இரண்டாயிரத்திற்குப் பிறகு, தமிழ் நாவல் எழுத்தில், புதிய திருப்பங்கள் சில நிகழ்ந்துள்ளன. மேல்தட்டு நகர்ப்புற வாழ்வை மையப்படுத்தும் பழக்கமான எழுத்துகள், எண்ணிக்கையில் கணிசமாகக் குறைந்துள்ளன. அதேவேளையில், சிறுபத்திரிகை சார்ந்த புத்திஜீவிகளிடமிருந்து, உருவப் புதுமைகளுடனும் ஆனால் கருத்து முதல்வாதச் சார்புகளுடனும் உருவாக்கப்படும் அளவில் பெரிய ‘தலையணை சைஸ் நாவல்கள்’, அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளன. இதற்கு எதிர்மாறாகப் பெண்ணிய, தலித்திய, முற்போக்குப் படைப்புகளும் இப்போது முனைப்புற்றுப் புனைவுக்குள் அதிர்வூட்டத் தொடங்கியுள்ளன. இக்காலப் பெரும் அறுவடையைத் தொடர்ச்சியான, இடைவெளியே இல்லாத, அடுக்கடுக்காய்ப் புறப்பட்டுவரும் புனைவாக்கங்கள் மூலம் ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் சாதித்துக்கொண்டபோதிலும், இன்னும் இருபது அல்லது முப்பது முக்கிய நாவலாசிரியர்களையும் இன்று பொருட்படுத்திப் பேசுவதற்குச் செய்திகள் எவ்வளவோ உள்ளன. இதன் ஒரு பகுதியாகப் பாமா, சிவகாமி, சல்மா, சு.தமிழ்ச்செல்வி எனக் காத்திரமாக உருப்பெற்றுவிட்ட பல பெண் நாவலாசிரியர்களின் பங்களிப்பையும் கருதலாம்.

    ஆண் நாவலாசிரியர் பெண் நாவலாசிரியர் என்ற பாகுபாடெல்லாம் தேவையில்லை என்பதும் சரிதான். ஆனால், நவீன இலக்கியத்தில் அடையாளப்படுத்துதல் என்பதற்கான ஒரு சமூகத் தேவையையும் சற்றுப் பொருட்படுத்தத்தான் வேண்டும். தமிழ்ப் பெண் நாவலாசிரியர்கள் என்ற வகையில், பிறரைவிடவும் அதிகமான நாவல்களை (எட்டு) எழுதியவர் என்பதால், சு.தமிழ்ச்செல்வி கூடுதல் கவனத்திற்குரியவராகிறார். தலித் வாழ்வின் பொதுச்சிக்கல்களைச் சிவகாமியும், கிறித்தவத் தலித்பெண்ணின்  பிரத்தியேகச் சிக்கல்களைப் பாமாவும், இஸ்லாமிய வாழ்வு மற்றும் அதன் இறுக்கத்திற்குள் சிக்கிப் போராடும் பெண்களின் அன்றாடப்பாடுகளைச் சல்மாவும் விரிவுபட்ட விமர்சனப் பதிவுகளாகத் துலக்கிக் காட்டியதுபோலவே சு.தமிழ்ச்செல்வியும், இடைநிலைச்சாதிப் பெண்களின் பிரச்சினைகளை அடித்தளமாக வைத்துத் தம் நாவல்களைச் சமூக ஆவணங்களாக்கியுள்ளார். (இவ்வாறு கூறுவது, ஓர் எளிய வகைப்படுத்தலுக்காகத்தான். இதை மீறிப் பாயும் புனைவுத் துடிப்புகளும் இவர்களிடம் உண்டு.) பாமா, சிவகாமி, சல்மா, தமிழ்ச்செல்வி ஆகிய நால்வரையும் இணைக்கும் சமதளப்புள்ளியாகச் சிற்றூர் அல்லது கிராம வாழ்வுப் பின்புலத்தைக் கூர்ந்து நோக்கிப் பரிவுடன் விளிம்புநிலைப் பெண்களின் பிரச்சினைகளைப் படைப்பில் பிரதானப்படுத்தும் அவர்களுடைய பெண்சார்புப் புனைவு வெளிப்பாட்டைக் குறிப்பிடலாம்.

