அத்தியாம் – 4

பாண்டிச்சேரி என்ற பெயர் புதுச்சேரியாக மாற்றப்பட்ட சில நாட்களுக்குப் பிறகான ஒரு பகல் பொழுது. கடற்கரை காந்தி சிலையிலிருந்து சில நிமிடங்களில் நடந்து சென்றுவிடக் கூடிய தூரத்திலிருந்த அரசு பொது மருத்துவமனைக்கும், மகப்பேறு மருத்துவமனைக்கும் பொதுவாக முனிஸிபாலிட்டி இடத்தில் பல ஆண்டுகளாக நடந்துகொண்டிருந்தது அந்த உணவகம். வட்டவடிவ இடத்தில் மொத்தம் ஆறு கடைகள். அதில் மருத்துவமனையைப் பார்த்தவாறு இந்த மூன்று கடைகளையும், அதன் நடைபாதையும் ஆக்கிரமித்துக்கொண்டு நடந்துகொண்டிருந்தது அந்த உணவகம். அரசு பொது மருத்துவமனை மற்றும் மகப்பேறு மருத்துவமனைக்கு வரும் மக்கள், மருத்துவமனை சிப்பந்திகள் எப்போதாவது சில மருத்துவர்கள் என உணவகம் காலைவேளையில் நிரம்பி வழியும். மதியம் மற்றும் மாலை வேளைகளில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு உணவு வாங்க ஒரு கூட்டம் வரும். மருத்துவமனைக்குப் பின்புறமும் சில உணவகங்கள் இருந்தாலும் இதுவே நல்ல ஓட்டமாக ஓடிக்கொண்டிருந்தது. அது ஒரு மலையாளிக்குச் சொந்தமான உணவகம். மலையாளி மற்றும் தமிழ் ஆட்கள் கலந்தே வேலை செய்துகொண்டிருந்தார்கள். முதலாளியை அதிகம் கடையில் காணமுடியாது.

1995ல் இருந்து இயங்கிக்கொண்டிருந்த அந்த உணவகத்தில் 99ல் பகுதி நேர கணக்காளராக வந்து சேந்திருந்தார் சந்திரன். 89ல் சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு வந்து சேர்ந்தவர் முதலில் சொந்தமாகத் துணி வியாபாரம் செய்தார். அவருடைய சுபாவத்திற்கு வியாபாரம் செய்து முன்னேறுவதென்பது முடியவே முடியாது என்ற உண்மையை அவர் மொத்தத்தையும் இழந்து தான் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. மனைவி, தாய் மாற்றும் இரண்டு குழந்தைகளுடன் குடும்பத்தை ஓட்டியாக வேண்டிய சூழலில் தெருவீதியின் பிரபலமான ஒரு துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார். அதுவும் சிலகாலம் தான். பிறகு சந்திரனிடம் துணி வாங்கி சரியாக பணம் கொடுக்காமல் ஏமாற்றிய ஒரு போலிஸ்காரரின் லாட்டிரி சீட்டுக்கடையை எடுத்து நடத்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. அந்தக்கடை சரியாக இப்போது இருக்கும் உணவகத்திற்கு நேர்பின்னால் இருந்தது. லாட்டிரி சீட்டை அரசாங்கம் தடை செய்யும் வரை  அதில் குடும்பத்தை ஓட்டினார். எப்போதே ஏதோ ஒரு சூழ்நிலையில் இந்த உணவகத்தின் முதலாளி ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதித் தரவேண்டிய தேவை ஏற்பட்டபோது யார் மூலமாகவே சந்திரன் நன்றாக ஆங்கிலம் எழுதுவார் என்று கேள்விப்பட்டு சந்திரனைத் தேடிவந்தார். அப்போது தான் சந்திரன் பி.ஏ. வரை படித்தவர் என்று தெரிந்துகொள்கிறார். பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் லாட்டரி சீட்டுக்கடையை மூடியதும் மதியத்திற்கு மேல் தனது உணவகத்தில் பகுதி நேரமாகக் கணக்கு பார்க்க அழைக்கப்பட்டு பின்பு லாட்டரி சீட்டு மொத்தமாக மூடப்பட்டதும் உணவகத்திலேயே தனது இடத்தை நிரந்தரமாக்கிக்கொண்டார். இப்போதும் பெயரளவுக்குத் தான் அவர் கேஷியர். ஆனால், பல நேரங்களில் பார்ப்பதென்னவோ பார்சல் கட்டும் வேலை தான். சந்திரன் எப்போதும் தனது இடத்தை தக்க வைத்துக்கொள்ளத் தெரியாதவர். அவர் சதுரங்க ஆட்டத்தில் இருக்கும் சிப்பாய்கூட அல்ல. அவர் சதுரங்கப் பலகையில் ஒட்டியிருக்கும் தூசியைப் போன்றவர். யார் வேண்டுமென்றாலும் அவரை சுலபமாக ஊதி அகற்றிவிட முடியம். ஆனால், அவர் எப்போதும் அதைப்பற்றியெல்லாம் கவலைகொள்பவர் கிடையாது. அவர்க்கு அதற்கு மேலாகப் பல பிரச்சனைகள் வாழ்க்கையில் உண்டு.

