1

உள்ளே நுழைந்தவளிடம் வார்த்தையேதும் பேசவில்லை. அள்ளி ஏந்தி சுவரோடு அறைந்து.. கதவை ஒருக்களித்துக்கூட வைக்கவில்லை. சிறுநீர் கழிப்பதற்கும் குறைவான நேரம்தான் ஆகியிருக்கும். தொப்பென்று அவளைத் தரையில் போட்டுவிட்டுப் போய் படுக்கையில் சரிந்தான்.

வந்திருந்தவள் இந்த மூர்க்கத்திற்கு தயாராக இருந்திருக்கவில்லை. என்ன நடந்தது என்பதை நினைவுப்படுத்திப் பார்க்கக்கூட அவளுக்கு எதுவும் மிஞ்சவில்லை. முட்டி வரை இறக்கிவிடப்பட்டிருந்த கீழாடையை ஏற்றிவிடும்போதுதான், வேகத்தில் அதைக் கிழித்திருக்கிறான் என்பதையே கவனித்தாள். மேலாடையை தொட்டிருக்கக்கூட இல்லை அவன். முத்தமிட்டானா? முகத்தையாவது பார்த்தானா? ஆடையைச் சரி செய்துகொண்டே, மெத்தை விரிப்பில் கோக்குமாக்காகக் கிடப்பவனைப் பார்த்தபோது, அவனது கண்கள் விட்டத்தில் குத்திட்டிருந்தன. அவளே போய் தாழிட்டு வந்து தரையில் ஓரோரமாக உட்கார்ந்துகொண்டாள்.

மூச்சின் வினோதத்திலேயே அவன் உறங்கிவிட்டான் என்பதை அறிந்துகொண்டாள். ரப்பர் குடத்திலிருந்த நீரை நான்கு மிடறு குடித்த அரை மணி நேரத்திற்குள் அடிவயிறு முட்டிக்கொண்டது. குடிலுக்கு வெளியேயிருந்த கழிப்பறையின் தகரக் கதவைத் திறப்பதற்குள் மூத்திரமும் வாந்தியும் கலந்த நெடி. மூக்கோடு சேர்த்து வாயையும் பொத்திக்கொண்டவள் பின்கட்டு சுவரையொட்டி குத்தவைத்தாள். கோரையாறு பச்சையும் வண்டலுமாக ஓடிக்கொண்டிருந்தது. கால்களை அலம்பிக்கொண்டவள் குடிலுக்குள் நுழைந்தப்போது, எழுந்து அமர்ந்திருந்தான்.

உள்ளே ஒருத்தி நுழைந்ததையே கவனிக்காதவன் போல கைலியை சரிசெய்து கட்டிக்கொண்டான். சிகரெட் ஏற்கனவே பற்றவைக்கப்பட்டிருந்தது. உதட்டைச் சுடும்வரை லயித்து இழுத்து வீசிவிட்டு, முதன்முறையாக அவளது முகத்தைப் பார்த்தான்.

சற்று பரிட்சயமான முகம். அலைப்பேசியில் காட்டப்பட்டப்போதும் இதேதான் தோன்றியது. அல்லது ஒரு சராசரி தமிழ் முகம். ரயில்களில், பேருந்து நிறுத்தங்களில், கோயில்களில், தொடர் நாடகங்களில்.. எங்கேயோ பார்த்தச் சாயை.

அந்த முதல் சில வினாடிகளை மனதிற்குள் ஓட்டிப்பார்த்து, கண்களைத் தாழ்த்திக்கொண்டான். குவளைத் தண்ணீரையள்ளி விழுங்கிவிட்டு, ஒரு மாதிரி விக்கிச் செறுமி மீண்டும் படுக்கையில் சாய்ந்துகொண்டவனுக்கு இன்னொரு முறை தூக்கம் வந்துவிட்டால் தேவலாம் என்றிருந்தது.

புது பல்ப் ஒளியில் கண்கள் கூசிட, புரண்டுக் குப்புற படுத்துக்கொண்டான். மனம் ஓய்ந்தபாடில்லை – அவளைப் போகச் சொல்லிவிடலாமா என்று கூட தோன்றியது. அந்த யோசனையால் கணநேரமேனும் ஓர் அமைதி சாத்தியப்பட்டது. அதுதான் சரியென்ற சமாதானத்திற்கு மனம் நகர்ந்தத் தருணம், தலைமயிரைக் கோதிவிட அவளது கை நுழைந்தது. அழைப்பாக இல்லாமல் ஆறுதலுக்கான தொடுகையாகத் தெரிய, எழுந்தமர்ந்து நேரடியாக அவளது கண்களைப் பார்த்தான். ஒப்பனையற்ற முகத்தின் மிகச் சாதாரண கண்கள் – குழைவோ குறும்போ இல்லாத பார்வை. கவிந்த வெறுமையை உடனடியாக நிரப்பிவிடுவதைப் போல.. வினாடி பொறுக்காமல் மீண்டும் அவளைக் கட்டியணைத்து தூக்கிக்கொண்டான். முன்பைப் போலல்லாமல் நிதானமாக.. குறைந்தபட்சம் பத்து நிமிடங்களாவது தாங்கியிருக்கும்.

ஒன்றரை மணி நேரத்திற்குப் பிறகு, அந்த அறையில் முதல் சொல் பேசப்பட்டது

‘ஒன்னோட நெஜ பேரே ஜோதிதானா?’

