வெ.இறையன்புவின்சாகாவரம்’ :

சிறந்த படைப்புகள், முதல் வரியில் தொடங்கிக் கடைசி வரியில் முடிந்துவிடுகின்றன. வெ.இறையன்புவின் ‘சாகாவரம்’ நாவலும் அப்படித்தான். ‘முடிந்துவிட்டது. இனியொன்றுமில்லை’ என்பதுதான், ‘சாகாவரம்’ நாவலின் முதல் வரி. ‘அது மரணமற்ற மரணத்தின் சாயல். பார்வையற்ற வாழ்வின் ஆரம்பம்’ என்பதுதான், நாவலின் கடைசி வரி. ‘முடிந்துவிட்டது’ எனத் தொடங்கி ‘ஆரம்பம்’ என்ற கடைசிச் சொல்லுடன், ‘சாகாவரம்’ முடிகின்றது. முடிவு என்பது யாது? முடிவற்றதாக மனித வாழ்வு எப்போதும் உயிர்த்துடிப்புடன் இயங்கவியலாதா? ஆரம்பம் என்பது யாது? இயக்கமற்றுத் தேங்குவது ‘சிரஞ்சீவி’ என்ற பெயருக்கு உரிமையுடையதாகுமா? இவ்வினாக்களுக்கெல்லாம் விடைகளைத் தேடும் ஓர் அறிவுப் பயணமாகத்தான், ‘சாகாவரம்’ நாவலின் வாசிப்பனுவத்தைக் கூர்மையான விழிப்புணர்வுடன் தகவமைத்துக்கொள்ளவேண்டும். இந்நாவலின் தொடக்கத்துக்கும் முன்பாக, ‘கீதாசாரம்’போல ‘முன்னொட்டு’ ஒன்று காணப்படுகிறது. “அவன் அந்தச் சாஸ்திரத்தை வாசித்தான்” எனத் தொடங்குகிறது, அந்த முன்னொட்டு. எந்தச் சாஸ்திரம் அது? “மரணத்தைக் கண்டு எல்லோருக்கும் பயம். எல்லா பயங்களும் மரணத்தில் முடிகின்றன. ஒவ்வொரு மரணமும் நமக்கு எச்சரிக்கை. நாமே சாகும் அவலத்தில் ஒவ்வொரு சாவிலும் அவதி. அப்போதைய அழுகை நமக்காகவே… பிரார்த்தனைகள், கோயில்கள், மதங்கள் அனைத்துமே மரணம் மட்டும் இல்லையெனில் மறைந்துபோகும். மரணத்தைப் புரிந்தவன் வென்றவனாகிறான்….. வென்றவன் எவனும் பயம் கொள்வதில்லை. பயம் கொள்ளாதவனுக்கு மரணமுமில்லை”  (ப.1) என்கிறார் வெ.இறையன்பு. செறிவான கவிதை போல விரியும் இந்தச் ‘சாஸ்திரத்துடன்தான்’, சாகாவரத்தை வெ.இறையன்பு தொடங்குகிறார். இத்தொடக்கம், ‘மரணம்’ பற்றிய கேள்வியாகவும் தேடலாகவுமே இந்நாவல் விரியப்போவதைக் குறிப்புணர்த்திவிடுகின்றது. அனைத்துக்கும் மூல விதையான இந்த மறைபொருளைப் படிப்போர்  மனத்தில் குவித்து, அதைத் தேடி அவர்கள் உள்வாங்கும் விதத்தில், ‘உள்ளுணர்வுப் பயிற்சியாக’ இந்நாவலை ஆசிரியர்  புனைந்துள்ளார்.  “இன்று யார்? என்ற கேள்வியுடன் உதயமாகும் ஒவ்வொரு நாளும் நரகம்தான்” (ப.3) என்கிறார் வெ.இறையன்பு. ஆனால், இந்தக் கேள்வியுடன் உதயமாகாத நாள் என்று ஒன்று இவ்வுலகில் இல்லை என்பதுதான், மகத்தான மானுடச் சோகமாகும். ‘புனரபி ஜனனம், புனரபி மரணம்’ – அதாவது, மீண்டும் மீண்டும் பிறப்பதும் இறப்பதும்தானே, நமது மானுட வாழ்வாயுள்ளது!

‘Can you define death?’ எனக் கேட்கப்பட்டபோது, ‘Can you define birth?’ எனக் கன்ஃபூசியஸ்  எதிர்க்கேள்வி வீசிச் சமாளித்ததுதான் நினைவுக்கு வருகிறது! இறப்பும் பிறப்பும் ஒருவகையில் புதிர்களே என்றாலும், வேதாந்தங்களும் உபநிடதங்களும் சார்வாகமும் பௌத்தமும் ஒளிவீசும் மண்ணில் பிறந்திறந்து இளைத்துச் சலித்துப் பாழ்வெளியில் திளைத்துக் கடந்தோருக்கு, வாழ்வும் சாவும் புரிந்துகொள்ளவே முடியாத இரட்டைச்சாபங்கள் அன்று. மரணத்தின் அர்த்தத்தை அல்லது வெறுமையை மானுடன் புரிந்துகொள்ளும்போது, அதைக் கண்டு பதுங்காமல் அதை நேருக்கு நேர்  எதிர்கொள்ளும் நெஞ்சுரம் அவனுக்கு வாய்த்துவிடுகிறது என்கிறார்  வெ.இறையன்பு. ஆனால், இந்த முடிவு, நாவலின் இறுதியில்தான், நசிகேதனால் அடையப்படுகின்றது. அதுவரைக்கும் மரணத்தைப் பற்றிய பல்வேறு குழப்பங்களும் தடுமாற்றங்களும் அதிவூட்டல்களும் ஆசுவாசப்படுத்தல்களுமே நாவலை ஆக்கிரமித்திருக்கின்றன. இவ்வகையில், ‘மரணம் பற்றிய விரிவான ஒரு விசாரணயாக’, இப்புனைவை ஆசிரியர்  ஒருமுகப்படுத்தியுள்ளார்.