சந்திரன் அன்று காலையில் வேலைக்கு வந்ததிலிருந்தே நிலைமை சரியில்லை என்பதை உணர்ந்தார். அவர் எப்போதும் ஆறரையிலிருந்து எழு மணிக்குள் கடைக்கு வந்துவிடுவார். ஆனால், காலை ஐந்தரை மணிக்கே வியாபாரம் தொடங்கிவிடும். சந்திரன் வரும் வரை டீ மாஸ்டர் தான் டீ போடுவதையும் கல்லாவில் காசு வாங்கிப் போடுவதையும் பார்த்துக்கொள்வர். சந்திரம் வரும் வரை டீ வியாபாரம் மட்டும் தான் . ஏழரை மணிக்குத் தான் காலை உணவு தயாராகும்.

சந்திரனுக்கு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. எப்படியும் விஷயம் வெளியே வரும் அதுவரைக்கும் காத்திருப்போம் என்று சந்திரன் அமைதியாக கல்லாவில் அமர்ந்திருந்தார். கடையில் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியது. வழக்கமாக டீக்குடிக்கவும், உணவருந்தவும் வருபவர்கள் உணவகத்தில் ஒருவர் முகமும் சரியில்லை என்பதை. வழக்கமாக உணர்ந்தனர் டீ குடிக்க வரும் பொது மருத்துவமனை வாட்பாய் பெருமாள் நேராக சந்திரனிடம் வந்து கோவமாகக் கத்தத் தொடங்கினார். “இதபாரு கேஷியரு. நாளிக்கி மட்டும் அவன் இங்க நின்னு டீ போட்டுன்னு இருந்தான் அவன் கத அத்தோட முடிஞ்சிது தெரிஞ்சிக்கோ” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போது கேஷியருக்கு பின்னால் டீ போட்டுக்கொண்டிருந்த மாஸ்டரைப் பார்த்து “ங்கோத்தா இன்னாடா மொறைக்கிற” என்று பாய்ந்தார் பெருமாள். சந்திரன் சாமர்த்தியமாக அவரை அணைத்துப்பிடித்து இழுத்துக்கொண்டு வெளியே சென்றார்.  பக்கத்தில் நின்றுகொண்டிருந்த முருகனிடம், “டேய்… கல்லாவப் பாருடா” என்று சொல்லிவிட்டு பெருமாளைக் கூட்டிக்கொண்டு தூரத்திலிருந்த கட்டண கழிப்பிடத்திற்குச் சென்றார். பெருமாள் ஏதோ கோவமாகப் பேசுவதையும், சந்திரன் அவரை சமாதானப்படுத்துவதையும் தூரத்திலிருந்து கடை ஊழியர்களும், மற்றவர்களும் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால், மாஸ்டர் மட்டும் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆனால், அவரின் ஆத்திரம் கண்ணாடி கிளாஸ்களிலிருந்து தெறித்துக்கொண்டிருந்தது.