2

சுற்றியிருந்த வெளிச்சம் மொத்தமாக நாலைந்து முறை மினுங்கி மெல்ல மங்கலாகி கொஞ்சம்  திக்குமுக்காடிப் பார்த்து முடியாமல் போக ஒருவழியாக முயற்சியைக் கைவிட்டது. மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டதா? மாளிகையில் ஏது மின்சாரம்? மத்தியிலொரு தீப்பந்தம் தலைக்கீழாக ஆடிக்கொண்டிருக்க கீழ்நோக்கித் தொங்கிய ஜுவாலையின் நாவினில் கருஊதா, மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு என அலங்கார நாட்டியங்கள். அதற்கு மிக நெருக்கத்தில் நின்றவாக்கில் முயங்கிக்கொண்டிருந்த இரு உடல்களின் ஒரே பெரிய நிழல் – கலவியின் நுணுக்கமான அசைவுகளை பூதாகரமான கருந்தகட்டு காட்சியாக எதிர்ச்சுவரில் காட்டிக்கொண்டிருந்தது. பெண்மையின் சராசரியை மிஞ்சிய திண்மையுடன் வேணியின் கால்கள்; முகுந்தனின் ரோமங்களற்ற வெளுப்பான கால்கள். உச்சநிலையை எட்டிவிடும் முனகல்களுக்கும் சிணுங்கல்களுக்கும் நடுவில் ஓர் அபாரமான சிரிப்பொலி. இல்லை. இரு தனி தனி சிரிப்பொலிகள். புணர்ச்சியின் நடுவில் சிரிப்பா? கேட்கவே கண்றாவியாக இருக்கிறது. இருந்தும் எவ்வளவு அடக்கிப்பார்த்தும் முடியாமல் பொத்துக்கொண்டு வரும் சிரிப்பு. அட.. இப்போது வெறியல்லவா வரவேண்டும்? எத்தனை வெட்கங்கெட்டச் சிரிப்பு இது.. அவ்விரு சிரிப்பொலிகளுக்கும் தற்குரலின் சிரிப்பிற்கும் எத்தனை வேறுபாடுகள்? எத்தனை தொலைவு? பரிகாசத்திற்கும் தோல்வியுணர்ச்சிக்குமான இடைவெளி; தந்திரத்திற்கும் ஏமாற்றத்திற்குமான இடைவெளி; முந்துவதற்கும் துரத்தப்படுவதற்குமான இடைவெளி – ஆனால் காதுகளுக்கு எல்லாமே சிரிப்புதான். மேலும் மேலும் அடக்கமுடியாமல் வந்துகொண்டேயிருக்கிறது. அவர்களை விட உரக்க சிரித்துவிடவேண்டும். செல்லாக்காசாக, உடைத்துப் பேசிட திராணியற்ற.. ச்சய்.. இதிலாவது விஞ்சிவிட வேண்டும். மூன்று சிரிப்புகளுக்கு மத்தியில் இன்னொரு கீச்சு சிரிப்பொலி. கையில் சொப்பு சாமான் பையுடன் சுவரோரத்தில் நின்று கீர்த்தியும் சிரிக்கிறாள். அப்பாவோடு சேர்ந்தோ, அப்பாவுக்காகவோ, அப்பாவைப் பார்த்தோ.. அச்சிறுகுழந்தையின் முன்னால் கொஞ்சமும் வெட்கமின்றி இப்படி பின்னிக் கிடக்கும் உடல்களை நோக்கி தீப்பந்தத்தை எட்டி உதைக்கவேண்டும்.. எரிந்து சாகட்டும். சிரிப்பு சிரிப்பு.. முகுந்தனின் அதிகாரச் சிரிப்பு, வேணியின் கிறக்கச் சிரிப்பு, எதுவும் புரியாத கீர்த்தியின் குறிப்பற்ற மழலைச் சிரிப்பு – இவற்றைத் தாண்டி.. இன்னும் உக்கிரமாக.. உறுதியான.. பயங்கொடுக்கும் விதத்திலான..

இளங்கோவின் சிரிப்பொலியின் முடிவில் ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்டு ஓடிவந்த கனகு கதவைத் திறந்துப் பார்க்கையில் குண்டு பல்ப் சுவரோரத்தில் விழுந்து உடைந்துக் கிடந்தது. இளங்கோ மூங்கில் உத்திரத்திலிருந்து ஆடிக்கொண்டிருந்த ஒயருக்கு கீழே குத்துக்காலிட்டு அமர்ந்து வாயைப் பொத்திச் சிரித்துக்கொண்டிருந்தான். முழுமையாக இரண்டு நிமிடங்கள் அவன் அடங்குவதற்காக கனகு பொறுத்திருந்தான் – பலனில்லை. கண்ணாடித் துண்டுகளை ஓர் அட்டையில் பெருக்கியெடுத்து கொண்டுபோய் வீசிவிட்டு, அவ்விடத்தைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தான். களைத்து மூச்செடுத்து தொடர்ந்து சிரித்துக்கொண்டிருக்கும் இளங்கோவைப் பார்க்கவே வெறுப்பாக இருந்தது. பரிதாபத்தின் எல்லைக்கோட்டிலிருக்கும் விலகல் அது.

படுக்கையின் மீது புகையிலை தட்டி அகற்றப்பட்ட வெற்றுக்குழாயாய் இரண்டு சிகரெட்டுகள், கூடவே ஒரு சிறிய பொட்டலம். இழுப்பிற்கு தயாராய் நிரப்பி முனை சுருட்டப்பட்டிருந்த ஒரு சிகரெட்டை எடுத்து தன் சட்டை பாக்கெட்டுக்குள் கனகு வைத்துக்கொண்டான். எஞ்சியவற்றை ஒன்றாக சுருட்டி சன்னல் மாடத்தில் வைத்துவிட்டு, படுக்கையை ஒழுங்கு செய்ய ஆரம்பித்தான். இளங்கோ தன்னையேதும் பார்க்கிறானா என்று நடுநடுவே ஓரக்கண் மேய்ச்சல். அவன் இன்னமும் சிரிப்போடுதான் மல்லுக்கட்டிக்கொண்டிருந்தான். அழைத்துக்கொண்டு வந்து படுக்கவைக்கலாமாவென தயங்கிய கனகு இடவலமாக தலையாட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.

‘சாப்பாடு கால் அவர்ல ரெடி ஆயிரும் சார்.. வந்து கூப்புடுறேன்’ கதவிற்கு வெளியே நின்று அவன் சொன்னதை, காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் இளங்கோ தொடர்ந்து சிரித்துக்கொண்டிருந்தான். கதவைச் சாத்திவிட்டு நகர்ந்தவன், ஏதோ யோசிப்பதுப்போல நின்றுவிட்டு திரும்பிவந்து இரண்டு கதவுகளையும் முழுமையாக திறந்துவைத்துவிட்டு அரைமனதாக எதிரிலிருந்த குடிசைக்கு போனான்.

3

சாம்புவானாடை படகுத்துறையிலிருந்து புறப்பட்டு காயலுக்குள் ஒரு மைல் தூரம் வரும் வரை யோசப்பு ஒரு வார்த்தை கூட பேசவில்லை. போன முறை அவன் தொணதொணத்திருந்தது இளங்கோவிற்கு நினைவிருக்கிறது. கனகு எதுவும் சொல்லியனுப்பியிருப்பானா? அவனிடம் கேட்ட கேள்விக்கு, நேரடி பதில் சொல்லமுடியாமல் கனகு திணறிக்கொண்டிருந்ததுதான் இன்னமும் கண்ணில் நிற்கிறது. நிமிர்ந்துப் பார்த்திடும் தீரமின்றி அவன் அவதிப்பட்டதிலேயே இளங்கோவிற்கு வேண்டிய பதில் கிடைத்திருந்தது. அந்தத் தயக்கம் நிஜமா? அல்லது தன்னை சிறுமைப்படுத்தும் அர்த்தபாவமா?

இறால் வலைக்கொடிகளை ஒவ்வொன்றாக கடக்கும்போது ஃபைபர் படகின் மோட்டார் இயந்திரத்தை நிறுத்துவதிலும் மடக்கி நீருக்கு மேலே தூக்கிக்கொள்வதிலுமே யோசப்பு முனைப்புடன் இருப்பதைப் பார்த்து இளங்கோ எரிச்சல்பட்டான். கொஞ்சம் வந்து பேச்சுக்கொடுத்தால் தேவலாம் என்றிருந்தது. இரண்டுமுறை திரும்பி அவனைப் பார்த்ததை யோசப்பும் கவனிக்காமலில்லை.