“தனிமையைக் காட்டிலும் மிகப்பெரிய துன்பம் எதுவுமில்லை. அதனால்தான் தனிமைப்படுத்துவது தண்டனை ஆக்கப்பட்டிருக்கிறது. மனிதனைத் தனிமைப்படுத்தும் கடைசி முயற்சி மரணம்” (ப.9) எனத் ‘தனிமைப்படுத்தும் தண்டனையாக’ மரணத்தை நசிகேதன் பார்க்கிறான். என்றாலும், உண்மையில் அது ‘தண்டனையா, இல்லை விடுதலையா?’ என்ற குழப்பமும் அவனுக்கிருக்கிறது. மரணமடைந்தவர்களுக்கும், மரணமடையக் காத்திருக்கும் மனிதர்களுக்குமான வேறுபாடுதான் யாது? ‘நேற்று யாரோ, இன்று நீ, நாளை நான்’ என்பதுதானே மெய்ம்மை! அப்படியானால் துயரம் யாருக்கு? மரணமடைந்தவருக்கா? இன்னும் மரணமடையாது உடன்வாழ்வோரின் மரணம் ‘கண்டும் காணாமல்’ காத்திருப்போருக்கா? “சாவைக் காட்டிலும் துயரமானது, சாவு வீட்டின் சூழல். மயான அமைதி கப்பிக்கொண்டிருக்கும் அந்த இடத்தில், மரணமடைந்தவர்களின் உறவினர்கள் பரிதாபமானவர்கள். யதார்த்தத்தை நோக்கிய பயணத்தில் அவர்கள் சந்திக்கும் நெருடல்கள் கொடுமையானவை” (ப.11) என்கிறார் வெ.இறையன்பு.

இந்நெருடல்கள் ஏன் ஏற்படுகின்றன? நாள்தோறும் நம்மைச் சுற்றிச் சாவுகளைத் தொடர்ச்சியாகச் சந்தித்தாலும், ‘நாம் மட்டும் சாகவே மாட்டோம்’ என்ற நினைப்புறுதி நம்முள் நங்கூரமிடுவது எவ்வாறு சாத்தியமாகின்றது? அழிவைப் புரிந்துகொள்ள மறுக்கும் அறியாமைதான் காரணம். நிறைவாழ்வு வாழ்ந்துவிட்டுச் சுக போகங்கள் அனைத்தையும் அனுபவித்துவிட்டுப் புலன்கள் வற்றியொடுங்கித் தேய்மானமுற்றுச் சாவு மெல்ல மெல்லப் பழுத்து உதிர்கிற இலையாகத் தவிர்க்கவியலாத இயற்கையின் அழிவாக வந்து தழுவிக்கொள்வது வெகு சிலரைத்தான்! பெரும்பாலும் திடீர்ச் சாவுகளும், அற்பாயுள்களும், விபத்து மரணங்களும், விபரீத மரணங்களும், தற்கொலைகளும், பட்டினிச்சாவுகளும், பரிதாபச்சாவுகளும், நோய்ச்சாவுகளுமே உலகெங்கும் மிகுதியாக நேர்கின்றன. இவ்வளவு சாவுகளுக்குப் பின்னும் வாழ்தலுக்காகத்தான் மானுடன் ஏங்குகின்றான். இதையே  நசிகேதனும் உணர்கின்றான்.

“நாம் நிரந்தரமாக இங்கேயே இருக்கப்போகிறோம் என ஒவ்வொருவரும் நினைத்துவிடுகிறோம். மரணத்திற்கான தயாரிப்பு எதுவும் நிகழ்த்துவதில்லை… குடும்பமற்ற வாழ்வு பாதுகாப்பானது. பாதுகாப்புக்காக ஏற்படுத்திக் கொள்கிற தயாரிப்புகள் மூலம் வருகின்ற பாதுகாப்பின்மைகளே அதிகம்….. இப்படித் தெரிந்த ஒவ்வொருவராய்க் காணாமல் போவதும், அதை நினைத்துத் தேம்பித் தேம்பியழுவதும்தான் வாழ்க்கையா? அகல வாய்த்திறந்திருக்கும் சவக்குழியின்முன் நிற்கும் வரிசையில் என் இடம் எங்கே? கண்முன் நிகழும் எல்லா மரணங்களிலும் சிறிது சிறிதாகச் செத்துப்போகும் நான், என் மரணத்திற்கு எதைப் பாக்கி வைத்திருப்பது? மரணமற்ற இடம் எதுவும் கிடையாதா? சாவுகளைச் சந்திக்காத மைதானம் ஒன்று இருக்காதா? அங்குச் சென்று வாழ முடியாதா?” (பக்.13-14) என்றெல்லாம் நசிகேதன் கதறிப் புலம்புவதற்கு, நாவலில் வலுவான காரணங்கள் காட்டப்பட்டுள்ளன. முப்பது வயது வரையில் நெருக்கமான மனிதர்களின் மரணம் எதையும் எதிர்கொள்ளாமல், இயல்பாக வாழ்வை எதிர்கொண்டுவந்த நசிகேதனுக்கு, அதன் பிறகு அடுத்தடுத்துக் குறிப்பாக மூன்றே மாதங்களுக்குள் உற்ற