கடந்த ஒரு வாரமாக சொல்லகத்தில் டெக்கர் தத்துவ விவாதம் நடக்கிறது. இன்றைய ஹைடெக்கர் தத்துவ விவாதத்தில் “உலகம்” என்கிற அத்தியாயம் வாசிக்கப்பட்டது. அதில் அவர் average everydayness பற்றி பேசுகிறார். நம் அன்றாட வாழ்விற்கும், தத்துவார்த்தமான இருப்பிற்கும் உள்ள உறவை சொல்வதாகவே நான் average everydayness ஐ புரிந்து கொள்கிறேன். ஆரம்பத்தில் ஹைடெக்கர் சொல்லும் உலகத்திற்கும் நம் அன்றாடத்திற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்றே தோன்றும்.

அனால், அவர் முன்வைக்கும் உலகத்தை மிக நுட்பமாக புரிந்து கொள்ளவேண்டும். பொதுவாக தத்துவவாதிகள் பெரிதும் அன்றாடத்தை பொருட்படுத்துவதில்லை. அன்றாடத்தில் தான் நாம் அனைவரும் வாழுகிறோம். ஆனால், தத்துவம், ஆன்மிகம் பக்கம் வரும் போது அன்றாடத்தை புறம் தள்ளி பார்க்கும் மனநிலை தத்துவவாதிகளிடம் உண்டு. தத்துவ ஆர்வமுள்ளவர்களும் செய்யும் தவறு என்றே நினைக்கிறேன். ஹைடெக்கரின் சராசரித்தனத்தில் உள்ள நுட்பத்தை புரிந்துகொள்வதற்கு முன் ஒரு வேறுபாட்டை உணரவேண்டும். நாம் “இருத்தல்” என்பதை அறிதல்முறையோடு தொடர்புபடுத்தியே புரிந்துகொள்கிறோம்.

அறிதல்(knowing)என்பது வேறு, இருத்தல்(being) என்பது வேறு என்ற அடிப்படை வேறுபாட்டை புரிந்துகொள்ளும்போது தான் ஹைடெக்கர் சொல்லும் “உலகம்” பற்றி புரிந்துகொள்ளமுடியுமென்று நினைக்கிறன். உதாரணமாக, நான் ஒரு பொருளை பார்க்கிறேன் என்றால் அந்த பொருளின் உண்மைத்தன்மை அறியும் பொருட்டே என் இருப்பென்பது நிலைநாட்டப்படுகிறது என்ற புரிதலுடன் இருப்பதையும், அறிவென்பதே மனிதனின் முழுமுதற் சாரம், அதனைக் கொண்டே நான் என்னையே அறிகிறேன், அனுபவிக்கிறன் என்று புரிந்துகொள்வதையும் சொல்கிறேன். மேற்கத்திய தத்துவத்தில் epistemology எனும் பிரிவுண்டு. அந்த கருத்துகளை பார்த்தோமேயானால், ஒரு பொருளை நான் எவ்வாறு அறிகிறேன்.

காணும் பொருளின் உண்மைத்தன்மை யாது? உண்மையில் புற நிலையில் பொருள் என்றவொன்று உண்டா? அல்லது மனதின் காட்சி வடிவங்களா? இதனை பொருத்து அமையும் ”அனுபவம்” என்பது புறம் சார்ந்ததா? அகம் சார்ந்ததா?போன்ற கேள்விகளை, விசாரணைகளை உள்ளடக்கியது. முழுக்க அறிதலோடு(knowing) மட்டுமே தொடர்புடைய தத்துவங்கள் அடிப்படையில் தான் தத்துவம், இன்றைய அறிவியல் முதற்கொண்டு உலகத்தையும், மனிதனின் இருப்பையும் புரிந்துகொள்ள முயல்கிறது. ஆனால், சராசரியாக பார்த்தால், நாம் எந்த நேரமும் ஒவ்வொரு பொருளையும் அவதானித்துகொண்டே இருப்பதில்லை.

ஆகச் சிறந்த தத்துவவாதியாக இருந்தாலும் தினசரி பல் விளக்குவார், பொங்கலுக்கு கூடவே தொட்டுக்கொள்ள மெதுவடை வைத்தால் சாப்பிடுவார். ஏன் வடை வட்ட வடிவத்திலுள்ளது? என்றெல்லாம் பார்க்கமாட்டார். ஆக, எவராகினும், ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் நம் அறிதலையெல்லாம் மீறிய இருப்பானது ஓர் புள்ளியில் நிலைகொள்கிறது. ஹைடெக்கர் சொல்லும் வேறுபாடு இது தான். தத்துவவாதியாக இருந்தாலும் அவரவர் தன் அன்றாடத்தோடு இணையும் அவரது இருப்பே ஹைடெக்கர் உலகம். அவ்வாறான இருப்பை DASEIN(being there) என்றழைக்கிறார். அன்றாடத்தில் என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்த்தால் இயற்கையான விலங்குகளின், மரங்களின் மற்ற எல்லாவற்றின் விரிவான உலகம் மட்டுமல்ல.

