‌ ஷூவை கண்டறிகிறாள். அதில் அம்மா ஆசையுடன் போட்ட பின்னல் இருந்தது. அது அவளின் ஏதோ ஒரு கேள்விக்கு பதிலளித்தது தனது அக்கா நாஜி முகாமிலேயே இறந்திருப்பாள் என நினைத்து அங்கேயே சுருண்டு விழுகிறாள். அவளது வாழ்வில் மீண்டும் கரிய இருட்டு படர்கிறது.

அதே மியூசியத்தில் நாஜி முகாமிலிருந்து தப்பிப் பிழைத்து வந்த பெண்மணியை சந்திக்கிறாள். இஸ்ரேலுக்கு போனால் உறுதியான தகவல்கள் கிடைக்கலாம், உங்கள் தேடலுக்கு விடை கிடைக்கலாம் என வழி காட்டுகிறாள். நாஜிக்களால் வேட்டையாடப்பட்ட 60 லட்சம் யூதர்களுக்கென வைக்கப்பட்ட ‘யாத்வஷேம்’ நினைவு சின்னத்தில் இறந்தவர்களின் விவரங்கள் சேகரித்து வைத்துள்ளார்கள் என்ற தகவலையும் சொல்கிறாள்.

அத்தனை நம்பிக்கையையும் இழந்த ஹ்யானா தன் தேடலுக்கு முடிவு வேண்டும் என நினைக்கிறாள். தேடலின் முடிவு இன்பமாகவோ துன்பமாகாவோ இருந்தாலும் முடிவைத்தேடி ஆறு மாத இடைவெளியில் இஸ்ரேல் புறப்படுகிறார்கள் ஹ்யானாவும் விவேக்கும்.1948ல் யூதர்களுக்கு வழங்கப்பட்ட இஸ்ரேல், சுற்றிலும் அரபு நாடுகளால் சூழப்பட்டு தனித்துண்டு நிலமாக நிற்கிறது.

விடுகதையாய் நிற்கும் கேள்வியுடன், யாத்வஷேமில் குழந்தைகளின் நினைவு அறையில் மெழுகுவர்த்தியின் ஒளியில் தெரிகிறது தனது 2 வயது தம்பி ஐசக்கின் முகம். அம்மா இறந்த முகாமில் ஐசக்கும் இறந்திருக்கிறான். கேள்விக்கான பதில் இதுதான்

இனி தேட வேண்டாம் என விதி ஆணையிடுவது போல தோன்றியது அவளுக்கு. டகாவ் முகாமில் அம்மாவுடன் ஐசக்கும் இறந்துபோனதை நினைத்து கூக்குரலிட்டு அழுதாள்.

அருகிலிருந்த ஒருவர் டகாவ் முகாமிலிருந்து தன் அக்கா உயிர்பிழைத்து வந்ததைச் சொன்னார். ஐசக்கும் , அம்மாவும் அங்கிருந்தார்கள் எனில் அக்கா ரெபெக்காவையும் அதே முகாமில்தான் அடைத்திருப்பார்கள் நாஜிகள். மீண்டும் ஏதோ ஒளி வந்தது போல் உணர்ந்தாள். டகாவ் முகாமிலிருந்து உயிர்பிழைத்த அவரின் சகோதரிக்கு  கண்டிப்பாக இவளது குடும்பத்தை தெரிந்திருக்கும் என நினைத்தாள். கடைசி முயற்சியாக டெலிஃபோன் டைரக்ட்ரியை எடுத்து எல்லா மோசஸ் குடும்பத்திற்கும் அழைத்தார்கள் விவேக்கும் ஹ்யானாவும். கடைசியில் அவள் அக்கா ரெபெக்கா மோசஸ் உயிருடன் இருப்பதை தெரிந்து கொள்கிறாள். அவளைச் சென்றடைகிறாள். தனது பல பத்தாண்டின் முடிவு எழுபது வயதைக் கடந்து கண்முன்னே நிற்கிறது. அழுது கொண்டே அணைத்துக்கொள்கிறார்கள் இருவரும்.

விடிய விடியப் பேசுகிறார்கள். டகாவ் முகாமில் நடந்தது, அங்கு நிகழ்ந்த கொடுமைகள், பசி, நடுங்கும் குளிர், வன்கொடுமை, மலர்ந்த காதல், முகாமிலிருந்து தப்பி வந்த கதை எல்லாவற்றையும். தன்னை அரவணைக்க  இந்தியாவில் ஒரு அன்பான குடும்பம் இருந்தது. ஆனால் உடன் பிறந்தவர்களின் வாழ்க்கை தன் வாழ்க்கையிலிருந்து எவ்வளவு

வேறுபட்டிருக்கிறது, ஒரே கதை கொண்ட பல்லாயிரம் அழகான குடும்ப‌ங்களை  பிரித்து சின்னாபின்னமாக்கியிருக்கிறது  நாஜிப்படை  என நினைத்துப் பொரிந்தாள் . தனது கதையை, அப்பா மோசசுக்கு நடந்ததை அக்காவிடம் பகிர்ந்துகொள்கிறாள். இருவருக்குள்ளும் வரலாற்றின் வலி நிறைந்த நாட்கள்  நிறைந்தன.

