தமிழுக்கு அப்பால்-19 

இருபதாம்-இருபத்தொன்றாம் நூற்றாண்டின் நாவல்களில் அதற்கு முன்பு போல நேரடியாகக் கதை சொல்லப்படுவது கிடையாது. சுற்றி வளைத்தோ, நான்-லீனியர் என்பது போன்ற காலப் பிறழ்ச்சியுடனோ, பெருமளவு கற்பனையும் உருவகமும் கலந்தோ, தொடர்ச்சியற்ற பகுதிகளாகவோ சொல்லப்படுகின்றன. வாசிப்பதற்குச் சற்றுச் சிரமம் தருகின்ற டாரிஸ் லெஸிங்கின் பொன்னிறக் கையேடு (தி கோல்டன் நோட்புக் -1962) என்பதும் அப்படிப்பட்ட ஒரு நாவல்தான்.

டாரிஸ் லெஸிங் ஜிம்பாப்வேயைச் சேர்ந்த ஆங்கில நாவலாசிரியை. 1919இல் ஈரானில் பிரிட்டன் நாட்டுப் பெற்றோருக்குப் பிறந்தவர். பிறகு தெற்கு ரொடீஷியாவில் (இன்றைய ஜிம்பாப்வே) 1949 வரை வசித்தபின், இங்கிலாந்திற்குச் சென்றார். 2007இல் அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது. 2013இல் மறைந்தார். பொன்னிறக் கையேடு என்பது அவரது அரிய எழுத்து முயற்சியாகக் காணப்படுகிறது,

இந்த நாவல் மாறிமாறிவரும் பகுதிகளைக் கொண்டது. அனைத்தையும் உள்ளடக்கும் கதையாக சுதந்திரப் பெண்கள் என்பது வருகிறது. அதன் தலைவி அன்னா வுல்ஃப். உள்ளடக்குக் கதை 1957இல் தொடங்கினாலும் பின்னோக்கில் அன்னாவின் வாழ்க்கை நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன.

அன்னா நான்கு நோட்டுப்புத்தகங்களில் குறிப்புகளை எழுதுகிறாள். கருப்பு, சிவப்பு, மஞ்சள், நீல நிறக் கையேடுகள் அவை. அன்னாவின் வாழ்க்கையின் வெவ்வேறு தளங்களை இவை பிரதிபலிப்பதோடு, அன்னாவின் மனத்தைச் சரிப்படுத்திக் கொள்ள இவை உதவுகின்றன. கருப்புக் கையேடு, ஆப்பிரிக்காவில் அவள் வாழ்ந்த காலத்தை எடுத்துரைக்கிறது. இப்போதைய கதை தொடங்குவதற்குப் பத்தாண்டுகள் முன்பு நன்கு விற்பனையான அவளது முதல் நாவலுக்கு அடிப்படையும் அந்தக்கையேட்டின் குறிப்புகள்தான்.

மஞ்சள் கையேட்டில் தன் எதிர்காலத் திட்டங்களுக்கான சிந்தனைகளை எழுதுகிறாள். சிவப்புக் கையேடு ஆப்பிரிக்காவிலும், இங்கிலாந்திலும் பொதுவுடைமைக் கட்சியுடன் அவள் அனுபவங்களை விவரிக்கிறது. அன்னாவின் உண்மையான டயரி, நீலக் கையேடுதான். தனது வாழ்க்கைச் சம்பவங்களை அப்படியே அதில்தான் எழுதுகிறாள். அது அவளது சுயம் எவ்வளவுதூரம் நடப்பிலிருந்து பிரிந்திருக்கிறது என்பதை எடுத்துக்காட்டு வதாக உள்ளது.

அதனால் பொன்னிறக் கையேட்டுக்கான தேவை எழுகிறது. அது கடைசியாக வருகிறது. முன் நான்கு கையேடுகளையும் ஒன்றாக்கி இணைப்பதற்கான முயற்சியாக மட்டுமன்றி, அவளது மனச் சிதைவின் உணர்வினையும் எடுத்துரைப்பதாக அது உள்ளது.