நண்பர்கள் பலரின் எதிர்பாரா மரணங்களைப் பார்க்க நேர்கிறது. ‘கபீர்  அலி, பார்த்திபன், கோபி, ரூப் குமார், குணா, கொல்லிமலை ஞானி, நல்லம்மாக் கிழவி’ எனப் பல மரணங்களைச் சந்திக்கிறான் நசிகேதன். இதனால், ‘மரணமிலாப் பெருவாழ்வு’ என்ற ஒன்றுண்டா எனத் தேடத் தொடங்குகிறான். நசிகேதனைச் சுற்றி நிகழும் ஒவ்வொரு மரணமும் அகால மரணமாக இருப்பதும், இயற்கைச் சாவிலிருந்து வேறுபட்டுத் துன்புறுத்தும் பல கொடிய நினைவுகளாய் மரணம் அவனைத் தொடர்ந்து  துரத்துவதும் நசிகேதனின் தேடலை மேலும் விரைவுபடுத்துகின்றன. “மரணத்தின் தாக்கம் என்பது, வெறுமையின் தாக்கம். இழப்பின் நீட்சி. முதல் கடிதம், முதல் குழந்தை, முதல் பணி, முதல் பள்ளியைப்போல முதல் மரணமும் மறக்கமுடியாதது. வேண்டியவர்களின் மரணம் நமக்கும் ஆழமான காயத்தை ஏற்படுத்திவிடுகிறது. ஞாபகங்கள் நம்மைத் தடவும்போதெல்லாம், அது தழும்பாகத் தட்டுப்படுகிறது. மரணம் வருகிற வயதில் வந்தால் யார்  கவலைப்படப்போகிறார்கள்? சாகிறவர்களெல்லாம் நல்லவர்களாகவும் அப்பாவிகளாகவும் இருக்கிறார்களே! அநியாயம் பண்ணுபவர்களெல்லாம் சௌக்கியமாக இருக்கிறார்களே, என்ன செய்வது? மரணம் தர்க்கங்களை மீறியதாகவும், தர்மங்களைத் தாண்டியதாகவும் அல்லவா இருந்து தொலைக்கிறது!” (ப.14-15) என்கிறார் ஆசிரியர்.

தற்கொலைச் சாவு, மாரடைப்புச் சாவு, விபத்துச் சாவு, ரத்தக்குழாய் வெடித்துச் சாவு, நோய்ச் சாவு, முதுமைச் சாவு, இயற்கைச் சாவு, அகால மரணம் எனப் பற்பல வகைகளில் மரணம் நசிகேதனுக்கு வேண்டியவர்களைக் காவு கொள்கிறது. இவர்களுள், ‘கொல்லிமலை ஞானி’ மட்டுமே, ‘சாவை’ மகிழ்ச்சிகரமாக ஏற்றுக்கொள்கிறார். பிற மரணங்கள் யாவும் துன்புறுத்தும் அவலச் சாவுகளே! இச்சாவுகள், நசிகேதனுக்குச் சொந்த மரணத்தை நினைவூட்டி விடுகின்றன. அவனுக்குத் திருமணம், குடும்பம், வீடு, சொத்து, சுக போகங்கள் என நீளும் சாதாரண வாழ்வில் பிடிப்பற்றுப் போகிறது. ரத்தமும் சதையும் வெகு விரைவில் சாம்பலாவதுதான் வாழ்வின் சாரம் என்பதை, அவனால் ஏற்றுக்கொள்ளவியலவில்லை. எனவே, துன்புறுத்தும் சாவை வெல்வதே, அவனுக்கு வாழ்வின் குறிக்கோளாகிறது. “என்னப்பா! வரவர உன்னோட போக்கே சரியில்லை. இப்படி எதுக்கெடுத்தாலும் இடிஞ்சி போனா, என்ன பண்ண முடியும்? நம்ப கையிலே என்ன இருக்கு? நாளைக்கு நாங்க போனாலும் ஆச்சரியப்படறதுக்கு ஒன்னுமில்லை. நீ திடமா வாழப் பழகிக்கணும். கடலுல மீன் பிடிக்கிறவங்க எப்ப வேணுமின்னா செத்துப் போவமுண்ணு தெரிஞ்சி தானப் போறாங்க. நம்ம வாழ்க்கையும் அந்த மாதிரிதான். யாருக்கு வேண்ணா எப்ப வேண்ணா சாவு வரலாம்” (பக்.32-33) எனப் பெற்ற தகப்பனே அறிவு கொளுத்தியும்கூடத் துக்கக்கடலில் மூழ்கிக்கிடக்கும் நசிகேதனைச் சுலபமாகத் தணிவிக்க முடிவதில்லை. மரணத்தைக் காட்டிலும் கொடிய ‘மரண பயம்’, நசிகேதனைச் சுற்றிலும் முற்றுகையிடுகிறது. எப்போது மரணம் வந்துவிடுமோ என்ற  பிரக்ஞையுடன், எப்போதும் மரணத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறான் நசிகேதன். இப்பெயரைக் காரணப்பெயராக ஆசிரியர்  இப்பாத்திரத்திற்குச் சூட்டிப் பார்த்துள்ளார். இந்த ‘உபநிஷத்’ பெயர், அப்பெயருக்குரியவனின் தேடல், இந்த நசிகேதனுக்கும் உண்டு என்பதைக் குறிப்புணர்த்துகிறது. நாள்கள் செல்லச் செல்ல நசிகேதனின் சிந்தனை முழுவதும் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றியே ஒருமையுற்றுக் குவிந்துவிடுகிறது. மரணம்! மரணம்! மரணம்! அதைப் பற்றியே நசிகேதன் சிந்திக்கின்றான். இத்தேடலே, அவனுக்கு வாழ்வின் அகமும் புறமுமாகிறது. “எப்படியிருக்கும் மரணம்! சட்டென்று உடல் முழுவதும் பொறுக்க முடியாதபடி வலி தோன்றுமோ! அதைத்தான் மரணவலி என்கிறார்களா! இதயம், மூளை, நுரையீரல் எல்லாம் ஒரே நேரத்தில் நின்றுபோகுமோ! நிரந்தரமான இருட்டுக்குள் உருட்டிவிடும் அனுபவம் ஏற்படுமோ! இந்த அழகிய பூமி, ஊர், மண், நேசமான மனிதர்கள், அழகான பறவைகள், பிரியமான மலர்கள் அனைத்தையும் விட்டு விட்டுப் போய்விடுவோமா? அம்மா, அப்பா, நான் நேசிக்கும் பள்ளி, எளிமையான மாணவர்கள் எல்லோரையும் ஒட்டுமொத்தமாக இழக்க நேரிடுமோ? இனி காலை நடையும், மாலையில் நிகழ்த்தும் தியானமும் நிகழாதா? எப்படியிருக்கும் மரண வேதனை? யாரைக் கேட்பது? மரணமடைந்தவர்களைத் தவிர வேறு யாரிடம் விசாரிக்க முடியும்? மரணத்தைப் பற்றி அறிய மரணமடைவதைத் தவிர வேறென்ன வழி…. மரணத்தை மரணத்தால் துழாவ வேண்டுமா?” (பக்.39 – 40) என்று அடுக்கடுக்காகத் தனக்குத் தானே கேள்விகள் கேட்டுக்கொள்கிறான் நசிகேதன்.

இந்த எண்ணங்களின் ‘ஓயாத துரத்தல்கள்’ காரணமாக, அன்றாட வாழ்வைச் சகஜமாக எதிர்கொள்ள முடியாமல் நசிகேதன் இடர்ப்படுகின்றான். மலரைப் பார்த்தால் – எப்படியும் இது உதிர்ந்துவிடப் போவதுதானே என்றும், தளிரைப் பார்த்தால் – எப்படியும் இது சருகாகிவிடப் போவதுதானே என்றும் நினைப்பதைச் சிறிதும் அவனால் தவிர்க்க முடிவதில்லை. இதனால் ரசனையும்  மகிழ்ச்சியும் அவனிடம் குறைந்துவிடுகின்றன.

‘எல்லையற்ற துக்கம்’தான், எப்போதும் நசிகேதனைச் சூழ்ந்துகொண்டுள்ளது. மரணத்தை அவன் தியானிக்கிறான். அதனால், அவனைச் சுற்றிலும் எப்போதும் ‘மரணமே’ தெரிகின்றது. அவன் மனம், மேன்மேலும் தோண்டிக் கொண்டே போவதால், இயல்பான வாழ்வின் இனிமையை ஒரு நொடியும் நுகரமுடியாத பெருஞ்சோகம், அவனைப் பற்றிப் படரும் அவலக்கொடியாகிறது. “வயதுக்கும் மரணத்துக்கும் சம்பந்தமில்லை என்றாகிவிட்டது. ஆயுளை வெறுமனே ஜவ்வாக நீட்டிக்க மருந்துகளும் சிகிச்சைகளும் பெருகிவிட்டாலும், அதேநேரத்தில் முன்னறிவிப்பின்றி அகால மரணங்களும் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கின்றன. வாழ்க்கையைவிட்டு விலகிவிட வேண்டும் என்றால், ஒரு கார்ப்பரேட் மருத்துவமனைக்குப் போனால் போதும் என்கிற நிலையே நீடிக்கிறது” (ப.55) எனச் சுற்றிலும் நிகழும் ‘வயதுக்கும் முடிவுக்கும்’ தொடர்பில்லாத ‘அகாலச் சாவுகள்’ பற்றிக் கவலைப்படுகின்றான் நசிகேதன். ‘எனக்கும் ஒருநாள் மரணம் உறுதியாக வரும்’ எனத் தெளிவாகத் தெரிந்தபிறகும், அதை வெல்லக் கருதாமல், அற்ப ஆசைகளில் உழன்றுகொண்டிருப்பது மனிதனுக்கு எவ்வாறு சாத்தியமாகிறது என்றும் நசிகேதன் வியப்படைகிறான். மரணத்தை வெல்லமுடியாத விஞ்ஞானம் என்பது வீண்தானே என்றும் அவன் நினைக்கிறான்.