பேசி, அழுது, வருந்தி, கோர நினைவுகளை கிளறி எல்லா கதைகளும் தீர்ந்தபின்இனவெறுப்பிற்கு ஆளாக்கப்பட்டு அதன் துன்பங்களுக்கு நேரடி சாட்சியாக இருக்கும்  ஒரு சமுதாயம்  பாலஸ்தீனியர்கள் மீது அதே இனவெறுப்பினைச் செய்வது குறித்து  கேள்வியெழுப்புகிறாள் ஹ்யானா. .இன வெறுப்பின் நெருப்பில் வளர்ந்தவர்கள் காஜாவில் செய்வதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.  “உங்களுக்கு பாரதத்திலும், எங்களுக்கு இஸ்ரேலிலும் இருக்கும் பிரச்சைனை ஒன்றுதான் -அது முஸ்லிம்கள்” என்ற ரெபெக்காவின் மகனின் பதில்கள் ஹ்யானாவை அதிர்ச்சியூட்டுகின்றன. அதனை உடனேமறுத்து தீவிரவாதமே, வெறுப்பே பிரச்சினை எனச் சொல்லும் ஹ்யானாவை பார்க்கிறாள் ரெபெக்கா. அக்காவுக்கும் தனக்கும் அனுபவத்தில் , வாழ்ந்த வாழ்க்கையில்,  சிந்தனைகளில், தத்துவத்தில் பெரும் இடைவெளி இருக்கிறது.  அக்காவும் அவனது மகனும் வேறு பரிமாணத்தில் நின்றிருந்தார்கள். குழந்தை பருவத்தை தவிர இருவருக்கும் இடையே பொதுவானதாக எதுவும் இருந்திருக்கவில்லை. அவர்கள் பாலஸ்தீனியர்களுக்கு, காஜாவுக்கு செய்யும் துன்பங்களுக்கு காரணங்களை சாக்கு போக்குகளாக வைத்திருந்தனர்.  காலங்காலமாக வாழ்ந்து வந்த அரேபியர்களை இடம்பெயரச்செய்து அவர்களையே ஒடுக்கி துன்பப்படுத்துவதை ஹ்யானாவால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. ஹோலோகாஸ்ட்டிலிருந்து தப்பி வந்தவர்கள் மற்றொரு ஹோலாகாஸ்ட்டிற்கு தயாராவதை எண்ணி வருந்தினாள்.

இஸ்ரேலிலிருந்து இந்தியாவுக்கு புறப்பட எத்தனிக்கும் போது ரெபெக்காவின் பேரனால் வாழ்வின் மீதான, அமைதியின் மீதான, அன்பின் மீதான நம்பிக்கையைப் பெறுகிறாள். அங்கிருந்த நாட்களை கொண்டு, சந்தித்த சில மனிதர்களைக் கொண்டு எந்த நிலைப்பாட்டையும் எடுக்க வேண்டாம் என சொன்னவன், பாலஸ்தீன் மீது குண்டு வீச மறுத்த, போரின் அறைகூவலுக்கு செவிசாய்க்காத, அமைதிக்காக போராடும் பெண்களை பற்றி சொல்கிறான். ஒவ்வொரு வாரமும், ‘We Refuse to be Enemies’ என  அச்சிடப்ப்பட்ட போஸ்டர்களை நெஞ்சில் தாங்கியபடி பெண்கள் போராடும் சதுக்கத்திற்கு அழைத்து செல்கிறான். அதையெல்லாம் பார்க்கிற ஹ்யானாவுக்கு நம்பிக்கை துளிர்க்கிறது. நெஞ்சில் இருந்த அவநம்பிக்கை குறைந்தது போல உணர்கிறாள். டேனியும், அமைதிக்கான வாழ்வை தேடி போராடுபவர்களும் நம்பிக்கையின் கதகதப்பை வழங்குகிறார்கள்.

இந்தியாவுக்கு திரும்புகிறார்கள்.   நாட்கள் கடக்கின்றன.