    கிராமங்ளை எழுதுவது, கிராமங்களைக் கொண்டாடுவது என்பதில் பல சம காலச் சிக்கல்கள் உள்ளன. இன்றுவரை எழுதப்பட்டுள்ள மிகப் பலவான தமிழ் நாவல்களில், நிலவுடைமைச் சமூகத்தின் எச்சங்களாகவும், முதலாளித்துச் சமூகத் தோற்றத்திற்குப் பிந்தைய ஒரு வாழ்நிலையிலும் சாதியைக் கைவிட்டுவிடாத பண்டைப் பெருமைகளின் புனிதத்தலங்களாகவுமே கிராமங்கள் புகழப்பட்டுள்ளன. இது மைய நீரோட்டத்துடன் முரண்படாத பொதுபுத்தி யதார்த்தமாகும். இந்தப் பாதுகாப்பான மற்றும் சொகுசான ஒரு மனநிலையிலிருந்து விடுபட்டுக் கிராமங்களின் குரூர முகங்களையும், சாதி பேணும் அவற்றின் அதிகாரப் பண்பாட்டையும் கருணை சிறிதும் காட்டாமல் அடிக்கசப்பைக் கிள்ளி எறியும் ஆயிரமாயிரமாண்டு ஆவேசத்தோடு இப்பெண் நாவலாசிரியர்கள் தம் புனைவில் ‘உள்ளதை மாற்றும்’ உயிர்ப்பாற்றலுடன் கூடிய நிகழ்வுப் பின்னல்களாகத் திட்டமிட்டுக் கவனப்படுத்தியுள்ளார்கள். இவ்வகைப் புனைவுகளில் மேலும் செய்ய வேண்டியவை எவ்வளவோ உள்ளன என்றாலும், இவை பாரம்பரியக் கிராமியச் சித்திரிப்புப் பாணிகள் இல்லை என்பதும், விமர்சன யதார்த்தவாதச் சார்புள்ளவை என்பதும் மிகவும் கனதியான விடயங்களாகும். இவ்வாறு அவதானிக்கும் அதேவேளையில், கிராமமா நகரமா என்ற தேர்ந்தெடுப்பு நிகழும்போது, இவர்களும்கூடப் பெரும்பாலும் கிராமச் சாய்வுடனேயே தம் புனைவெழுத்தில் தொழிற்படுகிறார்களோ எனத் தோன்றும் ஒருவிதப் புகைமூட்டமான ஐயந்திரிபையும் கழற்றிவிட முடிவதில்லை. இது நம் தொடராய்வுக்கும், ஒரு விரிவான உரையாடலுக்கும் உரியதாகும்.

        மாணிக்கம் (2002), அளம் (2002), கீதாரி (2003), கற்றாழை (2005), ஆறுகாட்டுத்துறை (2006), கண்ணகி (2008), பொன்னாச் சரம் (2010), தொப்புள்கொடி (2019) ஆகிய எட்டு நாவல்களைச் சு.தமிழ்ச்செல்வி எழுதியுள்ளார். இந்த எட்டையும் ஒட்டுமொத்தமாகக் கணக்கிலெடுத்து மதிப்பிட்டுக் கருத்துரைப்பதுதான் நியாயமான செயலாகும். எனினும், இக்கட்டுரையின் எல்லையைக் கருதிக் ‘கீதாரி’ மட்டுமே, இங்கு விவாதிக்கப்படுகிறது. திருத்துறைப்பூண்டிக்கு அருகிலுள்ள ஒரு கடலோரக் கிராமமான கற்பகநாதர் குளத்தில் பிறந்து வளர்ந்த சு.தமிழ்ச்செல்வி, மண் சார்ந்த நுண்மையான புனைவுப் பதிவுகளுக்காகத் தமிழ் நாவல் உலகில் இன்று தனித்தடம் பதித்த ஒரு படைப்பாளியாக அறியப்படுகிறார். விவசாயிகள், மீனவர்கள், ஆடு மேய்ப்பவர்கள், உப்பளத் தொழிலாளிகள், உழைக்கும் பெண்கள் எனப் பலதரப்பட்ட விளிம்புநிலை மக்களின் வாழ்வைப் புனைவுவெளியின் மையத்துக்கு நகர்த்தியவர் என்பது இவரது தனி அடையாளமாகும். இது பற்றிய இவரின் கருத்தைக் கவனிப்போம். “என் சகோதரிகள், அம்மா, பெரியம்மா, சின்னம்மாக்கள், அத்தைகள் இவர்களது பாடுகளை எழுதினாலே வாழ்நாள் முழுவதும் எழுதலாம்….. எங்கள் ஊரைப் பற்றியும், எங்கள் மனிதர்களைப் பற்றியும், எங்கள் தெய்வங்களைப் பற்றியும், எங்கள் சடங்குகளைப் பற்றியும் இலக்கியத்தின் பக்கங்களுக்குக் கொண்டுவர வேண்டிய அவசியம் இருக்கிறது….. நான் பெருங்கதையாடல்களின் வெளிச்சத்தில் வராத சிறிய மனிதர்களைப் பற்றிப் பேசவே ஆசைப்படுகிறேன்” (நேர்காணல்: விஷ்ணுபுரம் சரவணன், விகடன் தீபாவளிமலர்: 2014) என்கிறார் சு.தமிழ்ச்செல்வி.