அன்னா ஓர் ஆங்கிலக்காரி. இரண்டாம் உலகப்போர் தொடங்கும்போது 1939இல் ரொடீஷியாவுக்குச் செல்கிறாள். அங்கு இடதுசாரி அரசியலில் ஈர்க்கப்பட்டு, ஒரு நண்பர் வட்டத்தை உருவாக்குகிறாள். மேக்ஸ் வுல்ஃப் என்பவனை 1945இல் மணந்து கொள்கிறாள். அவளுக்கு ஜேனட் என்ற பெண் குழந்தை 1946இல் பிறக்கிறது. மேக்ஸ் அவளை விவாகரத்து செய்ததால் குழந்தையுடன் இங்கிலாந்துக்குத் திரும்புகிறாள்.

கருப்புக் கையேடு, மத்திய ஆப்பிரிக்காவில் வெள்ளைக்காரச் சமதர்மவாதி களுடன் அவள் கழித்த காலத்தைச் சொல்கிறது. ஆப்பிரிக்காவில் தனது அனுபவங்களை வைத்துப் போர்முனைகள் என்ற நாவலை எழுதுகிறாள். கருப்புக் கையேட்டில் போர்முனைகள் நாவலின் கதைச்சுருக்கம் சொல்லப் படுவதுடன், அது ஏற்கப்படுமா என்ற அவள் கவலையையும் பற்றியதாக அப்பகுதி உள்ளது. அதைப் பிரசுரிக்கிறாள். அதில் போதிய பணம் கிடைக்கிறது. அதை வைத்து பிரிட்டிஷ் பொதுவுடைமைக் கட்சிக்காகப் பாடுபடுகிறாள்.

மாலி என்ற பெண்ணுடன் அவள் வசிக்கிறாள். மாலியின் கணவன் ரிச்சட். அவளுக்கு ஒரு வயதுவந்த மகன், டாமி. ரிச்சட், அவளை விட்டுப் பிரிந்துவிட்டான். அன்னாவும் மைக்கேல் என்ற திருமணமான ஆடவனுடன் காதலுறவு கொண்டிருக்கிறாள். அது ஐந்தாண்டுகள் நீடிக்கிறது. 1954இல் மைக்கேலுடனான உறவு முடிகிறது. அதேகால அளவில் அன்னாவின் கம்யூனிஸ்டுக் கட்சித் தொடர்பும் முடிகிறது.

இரண்டாவதான சிவப்புநிறக் கையேடு அவள்  பிரிட்டிஷ் கம்யூனிஸ்டுக் கட்சியில் உறுப்பினளாக ஆவதிலிருந்து தொடங்குகிறது. ஏற்கெனவே மாலி அதில் உறுப்பினளாக இருக்கிறாள். கட்சியில் உள்ளவர்கள் சோவியத் யூனியனின் நிலைப்பாட்டை எல்லாநிலைகளிலும் ஆதரிப்பவர்களாக இருக்கிறார்கள். அதனால் கட்சியின் கருத்தியலுடன் அன்னாவுக்கு உடன்பாடில்லை.

மூன்றாவது மஞ்சள் கையேடு. மூன்றாவதன் நிழல் என்று அதற்குப் பெயர். அது லண்டனில் அன்னாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாவலுக்கான கையெழுத்துப்பிரதியாகத் தொடங்குகிறது. அதில் தலைவியாக எல்லா என்பவள் வருகிறாள். பெண்கள் பத்திரிகை ஒன்றில் பணி புரிகிறாள். அவளுடன் மட்டுமின்றி வேறு பல பெண்களுடனும் தொடர்பிலுள்ள, மணமான உளச்சிகிச்சையாளன் பால் டேன்னர் என்பவனுடன் எல்லாவுக்குத் தொடர்பு ஏற்படுகிறது. ஆனால் அவன் அவளைவிட்டு நைஜீரியாவுக்குச் சென்றுவிடுகிறான். அவள் வாழ்க்கை அர்த்தமற்றதாக மாறிவிடுகிறது.