“மரணம் ‘என்று நிகழும்?’ எனத் தெரியாமலிருப்பதுதான் வாழ்வின் ரகசியம். அதைத்தானே தீர்மானித்துக் கொள்வதால்தான் தற்கொலை பரிதாபம். அடுத்தவர்களுக்கு வருத்தப்பட எனக்கென்ன அதிகாரமிருக்கிறது? எனது மரணமும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். மூளையில் எந்த நரம்பு பலகீனமாக ஓடிக்கொண்டிருக்கிறதோ? இதயத்தில் எந்தக் குழாய் சேதாரமடைந்துள்ளதோ? ஏந்த உடம்பை எப்போது பரிசோதித்தாலும் அதில் பத்துக் குறைகளை அறிய முடியும். மருந்து கண்டுபிடிக்க முடியாவிட்டாலும், நோயின் பெயர்களைக் கட்டாயம் அறிந்து கொள்வோம். அதுதானே விஞ்ஞான வளர்ச்சி!” (பக். 55 – 56) என, ‘மரணத்தை வெல்ல முடியாத’ விஞ்ஞானத்தைக் ‘கேலி’செய்கிறான் நசிகேதன். தாவரவியல் ஆசிரியனாகப் பணியாற்றும் அவனுக்குப் பள்ளிக்கூடம் போவதும், பாடமெடுப்பதும் ஒவ்வாமையாகிவிடுகின்றன! இந்த வீணான ‘அன்றாட உலகியல் சடங்குகளிலிருந்து’ தப்பித்து வெளியேறிக் கடைசிக் கேள்வியான ‘மரணம் என்பது யாது? என்பதை நோக்கியே நசிகேதன் பயணப்படத் தொடங்குகிறான். இப்பயணத்தைத்தான், அணுவணுவாகச் சிறப்பாகச் ‘சாகாவரம்’ விவரிக்கிறது. ‘மரணத்தைச் சாகாமலேயே வாழ்ந்துகொண்டே நான் உணரப்போகிறேன்’ என்கிறான் நசிகேதன். இந்த ‘வைராக்கிய இலக்கை’ அவன் எப்படியடைகிறான் என்பதுதான், ‘சாகாவரம்’ நாவலாகியுள்ளது.

மு.வ.வின் நடை எளிமையையும், ஜெயகாந்தனின் கருத்தாழத்தையும், இந்தியத் தத்துவ சாரமான விழுமியங்களின் மெய்ம்மைச் சாயலையும் இறையன்புவின் புனைவெழுத்தில் பரவலாகக் காண்கிறோம். உபநிடத் தத்துவங்களும், ஜென் பௌத்தமும், சித்தர்களின் விழிப்புணர்வும் ‘சாகாவரம்’ நாவலில் ஒருசேரப் பின்னிப் பிணைந்துள்ளன. ஒரு  நாவல் என்பது, வெறும் உணர்வுகளின் தொகுப்பான பதிவு மட்டுமன்று; அது ஓர்  அறிவுத் தேடலின் வெளிப்பாடும் ஆகும் என்பதற்குச் ‘சாகாவரம்’ சாட்சியமாகிறது. “ஓர் உயிர்  பிரிவதை முதன்முதலாக நசிகேதன் அருகில் இருந்து பார்த்தான்.அவ்வளவுதான்! வாழ்க்கை, மகிழ்ச்சி, சாதனை, சம்பளம், ஜாலி எல்லாம்! ஒரே நிமிடத்தில் அத்தனையும் அழிந்துபோய்விட்டன. கனவுகள், ஆசைகள், அபிலாஷைகள், இலட்சியங்கள் எல்லாம் இனி ஏதும் அந்த உயிருக்கு இல்லை. இப்போது நசிகேதன் இதயம் இன்னும் இரும்பானது. அவன் கண்களில் நீர் வரவில்லை. நெஞ்சு வலிக்கவில்லை. அழ வேண்டும் என்ற உந்துதல் ஏற்படவில்லை. இந்த மரணம் அவனுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. இனி எந்த மரணமுமே, எந்தப் பாதிப்பையுமே ஏற்படுத்தாது என்பதுதான் உண்மை” (ப.81) என, ‘மரண பயம்’ என்ற நிலையிலிருந்து விலகி, ‘மரணம் என்ற யதார்த்த உண்மையை’ நேருக்குநேர்  எதிர்கொள்ளும் விழிப்பு நிலைக்கு நசிகேதன் நகர்வதாக ஆசிரியர்  காட்டுகிறார். ஆனால், ‘மரணத்தை வென்றாக வேண்டும்’ என்ற இலட்சியத்தைச் சிறிதும் நசிகேதன் மனம் நெகிழவிடுவதாயில்லை. மரணத்தை வெல்லும் அவன் பயணம், ‘வேலை – குடும்பம் – பாதுகாப்பு’ யாவற்றையும் உதறிவிட்டுத் தொடர்கிறது! ‘ப்ரக்ஞா’ என்ற ஒரு சான்றோர் வழிகாட்டக் கொல்லிமலைக்குப் பயணமாகிறான் நசிகேதன். அங்கு ‘ஆனந்தமே இயல்பாயுள்ள’ ஞானி ஒருவரைச் சந்தித்துத் தன் பதிலற்ற கேள்விக்குப் பதில் காண முனைகின்றான். அவர் தரும் ‘ஓலைச்சுவடி மூட்டையில்’, நசிகேதனின் ‘மரணமிலாப் பெருவாழ்வு’ பற்றிய கேள்விக்கும் பதில் கிடைக்கிறது. இதற்கு முன்பே, கொல்லிமலை ஞானியிடம் நசிகேதனை ஆற்றுப்படுத்தும் ‘ப்ரக்ஞா’ கூறும் பின்வரும் வாசகமும், நசிகேதனின் ‘ஆத்ம விழிப்பிற்கு’ப் பெருந் துணையாகிறது. “மரணம் என்பது வாழ்வுக்கான எதிர்மறையல்ல. ஆனால், அதற்குள் பழத்தின் கொட்டைபோலத் தங்கும் அது அவசியம். பழம் சாப்பிடுகையில் கொட்டை தட்டுப்படும்போது, நாம் கொட்டையைச் சபிக்கிறோம். அந்த விதையால்தான் பழம் கிடைத்தது என்பதை உணராமல்…. மரணமில்லாப் பெருவாழ்வு சாத்தியம். அதை அடைய முடியும். அடைந்தவர்கள் உண்டு. உடல் நீத்தும், உடல் நீக்காமலும்…. அதைக் கண்டு அறிவதற்கு மிகப் பெரிய வேள்விக்கும், சோதனைகளுக்கும் நீங்கள் உங்களை உட்படுத்த வேண்டும்” (பக். 93 – 94) எனக் கூறிக் ‘கொல்லிமலை ஞானி’யைத் தேடிப்போகச் சொல்லி, நசிகேதனை ஆற்றுப்படுத்துகின்றார் ‘ப்ரக்ஞா’. ‘சந்யாசம்’ என்பதற்குத் ‘திரும்பிப் பார்க்காமலிருத்தல்’ என்ற பொருளும் இருப்பதைச் சான்றோர்  ‘ப்ரக்ஞா’ மூலம் அறிந்து கொள்ளும் நசிகேதன், தன் பெற்றோரையும் வாழ்விடத்தையும் பணியிடத்தையும் திரும்பியே பாராமல், ஒரே இலக்காய்ப் பயணப்பட்டுக் ‘கொல்லிமலை ஞானி’யைச் சென்றடைகிறான்.