     இது மிக முக்கியமான ஒரு குரல். நாவல் என்பது வெறும் அகவெளிப் பயணம் இல்லை; புறவாழ்வைப் பொருட்படுத்தாத நாவலெழுத்து, வரலாற்றுக்கும் வாழும் காலத்துக்கும் அநீதி இழைப்பதாகும். கதையின் நம்பகத்தன்மைக்குக் களமே வலுச் சேர்க்கிறது என்ற தமது புரிதலுடன், புனைவாக்கத்தில் சு.தமிழ்ச்செல்வி ஈடுபட்டுள்ளார். அடையாளங்கள், அவற்றின் சிதைவுகள், மாற்று அடையாளங்கள், அதிகாரங்கள், அவற்றின் எதிர்ப்புக் குரல்கள், சமகாலப் புதிய கள யதார்த்தங்கள் முதலிய பலவற்றின் கட்டுடைப்புக் கட்டுமானங்களாய்ச் சு.தமிழ்ச்செல்வியின் நாவல்கள் புத்துருவமும் புதுவிரிவும் காட்டுகின்றன. புழைய வட்டார வழக்கு நாவல்களிலிருந்து முன்னேறி மேலும் ஒரு துல்லியமான களம் மற்றும் உளவியல் சித்திரிப்புகளைச் செய்வனவாய்த் தற்கால இன வரைவியல் நாவல்கள் உள்ளன. இவை பொதுவாகக் குறிப்பிட்ட இனங்கள் வேறு முதன்மையான சமூகங்களுடன் உறவாடும் சூழல்களையும், அதிகாரச் சமூகங்களால் மூச்சுப் பேச்சின்றி மௌனமாக்கப்படும் அவலங்களையும் அடுத்தது காட்டும் பளிங்கு போல் அடுக்கடுக்காய்ப் படம்பிடிக்கின்றன. இவற்றுள் பல, வெறும் இனவரைவியல் விவரத் தொகுப்புகளாக மட்டுமே சுருங்கிவிடுகின்றன. இன்னும் சில, பண்பாட்டு மானுடவியல் புனைவாகப் பொதுமைச்சாரம் நோக்கிக் குவிகின்றன. (இவ்விடத்தில்,  தற்சார்பு நோக்கின்றி கவனமாகக் கு.அழகிரிசாமி எழுத்துகளையும், கி.ராஜநாராயணன் எழுத்துகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும் வாசகருக்குச் சில ‘சங்கதிகள்’ புரியக்கூடும்.

    பெரும்பாலும் பிராமணர், பிள்ளைமார், செட்டியார், நாயுடு, முதலியார் போன்ற மேல் தட்டுப் பிரிவினரின் வாழ்நிலையைப் பரக்கப் பேசும் தமிழ் நாவல்களில்  இனவரைவியல் அம்சங்கள்கூட மேலாதிக்கத்தைக் கண்ணுக்குத் தெரியாமல் கருத்தில் நிலைநிறுத்தும் முயற்சியாகத்தான் பதிவுபெற்றுள்ளன. இதைக் கடிந்து விமர்சிக்கும் அதே தருணத்தில், இத்தகைய சாதிச் சார்பு ஆதிக்கக் குழுக்களின் தனிப்பண்புகள், இடைநிலைச் சாதியினர் மற்றும் தலித்துகளை மையப்படுத்தும் எழுத்துகளில், இனக் குழுக்களின் மிஞ்சியுள்ள நினைவுகளின் எச்ச சொச்சங்களாகவும் ஆதிக்கச் சாதியினரின் அழித்தொழிப்பிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டிய பண்பாட்டுத் தரவுகளாகவுமே புனைவாக்கம் பெறுகின்றன என்பதையும் சீர்தூக்கிப் பார்த்து மேலும் நுணுகி நாம் விவாதிக்கவேண்டும். எனவே, இன வரைவியல் கூறுகளுடன், மானுடப் பொதுமைசார் கூருணர்வும் சேரும்போதே, அவை மேலதிக நுண்மையும் விரிவும் பெறுகின்றன என்ற ஒரு புரிதலும் முக்கியமானதாகும். இப்படிப்பட்ட முதன்மையான ஒரு பண்பாட்டு மானுடவியல் ஆவணமாகக் ‘கீதாரி’யைக் குறிப்பிடலாம். கீதாரியின் மையவிசையாகும் ராமுக் கிழவர், உலகெங்கும் நிறைந்துள்ள நெடுங்காலம் வாழ்ந்து வெறுத்து விலகிச் சேர்ந்து பட்டுப் பூரித்துச் சிக்கித் தப்பித் துணிந்து போராடிச் சிலிர்த்து உயிர்த்தெழும் மானுட இருப்பின் மகத்தான ஒரு சாட்சியாக, ஒரு முன்மாதிரியாக, ஓர் அடையாள மாந்தராகப் புனையப்பட்டுள்ளார். இவரைச் சுற்றியே, கீதாரியின் நாவலாக்கம் முழுதும் சுழல்கிறது.

    வீட்டுடன் நிலத்துடன் உறவுகளுடன் செல்வத்துடன் வாழும் மனிதன், மானுட மதிப்புகளைப் பேணுவதில் ஏனோ தனிவிருப்பம் காட்டுவதில்லை. சொத்தும் சுற்றமும் சுகங்களும் பெருக்கித் ‘தான் தான் தான்’ மட்டுமே இந்த உலகில் வாழ்வதற்கு முழு உரிமையும் உடையவன் என்ற ஒரு நுகர்வு வெறியால் தூண்டப்பட்டுத் தன்னிருப்பைப் பிரதானப்படுத்திப் பிற மானுடரின் அன்றாடங்களைக் கேவலப்படுத்திக் கொழிக்கிறான். ஆனால், உயிர் வாழ்வதற்குச் சலிக்காத உடலுழைப்பை மட்டுமே ஒரே மூலதனமாகக் கொண்டுள்ள கீதாரியில் வரும் ‘ராமு – இருளாயி’ போன்றோர், பிறர் துன்பத்தைத் தம் துன்பமாகக் கருதிப் பொறுப்பேற்று நிற்பதில்தான், தம் மானுட வாழ்வின் அர்த்தத்தையே காண்கிறார்கள். அதிர்ச்சியூட்டிப் பதறிக் கலங்கச் செய்யும் சம்பவத்துடன்தான், ‘கீதாரி’ தொடங்குகிறது. ஒரு பைத்தியக்காரி, ‘பிரசவ வலி’யுடன் கீதாரியின் குடிசைக்குள் வந்து அடைக்கலமாகிறாள். பைத்தியக்காரியைப் புணர்ந்துவிட்டுப் பொறுப்பற்றுத் தெருவில் பிள்ளைகளைத் திரிய விடும் கொடுமை, இந்தப் பூமிப்பந்தில் எங்குதான் நிகழவில்லை? ‘மானுட நாகரிகம்’, இன்னும் மனிதனை மனிதன் தின்னும் காலத்தைத் தாண்டி வந்து விடவில்லை என்பதற்கான ஓர் ஆதாரமிது.