நீலநிற ஏடு என்பது அவளது நாட்குறிப்பு. அதில் தொடர்ச்சியற்ற, சந்தேகமும் முரண்பாடுகளும் நிரம்பிய அவளது தினசரிக் குறிப்புகள் உள்ளன. திருமதி மார்க்ஸ் என்ற உளச்சிகிச்சையாளருடன் அன்னா கொள்ளும் சிகிச்சைப்பகுதிகள் குறிக்கப்படுகின்றன. அவள் டயரியில் குறிப்பதைப் பற்றி திருமதி மார்க்ஸ் அறிந்ததும் அன்னாவின் குறிப்புகள் நான்கு ஆண்டுகளுக்கு நின்றுவிடுகின்றன. மீண்டும் அவள் எழுத நினைக்கும் போதுதான் மைக்கேல் அவளை விட்டுப் பிரிவதாக அவள் கேள்விப்படுவதால் அவளால் எழுத முடிவதில்லை. திருமதி மார்க்ஸ் அவள் கையேட்டைப் பற்றிக் கேட்பதனால் சிகிச்சைக்குப் போவதை நிறுத்திவிடுகிறாள்.

டாமிக்கும் மாலிக்கும் அன்னா உதவ மனம் கொண்டிருக்கிறாள். டாமி தற்கொலை செய்ய முனைந்து அம்முயற்சியில் குருடனாகிறான். டாமியின் தற்கொலை முயற்சி தன் வாழ்க்கையைப் பற்றி அன்னாவை மேலும் யோசிக்க வைக்கிறது. இரண்டாவதாக ஒரு நாவல் எழுத வேண்டும் என அவள் நினைத்தாலும் எப்படி அதில் மேற்செல்வது என்பது பற்றித் தெளிவில்லை. அவள் மகள் ஜேனட் வளர்ந்து, உண்டுறை பள்ளிக்குச் செல்வதால், அன்னா தனியாக விடப்படுகிறாள். இடையில் ஒரு அமெரிக்க திரைஎழுத்தாளனுடன் தொடர்பு ஏற்படுகிறது. அதன் கசப்பினால் மனம் முறியும் நிலைக்கு அவள் சென்றாலும், அடுத்த நாவலை எழுத அது உந்துசக்தியாக அமைகிறது. அந்த நாவலின் முதல் வாக்கியத்தை எழுதும் காட்சி, உள்ளடக்குக் கதையும் அன்னா எழுதியதோர் பெருங்கதைதான் என்று வெளிப்படுத்துகிறது.

இறுதியாக அன்னா வேலை தேட முயற்சி செய்கிறாள். மாலியிடம் தான் திருமண ஆலோசகராகவும் ஆசிரியராகவும் பணியாற்ற இருப்பதைப்பற்றிச் சொல்கிறாள். மாலியும் மறுதிருமணம் செய்ய திட்டமிட்டுக் கொண்டிருக்கிறாள். தங்கள் தங்கள் தினசரி வாழ்க்கைகளை இந்த இரு பெண்களும் நிதானமாகக் கழிப்பதாக நாவல் நிறைவு பெறுகிறது.

பெண்ணியத்திற்கான பிரச்சினைகளை லெஸிங்கின் நாவல்கள் பேசினாலும் அவர் தன்னைப் பெண்ணியக்காரராக ஏற்றுக் கொண்டதில்லை. இருபதாம் நூற்றாண்டுப் பெண்களின் வாழ்நிலையை வெளிப்படையாகப் படம்பிடித்துக் காட்டியவர் அவர் என்று பாராட்டப்பட்டவர்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. விசாரணை – க. பூரணச்சந்திரன்
  2. பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
  3. ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
  4. இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
  5. பரஜன் - க. பூரணச்சந்திரன்
  6. வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
  7. மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
  8. கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
  9. சூளாமணி – க. பூரணச்சந்திரன்
  10. மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
  11. விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
  12. வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
  13. மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
  14. உடோபியா - க. பூரணச்சந்திரன்
  15. பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
  16. ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
  17. நீலகேசி - க.பூரணச்சந்திரன்
  18. சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
  19. பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
  20. ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
  21. மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
  22. பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
  23. நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
  24. விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
  25. குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
  26. சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
  27. ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
  28. தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
  29. ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
  30. சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
  31. அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
  32. செம்மீன் : க.பூரணச்சந்திரன்
  33. ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
  34. ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
  35. கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22)  : க.பூரணச்சந்திரன்
  36. புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
  37.  மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
  38. வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
  39. ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
  40. விசித்திர உலகில் ஆலிஸ்  : க.பூரணச்சந்திரன்
  41. காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
  42. சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
  43. கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
  44. ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
  45. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
  46. அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
  47. ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
  48. ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன் 
  49. தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்