நகரின் பேரிரைச்சலில் இருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் என்பது என் வெகுநாளைய ஆசை. காதில் பஞ்சை வைத்துக்கொண்டாலும் காற்றின் சுழலும் ஓசை கேட்கிறது. மற்றுமில்லாமல் யாரைப் பார்த்தாலும் அவர்கள் பேசுவது எனக்குக் கேட்கிறது. கதவை மூடிக்கொண்டு காதில் பஞ்சை வைத்துக்கொண்டு, கண்களை மூடிக்கொண்டாலும் என் இதயத்தின் ஓசை கேட்கிறது. இந்த சப்தம் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற கட்டாயமன கட்டளையின் பெயரில் எனது மூளையும் சத்தமிட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு சொடக்கிடும் நொடியில் சப்தங்கள் நிசப்தங்கள் ஆக வேண்டும், அப்படி ஒரு வரம் வேண்டும். நகரின் எல்லையிலிருந்து விடுபடக் கிராமத்திற்குச் சென்றேன், அங்கும் இரைச்சல். அத்துவான காட்டின் நிசப்தத்தில் குயில் எழுப்பும் ஒலி இன்பமயமானது என்று நண்பன் சொன்னான், ஆனாலும் அது தொந்தரவையே  தந்தது. உண்மையாகச் சொன்னால் நகரத்தின் பேரிரைச்சலில் கிடைத்த இம்சையை விட பெரிய துன்பமாக இருந்தது. ஒரு நல்ல பாடல் கூடவா பிடிக்காது என்று நீங்கள் கேட்கலாம், அதுவும் எனக்குப் பேரிரைச்சலே.

நண்பன் சொன்னான், இவைகளை கண்டு ரசித்துப் பழகிக்கொள். ரசித்தல் என்பதற்கான அர்த்தத்தை என்னால் கற்பித்துக்கொள்ளவே முடியவில்லை. நகரின் கட்டிடங்கள், வாகனங்கள், மனிதர்கள் இப்படி சத்தத்தை உண்டாக்கும் எல்லாமே எனக்கு இடைஞ்சல்களாகவே இருக்கின்றது. கடலின் நடுவில் , பூமி வெளியின் அப்பால் நிசப்தத்தை உணரமுடியுமா, தெரியவில்லை. ஆனால் அன்று நடுநிசியில் சப்தங்கள் அதிகமாகவே; இதைச் சொன்னால் நீங்கள் நம்ப மறுப்பீர்கள் ஆனால் இது தான் உண்மை. மறுநாள் எனது கேட்கும் திறன் பாதி குறைந்திருந்தது. யார் சொல்வதும் அரைகுறையாகக் கேட்க ஆரம்பித்தது. பிறகொரு நாளில் முற்றிலும் சப்தங்கள் குறைந்து,  உலகத்தை ஊமையாக்கினேன்.

யாரும் என்னை கேள்விகேட்க முடியாது, யாரும் என்னோடு சண்டை போட முடியாது. நான் நினைத்ததை நான் பேசுவேன்,என்னால் கேட்கமுடியாது. என்னைப்  பைத்தியக்காரன் என்று நீங்கள் சொன்னாலும் நினைத்தாலும் என்னை ஒன்றும் செய்யப்போவதில்லை அது . என்னிடம் என் நண்பன் கேட்டான், இல்லை எழுதிக் கேட்டான் “நீ ஏன் மருத்துவரிடம் உனது காதுகேளாமையை பரிசோதித்துக் கொள்ளவில்லை?” என்றான்.. அதற்கு நான் பதில் சொன்னேன்.. இதைத்தான் சொன்னேன் என்று நம்புகிறேன் “எனக்கு வேண்டிய வைத்தியம் மருத்துவரிடம் செல்லாமலே கிடைத்துவிட்டது, எதற்கு மருத்துவர்” என்றேன். “பைத்தியம்” என்று எழுதிக்காட்டினான். சிரித்துக்கொண்டே சென்றுவிட்டேன்.