இப்படி பல்வேறு பரிமாணங்களில் பயணிக்கிற இந்த நாவல்  ஹிட்லர் ஒருவரே 6 மில்லியன் யூதர்களின் இனப்படுகொலைக்கு காரணமல்ல. அது பல்லாண்டுகளாக விதைக்கப்பட்ட வெறுப்பின் அறுவடை, ஹிட்லரின் வடிவில் பழிதீர்த்துக்கொண்டது என்பதை அழுந்த சொல்கிறது. சுய லாபங்களுக்காக மரணங்களை கண்டும் காணாமல் போன உலகத்தைக் கேள்விக்கேட்கிறது. கடந்த காலத்தை விட்டு விட்டு எதிர்காலத்தை நோக்கி சிந்திக்க சொல்கிறது. எதற்கும் தீர்வாகாத வெறுப்பின் விளைபொருளான‌ போர் எவ்வளவு லாபகரமான தொழில் என்பதைப் பதிவு செய்கிறது. ஹ்யானாவின் கண்கள் வழியாக சமகால அரசியல், ஆப்ரஹாமிக் மதங்கள், அவற்றின் நம்பிக்கைகள், என பலவற்றைப் பேசுகிறது

ஆனாலும் நாவலில் எனக்கு நெருடலான ஒரே ஒரு இடம் மட்டும் இருந்தது. கடைசி இரண்டு பக்கங்கள்தான் அவை. அந்த புத்தகத்தை நிறைத்திருக்க வேண்டாம் எனக்கூட தோன்றியது.

குஜராத் கலவரத்தில் குடும்பத்தை இழக்கிற சவிதா எனும் பெண் யார் மூலமாகவோ அனிதாவின் குடும்பத்தை வந்தடைகிறாள். எப்போதும் நாட்டிற்கு தனது நன்றிக்கடனை செலுத்த தயாராக இருந்த அனிதா, 60 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி வந்தாளோ அவள் போலவே அனாதையாக வந்து நிற்கிற சவிதாவை தன் வீட்டிலேயே தங்க வைக்கிறாள். . அவளுடன் காதல் வயப்படுகிற விஷால் ஒருநாள் சவிதா நமாஸ் செய்வதைப் பார்த்து, அதிர்ச்சியடைகிறான். அவள் முஸ்லிம் என்றும், மாடு தின்பவர்களை வீட்டிற்குள், பூஜை அறைக்குள் அனுமதித்து வீட்டையே அசிங்கப்படுத்தியதாக ஆவேசமாக தன் அப்பாவிடம் கத்துகிறான்.

அவனிடம், அடையாளத்தை இழந்து, மறைத்து வாழும் வேதனை குறித்து கொதித்து கத்துகிறாள் அம்மா ஹ்யானா. குழம்பி நின்ற விசுவை கோரிப்பாளயம் அழைத்து செல்கிறார் விவேக். யூத சமாதியை காட்டி, இது உன் தாத்தாவின் சமாதி என அறிமுகப்படுத்துகிறார். அதனை ஒரு முஸ்லிம் குடும்பம் பராமரித்து வருவதையும் வாஞ்சையுடன் சொல்கிறார். அப்பாவின் வார்த்தைகளால். தனது வரலாற்றை, தன் அம்மாவின் பின்புலத்தை அறிந்து கொள்கிற‌ விசு

வீட்டிற்கு திரும்பி சென்று, அம்மாவை அணைத்துக்கொண்டு சவிதா எனும் சபீகா இங்கையே இருக்கட்டும் என நா தழதழத்து அழுகிறான்.

ஒரே நாளில் காரணமற்ற வெறுப்பின் விளைவுகளை, வரலாற்றை விசுவுக்கு புரிந்து கொள்ள முடிகிறது என்றால், தன் அடையாளங்களை மகனுடன் பகிர்வதை எது ஹ்யானாவை தடுத்தது..?

தான் ஒரு யூதர் என்பதை அவனுக்கு முன்பே சொல்வதில் என்ன தயக்கம் இருந்தது என தெரியவில்லை.

அதுவும்  வீடெங்கும் குவிந்து கிடக்கும் சரித்திர புத்தகங்களுடன், அயோத்தி பற்றிய புரிதலுடைய‌  ஹ்யானாவால் வளர்க்கப்பட்ட மகனை எது இஸ்லாமியர்களை வெறுக்க செய்தது?, டிசம்பர் 6 கலவரத்தில் மாட்டிக்கொண்டவன் எதேச்சையாகக்கூட  எது கோரிப்பாளையம் வராமல் தடுத்தது எனபவை நெருடலாகவே உள்ளது.அதனாலேயே கடைசி  இரண்டுபக்கங்கள் எழுதப்படாமலிருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.

மற்றபடி. நாவலை எழுத செய்த பயணங்கள், சந்தித்த மனிதர்கள்  எடுத்த சிரத்தைகள் ஊக்கமூட்டுகின்றன.  கன்னடத்திலிருந்து தமிழுக்கு அருமையாக மொழிபெயர்த்திருக்கிறார் கே.நல்லதம்பி

எதிர் வெளியீடு

96, நியூ ஸ்கீம் ரோடு,
பொள்ளாச்சி – 642 002
தொலைபேசி: 04259 226012
கைபேசி: 98650 05084
மின்னஞ்சல்: ethirveliyedu@gmail.com