நம் கண்முன் உடனடியாக இருப்பதும் அன்றாடத்தில் உள்ளவை. கண்முன் என்னவெல்லாம் இருக்கும்? உதாரணமாக, வீடு, கதவு, அறை, ஜன்னல், காலண்டர், டேபிள், மடிக்கணினி, பேனா, பேப்பர், கைபேசி, சுத்தியல், ஸ்க்ரூ ட்ரைவர், இப்படி எல்லா விதமான பொருட்களும் கண் முன் உடனடியாக இருக்கும் உலகம். இதனை ஹைடெக்கர் சொல்லும்போது வேலைக்கான இடத்தின் உலகம்( the world in the workplace) என்கிறார். ஒரு பேனாவிற்கு dasein எனும் இருப்புண்டா? என்று கேட்டால் உண்டு. எப்படியென்றால் எழுதுதல் எனும் உபயோகத்தில் உள்ளது. அந்த பேனாவை நான் கையிலெடுத்து எழுதாமல் என் இருப்பானது அதன் உபயோகத்தோடு இணையாது.

ஆனாலும், அறை, டேபிள் என் அமர்வு, உள்ளிட்டவைகளோடு நானும் இணைகிறேன் அந்தப் பேனாவும் இணைகிறது. பேனா என்பதை எப்படி பார்க்கிறேன் என்றால் ஏற்கனவே உள்ள அனுபவத்தை வைத்து பார்க்கிறேன். மேலும் அந்த பேனாவின் உபயோகம் மட்டுமே என் கண்ணுக்கு தெரிகிறது. அதன் வடிவத்தையோ, நிறத்தையோ, நீள அளவீடுகளையோ பார்த்து ஆய்வுக்கு உரியதாக பார்ப்பதில்லை.  ஆக, ஒரு பொருளின் இருப்பானது மற்ற பொருளின் உபயோகத்தை வைத்தே நிலைகொள்கிறது. உதாரணத்திற்கு டேபிள் என்றவொன்று இருப்பதனாலேயே பேப்பர் இருக்கவேண்டிய கட்டாயமுள்ளது. பேப்பர் இருப்பதாலேயே பேனா இருக்கவேண்டிய அவசியமுள்ளது. Dasein என்பது உடனடியான சூழ்நிலையிலும் சுழல்கிறது. மாறாக, தனித்து வேறுபடுத்தி பார்க்கவேண்டிய ஒன்றாக ஹைடெக்கர் வலியுறுத்தவில்லை. இந்த அடிப்படையில் பார்த்தால் எதையும் “மாயை” என்று சொல்லிவிடமுடியாது.

மேலும் தத்துவ வாசிப்பின் போது PRESENT AT HAND மற்றும் READY TO HAND பற்றியும் பேசப்பட்டது. PRESENT AT HAND என்றால் என்னிடம் ஒரு தெலுங்கு புத்தகமொன்று உள்ளது. எனக்கு தெலுங்கு படிக்கத் தெரியாது. ஆனால் அது இருக்கிறது. அதை வைத்து நான் செய்வேன்? அதுவும் இருக்கும். நானும் இருப்பேன். அவ்வளவு தான். முன்னால் இருக்கும் ஆனால் என்னவென்று தெரியாது. இது PRESENT AT HAND. அதுவே, எனக்கு தெரிந்த ஒரு தமிழ் புத்தகம் இருந்தால் அதை நான் உடனே எடுத்து புரட்டிப் பார்ப்பேன். இது READY TO HAND. அதாவது உபயோகிக்கத் தெரிந்தவொன்றோடு இணையும் என் இருப்பு என புரிந்துகொள்ளலாம். எனக்கு சம்மந்தமில்லாதவைகளாக இருந்தால் ஓரம் வைத்துவிடுவேன்.

இதனை நான் என் உணர்வுகளோடு ஒப்பிட்டு பார்க்கிறேன். அதாவது “புதிதான அனுபவம் என்றால் நமக்கு என்னவெ+ன்றே தெரியாது” என்று நினைக்கிறேன். இதுவரை நாம் அனுபவிப்பது அனைத்தும் ready to hand வகையில் சேரும். அதாவது, எனக்கு தெரிந்த, பழகிய உணர்வுகளோடே என் இருப்பானது சுழல்கிறது. நமக்கு தெரியாத உணர்வுகள் பல உண்டு. ஒருமுறை என் கல்லூரி கால நன்பனிடம் தலை வலிக்கிறது என்று சொன்னேன். அதற்கு அவன், அப்படியா எனக்கு தலைவலி வந்ததேயில்லை. தலை வலியா? அது எப்படியிருக்கும்? என்று கேட்டான்.

இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் அந்த நண்பன் இதுவரை பார்க்காத தலைவலி உணர்வு ஒன்று உண்டல்லவா?. என் உடல் அன்றாடம் செயல்படுவதை தாண்டிய ஓர் இனம் புரியாத வலியோ, இதுவரை பழகாத ஒன்றோ வந்தால் என் இருப்பானது தடுமாறுகிறது. மீண்டும் நிலைகொள்ள அவ்வுணர்வானது ready to hand நிலைக்கு வந்தால் தான் ஏற்கமுடிகிறது. சாதாரண தலைவலி. தைலம் இல்லையா? என்று கேட்குமளவிற்கு ready யாக இருக்க வேண்டும்.  இவ்விதத்தில் தான் ஹைடெக்கரின் சராசரியான உலகம் சுழல்கிறது.