நீண்ட நாளைக்குப் பிறகு அமைதியைச் சஞ்சரித்து விட்ட இந்த உலகை ரசித்தபடியே எந்த வித மனக்குழப்பங்களும் இன்றி என்னால் உலா வர முடிந்தது. எனது நண்பன் என்னைப் பார்த்துக் கேட்டான்.

“நீ முன்பை விட மிக மகிழ்ச்சியாக இருக்கிறாய்”

“அப்படியா, இருக்கலாம்”

“காது கேளாதது பற்றி வருத்தமில்லையா”

“இல்லையே”

“காது கேட்கவில்லை என்று சொல்கிறாய், ஆனால் நான் சொல்வது உனக்குக் கேட்கிறதே”

“ஹா ஹா ஹா……நீ இதை தவிர என்ன கேட்டுவிடப்போகிறாய், இந்த உலகத்தின் முன் தீர்மானங்களும் முடிவுகளும் எனக்கு எப்பொழுதுமே அத்துப்படி”

“****************************************** “

“இப்பொழுதுதான் எனக்கு கேட்காதவைகளை நீ பேசியிருக்கிறாய், உன் முன் தீர்மானங்களிலிருந்து விலகி யோசித்திருக்கிறாய், ஆனாலும் அவை எனக்கு பிரயோசனப்படாதவை… கவலையில்லை எனக்கு விளங்க வைக்க வேண்டாம்”

“ஆஹா , முன்பைவிட தெளிவாகப் பேசுகிறாய்”

“அப்படித்தான்,  கட்டற்ற சுதந்திரத்தில் மிதப்பவன் தெளிவாகத்தான் பேசுவான்”

“என்ன பெரிய சுதந்திரம் கிடைத்துவிட்டது, காது கேட்காதது ஊனம் தானே”

“ஊனத்திற்கு தான் தேடுகின்ற குணமிருக்கும் , நான் தேடிக் கண்டடைந்தது  என்னவென்று புரிந்து கொள்ள உனக்கு பக்குவம் பத்தாது”

“எனக்குப் பக்குவம் இல்லையா”

“ஆமாம் இல்லை தான்”

“பைத்தியம்”

“எனக்கு வருத்தமில்லை”

“அப்படியென்ன கண்டுவிட்டாய் , பைத்தியமே “

என்று சொல்லி கடந்து சென்றுவிட்டான். அவனுக்கு இந்த பேரிரைச்சல் தான் அமைதியென்றால் அதை அழித்து விளையாடுவோமா என்று தோன்றியது. ஸீரோக்களும் ஒன்றுகளும் மாறி மாறி சண்டையிட்டுக்கொண்டு ஆறுமாத இடைவெளிக்குப் பிறகு ஒழுங்கிற்கு வந்தது. மற்றவரின் அமைதி உன்னையும், உன் அமைதி மற்றவரையும் செய்யப்போகும் பாடு எப்படி இருக்கும் என்று காண ஆவலாய் இருந்தேன். ஸீரோக்களாலும் ஒன்றுகளாலும் ஆன கிருமியை அவனது கணினியில் தொற்றவைத்தேன். முதலில் அவன் கணினி என் வசமானது, பிறகு அவனும் என் வசமாகும் நாட்கள் தொலைவில் இல்லை என்று நினைத்துக்கொண்டேன்.

ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அவனது கணினியின் ஒலி உள்வாங்கியை செயல் இழக்கவும் செயல் படுத்தவும் செய்ய கட்டளை பிறப்பித்தேன். சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருப்பவன், சிரிப்பை நிப்பாட்டினான். கணினியின் பொத்தான்களை அமுக்கி அமுக்கி எடுத்தான். பிறகு உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தான். அவனை நான் உன்னிப்பாகக் கவனிக்க, சொன்னதைத் திரும்பத் திரும்ப சொன்னான் என்று தெரிந்தது. பிறகு அதையே கத்தி சொன்னான் என்று பட்டது. பிறகு வேகமாக விசைப்பலகையைத் தட்டிவிட்டு எழுந்து என்னிடம் வந்தான்.