இயந்திரத்தை நிறுத்தும் இடங்களிலெல்லாம் நீளக் குச்சியைக் கொண்டு வலைக்கொடியை நீருக்குள் அழுத்திப்பிடிக்கும் சிறுவனிடம், ’லேய்.. நீ மோட்டாருக்கு போ..’ என்று சொல்லிய யோசப்பு எழுந்து முன்னுக்கு வந்தான். குச்சியை வாங்கிக்கொண்டு இளங்கோவைக் கூர்ந்துப் பார்த்தான்.

‘ஐயா முன்ன யம்ப போட்டுல வந்தவளோ.. தெரிஞ்ச மொகமாட்டு படுது..’

இளங்கோ லேசாக புன்னகைப்பதற்குள், ‘புடிவட்டு போச்சு.. தாடிக்குள்ளார இருந்துருக்கு சிரிப்பு.. மொகமே நீண்ட கணக்கால்ல ஆயிருச்சு.. காச்ச கண்ட மாதிரி ஒடுக்குங் கோடுமா..’

‘நல்லாருக்கீங்களா? கனகு ஃபோன் பண்ணும்போதே நாதான் வர்றதா சொல்லிருப்பான்னு நெனச்சேன்..’ இளங்கோ சாதாரணமாக பேச முயற்சித்தான்.

‘அது எல்லாத்தையும் ஆபீஸ் ஆளுங்க வராங்கன்னு சொல்லிரும் ஒரே வார்த்தைல.. யாரு யெவருன்னு பேர சொன்னா என்ன நமக்கு புரிஞ்சுற போவுதா.. ஆள பாத்துட்டா நெனப்பு தட்டிரும்.. தாடியில்லாட்டி ஏத்தத்துலயே புடிச்சிருப்பேன்..’

இளங்கோ பலவீனமாக முறுவலித்தான்.

‘முட்டாப்பய கண்டுபுடிக்கிறானான்னு வெய்ட் பண்ணி பாத்திய போல..’ யோசப்பின் பிரமாதமான சிரிப்பு குறுகிய நீர்ப்பாதையின் இருமருங்கிலும் இருக்கும் சுரப்புன்னி மரங்களுக்குள் எதிரொலித்தது.

‘வந்து ஒரு வருசம் இருங்குங்களா?’

‘ரெண்டாச்சு..’ பதிலில் பாதி விழுங்கல்.

‘அம்மா பாப்பால்லாம் வரலீங்களா..?’

இளங்கோ நிமிர்ந்து யோசப்பின் முகத்தைப் பார்த்தான். மோட்டார் சத்தம் மண்டைக்குள் ஓடுவதைப் போலிருந்தது.

‘மொகத்த சட்டுன்னு புடிக்கமுடிலன்னு மறந்துருப்பான்னு நெனச்சியளா? கூர்ப்பா வெச்சுருப்பேன் அல்லாத்தயும்..’

இளங்கோ பதில் சொல்லவில்லை. பேச ஆரம்பித்திருக்கவே வேண்டாமோ? அலையாத்தி காடுகளுக்குள் பார்வையைத் திருப்பிக்கொண்டான். சதுப்பு நிலத்தின் அடைசலான கொடிகளும் மரங்களும், மூச்சுவிடும் தரைப்பரப்பு வேர்களும் பின்மதிய வெயிலையும் மீறிய குளிர்ச்சியை அங்கு பரப்பியிருந்தன. யோசப்பும் அதே திசையில் பார்த்துக்கொண்டு நின்றான். சற்று தூரம் கடந்து ஓய்வெடுக்கும் கூடாரத்துக்கு போகும் மர நடைப்பாலங்கள் கண்ணுக்கு வந்தன.

‘பாட்டிலு எதுவுமா இருக்கு.. ப்போட்ட பாதைய ஒட்டி நிறுத்தவா?’ யோசப்பு கேட்க, இளங்கோ மறுத்து தலையசைத்தான்.

‘ஐயா ஐயமாரு வேற.. மீனுகறி சீந்த மாட்டிய..’ முன்பு கேட்டிருந்த கேள்வியை மேலும் திருகாமல் அடுத்தடுத்தென நகர்ந்ததற்கே இளங்கோவிற்கு ஆசுவாசமாக இருந்தது. யோசப்பும் பதில்களைப் பெறுவதைவிட தன்னுடைய நினைவாற்றலின் கூர்மையை நிலை நாட்டுவதற்குத்தான் சிரத்தையெடுப்பதாக தெரிந்தது.

‘அசைவம் சாப்புட மாட்டேன்.. அதுக்காக ஐயெரெல்லாம் இல்ல..’

‘நமக்கு கவுச்சி திங்காத எல்லாரும் ஒரே சாதிதாங்க..’

இளங்கோ சிரித்துகொண்டான்

‘இங்குன புடிக்கிற வெள்ளாம்பொடிய ஆக்கி திங்காம எதுக்கிந்த பொறப்பும்பேன் நானு.. கனகுக்கு போன போட்டு சொல்றேன்.. அப்பப்ப ஆக்கிக்கொண்டாந்து போட்ல வெச்சி திங்கறது நாங்க.. ஒரு நா மட்டும் தொட்டுப்பாத்துட்டு போங்க.. ருசி நாக்குலயே ஒட்டிக்கும்..’ இன்னொரு வலையைக் குச்சியால் அழுத்திக்கொண்டு சொன்னான் – ‘கனகுக்கு நல்ல கைப்பக்குவோந்.. ’

இளங்கோ ஆமோதிப்பதைப் போல புன்னகைத்தான்.

சற்று இடைவெளி விட்டு, ‘சோலிதான் ஒன்னுஞ் செட்டாக மாட்டிங்குது அதுக்கு.. ஆறு மாத்தேக்கு ஒரு வேல.. இப்ப என்ன பண்ணுதுன்னு தெரியல.. சங்கோசப்படும்முன்னு எதுவுங் கேக்கறதில்ல.. நல்ல மனசுக்காரன் ஆனாக்க..’ யோசப்பு முடித்தான்.

இளங்கோவிற்கு சுருக்கென்றிருந்தது. தனது ஒப்பந்த வேலையை விட்டு கனகு ஓடிவந்ததே நிரந்தரப் பணியிலிருந்த இளங்கோ கொடுத்த அழுத்தத்தினால்தான் என்பது பணியிடத்தில் எல்லோருக்கும் தெரியும். தன்னிடம் பரிவை இறைஞ்சும், விரக்தியில் கலங்கும், பலனற்ற கோபத்தில் சிவக்கும் கனகின் பழைய கண்கள் நினைவில் வந்து நின்றன.