    பைத்தியக்காரிக்குப் பிரசவம் பார்த்துக் குழந்தைகளைப் பூமிக்குக் கொண்டு வந்தால் போதும், அதற்கப்புறமான வாழ்க்கைக்கு ஊர்க்காரர்கள் பொறுப்பேற்பார்கள் என்ற அசட்டு நம்பிக்கையுடன் ‘கீதாரி’ ராமு வினையாற்றுகிறார். ஆனால், கதையில் நடப்பது என்ன? எந்த ஆதரவுமின்றிப் பிறக்கும் இரு பெண் குழந்தைகளையும் அவரே எடுத்து வளர்க்க நேர்கிறது. (இதற்கும் முன்பே, பெற்றோரை இழந்த வெள்ளைச்சாமியை எடுத்து வளர்த்து ஆளாக்கப் பாடுபட்டு வருகிறார்). எனினும்,‘கீதாரி’ ராமுகூடக் குறிப்பிட்ட அளவிற்குமேல் மனிதாபிமானியாக மேலுயுயர்ந்துவிட முடிவதில்லை. ஒரு வீடோ வயலோ இல்லாத அன்றாடங்காய்ச்சி ராமுவுக்குக் குழந்தைகளை எடுத்து வளர்க்க மட்டுமே முடிகிறது. ஊராரின் தயவில் பைத்தியக்காரியை அரசாங்க ஆஸ்பத்திரியில் தொலைத்துவிட்டுச் சுமை குறைந்த ஆறுதலில் இளைப்பாறுகிறார் ராமு. (இதனால்தான் மனிதனுக்குச் ‘சாமி’ தேவைப்படுகிறார் போலும்!)

    பைத்தியக்காரியின் இரட்டைக்குழந்தைகள் வளர்ந்து பெரிய பெண்களாகிவிடுகின்றன. ஒருத்தி ரோஜாநிறச் சிவப்பி; இன்னொருத்தி கறுப்புக் கரிச்சா. ஊரார்களின் மதிப்பில் உயர்வதற்காகச் சிவப்பியைப் பள்ளி செல்லும் ஆறு வயதில் தம் பொறுப்பிலெடுத்துக் கொள்கிறார் சாம்பசிவம் என்ற ரெண்டு பொண்டாட்டிப் பெரிய மனிதர். அதன்பின்? சிவப்பி வயதுக்கு வந்தபிறகு, அவளைச் சிதைத்து, அதன்வழி அவளது தற்கொலைக்கும் அவரே காரணமாகிறார். இது இப்படியும் நிகழுமா என்ற கேள்வி, இன்றைய உலகச் சூழலில் அர்த்தமற்றது. இதை விடவும் அதிகக் குரூரங்கள் இன்று குடும்ப வெளிக்குள் கும்மி அடித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தச் சிறிய நாவலில் ஏகப்பட்ட மனிதர்கள் சாகிறார்கள்! சோரம் போன வெள்ளைச்சாமியின் தாய் ராமாயியை வெள்ளைச்சாமியின் தந்தை சேது உலக்கையால் அடித்துக் கொல்கிறான்; கூடவே தொட்டில் பிள்ளையையும் அடித்துக் கொல்கிறான். சில நாள்கள் கழித்துத் தானும் தூக்குப் போட்டுக்கொள்கிறான். ராமாயியைப் பெண்டாண்ட சுந்தரமூர்த்தி சேர்வையை எதிர்த்து நிற்கவோ, சேதுவின் மாடுகளைத் திருடிக் கேரளாவிற்கு அடிமாடுகளாகக் கொண்டுபோய் விற்கும் சதியைத் தடுக்கவோ சேதுவால் முடிவதில்லை. சுந்தரமூர்த்தி சேர்வையையும் சேது கொன்று விடுவதாகக் காட்டியிருந்தாலாவது, அல்லது அப்படி ஒரு முயற்சியில் அவன் கொல்லப் படுவதாகப் புனைந்திருந்தாலாவது, ஓரளவிற்குப் ‘புனைவு நியாயம்’ நாவலில் காக்கப் பட்டுள்ளதாகக் கூறிக்கொள்ளலாம். ஆனால், எதிர்ப்பின்மையே அல்லது சதிக்கிரையாகிச் சாமான்யர்கள் சாவதே யதார்த்தம் எனப் புனைந்துள்ளதைப் பொருந்துவதாகக் கூற முடியவில்லை.