சிகரெட் பிடிக்க வெளியில் சென்றோம். ஏன் கோபமாக இருக்கிறாய் என்று கேட்டேன். தனது கணினியில் எதோ சரியில்லை என்பதைச் சைகையில் விளக்கினான். கணினியைச் சரிபார்க்க வேறொருவன் வந்தான். இப்பொழுது ஒலிவாங்கியைச் செயல் படுமாறு செய்துவிட்டேன். சரியாகிவிட்டது என்று சென்றுவிட்டான். பிறகு மறுபடியும் எனது வேலையை ஆரம்பித்துவிட்டேன். அன்றைய நாள் முழுவதும் உள்ளூர குதூகலமாக இருந்தேன்.

சொல்ல மறந்துவிட்டேன், காது கேட்காமல் போனாலும் நானும் வேலைசெய்துகொண்டு தான் இருந்தேன் என் திறமையினாலோ, அல்லது என் மேல் ஏற்பட்ட பரிதாபத்தினாலோ எனக்கு வேலை பறிபோகவில்லை. ஆனாலும் எனக்குச் சொல்லப்படுபவை எழுத்தின் வடிவத்தில் தரப்பட்டுவிடும் ஆகையால் வேலைக்குப் பங்கமில்லை.

மறுநாள் பார்க்கப் பரிதாபமாக இருந்த காரணத்தினால் அவனை ஒன்றும் செய்யவில்லை. மதிய உணவிற்குப் பிறகு மந்தமாக இருந்த காரணத்தினால் குதூகலம் வேண்டி, எனது விளையாட்டை ஆரம்பித்தேன். நேற்றை விடவும் இன்று மிகவும் சுவாரசியமாக இருந்தது. என்னிடம் வந்தான் சிகரெட் பிடிக்க கீழே சென்றோம். அவனது காதலி அவனுக்கு  அழைத்தாள் போல, எப்பொழுதுமே அவளது அழைப்பிற்கு என்னை விட்டுத் தள்ளிச் சென்று தான் பேசுவான், அன்று என் அருகிலேயே நின்று சிரித்துக்கொண்டே பேசிக்கொண்டிருக்கிறான். முதலில் என் அருகிலேயே நின்று பேசியது நீண்ட நாளைக்குப் பிறகு பேரிரைச்சலை உண்டாக்கியது. எனக்குக் காது தான் கேட்காதே என்கிற உதாசினத்துடன் நடந்து கொண்டது கோபத்தை ஏற்படுத்தியது. மறுநாள் கிருமியை அவனது அலைபேசிக்கும் அனுப்பினேன்.

மீண்டும் கலவையான உணர்ச்சிகள். இறுதியில் என்னிடம் வந்தான், சிகரெட் பிடிக்கப் போகலாம் என்றான். சிகரெட் பிடித்துக்கொண்டிருக்கும் பொழுதே காதலியிடம் இருந்து அழைப்புகள், எதையுமே எடுக்கவில்லை.

“ஏன் அழைப்பைத் துண்டித்துக்கொண்டே இருக்கிறாய்”

“இல்லை ஒன்றுமில்லை”

“உனது காதலியிடம் இருந்து தானே, எடுத்துப் பேச வேண்டியதுதானே .. நான் அருகிலிருப்பதால் சங்கோஜப்படுகிறாயா”

“அப்படியெல்லாம் இல்லை , எனது அலைபேசியில் சிறிய பிரச்சனை”

“உனது கணினியிலும் பிரச்சனை என்று சொன்னாயல்லவா”

“ஹ்ம்ம் …” என்று யோசித்துக்கொண்டே இருந்தான்…

“என்ன பிரச்சனை”

“நான் பேசுவதும் , மற்றவர்கள் பேசுவதும் துண்டித்துத் துண்டித்து கேட்கிறது .”