மனோஜ் தனது பைக்கை நிறுத்திவிட்டு சிறிது நேரம் தூரத்தில் சந்திரனும், பெருமாளும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்தார். மனோஜ் கிட்டதட்ட ஆறு அடி உயரம் இருந்தார். உடலை நன்றாக வைத்திருந்தார். சிவப்பு நிறம். முப்பத்தைந்திலிருந்து நாறபதிற்குள் இருந்தார். மனோஜ் மாஹேவிலிருந்து புதுச்சேரிக்கு மாற்றலாகி வந்த கான்ஸ்டேபில். முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் பெருப்பிலிருந்தார். மனோஜ்க்கு எப்போதுமே சந்திரனின் மீது ஒரு எரிச்சல் இருந்துகொண்டேயிருந்தது. எவ்வளவு மகிழ்ச்சியான மனநிலையிலிருந்தாலும் அவர் சந்திரனைப் பார்க்கும்போதெல்லாம் ஒருகணம் அது நீர்துளிபட்ட இலையைப் போல் லேசாக ஒரு அசைவிற்குள்ளாகும். உணவக முதலாளி சந்திரனுக்கு அதிகம் இடமளிப்பதாக மனோஜ் கருதினார்.

தனது பார்வையைச் சந்திரனின் மீதிருந்து எடுக்காமலேயே மனோஜ் கடைக்குள் நுழைந்தார். மனோஜ் நுழைந்தது கல்லாவில் இருந்த முருகன் நகர்ந்துகொள்ள மனோஜ் அங்குச் சென்று அமர்ந்துகொண்டார். அந்தக் கடையில் அப்படி ஒரு வழக்கம் இருந்தது. முதலாளியின் நெருங்கிய நண்பர்கள் சில கடைக்கு வந்து சிறிது நேரம் இருந்துவிட்டு டீ குடித்துவிட்டுச் செல்வார்கள். முதலாளி இருந்தால் அவருடன் அரட்டையடித்தும், இல்லாதபோது சிறிது நேரம் கல்லாவில் உட்கார்ந்துவிட்டும் போவார்கள். அதில் அதிகம் வருவது மனோஜ் தான். மனோஜ் திரும்பாமலேயே பின்னால் இருந்த டீ மாஸ்டரிடம், “என்ன பிரச்சனை” என்று மலையாளத்தில் கேட்டார். அவர்களுக்குள் பேசிக்கொள்ளும்போது எப்போதும் மலையாளம் தான்.

மாஸ்டர் கோவமாகப் பதிலளித்தார், “அந்த பெருமாள் தேவடியா பையன் காலையில் என் கிட்ட வம்புவளத்தான். இப்ப அடிக்க வந்தான். இந்த கேஷியர் பெரிய மயிராட்டம் பஞ்சாயத்து பண்ணிகிட்டு இருக்கார்.”

மனோஜ் சட்டென வேகமாக எழுந்து மாஸ்டரின் அருகில் வந்து “என்ன அடிக்க வந்தானா. ஏன்?”

“காலையில அடுப்ப பத்த வெச்சதுமே நேரா கடைக்கு வந்தான். டீ போடுன்னு சொன்னான். நான் பாலு காயிது நேரமாகும்னு சொன்னேன். பின்னாடி ஜெராக்ஸ் கடை சேட்டா கட்டஞ்சாயா கேட்டார். அவருக்கு கட்டஞ்சாயா குடுத்தேன். அதுக்கு அவன், ஏன்டா நான் டீ கேட்டதுக்கு நேரமாவுன்னு சொன்னே, இப்ப எங்கருந்துடா வந்துச்சி டீன்னு அசிங்க அசிங்கமா பேசிட்டான்”

“நீ எதுவும் சொல்லலையா”

“கண்ண நல்லா தொறந்து பாரு, அது பாலு டீயில்ல”ன்னு சொன்னேன்.