    ராமாயி கொலை, சேது தற்கொலை, சிவப்பி தற்கொலை, இருளாயி இயற்கைச் சாவு, பாம்பு கடித்துக் கரிச்சா சாவு எனப் பல மாந்தர்கள் இந்நாவலில் சாகிறார்கள். சோடாக் கம்பெனி முதலாளி நடராசனைப் பணத்துக்காகச் சண்முகமும், தங்கராசுவும் ஊரார் அறியாமல் கொல்கின்றனர். (செத்துப்போன நடராசன் ஒருநாள் உயிரோடு வருவான் என நம்பிப் பல வருடமாகக் காத்திருக்கிறாள் பரிதாபத்திற்குரிய அவன் மனைவி.) கொலைப் பங்கைப் பிரித்துக்கொள்ளும் தகராறு காரணமாகத் தங்கராசுவைச் சண்முகம் கொன்று விடுகிறான். கரகாட்டம் பார்க்க வந்த முன்பின் தெரியாத ஒருவனிடம் (அதாவது சாதி தெரியாதவன்) சிரித்துப் பேசிய குற்றத்திற்காகத் தகப்பனாலும் அண்ணனாலும் சித்திரம் என்ற சிறுமி அடித்துக் கொல்லப்படுகிறாள். ஆட்டுக்காரக் கருப்பையாவின் மகன் ஆதியப்பன் வாந்தியும் வயித்துப் போக்கும் வந்து நவீன மருத்துவ உதவியின்றிச் செத்துப்போகிறான். (அவன் மனைவியை, அவனுடைய தம்பிக்கே கட்டிவைக்கின்றனர்.) ‘சாவுக் குட்டி’யைப் போட்டுவிட்டுச் செத்துப்போகிறது ‘புரவ ஆடு’. இந்நாவலில் பேசப் படும் மிகச் சில நோய் அல்லது இயற்கைச் சாவுகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், பெரும்பாலானவை பெண்களை வன்புணர்வு செய்யும் ஆண்களாலும், அவர்களுடைய பேராசைகளாலும் நேர்பவை என்பதைக் கவனிக்கலாம்.

    ஆடு மேய்ப்பவர்களின் வாழ்க்கையில் நிகழும் குழந்தைப் பிறப்பு, வளர்ப்பு, பெண் சடங்காவது, கல்யாணம், சாவு, ஊர்விட்டு ஊர் இடம்பெயர்வது, கிடைத்த நிலத்தில் கிடை போடுவது, ஆடுகளுக்கு உணவிடாமல் தாங்கள் உண்ண மறுப்பது, கூட்டு வாழ்வில் கலந்து மகிழ்வது, பெண்களுக்குள் காணப்படும் ஒட்டுறவு, ஏழைகளாய் இருந்தாலும் உண்மையுடனும் நேர்மையுடனும் வாழ்வை நடத்துவது, தம்மைப் போன்றோருக்கும் ஆதரவற்றோருக்கும் எந்நிலையிலும் உதவி செய்யத் தயங்காதது, பணம் காசைவிட மானுட உறவுகளுக்கே மதிப்பும் உயர்வுமளிப்பது, இயற்கையிடமும் உயிர்களிடமும் ஒன்றிப் பழகுவது, வம்பு தும்பு தவிர்த்து அன்பும் அமைதியுமாய் வாழ்வது, ஒவ்வொரு சோற்றுத் துணுக்கையும் கடுமையான தம் உடலுழைப்பு மூலமே ஈட்டுவது, உழைக்காத வாழ்வைப் போற்றமறுப்பது, சொத்துசுகங்களைப் பெருக்குவதில் ஆர்வமின்றி நிகழ்காலப் பொழுதுகளில் நிறைவும் நிம்மதியுமடைவது, தமது குழந்தைகளின் கல்வி வளர்ச்சியில் சொந்தப் பொறுப்பும் மகத்தான நம்பிக்கையும் வைத்துச் செயலாற்றுவது எனக் ‘கீதாரி’ நாவலில் இடையர்களின் எளிய வாழ்வு நிகழ்வுகள் யாவும், அரிய பண்பாட்டுத் தகவல்களுடன் கூடிய நுண்ணிய சித்திரிப்புகளாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் பத்தாண்டுகள் சென்றால், இந்நாவலிலுள்ள பல அரிய செய்திகள், ஆடு மேய்ப்பவர்களின் வாழ்விடங்களிலிருந்தேகூடக் காணாமல் போய்விடலாம். ‘சூழல் சிதைவு மாற்றங்கள்’ விரைவாக நடந்தேறி வரும் இந்தச் சந்தைப் போட்டிக் காலத்தில், இத்தகைய விவரமான ‘விளிம்புநிலை மக்களின் வாழ்வு வெளி சார்ந்த’ உண்மையான பண்பாட்டாவணத்தை உருவாக்கியிருப்பதன் மூலம், தமிழ் நாவலுக்குப் புதிய சாளரமொன்றைத் திறந்து விட்டவராகச் சு.தமிழ்ச்செல்வியைக் கொண்டாடலாம். நாவலாசிரியரின் உழைப்பும் கலைத்திறனும் நாவலின் பக்கங்கள் தோறும் ஒளிர்கின்றன.