வலைகளைக் கடந்த படகு சீற ஆரம்பித்தது.

வேலை வாங்குவதிலும் நெருக்கிப் பிழிவதிலும் அப்படியொரு அகக் கிளுகிளுப்பு. அதுவொரு வடிகால்; ஒருவித விடுதலை. அலைக்கழிப்பிலிருந்த தன் மனதிற்கு மிக எளிய பலிகடாவாக சிக்கியவனை முடிந்தளவிற்கு மூச்சுமுட்ட வைத்தாகிவிட்டது. குடித்துவிட்டு ஒரு முறை அழுதபடி இளங்கோவை அலைப்பேசியில் வசைப்பாடியப் பின்னரும் கனகு வேலைக்கு வந்துகொண்டுதான் இருந்தான். அந்த ஒப்பந்த சம்பளமான ஒன்பதாயிரத்தி நானூறை விட்டு அவனால் அத்தனை லேசில் ஓடிவிடமுடியாது என்பது பட்டவர்த்தனமான அந்தப் புள்ளியில் இளங்கோ இன்னும் உலர்ந்துப்போனான். தன் அத்தனை உளத்தொய்வுகளுக்குமான ஒரே நிவாரணியை மிச்சமின்றி நசுக்க ஆரம்பித்திருந்தான்.

தொண்டை வறண்டுவிட்டதைப் போல கமறியவன் இலக்கற்று எங்கேயோ பார்த்துக்கொண்டு வந்தான். தொடர்ந்து என்னன்னமோ பேசிக்கொண்டு வந்த யோசப்பின் பாதி வார்த்தைகளை காதிலேயே போட்டுக்கொள்ளவில்லை. அவனையே அறியாமல் கால்கள் நடுங்கிக்கொண்டிருந்தன.

கனகு வேலையிலிருந்து நின்றுவிட்டான் என்பதை சொல்லும்போது முகுந்தனின் முகத்தில் ஓர் ஏளனம் இருந்தது. என்ன அது? உனக்கான அத்தனை கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டன என்பதா?

பேச்சுவாக்கில் படகு கழிமுகத்திற்கு வந்து சேர்ந்திருந்தது. காடு ஓய்ந்து கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்த ஆரவாரமற்ற நீர்ப்பரப்பு – எந்தவொரு ஆத்மாவும் அதிலில்லை என்பதைப் போல அத்தனை வெறுமையாக இருந்தது. ஒரு நொடியேனும் ஒட்டுமொத்த நம்பிக்கையயும் நிர்மூலமாக்கும் நிச்சலனம். சமீப நாட்களில் எவ்வளவு அடக்க முயன்றும் அடிக்கடி வெடித்து எழும் குறிப்பிட்ட பயம் உள்ளுக்குள் மீண்டும் பெருக்கெடுக்க ஆரம்பித்தது.

‘யோசப்பு.. போட்ட திருப்பி உள்ளயே ஓட்டுங்க..’

‘இன்னுங் கொஞ்சம் மேல போலாமுங்க.. கடல கண்டா பயமா என்ன..’

‘அதெல்லாம் இல்ல.. வெயில் ஜாஸ்தியா இருக்கு..’

‘கார்த்திய மாத்தய வெய்ய ஒரு வெய்யவா? போச்சு போங்க..’

சிறுவன் படகை ஒரு நீள்வட்டத்தில் கொண்டுவந்து வளைக்கும்போது, யோசப்பு சொன்னான் ‘ரெண்டு மாத்தய முன்னாடி ஒரு பய.. இங்குன வரைக்கும் போட்டுல வந்து தண்ணிக்குள்ள தவ்விப்புட்டான்.. குதிச்சு சாவ எடம் பாத்துருக்காம் பாருங்க.. எறங்கி தூக்கி வெச்சு ச்செவுல திருப்பிவுட்டன்.. வப்பனோலி..’

கழுத்தோரத்தில் பொல்லென்று வியர்த்துவிட்டது இளங்கோவிற்கு. அவமானத்தில் யோசப்பின் முகத்தையே பார்க்க முடியவில்லை.

4

இளங்கோ தெளிவதற்குள் வெயில் உச்சிக்கு ஏறியிருந்தது. நடுவில் ஐந்தாறு முறை கனகு எட்டிப்பார்த்துவிட்டு வந்திருந்தான். முன்னிரு முறைகள் சிரித்துக்கொண்டிருந்தவன் பின்னர் உறக்கத்திலிருந்தான். எழுப்ப முயற்சிக்கவில்லை. மதியத்திற்கு அரிசியை உலையில் போட்டப்போது, இளங்கோ விரலாலேயே பற்களைத் தேய்த்தபடி கதவைத் திறந்துகொண்டு வெளிவருவது தெரிந்தது. தன்னை அவன் பார்க்கும்வரை கனகு வாயைத் திறக்கவில்லை.

‘செத்த உள்ளார ஒக்காருங்க.. செஞ்சதெல்லாம் ஆறிப்போச்சு.. ரெண்டு தோச வாத்துட்டு எடுத்தாறேன்..’

‘வேணாம் கனகு.. வயிறு கெடந்து காந்துது ஒரு மாரி.. மோர் எதுனா இருந்தா குடு..’ எங்கேயோ பார்த்துக்கொண்டு சொன்னான்.

சிமிண்ட் சுவரெழுப்பி பனையோலை மேற்கூரை வேய்ந்த குடிலையும், எதிரில் ஒரு மண்சுவர் குடிசையையும், மறைவில் அரசு மானியத்தில் கட்டிய கழிப்பறையையும் தாங்கிய கோணலான நிலம், கோரையாற்றுக் கரை உள்ளுக்கு வளையுமிடத்தில் பாந்தமாக உட்கார்ந்திருந்தது. குழந்தையும் குடித்தனுமுமாக அங்கு இருக்கமுடியாமல், வேறொரு இடத்தில் ஆயிரத்தி நூத்தைம்பது வாடகைக்கு தங்கியிருக்கிறான் கனகு. தெரிந்தவர்கள் யாரேனும் முத்துப்பேட்டை காயலுக்கு பொழுதைக் கழிக்க வந்தால், குடிலில் அரை நாள் / ஒரு நாள் வாடகைக்கு தங்க வைத்து, மீனும் இறாலுமாக சமைத்துப்போட்டு, சிகரெட்டும் பியரும் வாங்கிக்கொடுத்து, படகு சவாரிக்கு பேசிவிட்டு.. இப்படித்தான் கனகுக்கு இப்போது ஜீவிதம் ஓடிக்கொண்டிருக்கிறது. முன்பு பணியிலிருந்தப் போது தனக்கு பழக்கமான தஞ்சை, ஒரத்தநாடு, செங்கிப்பட்டி ஆட்களை இவனாகவே அழைப்பதையும் வாடிக்கையாக்கியிருக்கிறான். மாதத்திற்கு ஓரிருவர் வந்துப் போனாலும் போதும். பிழைப்பை ஓட்டி விடலாம். யாருமே வராத மாதங்கள் உண்டு. வந்தாலும் போட்டிங்கோடு போய்விடுபவர்கள் உண்டு.