‘குப்பைகளை மூளையில் திணிப்போருக்குக் குளிப்பதற்குக்கூட ஒழுங்காக நேரம் கிடைக்காது’ என்றும், ‘எதையும் ஆழ்ந்து உற்று நோக்கு’ என்றும், ‘வாழ்க்கை என்பது நினைவுகளின் தொகுப்பு’ என்றும், ‘முறையாகவும் சந்தோஷமாகவும் வாழ்வதுதான் ஆன்மீகம்’ என்றும், ‘எதுவுமே உடனே கிடைச்சுடாது. தேடணும். நிறைய தேடணும்’ என்றும், ‘கருணை என்பது இருத்தலின் இயல்பான நிகழ்வுகளில்  தலையிடாமல், அனைத்தின் மீதும் சமமாக இருத்தல்’ என்றும் நசிகேதனுக்குக் ‘கொல்லிமலை ஞானி’ கற்றுத்தருகிறார். மேலும், தானாகவே அவன் கற்றுக்கொள்வதற்காகப் ‘பழம் ஓலைச்சுவடி மூட்டை’ ஒன்றையும் அவனுக்களிக்கிறார். அதிலுள்ள சுவடி ஒன்றைப் படித்துக் கொல்லிமலை ஞானிக்கும் மரணம் விரைவில் நிகழப்போவதை நசிகேதன் அறிந்துகொள்கிறான். “வெகு நாள்களுக்குப் பிறகு அவன் மனம் அடித்துக்கொண்டது. எந்த மரணத்தைக் கண்டு ஓடி ஒளிந்தானோ, எதை அறிந்து கொள்ள வந்தானோ, அந்த இடத்தில் இதுநாள்வரை குருவாக, தோழனாக, சகவழிப்போக்கனாக இருந்தவருக்குமா மரணம்! இந்த  சுவடிகள் எவ்வளவு உண்மை…. உடல் பெரிதில்லை என்றால் ஞானிகளின் மரணம் என்பது உடல் வேண்டாம் என்று ஒதுங்குதல்தானா? ஊடலின் சமீபம், ஸ்பரிசம் இதெல்லாம் இழக்கப்போகும் வேதனைதான் மரண சோகமா? ஏன் இன்னும் உடல் என்பது பெரிதில்லை என்பது எனக்குப் புரியவில்லை? என் அத்தனை வேதனையும், சோகமும் உடலே வாழ்வு என்று குழப்பிக்கொண்டதால்தானா? (பக். 133 – 134) எனச் ‘சாவை வெல்வதற்கு’ உடலை வெல்வதுதான் இன்றியமையாதது என்ற நினைப்புடன் கிடந்து நசிகேதன் அல்லாடுகிறான். மரணம் மட்டும் வலியில்லாமல் வந்தால்,  அதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதே, அவனது புரிதலாகும். மரணம் என்பது இனம் புரியாத வலியோடு தொடர்புகொண்டதாக இருப்பதுதான் மரண பயத்திற்குக் காரணம் என்றும் நசிகேதன் புரிந்துகொள்கிறான். இப்புரிதலுணர்வின் வெறுமையால்தான், ‘கொல்லிமலை ஞானி’ சாவைக் கொண்டாட்டமாகப் பார்க்கவும், அவனால் முடிகிறதெனலாம். “ஞானி உடலை ஒதுக்கிவிட்டு உள்ளுணர்வாய் மாறிவிட்டார். அசிங்கங்கள் போர்த்திய உடலைத் தாண்டி, அழகான உள்ளுணர்வின் சாரமாக ஆகிவிட்டார். இது மரணமல்ல – முக்தி; சாவல்ல – மோட்சம்; அம்மணமல்ல – நிர்வாணம் ; தப்பித்தலல்ல – விடுதலை. ஒருவகையில் இது துக்கமல்ல, கொண்டாட்டம். இந்த நிகழ்வுக்காக அழவேண்டியதில்லை. ஆனந்தமடைய வேண்டும். உடலைச் சுற்றி நடனமாட வேண்டும். இதைவிட அழகான வாழ்க்கையை யாரும் வாழ்ந்துவிட முடியாது. நல்ல வாழ்வின் நிறைவு அழகான கவிதையின் கடைசி வரியைப்போல அபூர்வமானது. வரவேண்டிய வடிவத்தில் வரவேண்டிய நேரத்தில் வருகிறபோது, மரணம் திருவிழாபோல” (பக். 140 – 141) எனக் கொல்லிமலை ஞானியின் மரணத்தைக் கொண்டாட்டமாகவும் திருவிழாவாகவுமே காண்கின்றான் நசிகேதன். முக்தி, மோட்சம், நிர்வாணம், விடுதலை, ஆனந்தம் என ஆழமான சொற்களால் ஞானியின் மரணம் கொண்டாடப்படுகின்றது. மரணம், சாவு, அம்மணம், தப்பித்தல், துக்கம் என்பன போன்ற சொற்களுக்கு இங்கிடமில்லை.