      உழுகுடி வாழ்வில் மண்ணுக்கும் மக்களுக்குமான உறவு பிரிக்கப்பட முடியாதது. ‘பதியெழு அறியாப் பழங்குடி மக்கள்’ என்பதில் பெருமையுறுபவர்கள் அவர்கள். ஆனால், ஆடுகள் மேய்த்துக் காலம் தள்ளும் இடையருக்கு, நாடோடி வாழ்வில்தான் உயிரியக்கமே அர்த்தப்படுகிறது. தாம் வளர்க்கும் அந்த ஆடுகள்போலவே, அவர்களுக்கும் வெட்டவெளி அலைச்சலே மிச்சமாகிறது.ராமு,இருளாயி, முத்தம்மா, அவள் புருஷன், வெள்ளைச்சாமி, கரிச்சா எனப் பலரும் இடம்பெயர்ந்தும் நிம்மதியற்றும் அலைந்துகொண்டேயுள்ளார்கள். இந்தத் திரிதலுக்கிடையேதான், இவர்கள் தம் குடும்பங்களையும் கட்டியாண்டாக வேண்டி இருக்கிறது. இவர்களை ஏய்த்துப் பிழைக்கும் நிலவுடைமைச் சாதிகளிடம் இவர்கள் கைகட்டி வாய்புதைத்துக் கிடைக்கூலிக்காகச் சிறுத்தும் சிதைந்தும் கிடப்பதைக் ‘கீதாரி’ துல்லியமாகக் காட்சிப்படுத்துகிறது. முத்தம்மாவின் குழந்தைகள் பள்ளி போவதாகவும், தன் குழந்தையையும் படிக்கவைத்துப் பெரிய ஆளாக்கிவிட வேண்டுமெனக் கரிச்சா ஆசைப்படுவதாகவும் மாற்றத்தைச் சு.தமிழ்ச்செல்வி குறிப்புணர்த்துகிறார். ஆனால், இந்த நாவலில், யார் ஆதரவுமற்று, அலைந்து திரியும் ஏதிலிகளாகக் கைவிடப்பட்ட இடையர் குல மக்களின் அவல வாழ்க்கையே சித்திரமாகியுள்ளது; அவர்களின் உரிமைப்போராட்ட வரலாறன்று.

    விளிம்புநிலைப் பிரிவினரின் வாழ்க்கைத் துன்பங்களுக்குப் பொறுப்பேற்காத நில உடைமை மற்றும் பெருமுதலாளிகளின் ஆதிக்க எல்லைக்குட்பட்ட குடிமைச் சமூகமே, இங்குப் பொதுமைச் சமூகம் என்ற பெயரில் பன்னெடுங்காலமாகக் கோலோச்சிக் கொண்டிருக்கிறது. இதன் நச்சுப் பல்லிலிருந்து சிவப்பியைக் காப்பாற்றக் கரிச்சாவாலும் வெள்ளைச்சாமியாலும் ராமுவாலும் எவ்வாறு இயலும்?ஆனாலும், தந்தைபோல் உரிமை கொண்டாடிச் சிவப்பியை வளர்த்த சாம்பசிவமே அவளைக் கெடுத்து நாசமாக்கும்போது, அக்கொடிய வன்புணர்ச்சிக்குப் பிறகு, சிவப்பி ஏன் தூக்குப்போட்டுக்கொள்ள வேண்டும்? எந்த ஆண் சமூக ஒழுக்கநெறியைக் காப்பாற்றுவதற்காகச் சிவப்பியைச் சு.தமிழ்ச்செல்வி புனைவில் சாகடிக்கிறார்? விளிம்புநிலை மக்களின் போராட்ட வாழ்வைச் சித்திரிக்கும் ஆவணப்பதிவுகளில் சிறுசிறு எதிர்ப்புணர்வுக்குக்கூட வழியில்லாமல் தற்கொலையே அவர்களின் உச்சபட்ச எதிர்ப்புணர்வு என்பதுபோல் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துச் சென்றுவிடும் புனைவாக்கம் சரியானதுதானா? சிவப்பி மட்டுமா, வெள்ளைச்சாமியால் புறக்கணிக்கப்பட்டு, ஆனால் துணிவுடன் அவனை விட்டுத் தனியாக விலகி வருபவளாகப் புனையப்பட்ட கரிச்சாவும்கூட, நாவலின் இறுதியில் ராமுக் கிழவனிடம் குழந்தையைத் தவிக்க விட்டுவிட்டுப் பாம்புக்கடி பட்டுச் செத்துப்போவதாக ஏன் காட்டவேண்டும்? (பைத்தியக்காரி பெற்ற இரட்டைப் பெண்களும் நிம்மதியாக வாழ முடியாமல் அற்ப ஆயுளிலேயே இறந்து போவதால்தான், கரிச்சாவுக்குப் பெண் குழந்தையைத் தவிர்த்து விட்டு ஆண் குழந்தையைத் தந்து ஆறுதலடைகிறார் போலும் நாவலாசிரியர்!). மாற்றுப் புனைவில், இளந்தலைமுறையின் அடுத்தகட்ட நகர்வைச் சாதகமாகக் காட்டுவதற்குப் பதிலாகச் சாகக் காத்திருக்கும் முதிய தலைமுறையே எதிர்காலத்தின் பொறுப்பையும் தலைமேல் தூக்கிச் சுமக்க முற்படுவதாகப் புனைவதிலுள்ள படைப்பாளியின் மரபான நிலைப்பாடு எவ்வகையில் பொருத்தமானது?