அடுப்பிருக்கும் குடிசைக்குள்ளிருந்து கனகு ஒரு லோட்டா நிரம்ப மோர் கொண்டுவந்து கொடுத்தான். வாயெடுக்காமல் மடமடவென குடித்த இளங்கோ, கடைசி அரை வாய் மோரை பொளிச்சென பக்கவாட்டில் துப்பினான்.

‘கிங்ஸ் ஒரு பாக்கெட் வாங்கிட்டு வர்ரியா கனகு?’

கனகு எதுவும் பேசவில்லை. களையிழந்திருந்த தன் முகத்தை அளப்பதைப் போல பார்த்துக்கொண்டிருந்தவனை ஏறிடாமல் அசட்டையாக இருப்பதாக இளங்கோ காட்டிக்கொண்டான். தன்னை இப்படி பார்ப்பதில் அவனுக்கு சந்தோஷம்தானே இருக்கமுடியும்? கனகின் முகத்தில் ஆனால் அதன் சிறுச்சுவடைக் கூட பார்க்க முடியவில்லை.

‘சரி வா.. த்தோச ஊத்து.. சாப்டுறேன்..’ அசெளகரிய மெளனத்தைக் கலைக்கவே வருவிக்கப்பட்ட கட்டைக் குரல்.

‘காத்தார இப்புடி மரத்தடிலயே ஒக்காருங்க சார்.. நா கொண்டாறன்..’

‘அட.. ஏன் ஒன்னோட கோட்டைக்குள்ள நா கால் வைக்க கூடாதா?’ பழைய மிடுக்கை விட்டுக்கொடுக்காமலிருக்க அவன் வலிந்து முயற்சிப்பது அப்பட்டமாகத் தெரிய, கனகு சமாளிப்பதைப் போல ஏதோ சொன்னான்.

‘அதில்ல சார்.. அது சின்ன குடுச.. மண்ணு தர.. அடுப்பு சூடு வேற அடிக்கும்.. அதுக்குள்ளல்லாம் எதுக்கு வந்துக்கிட்டு..’

‘சார் நீங்க ஏன் சார் எங்க சந்துக்குள்ளல்லாம் வந்துக்கிட்டு.. ரொம்ப சின்ன வீடு சார்.. பரவ்வால்ல சார்’ கீர்த்தியின் முதல் பிறந்த நாளுக்கு வீட்டிற்கு வருவதாக சொன்ன முகுந்தனிடம் சொல்லிய வார்த்தைகள். அதுதானே முதல் நுழைவு. பின்னர் எத்தனை முறை? தனக்கு தெரிந்தும் தெரியாமலும் எல்லாம் தெரிந்துவிட்டது என்பது தெரிந்தும்… என்ன செய்துவிட முடியும் என்னால் என்ற ஏளனம்தானே அது? என்னதான் செய்துவிட முடிந்தது என்னாலும்?

மெளனம் வெகுநேரம் நீடித்தது.

‘ஆமா கனகு.. சரிதான்.. நொழைய விடறதுக்கு முன்னாடியே நிறுத்திறனும்..’ மனதுக்குள் நினைத்துக்கொண்டோமா வெளியில் சொல்லிவிட்டோமா என்பதே இளங்கோவிற்கு தெரியவில்லை. முகத்தில் தெளிவற்றக் குறிப்புடன் கனகு நின்றுகொண்டிருந்தான். இளங்கோ தலையைக் குனிந்துகொண்டான்.

‘உள்ள வாங்க சார்’

இளங்கோவிற்கு ஏற்கனவே உள்ளுக்குள் எல்லாம் மீண்டும் ஓட ஆரம்பித்திருந்தன. கோரை தடுக்கை எடுத்துப்போட்டுவிட்டு மூலையிலிருந்த அடுப்பில் கனகு தோசை வார்க்க ஆரம்பித்தான். சானம் மெழுகிய மண்தரை சில்லென்றிருந்தது. புகையேறி கன்னங்கரேலென இருந்த மூலையில் கனகு என்ன செய்கிறான் என்பதே தெரியவில்லை. என்னைத்தான் நோட்டமிடுகிறானா? – இளங்கோவின் முகம் கலவரம் கண்டது. குடும்பத்தைப் பற்றியோ பணியிடத்தைப் பற்றியோ வந்ததிலிருந்து கனகு ஒரு வார்த்தை விசாரித்துவிடவில்லை. வேலையை விட்டு வந்துவிட்டாலும், முன்னர் பழகியிருந்தவர்களின் படுக்கையறை வரையிலான அத்தனை சேதிகளும் அவனுக்கு வராமல் இருக்காது. ‘புறப்பட்டு வருகிறேன்’ என்று தான் சொன்னப்போது, கனகு தடுமாறியது அறுபது மைல்களுக்கு அப்பாலும் இளங்கோவிற்கு தெரிந்தது. கனகு பேச்சு கொடுக்க முயற்சிப்பதே, புழுக்கத்திலிருந்து தன்னை மீட்பதற்கான ஜோடனை முயற்சியாக இளங்கோவிற்கு தெரிந்தது. மெல்லுவதும் விழுங்குவதுமாக தன்னிடம் என்ன பேசுவது என்று புரியாமல் கனகு இந்த ஒன்றரை நாட்களை ஓட்டுவதில் இளங்கோவிற்கு ஓர் அற்ப குறுகுறுப்பு.

மூன்று தோசைகளும் பூண்டுப் பொடியும் கொண்டுவந்து வைக்கப்பட்டபோது இளங்கோவின் கண்கள் சுவரில் மாட்டியிருந்த புகைப்படங்களில் நறுங்கலான பெண் குழந்தையின் புகைப்படத்தில் குத்திட்டிருந்தன. சட்டமிடப்பட்டிருந்த கருப்பு வெள்ளை படம் – சிறிய மாலையுடன்.

‘அக்கா சார்.. எட்டு வயசுல செத்து போயிருச்சு..’

அந்தப் புகைப்படத்திலிருந்த பெண்ணுக்கும் கீர்த்திக்கும் இருவரும் பெண் குழந்தைகள் என்பதைத் தாண்டி யாதொரு ஒற்றுமையும் இல்லை. இருந்தும் கண்ணில் நீர்க்கோர்த்துவிட்டது. அதைக் கவனித்துவிட்ட கனகு, குரலைக் கொஞ்சம் உயர்த்திச் சொன்னான்.