“அதுக்கு அவன் ஊருவுட்டு ஊருவந்து எங்கிட்டயே அதப்பான்னு மறுபடியும் கத்திட்டு போயிட்டான். இப்ப கேஷியர் வந்ததும் மறுபடியும் வந்து  நாளைக்கு நான் வேலைக்கு வந்தா என்ன வெட்டிடுவேன்னு சொல்லிட்டு அடிக்க வரான்.” என்று மாஸ்டர் நடந்ததைச் சொன்னார். சொல்லி முடிக்கும் போது அவர் குரல் உடைந்து கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது. மீண்டும் தனக்குள் புலம்பத் தொடங்கினார். “இப்படி ஒரு பொழப்பு பொழைக்கறதுக்கு பேசாம ஊருக்குப் போயி வெட்டுப்பட்டே சாகலாம். ஊருக்கு போவமுடியாம இங்கயும் வாழ முடியாம என்று தனக்கு பின்னால் இருந்த நாற்காலியில் உட்கார்ந்து தலையில் அடித்துக்கொண்டு அழத்தொடங்கினார். மனோஜ்க்கு கோவம் தலைக்கு ஏறியது. ஆனால், பெருமாள் மீது கைவைப்பது தனக்கே ஆபத்தாக முடியலாம். பெருமாளும் ஒரு அரசாங்க ஊழியன். நிச்சயம் பிரச்சனை பெருசாகிவிடும் என்று மனோஜ்க்கு தோன்றியது. அதே நேரம் மனோஜின் மொத்த கோவமும் சந்திரன் மீது திரும்பியது. மனோஜ் திரும்பிப் பார்த்தார். சந்திரன் பெருமாளிடம் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். பெருமாள் சந்திரனிடம் கையை காட்டிவிட்டு அந்த இடத்திலிருந்து நகர்ந்தார்.

சந்திரன் திரும்பி கடையை நோக்கி நடந்து வரும்போதே மனோஜ் கல்லாவின் அருகில் நிற்பதையும் மாஸ்டர் அழுதுகொண்டிருப்பதையும் பார்த்தார். நிச்சயம் பிரச்சனை வேறு ஒரு தளத்திற்கு நகர்வதைச் சந்திரன் உணர்ந்தார். கடைக்குள் நுழைந்து நேராக பார்சல் கட்டும் இடத்திற்குச் சென்று அங்கிருந்த முருகனை சப்ளை செய்ய அனுப்பினார். அவர் பார்வை மனோஜிடமோ அல்லது மாஸ்டரிடமோ செல்லவேயில்லை. ஆனால், மனோஜ் தன்னை முறைத்துக்கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். “டேய் இங்க வாடா” என்ற மனோஜின் குரலைக் கேட்டு யாரை அழைக்கிறார் என்று திரும்பினார் சந்திரன். மனோஜின் கண்கள் அவரை நோக்கியே இருந்தது. மனோஜ் மறுபடியும் சந்திரனை நோக்கி “இங்க வாடா” என்றார். கடையாட்கள் மற்றும் தொடர்ந்து சாப்பிட வருபவர்கள் அதிர்ச்சியாகப் பார்த்துக்கொண்டிருக்க, மருத்துவமனை சிப்பத்தி ஒருவர், “ஏய்… அவுரு வயசு இன்னா உன் வயசு இன்னா. வாடா போடாங்கற” என்றார்.

“வந்தியா சாப்டியா போயிட்டே இரு” என்று அவரிடம் எகிறிய மனோஜ், சந்திரனிடம் திரும்பி “நீ வேலைக்கு வேண்டாம் கெளம்பு, நான் ஓனர் கிட்ட சொல்லிகிறேன்” என்றார்.

சந்திரன் அசையாமல் அங்கேயே நின்றுகொண்டிருக்க, “சொல்லிட்டே இருக்கே என்னடா மொறைக்கிற” என்று மனோஜ் சந்திரனை நோக்கி நகர, “மனோஜின் கண்ணத்தில் பலாரென்று ஒரு அறை விழுந்தது.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. தொடர்கதை: கடல்கள் - அரிசங்கர்
  2. தொடர்கதை: கடல்கள் - அரிசங்கர்
  3. தொடர்கதை: கடல்கள் - அரிசங்கர்
  4. தொடர்கதை: கடல்கள் - அரிசங்கர்
  5. தொடர்கதை: கடல்கள் - அரிசங்கர்