இது மிகவும் அபூர்வமானதும், அழகானதும், நிறைவானதுமாகும்! இக்கருத்தோட்டத்தின் அடிப்படையில்தான், உடலை வென்று உள்ளுணர்வாக நிலைத்துவிட்ட கொல்லிமலை ஞானியின் ‘உயிர்   நீங்கிய பிறகும்’ காற்றில் அது கலந்துள்ள ‘சாகாத பெருவாழ்வை’ப் புரிந்துகொள்ள வேண்டுமெனலாம். நசிகேதனுக்குக் கொல்லிமலை ஞானி அளித்த பழம்சுவடியில், ‘சிரஞ்சீவி வெளி’ என்ற தலைப்பின்கீழ்ப் பின்வரும் பாடல் காணப்படுகிறது. இப்பாடலில், ‘மரணமிலாப் பெருவாழ்வு’ பற்றிய மறைபொருள் குறிப்புள்ளதாக, நசிகேதன் கருதுகின்றான். “கடல் போன்ற வாழ்வு உடல் நீங்கா உபாயம், கண்டு உயர்ந்திடும் மார்க்கம் ஒன்று உண்டு, தமிழ்வளர் மலையடி ஆழ்வார் தலைவர் தலையடி, அமிழ்ந்திடும் பகுதியில் தவழ்ந்திடும் பொழுதிலே, படமெடுக்கும் பகுதி பாங்குடன் பாறைமீது,

கருவளை தன்னில் கைவைக்கும்பொழுது விரிந்திடும்…, வெளியிலே கொதிநீர்ப் புல்வெளி முள்வெளித் தாண்டி, வறமணல்சூழப் பழமும் முள்ளும் தலைகீழ்வனம், புதைகுழி மீறிக் கடக்கும் வேளை, கொடும்பறவை கொத்தும் பயங்களின் அப்பால், நதிவழிச் செல்ல அகப்படும் வெளியே, வாலிபம் நிற்கும் ஆயுளும் நிற்கும், அனைத்துமே நிற்கும் அழிவிலாப் பகுதி” (ப.137) என்ற இப்பாடலில், ‘தமிழ்வளர்  மலை’ எனக் கூறப்பட்டிருக்கும் ‘பொதிகை மலை’ ‘குற்றால மலை’தான் எனத் தீர்மானித்து, அங்குப் போய் ‘ஆழ்வார்  தலைவர் ’ ஆகிய திருமாலைப் போற்றும் ‘ஆழ்வார்  குன்றம்’ என்ற பகுதியைச் சென்றடைகிறான் நசிகேதன். அங்குப் பல நாள் சுற்றிப் ‘படமெடுக்கும் பாம்புப் பாறை’ கல்குன்றைக் கண்டு, அதன் மீது கைவைப்பதால், இருட்பாதை ஒன்று திறந்துவிரிகிறது. அப்பாதையில் முதலில் பிணவாடையடித்தாலும், பிறகு சுகந்தமான நறுமணம் வீசுகிறது. அடுத்து வெந்நீர்  ஏரி, ஓங்கி வளர்ந்த புல்வெளி, முள்வெளி, வறமணல் பரப்பு, ‘பாறை’ ஓடை, கற்பூங்கா, கசக்கும் பழமும் இனிக்கும் முள்ளுமான தலைகீழ் வனம், கடப்பதற்கரிய புதைகுழி, மேலே வட்டமிடும் பிணந்தின்னிக் கழுகுகள், வெடிப்பு நிலம், சுழித்து ஓடும் நதி ஆகிய சவால்கள்  யாவற்றையும் ‘ஒருமுகச் சிந்தனையுடன்’ நசிகேதன் கடக்கின்றான். இறுதியாகச் ‘சிரஞ்சீவி வெளி’ அவனுக்கு வசப்பட்டுவிடுகிறது. ஆனால், ‘சிரஞ்சீவி வெளி’ என்பதுதான் யாது? எந்த இயக்கமும் அற்ற, எந்த வளர்ச்சியுமற்ற, எப்போதும் உறைந்திருக்கிற, எந்தச் சலனமும் ஒருபோதும் நிகழாத, படைப்பின் புதுமையின் வியப்பற்ற, பசியும் செரிமானமும் தேவையில்லாத, உதிராத, பூக்காத, சிரிக்காத, அழாத, பரபரப்பே இல்லாத, சுவாரசியமில்லாத, கிட்டத்தட்ட ‘பிணவறை’ போன்ற இடம்தானே அது! “ஒரே மாதிரி வெளிச்சம், ஒரே மாதிரி காற்று, நிர்வாணக் குடிமகன்கள், ஒரே மாதிரி தாவரம், ஒன்றுபோலப் பழங்கள், பாடாத பறவைகள்…, இயங்காத இயற்கை… இவையே சிரஞ்சீவி வெளி” (பக். 200 – 201) என்கிறார் இறையன்பு. இதை அடையத்தானா நசிகேதன், இவ்வளவு பாடுபட்டான்? இயக்கத்தின் அதாவது வளர்ச்சியின் இன்னொரு பரிமாணம் மரணம் என்றால், இயக்கமோ வளர்ச்சியோ முதுமையோ சாவோ நேரவே நேராத ‘சிரஞ்சீவி வெளி’ என்பது, வெறும் ஒரு வெறுமையல்லவா?  இந்த வெறுமை வெளியைத் தேடியா நசிகேதன் தன் முழு வாழ்வையும் தொலைத்துவிட்டான்! எவ்வளவு பெரிய ‘தத்துவ வெறுமை’ இது? ஒன்றுமில்லாத சூன்யம்தான் வாழ்வு என்பதைப் புரிந்துகொண்டு, அப்படியே வளர்தலும் தேய்தலுமற்று உறைந்துபோய்விடுவதற்குப் பதிலாகப் பிறந்து, புசித்து, உறங்கி, புணர்ந்து, மக்களைப் பெற்று, சோர்ந்து தளர்ந்து அல்லது எதிர்பாராமல் செத்துவிடுவது என்பது ‘எவ்வளவோ மேலல்லவா’? இந்த அதிர்ச்சியைத்தான், இறுதியில் நசிகேதன் அடைகின்றான்.