‘ரெண்டு மணிக்கா ஜாம்பானாடைக்கு போயிருங்க.. யோசப்புட்ட சொல்லிருக்கேன்.. நெனவிருக்கா? போன மொற வந்தப்ப வந்தான்ல அவந்தான்..’

‘போட்டிங்கா.. வேணாங் கனகு.. செத்த படுக்குறேன்..’

‘அட ரெண்டு நாளுக்கும் இதுக்குள்ளயே கெடந்து என்னத்துக்கு.. ஒரு ரவுண்டு சும்மா போயிட்டு வாங்க.. நைட்டுக்கு பியரு வாங்கியாந்து வைக்கிறேன்..’ எத்தனை செயற்கையாக இவனால் பேசிவிட முடிகிறது?

கண்களைப் பார்த்துச் சிரித்து ‘சரி’ என்றான் இளங்கோ.

‘அப்புறம் அந்த பொட்டலம் சனியன்லாம் இனி வேணாம் சார்.. ஏன் இப்படி கெடந்து கெடுத்துக்கனும்.. காலேல நீங்க சிரிச்ச சிரிப்ப பாக்கவே முடியல..’ நிஜமாகவே அந்தக் குரலில் கரிசனம் இருப்பதாகத்தான் பட்டது. அதன் அண்மை ஒரு கணம் தொந்தரவு செய்துவிட்டதோ என்னவோ.. இளங்கோவிடம் பேச்சே இல்லை.

‘ரைட்டு.. ஒரு குளியல போட்டு வந்து கெளம்புங்க..’ கனகு தன்னை இயல்புக்கு கொண்டுவர முயன்றபடியே இருப்பது இளங்கோவிற்கு புரிந்தது. கனகுக்கும் அது ஒருவித தன்னமைதியைக் கொடுக்கிறதோ என்று தோன்றியது.

‘ஏன் அப்புடியே போனா என்ன?’

‘அட.. பின்னுக்கு ஆத்துல எறங்கி நல்லா ஒரு லாந்து லாந்திட்டு வாங்க.. பளிச்சுன்னு இருக்கும்.. தாடிய எடுத்தாலும் பரவால்லதான்.. இதென்ன சீக்காளிக்கோலமா..’ கனகு பாதியில் நிறுத்திவிட்டான். இளங்கோ அவன் மேலே பேசவேண்டும் என்பதைப் போல முகத்தையே பார்த்தபடி காத்திருந்தான். ஒரு வார்த்தையில்லை.

‘கனகு..’

‘சொல்லுங்க சார்..’

இடையிலிருக்கும் ஒளிபுகா திரையின் அடர்த்தியை ஒரு மாற்றாவது குறைத்துவிட வேண்டும் – இளங்கோ நிதானமாகக் கேட்டான்.

‘நான் ஏன் தனியா வந்துருக்கேன்னு நீ கேக்கவே இல்லயே..’

5

அவனிடம் எப்படி இந்த விண்ணப்பத்தை வைக்க முடிந்தது என்பதே இன்னமும் புரியவில்லை. சிகரெட் வாங்கிவா, சாராயம் வாங்கிவா என்பவையே அராஜகம்தான் எனினும் அவற்றை கூலிக்கான ஏவல் என்றாவது வைத்துக்கொள்ள முடியும். கனகு நாலெழுத்து படித்தவன் வேறு. வறுமைக்கு வந்து வேர்ப்பிடித்திருக்கும் அடிவருடித்தனம்.

‘கனகு.. எனக்கொரு பொம்பள வேணும்’

ச்சீ.. ச்சீ.. ச்சீ.. இத்தனை பச்சையாக, துளியும் உடல் உதறாமல், நா கூசாமல்.. எப்படி அந்த வார்த்தைகளைக் குவித்துவிட முடிந்தது? இப்போது இதைக் கேட்டபோது ஒரு வினாடி அவன் கண்கள் இடுங்கி விரிந்தன என்பது சத்தியம். அந்த சுணக்கம் மட்டும்தான் மெய். மற்றதெல்லாம் வயிற்றுக்கான பாசாங்கு.

‘பாக்குறேன் சார்..’ என்ற பதில் அவனிடமிருந்து வருவதற்கு எத்தனை வினாடிகள் பிடித்திருக்கும்.. ச்சீ..

காயலிலிருந்து ஆட்டோவில் வந்து இறங்கியதும் கையுமாக.. செத்துப் பிழைத்துவந்தவன் மாதிரியோ, நெருங்கி நிற்கும் அபாயத்திலிருந்து விடுபடுவதைப் போலவோ, சாவதற்கு முன்பான கடைசி ஆசை என்பதாகவோ.. மனதில் என்ன இருந்தது அப்போது? இளங்கோவிற்கு மனம் ஓயவேயில்லை. இன்னமும் அவனைக் குத்தீட்டியால் காயப்படுத்திப் பார்க்கும் வக்கிரம் தன்னிடம் மிச்சமிருக்கிறதா? அதற்காக இப்படி தன் சுயத்தைச் சிறுமைப்படுத்திக்கொள்ள வேண்டுமா?

மூன்றாவது கூடலுக்குப் பிறகு ஜோதி களைத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள். உடலிலும் கண்களிலும் இருந்த சோர்வையும் மீறி இளங்கோவின் மனம் பேயாக முழித்துக்கொண்டிருந்தது – ஒரு வேளை முந்தைய இரு நாட்களும் கூனிச் சிறுத்ததெல்லாம் இதைக் கேட்டுவிடத்தான் போலிருக்கிறது. பயணப்பட்டு வந்து சேர்ந்திருப்பதே இதை மனதில் வைத்ததுதானா? இதற்கு ஏன் இங்கே வரவேண்டும்? இதை ஏன் இவனிடம் கேட்கவேண்டும் – தன்னுடைய கையாலாகாத்தனத்திற்கான சுயத்தேற்றலாக இன்னொருவனின் அடிவருடித்தனத்தை அடிக்கோடிட்டுப் பார்ப்பதற்கா? தன் திண்டாட்டம் தெரிந்தவனிடம் தன் கீழ்மையைக் காட்டிக்கொள்வதில் கிடைத்திடும் கூடதல் ஆறுதலுக்காகவா? தன்னால் துயரப்பட்டவனுக்கு செய்திடும் பிராயச்சித்தமுமா இது?

எல்லாம் அடுத்தடுத்தது ஊதிய இரண்டு சிகரெட்டுகளின் புகையோடு மெல்ல கரைய ஆரம்பித்தன. உச்சத்திலிருந்து பாதாளத்திற்கு சரிந்திருந்த சுரப்பிகள் சமநிலையை நோக்கி நகரும் சமாதானம், ஜோதியை மீண்டும் உசுப்பச் சொன்னது. குறைந்தபட்சம் குறட்டை விடாமலாவது தூங்கலாம் அவள்.