    “நீங்க நூத்தம்பது பேரு இருக்குறிய. நான் மட்டும் ஒண்டியாத்தான இருக்குறன். மின்னாடி போறத பாக்குறதா, பின்னாடி வாறத்தப் பாக்குறதா? பொழுது வேற பெயிட்டு. இருட்டுறத்துக்குள்ள ஒங்களயெல்லாம் கொண்ட போயி பட்டில அடைக்க வேண்டாமா? அதுக்கு மேல வௌக்குக் கொளுத்தி அடுப்பு மூட்டி எப்பச் சோறு கொளம்பு ஆக்கித் திங்கிறது?” எனக் கரிச்சா நியாயம் கேட்பதாகச் சு.தமிழ்ச்செல்வி எழுதுகிறார். இவ்வாறு ஆடுகளிடம் கேட்கும் நியாயத்தைக்கூடக் குழந்தைப்பேறு இல்லாததற்காகத் தன்னைக் கைகழுவ நினைக்கும் புருஷன் வெள்ளைச்சாமியிடம் கேட்கத் துணியாத பெண்ணாகவே கரிச்சாவைச் சு.தமிழ்ச்செல்வி புனைந்துள்ளார். ஆடு மேய்க்கும் தடிக் கம்பை மனையில் ஏற்றி மாப்பிள்ளையாக்கித் தாலி கட்டிக்கொண்ட கரிச்சாவால், எவ்வாறு குரலெழுப்பிக் கணவனிடம் நியாயம் கேட்க முடியும்? சிவப்பியைச் சின்னாபின்னப்படுத்திச் சாகத் தூண்டிய சாம்பசிவத்தை எதிர்த்துக் கீதாரி ராமுவால் ஒரு சிறு சுடுசொல்கூடச் சொல்ல முடியவில்லை என்பதுதானே நாவலின் யதார்த்தம்! இந்நாவலில், ஓரளவிற்குமேல் ஆண் நோக்கிலிருந்துதான் பெண் காணப்பட்டுள்ளாள்; பெண் பற்றிய முழுநிலையிலான ஒரு மாற்றுப்புனைவாக இது விரிவடையவில்லை. எதிர்ப்புணர்வின் மெல்லிய சீற்றமாகக் கசியும் பெண் கோபத்துக்குச் சு.தமிழ்ச்செல்வி சிறிதளவிலாவது தம் புனைவில் இடம் அளித்திருக்கலாம் என்பதே வாசக ஆதங்கமாகும். ஆனால், வேறு ஒருகோணத்தில், ஆண் மேலாதிக்கத்தின் கொடூர முகத்தை இந்நாவல் வெட்டவெளிச்சமாக்கியுள்ளதையும் கருதவேண்டும். ஆண்நோக்குச் சமூகத்தில், ‘பெண்ணின் இருப்பு’ப் பற்றிய அச்சத்தையும் பதற்றத்தையும் பதிவுசெய்வதில் நாவலாசிரியர் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைகிறார் என்றே சொல்லவேண்டும்.

      “கீதாரியின் வாழ்நாள் இன்னும் நிறைய பாக்கி இருக்கிறது என்பதைச் சொல்வதுபோல் அழுதுகொண்டிருந்தான், அவரது தோளில் கிடந்த கரிச்சாவின் மகன்”. இதுவே இந்நாவல் முடியுமிடமாகும். இவ்விடத்தை நாவல் வந்தடைவதற்காகவே, கரிச்சா செத்துப்போக வேண்டியுள்ளது. முதலில் நல்லவனாயுள்ள வெள்ளைச்சாமி பின் மனம் திரிந்து கெட்டுப் போக வேண்டியுள்ளது. இந்த முடிவு, இந்நாவலில் இயல்பாக அடையப்படவில்லை. இடையர்களின் வாழ்வில் இப்போதைக்கு முன்னேற்றம் வரப்போவதில்லை என்ற படைப்பாளியின் ஒருவகைப்பட்ட அலுப்புச் சலிப்பு மனநிலையிலிருந்தே இவ்விதமான புனைவாக்கம் வெளிப்படுகிறதோ என்ற விமர்சனத்தைச் சிறுமுனகலாகவேனும் நாம் முன்வைக்கத்தான் வேண்டியுள்ளது.