இது ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்’ என்ற நாவலில் வரும் அந்தக் கிழவனான மீனவன், பல்வேறு ‘கடல்’ போராட்டங்களுக்குப் பின்னும் கரைக்குக் கொண்டுவந்த திமிங்கலத்தின் எலும்புக்கூட்டைக் கண்டு, ‘கிழவனின் மகனைப் போன்ற அந்தச் சிறுவன்’ அடைந்த அதிர்ச்சிக்கும் துக்கத்திற்கும் இணையான ஒரு பெருஞ்சோகமாகும்! ஹெமிங்வே காட்டும் கிழவனுக்காவது, கடலையும் திமிங்கலத்தையும் வெற்றிகொள்ளும் ‘இயற்கையின் மீதான மனிதனின் ஆக்கிரமிப்பு வெறி’ ஒரு வலிய செயலூக்கியாகத் தொழிற்பட்டளிக்கும் ‘செயற்கைப் பெருமிதமாவது’ மிச்சமிருந்தது! ஆனால், வெ.இறையன்பு புனைந்துள்ள நசிகேதனுக்குச் ‘சாவை வெல்லும் தன்முனைப்பு’ என்பது, ‘வாழ்வைப் பறிகொடுக்கும் வெற்றுத்தேடல்’ என்பதாக அல்லவா நீர்த்துவிட்டது! மரணமிலாப் பெருவெளியைத் தேடிய நசிகேதன் அடைந்தது, மரணம் உறைந்த பெருவெளியைத்தான் என்பது எவ்வளவு பெரிய ஒரு நகைமுரண்! ‘மகிழ்ச்சி தராத எந்தப் பிரதேசமும் மரணப்பிரதேசமே’ என்றும், ‘நிரந்தரம் எப்போதும் அழகாக முடியாது!’ என்றும், ‘மரணத்தைத் தவிரப் பெரும் விடுதலையில்லை” என்றும், ‘தேடுதலில்லாத வாழ்க்கை சாவிலும் மோசமானது” என்றும் புதிய புரிதல்களை நசிகேதன் அடைகின்றபோது, ஒருகணம் ‘காலம்’ அங்கே நின்றுவிடுகின்றதல்லவா! “அவனுடைய பிரக்ஞையற்ற வாழ்வின் நீட்சி, இனி ஆக்கிரமிக்கப் போகிறது. நினைவுகளில் வாழ்பவர்களையும் தொலைத்துவிட்டான். அவனுடைய நெடிய தேடல் சூன்யத்தில் முடிந்துவிட்டது. இனி உறைந்துபோன வாழ்க்கை, கிரேக்க மம்மிகளைப்போல வாழ்பவர்களில் அவனும் ஒருவன்…… எல்லோருடைய மரணத்திலும் அவன் மரணமும் சின்னதாக ஒட்டிக்கொண்டிருக்கப்போகிறது.பாறையைப்போல் அவன் அங்கே ஐக்கியமானான். இனி அவனுக்குப் பெயரில்லை. மனமில்லை….. அடையாளம் என்று எதுவுமில்லை. உள்ளுணர்வும் இல்லை. அது மரணமற்ற மரணத்தின் சாயல். பார்வையற்ற வாழ்வின் ஆரம்பம்” (பக். 223 – 224) என, ‘மரணமிலாப் பெருவாழ்வு’ என்பது, ‘மரணமற்ற மரணத்தின் சாயலாகிவிட்ட’ வெறுமையின் உச்சத்தைச் செறிவான சொற்களில் விவரிக்கின்றார்  வெ.இறையன்பு. இந்த வெறுமையின் உச்சம், இந்நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும், மிகவும் அழுத்தமாகப் பதிவு பெற்றுள்ளது. தொகுத்துக்கூறின், ‘சாவது வரம்’ என்றும், ‘சாகாமை சாபம்’ என்றும் பொருள்படும் வகையில், இந்தச் ‘சாகாவரம்’ நாவலைப் புனைந்துள்ளார்  வெ.இறையன்பு எனலாம்.