அடிவயிற்றில் பேறுகாலத்திற்கு பிந்தைய சுருக்கங்கள் இல்லாவிடினும், சிசேரியன் தழும்பு மிக மெல்லிய கோடாக தெரிந்தது.

‘காலேஜ் ஏஜு சார்.. கொஞ்சம் சார்ஜ் கூட ஆவும்ன்னு நெனைக்கிறேன்’ அலைப்பேசியில் புகைப்படத்தைக் காட்டியபோது கனகு சொல்லியிருந்தது – தரகனாகவோ வாடிக்கையாளனாகவோ காட்டிக்கொள்ளாத தூரத்தில் நிற்கும் உடல்மொழி. சுடிதாரிலிருந்த முதல் புகைப்படத்தில் எந்தக் கோணத்திலும் கல்லூரி வயதிற்கான அறிகுறி இருக்கவில்லை. நவீனப் பெண்ணாகக் காட்டிக்கொள்ள ஆண்கள் அணியும் வட்ட கழுத்து பனியனில் இரண்டாவது புகைப்படம் – அந்தத் தோரணையே சகிக்கவில்லை.

‘வேற கெடைக்காதா?’ என்று கேட்க வாய் வரவில்லை. ஆனால் தயக்கம் வெளிப்படையாகத் தெரிந்திருக்கவேண்டும்.

‘போனு சரியில்ல சார்.. ஸ்க்ரீனு மங்கலாயிருச்சு.. நேர்ல் வேற மாதிரி இருப்பா..’ கனகு ஒரு மாதிரி வெட்டி விழுங்கி பேசினான். அந்தத் தவிப்பைத் தான் ரசித்ததாக இளங்கோவிற்கு இப்போது தோன்றுகிறது. ‘இருட்டுனதுக்கு அப்றம் வந்துட்டு விடியறதுக்குள்ள போற மாதிரி.. இந்த எடத்துக்கு இதெல்லாம் கொண்டாந்தது இல்ல.. நீங்க கேட்டுட்டீங்க’

‘சரி கனகு.. பேசிரு’

தழும்பை வருடிய கை இரண்டு விரற்கடை மேலே நகர்ந்தப்போது ஜோதி விழித்துக்கொண்டாள்.

‘தூங்கல?’

‘..’

‘மணியென்ன ஆச்சு..’

‘எத்தன மணிக்கு நீ போவனும்..?’

எழுந்து அமர்ந்துகொண்டாள்.

‘எந்த ஊரு ஒனக்கு..’

‘இங்கதான்..’ நாடா முடிச்சைப் போட்டுக்கொண்டே பதில் சொன்னாள்.

‘ம்ம்ம்.. கனக எப்புடி தெரியும்..?’

‘பழக்கம்..’

‘எப்படி பழக்கம்..? இதுக்கு முன்னாடி..’ இளங்கோவின் கேள்வி முடிவதற்குள் ஜோதி அவனைப் படுக்கையில் தள்ளி மேலே சரிந்தாள்.

6

காலை நாலேமுக்காலுக்கு ஜோதி மெல்ல கதவைத் திறந்துப் பார்த்துவிட்டு வெளியேற ஆயத்தமானாள். இன்னும் சற்று நேரம் அவள் இருந்துவிட்டு போனால் தேவலாம் என்றிருந்தது. கருக்கிருட்டில் வெளியே போய்விடவேண்டுமென்ற அவளது பதைப்பும் புரியாமலில்லை.

‘ஜோதி.. எவ்வளவு தரணும் உனக்கு..’ வேறேதோ சொல்ல வாயெடுத்தவனுக்கு இதைத்தான் கேட்கமுடிந்தது. அந்தக் கேள்வியை உடனடியாக சலித்துக்கொண்டான்.

‘அவரு கனகுக்கிட்ட பேசிக்கிருங்க..’ வெளியே வேவு பார்த்துக்கொண்டே சொன்னாள். படகு டிக்கெட் காசைத் தவிர மேப்படி கொடுக்கக் கேட்டதற்கும் யோசப்பும் இதையேதான் சொல்லியிருந்தான். ‘கனகுக்கிட்ட கொடுத்துருங்க..’ இளங்கோ சிரித்துக்கொண்டான். வெளியே சென்று அவளே கதவை சாத்திவிட்டு போய்விட்டாள்.

கட்டிலில் கிடந்த இளங்கோவிற்கு தூக்கமே கண்ணுக்கு வரவில்லை. ஆனால் உள்ளுக்குள் நிம்மதியை எட்டியிருக்கும் நிறைவு. கண்ணுக்கே தெரியாத எதிரி யாரையோ பழி தீர்த்துவிட்ட பூரணம்; வேணிக்கு எதிரான ஏதோவொரு கணக்கை சமன் செய்துவிட்ட அமைதி. தலைக்கு தலையென்பதுப் போல. அகச் சுழலில் உள்ளே உள்ளேயென போய் சிக்கி காணாமல் போயிருக்கவேண்டியவனை இந்தப் பயணம் மீட்டு நிறுத்தியிருப்பதாக தோன்றியது. பயணமென்ன பயணம்? பூசி மெழுக வேண்டியதில்லை – பெண் – அவ்வளவுதான் – ஜோதி – அவள்தான் – அருட்பெருஞ்ஜோதி. அதுதானே உண்மை.

அதோடு அப்படியே புறப்பட்டுவிடலாமென்று தோன்ற படுக்கையிலிருந்து துள்ளியெழுந்துகொண்டான். வெளியே ஐந்தரை மணிக்கு இன்னும் ஊமையிருட்டாகவே இருந்தது.

‘கனகு…’ வாசலில் நின்று சத்தமாகக் குரல் கொடுத்தான்.

கூப்பிட்ட வேகத்திற்கு கனகு குடிசைக்குள்ளிருந்து சட்டென வெளியே வந்தான். அவனது அநாவசிய பதற்றம் நாடகீயமாகப் பட்டது.

‘சட்டுன்னு வர்ர.. முன்னயே முழிச்சிட்டியா?’

‘நீங்க தூங்கலயா.. அசதிக்கு மத்தியானந்தான் எந்திரிப்பீங்கன்னு நெனச்சேன்..’

சாத்தியமான கணுக்கள் அனைத்திலும் நெட்டி முறித்துகொண்டே சொன்னான், ‘இல்ல கனகு.. இப்பதான் கொஞ்சம் தேவலாம்ன்னு இருக்கு..’ – கனகு எதுவும் சிரிக்கிறானா என்ற பார்த்தபடியே – ‘கெளம்பலாம்ன்னு பாக்குறேன்..’ என்றான்

‘வெள்ளனவேவா? ரெஸ்ட் எடுத்துக்கிட்டு போவலாம்..’

‘என்னத்த ரெஸ்ட்டு.. இனி அடிக்கடி வந்துட்டு போவேன்னு நெனைக்கிறேன்’ இளங்கோ விஷமமாகக் கண்ணடித்ததற்கு, கனகு கடினப்பட்டு ஒரு புன்னகையை முகத்தில் தவழவிட்டான்.