“ஒருவேளை ம்யூட் ஆகியிருக்கும் , பார்த்தாயா “

“பார்த்தேன் அப்படியெல்லாம் இல்லை ஆனாலும் விட்டு விட்டுக் கேட்கிறது”

“உனது அலைபேசியில் என்ன பிரச்சனை… “

“அதிலும் அதே பிரச்சனை தான்”

“ஹ்ம்ம்… இரண்டிலும் ஒரே பிரச்சனை என்பது நெருடலாக உள்ளது… “

“மருத்துவரைச் சென்று பார்த்து வா”

என்னை முறைத்துப் பார்த்தான். அவன் என்னைப் பார்த்து முறைத்ததில் எனக்குக் கோபம் இல்லை. ஆனால் அதற்கு முன் ஏளனமாக என்னைப் பார்த்துவிட்டு பின்புதான் முறைத்துப் பார்த்தான். அதன் பொருட்டு கோபம் இன்னும் அதிகமானது. தனது அலைபேசியை மூன்று முறை மாற்றினான். அவனது அந்தரங்க கணினிக்கும் , சாதனங்களுக்கும் அதே கிருமியைத் தொற்றவைத்தேன்.

பாடாத பாடுபட்டான், ஒருவாரம் சென்றது , இரண்டு வாரம் சென்றது. பிறகொரு நாளில் என்னிடம் சொன்னான்

“நண்பா நீ எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாய் , உன்னைப் பார்த்தாலே பொறாமை வருகிறது”

“என்னைப் பார்த்தா… “

“ஆமாம் உன்னைப் பார்த்துத்தான்… நீ சொல்வது மற்றவர்க்கும் , மற்றவர்கள் சொல்வது உனக்கும் அரைகுறையாக புரிந்தாலே போதும், முழுவதுமாக புரிந்துகொள்ளப்படும்”

“ஹா ஹா , உனக்கு அது இன்பம் என்று தோன்றுகிறதா “

“ஆமாம், இந்த உலகமே பேரிரைச்சலாக இருக்கிறது, யாரிடமும் பேச பிடிக்கவில்லை… யார் பேசுவதும் கேட்க பிடிக்கவில்லை… உன்னிடம் இதுபோல வாக்குவாதங்கள் குறைந்த உரையாடல்கள், பேரின்பமாக இருக்கிறது .. “

“ஹ்ம்ம் உனது காதலியிடம் பேசுகிறாயா “

“அவளா, என்னிடம் பேசுவதை நிறுத்தி ஒரு வாரமாகிறது… “

“நேரில் சென்று பார்த்தாயா?”

“சந்தித்தேன்… அது தொலைப்பேசியில் பேசுவதை விடக் குழப்பத்தில் முடிந்தது “

“அப்படியா .. “

“உலகமே பேரிரைச்சல்” என்று மீண்டும் சொன்னான்.

மேலும் சில நாட்கள் சென்றது.. அவன் பேசுவது வெகுவாக குறைந்திருந்தது.

“எதனால் மிகவும் வருத்தத்துடன் இருக்கிறாய்”

“தெரியவில்லை”  என்றான்.

“நான் பேசுவது யாருக்குமே பிடிக்காது போவது போல் தோன்றுகிறது” என்று மிகவும் வருத்தப்பட்டான்.

” உன்னிடம் மட்டுமே நான் தெளிவாகப் பேச முடிகிறது”  என்று தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.

தன்னை சுற்றியுள்ளவர்கள் தன்னை உதாசினப்படுத்துவதாகச்  சொன்னான். எல்லோரிடத்திலும் நம்பிக்கையற்றுப் போவது,  விரக்தியாக உள்ளதாகச் சொன்னான்.