    மனிதர்களுக்கு நிம்மதியில்லை; உலகப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது; வாழ்வுத் துன்பத்திலிருந்து விடுபட வழியேயில்லை; கண்ணுக்குப் புலப்படாத அப்பாலை மனோ நிலைகளால்தான் வாழ்க்கை இயங்குகிறது; இந்த வாழ்வுக்குப் பொருளில்லை; நமக்கு நடப்பதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை; அவலமே வாழ்வின் முடிவு; கண்ணீரும் வலியும் வெறுப்பும் துரோகமுமே கடைசியில் எஞ்சுபவை; மகிழ்ச்சி என்பது சாத்தியமில்லாதது; எவ்வளவுதான் போராடினாலும் இறுதியில் ஒரு விரக்தியும் வேதனையும் தோல்வியும் கசப்புமாய் இவ்வுலகம் உருச்சிதைவதைத் தவிர்க்கமுடியாது; எதையும் நம்ப முடியாமல் குழம்பித் தவித்துச் சூழும் நிகழ்வுகளைச் சலிப்புடன் வேடிக்கை பார்ப்பதே நாம் செய்ய முடிவது; தின்று புணர்ந்து தூங்கி எழுந்து கழிந்து மூச்சு விடுவதைத் தவிரச் சுயமாய் ஒன்றும் முடியாது; மாற்றம் சாத்தியமில்லை; எல்லா மாற்றமும் ஏதோ ஒருவகையில் பெரும் ஏமாற்றமாய்த்தான் முடியும்; குரூரம்தான் யதார்த்தம்; அடிக்கசடுதான் சாரம்; நாம் அனைவரும் ஒன்றுசேரும் பொதுமை என்பதெல்லாம் வெறும் பகற்கனவே அன்றிச் சாதி மதச் சார்பே நமது பாதுகாப்புக்கு ஒரே வழி; இழப்பை இயலாமையை இருட்டைப் பதிவு செய்வதுதான் படைப்பு; படைப்புக்குத் தார்மீகம் அவசியமில்லை; பொதுவான உண்மை என்பதற்குக் குரல் கொடுப்பது வெட்டிவேலை; தனித்தனிக் குட்டைகளுக்குத் தூர்வாரும் சேவையே இன்றைய நம் தேவை என்ற பழகிப்போன ஒப்பாரிகளை மானுட வாழ்வை எதிர்மறையாகப் பார்த்த நவீனத்துவத் தாக்கமுடைய அறுபதுகளின், எழுபதுகளின், எண்பதுகளின் தமிழ் நாவல்கள் அப்படியே வாந்தியெடுத்துத் தள்ளியதில் வியப்பில்லை. தொண்ணூறுகளுக்குப் பிறகான பின்நவீனத்துவப் பெண்ணியத் தலித்திய முற்போக்கு நோக்குடைய தமிழ் நாவல்களும் இந்த இழவோலத்தைத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருப்பதற்கான ‘இலக்கிய நியாயம்தான்’ என்ன? ‘எல்லாம் சுகம்’ என்ற சொறிந்து தரும் இலட்சியவாதத்துக்குப் படைப்புச் சக்கரம் திரும்ப வேண்டியதில்லை; ஆனால் துக்கமே மனித வாழ்வின் சாரம் – ஆகவே வீழ்ச்சியின் வெறுமையைப் பேசுவதிலேயே புனைவின் உயிர்ப்புள்ளது என்ற ஒரு முன்கூட்டிய முடிவுடன், கடைசிப் புள்ளியாக அவலத்தை ஏற்றுக்கொண்டு படைப்பியக்கத்தைப் பழந்தடங்களில் நடக்கப் பழக்கும் ஒரு வெறுமைப் பார்வையைத் தொடர்ந்து நாம் ஏன் வலியுறுத்தவேண்டும்?

    இரு மாபெரும் உலகப் போர்களால் நிலைபெற்ற விழுமியங்கள் யாவும் சிதைவுற்று வெறும் உடல் தாங்கிகளாகவும் மூச்சிழுப்புப் புழுக்களாகவும் மனிதர்கள் குறுக்கப்பட்டு விட்ட ஐரோப்பியச் சூழலிலிருந்து உருவாகிவந்த நவீனத்துவவாதத்திற்கான நேற்றைய நியாயப்பாடு, இன்று நாகர்கோவில் கோவில்பட்டி  வேலூர் நாமக்கல் சேலம் மதுரை கோவை சென்னை புதுச்சேரி பெங்களூர் மும்பை… இன்ன பிற தமிழ் கூறும் நிலப் பகுதிகளிலிருந்து எழுதிவரும் புத்திலக்கியவாதிகளுக்கும் பொருத்தப்பாடுடையதுதானா? நவீனத்துவத்தைக் கலைத்துப்போடும் பின்நவீனப் புனைவு நெறி இலக்கிய வெளிக்குள் சூறாவளியாய்ச் சுழன்றடிக்கும் தற்காலத்திலும், வாழ்வின் கசப்புகளையே படைப்பாக்கப் பெருநெறியாகப் பிடித்தொழுகும் புனைவின் முடக்கம் ஏன் தொடர்ந்து உற்பத்தியாகிறது? வாழும் சூழலுக்கும் வளரும் சிந்தனைக்கும் ஏற்பப் புதிதாய்த் தம்மைத் தகவமைத்துக் கொள்ளாத புனைவியக்கம் நிகழ்காலத்துக்கு நன்மை செய்வதாகாது. இந்தப் புரிதலின் அடிப்படையிலிருந்து நோக்கும்போது, பழகிவிட்ட அவல முடிவை நோக்கிக் கதையைச் சு.தமிழ்ச்செல்வி குவித்திருந்தாலும், ‘கீதாரி ராமு’ என்ற ‘வாழ்கணந்தோறும் நம்பிக்கை இழக்காத ஒரு கிழவனை’ நாயகனாக்கிப் (பிற மாந்தர்கள் குறுக்கப்பட்டுள்ளபோதிலும்) புனைந்துள்ள அவரின் படைப்புத்திறம், நாளைய நல்மாற்றத்தை உறுதிப்படுத்தும் ஒரு முதன்மையான படைப்பாளியாகச் சு.தமிழ்ச்செல்வியை அடையாளம் காட்டுகிறது எனத் தயக்கமின்றிப் புகழாரம் சூட்டலாம்.