‘சரி.. தங்குனதுக்கு, சாப்பாடு, யோசப்புக்கு, சரக்கு, அப்றம் இந்த இது.. எல்லாத்துக்குமா எவ்வளோ ஆச்சுன்னு சொல்லு.. ஏழர வண்டிய புடிச்சா.. போயிட்டு டூட்டி ஜாயின் பண்ண சரியா இருக்கும்..’ உள்ளுக்குள் மிச்சமொன்றுமில்லை என்பதான உற்சாகத் தொனி.

‘..’

‘ரெண்டு மாசமாச்சு அந்தப் பக்கம் போயி.. மெமோ மேல மெமோ…’ கண்கள் அனிச்சையாக தரையைப் பார்த்தன.

‘தெரியும் சார்’

இளங்கோ நிமிர்ந்து கனகைப் பார்த்தான். இரண்டு முகங்களிலும் உறைந்துப்போயிருந்தப் புன்னகை. சில வினாடிகள் எதுவும் பேச்சில்லை. முடித்துவைப்பதைப் போல இளங்கோ பெருமூச்சு விட்டுக்கொண்டு சொன்னான், ‘ஏழு மணிக்கா எழுப்பிவிடு கனகு.. செத்த படுக்குறேன்..’

**

சொல்லிவிட்டு வந்ததுதான். தூக்கம் கூடிவரவில்லை. கொண்டு வந்திருந்த துணிகளை அள்ளிக் கட்ட ஆரம்பித்தான். கக்கூசுக்கு போகலாமென்று பார்த்தபோது, சிகரெட் பெட்டி காலியாகியிருந்தது. கனகு வைத்திருப்பான். குடிலுக்குள்ளிருந்தே ஒரு முறை உரக்க குரல் கொடுத்துப் பார்த்தான். கனகுக்கு கேட்டிருக்காது என்று தோன்றியது. தூங்கிவிட்டானோ என்னவோ..

லேசாக தூறியிருந்ததில் மண்வாசனை வெளியை நிறைத்திருந்தது. இன்னொரு முறை குரல் கொடுக்க வாயெடுத்து, தயங்கி நிறுத்திவிட்டான். தானே போய் வாங்கிக்கொள்ளலாமென தோன்ற வெளியே அடியெடுத்து வைத்தபோது, வலுவில்லாத ஊசித்தூறல் ரம்மியமாக இருந்தது. கோரையாற்றில் அதன் குத்தல்களைப் பார்த்தபோது மனதிற்குள் ஒரு சிறுவனுக்கான துள்ளல் குதித்தெழுந்தது. காட்சியின் பசுமை எழுப்பிவிடும் கணநேர புதிய நம்பிக்கைகள். இளங்கோ துளிர்விட்ட புத்துணர்வுடன் குடிசையை நோக்கி நடந்தான்.

குடிசை வாயிலில் குனிந்து கோணி சாக்கு திரையை விளக்கியவன், வெடுக்கென நிமிர்ந்துகொண்டான். முகத்தில் பேய் அறைச்சலின் அதிர்வோடு கால்கள் பதறி இரண்டு தப்படிகள் பின்னோக்கி நகர்ந்தன. அசையாமல் எத்தனை வினாடிகள் அப்படியே நின்றான் என்று தெரியவில்லை. எப்போது குடிலுக்கு வந்து சேர்ந்தான் என்பதும் தெரியவில்லை. உலுக்கிப்போட்டதைப் போல உடல் கனத்து வலித்துக்கொண்டிருந்தது.

கண்ணுக்குள்ளேயே ஒட்டிவைத்ததைப் போல, அங்கு கண்டிருந்தது அலுங்காமல் நின்றது. முன்னொரு முறை நேரில் பார்த்து, நினைவில் பல முறைகள் மீட்டுப் பார்த்து நிரந்தரமாக பதிவாகிவிட்ட காட்சியொன்றின் தத்ரூப நகல். அதே மூர்க்கப் பின்னல். அதே நான்கு கால்கள் அதே நிலையினில். இனம்புரியாத அர்த்தமற்ற வெறியில் மூச்சுவாங்கியது. உடலின் ஒவ்வொரு தசையும் தனித்தனியே நடுங்க ஆரம்பித்தன. ஓடிப்போய் கனகை இழுத்துப்போட்டு நடு மாரில் நான்கு முறை மிதித்துவிட்டு, அருகிலிருந்த மண்பானையை எடுத்து ஜோதியின் மீது வீசிவிட்டு தன்னுடைய அறைக்கு ஓட்டமெடுத்தான். பானை அவளது இடுப்பில் விழுந்து நொறுங்கியது.

மூச்சின் இறைச்சல் அவனுக்கே அச்சமாக இருந்தது. யாரிடம் தீர்க்கவேண்டியக் கணக்கு இது? முந்தையவர்களிடம் முடியாத மிச்சமா? அவசரமாக ஜன்னல் மாடத்திலிருந்தப் பொட்டலத்தை எடுத்துக்கொண்டான். அடியாழத்திலிருந்த நான்காவது இழுவையை வெளியே தள்ளியபோது.. மீண்டும் சிரிக்க ஆரம்பித்தான். முந்தைய நாள் காலையைக் காட்டிலும் குரூரமான சிரிப்பு. ஒரு கணம் ஜோதியை கனகினுடைய மனைவியாக கற்பனை செய்து பார்த்தான். சிரிப்பு அடிவயிற்றைக் கவ்விப் பிடித்தது. முகம் பெருவலிக்கும் எக்காளத்திற்கும் இடையே ஊசலாடிக்கொண்டிருந்தது. அலைப்பேசியிலிருந்த புகைப்படங்களைக் காட்டியபோது தவித்துச் சிறுத்த கனகின் குரல் அதிர்வெண்களை இப்போது புதிய அர்த்தங்கொண்டு இளங்கோ ரசித்து சொக்கினான். சிரிப்புச் சத்தம் பெய்யத் துவங்கிய பெருமழையையும் தாண்டி குடிசை வரை அதிர்ந்தது. தொடர்ந்து நெடுநேரம் கேட்டுக்கொண்டிருந்தது.

‘சார்’

கதவருகே வந்து கனகு நின்றுகொண்டிருந்தான். காதிலேயே விழாதவனாக இளங்கோ சோர்ந்து சரிந்து கிடந்தான்.

‘சார்…’

முந்தைய ‘சாரை’ விட சுரத்து சற்று குறைந்திருந்தது. ‘ஒன்பதாயிரத்தி நானூறு’ என்று கணக்கு போட்டு முடிக்கப்பட்டிருந்த துண்டுச் சீட்டு உள்ளங்கையின் வியர்வையில் ஏற்கனவே ஊற ஆரம்பித்திருந்தது.