பின்னொருநாளில் காணாமல் போனான். பிறகு வேலையை விட்டு அனுப்பப்பட்டான். பிறகு அவனைச் சந்தித்த தருவாயில் இருவரும் பேசுவது இருவருக்குமே கேட்டது. மொழிகள் தாண்டி , சப்தங்கள் தாண்டி நான் பேசுவது அவனுக்கும் அவன் பேசுவது எனக்கும் தெளிவாகக் கேட்டது. இரைச்சலில்லா மொழி, சப்தங்கள் இல்லா சங்கீதம் எவ்வளவு இனிமையானது. நண்பனுக்குப் புரிந்து போனது. என்வசம்  ஆனான் , எனது உண்மையான சகாவானான்.

ஒன்றிலிருந்து மற்றொன்றைக் கண்டடைவது போல, நாங்கள் இரைச்சலில் இருந்து பேரமைதியைக் கண்டு கொண்டோம்.எனக்கு நானே கண்டுகொண்ட உலகத்திற்குள் என் நண்பனையும் கொண்டு வந்துவிட்டேன். அவனும் அதில் உலாவ ஆரம்பித்துவிட்டான். எனக்கானவன் ஆகிவிட்டான். அவனும் நானும் பெயர் சொல்லி அழைத்துக்கொள்வதில்லை.பாஷைகள் மறைந்து, சொற்கள் மறைந்து, எழுத்துக்கள் மறைந்து, இலக்கணங்கள் மறைந்து இப்பொழுது எங்கள் அடையாளங்களும் மறைந்து பெயர்களற்று போனோம். அவன் எனது நண்பன் என்ற அந்தஸ்திலிருந்து மறைந்து எனது அங்கமானான். நான் மட்டுமே இன்று எஞ்சியிருக்கிறேன்.

இப்பொழுது தன்மயமான சிந்தனை, தன்மயமற்றதாக மாறியது. வாழ்வின் அவலநிலைகளைக் கொண்டு தானே உன்னதத்தைச் சித்தரிக்க முடியும். அவலத்தைச் சுமப்பவர்களைக் கண்டுணர்ந்து உன்னதத்தை எடுத்துரைக்க வேண்டும். எப்படி இந்த பேரிரைச்சல் அமைதியை எடுத்துக்காட்டியதோ அப்படித்தான் இது. அமைதியில் உழன்று அமைதியில் திளைத்து , தொடர்ந்து எனது மனம் அமைதியில் தன்னை கரைத்துத் தவித்துக் கொண்டிருக்கிறது. அனுதினமும் அமைதியைப் புசித்துப் புசித்து தெகிட்டி விட்டிருந்தது. இந்த பேரமைதியைத் தாண்டி வேறென்ன கிட்டும் , அதன் உணர்வு எப்படிப்பட்டது. அதற்கு யாராவது பெயரிட்டிருப்பார்களா ?. இருக்காது, அதற்குப் பெயரிட்டு அனுபவிக்கும் மனநிலை வாய்ந்தவர்களாக அவர்கள் இருக்க மாட்டார்கள். எப்படி நான் அவலத்திலிருந்து இந்நிலைக்கு எட்டினேனோ, அதே போல அனைவரையும் அந்நிலையை எட்ட வைக்க வேண்டும்.

அன்பற்ற, நீதியற்ற, அழகற்ற, சுதந்திரமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டவர்களைக் கண்டுணர்ந்து மாற்ற வேண்டும் . ஆகா மிகப்பெரிய வேலை தான் அது; என்றபோதிலும், சாத்தியம் தானா என்பது தெரியவில்லை. இது நான் ஒருவனே நின்று முடிக்கவேண்டிய வேலையில்லை. இந்த உலகமே நான் ஆக்கும் வேலை. இல்லை இந்த உலகத்தையும்  தாண்டி பிரபஞ்சத்தையும் தாண்டி எல்லைகளற்று விஸ்தரித்து அனைத்தையுமே கட்டுடைத்துத் தேடவே முடியாத நிலைக்கு நான் ஆட்பட வேண்டும்.