தமிழுக்கு அப்பால் -18

செம்மீன் என்பது தகழி சிவசங்கரன் பிள்ளை 1956-இல் எழுதிய ஒரு மலையாள நாவல் ஆகும். உலகப் புகழ் பெற்ற ஒரு படைப்பு இது. செம்மீன் என்பது இறால்மீனைக் குறிக்கும் சொல்.

இந் நாவலைப் பற்றி, அதன் பெயர் கொண்ட திரைப்படத்தின் வாயிலாகத் தமிழ்மக்கள் பலர் அறிந்திருப்பார்கள்.

இந்து மதத்தைச சேர்ந்த ஒரு  மீனவனின் மகளான கருத்தம்மைக்கும் முஸ்லிம் மொத்த மீன் வியாபாரி ஒருவனின் மகனான (கொச்சு முதலாளி) பரீக்குட்டிக்கும் இடையேயான காதலைப் பற்றிய கதை. கதை, யதார்த்தத் தளத்திலும் தொன்மத் தளத்திலும் சிறப்பாக இயங்குகிறது. நடை, அந்தச் சமுதாயத்தின் பேச்சு மொழியில் அமைந்துள்ளது.

இதன் மையக்கரு,  கேரள மாநிலத்தின் கடலோரத்தில் வசிக்கக்கூடிய மீனவ சமுதாய மக்களின் இடையே உள்ள நம்பிக்கை பற்றியது. அதாவது மனைவி ஒருத்தி கற்புத் தவறிவிட்டால்,  அவளுடைய கணவன் கடலுக்குச் சென்றால் கடல் தெய்வம் (கடல் அன்னை அல்லது கடலம்மா) அவனை விழுங்கிவிடும் என்பது அந்த நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கையைத் தொடர்ந்து நிலைநிறுத்துகின்ற வகையிலேயே தகழி சிவசங்கரன் பிள்ளை இந்தப் புதினத்தை எழுதியிருக்கிறார்.

இந்நாவலுக்காக சாகித்ய அகாதெமி விருதினை 1957இல் தகழி பெற்றார். ஏறத்தாழ 30 படைப்புகளை அளித்த அவர் பின்னர் 1975இல் ஞானபீட விருதினையும் பெற்றார்.

இந்தப் புதினத்தில் தகழி மீனவ மக்களின் வாழ்க்கையை உணர்ச்சி பூர்வமாக விளக்கியுள்ளார். மீனவ சமுதாய மக்களின் பழக்க வழக்கங்களையும், விலக்குகளையும் (செய்யக் கூடாதவைகளாக அவர்கள் கருதுவது), நம்பிக்கைகள், சடங்குகளையும், அவர்களின் அன்றாடத் தொழில் நிகழ்வுகளையும், அவர்களின் வலிகள் போன்ற அனைத்தையும் இயல்பு மாறாமல் தகழியின் அற்புதமான எழுத்துக்களால் அறிய முடிகிறது.

செம்பன்குஞ்சு என்பவன் ஒரு மீனவன். தனக்குச் சொந்தமாக ஒரு  படகையும், மீன் வலையையும் வாங்க வேண்டும் என்பதே அவன் வாழ்க்கையின் ஒரே நோக்கமாக இருக்கிறது. இதனை ஒரு முஸ்லீம் மீன் மொத்தவியாபாரியின் மகனான பரீக்குட்டியின் உதவியுடன் அவன் நிறைவேற்றிக் கொள்கிறான். தன்னிடமிருந்த அனைத்துப் பொருளையும் உதவும் பரீக்குட்டி ஒரே ஒரு நிபந்தனை விதிக்கிறான். அது செம்பன்குஞ்சுவுக்குக் கிடைக்கும் மீன்கள் அனைத்தையும் தன்னிடமே விற்க வேண்டும் என்பதாகும்.

செம்பன்குஞ்சுவிற்கு அழகான ஒரு மகள் இருக்கிறாள். அவளுடைய பெயர் கருத்தம்மா. கருத்தம்மைக்கும் பரீக்குட்டிக்கும் இடையே காதல் மலருகிறது. இதனைத் தெரிந்துகொண்ட கருத்தம்மாவின் தாய் சக்கி, அவளுடைய காதல், தங்கள் சமுதாயக் கட்டுப்பாடுகளுக்கு எதிரானது என எச்சரிக்கை செய்கிறாள். கருத்தம்மா, பரீக்குட்டிக்கான தனது காதலைத் தியாகம் செய்கிறாள். பின் பழனி என்ற அநாதை உழைப்பாளியைத் திருமணம் செய்து கொள்கிறாள். திருமணத்தின்போதே பரிசமாக பழனி தரவேண்டிய 75 ரூபாயைத் தர முடியாததால் இருபுறத்துக்கும் சண்டை ஏற்படுகிறது. அப்போது கருத்தம்மாவின் மீதும் பழி சுமத்தப்படுகிறது. செம்பன்குஞ்சு கருத்தம்மாவை வெறுத்துத் தலைமுழுகிவிடுகிறான். இருப்பினும் சக்கி அவள் உதவிக்கு வருகிறாள். உடனே அவள் கணவனுடன் புறப்படுமாறு வலியுறுத்துகிறாள்.

கருத்தம்மா கணவனுடன் அவனுடைய ஊரான திருக்குன்னப்புழைக்குச்  செல்கிறாள். செம்பன்குஞ்சு மற்றுமொரு படகையும் வலையையும் வாங்குகிறான். ஓரளவு நல்ல நிலைமைக்கு வந்து விடவே பேராசைக்காரனாகவும், இதயமற்றவனாகவும் ஆகிறான். பரீக்குட்டியிடம் வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்த மறுக்கிறான். இடையில் அவன் மனைவி சக்கி இறக்கிறாள். அவள் இறுதியாக பரீக்குட்டியிடம் கருத்தம்மாவை அவன் சகோதரியாக நினைத்துப் பார்த்துக் கொள்ளச் சொல்கிறாள். சக்கி இறந்த செய்தியைக் கூட செம்பன்குஞ்சு கருத்தம்மாவுக்குச் சொல்லவில்லை.

அவள் தாய் இறந்த செய்தியைப் பரீக்குட்டி கருத்தம்மாவிடம் கூறச் செல்கிறான். அவனைக் கண்டதும், அந்த ஊரார் அவர்களிருவருக்கும் தொடர்பிருப்பதாகக் கதை பரப்புகின்றனர். பழனியுடன் மற்ற மீனவர்கள் செல்ல மறுக்கிறார்கள். அவன் தனியாகச் சென்று ஒரு நாள் படகை இழந்து வருகிறான். தனது நகைகளைக் கொடுத்து வேறுபடகு வாங்குவதற்குக் கருத்தம்மா உதவுகிறாள். மீண்டும் இல்லறம் தொடர்கிறது. கருத்தம்மாவுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது.

செம்பன்குஞ்சு பாப்பிக் குஞ்சு என்ற பெண்ணை மறுமணம் செய்து கொள்கிறான். அவளுக்கு ஏற்கெனவே ஒரு மகன் இருக்கிறான். அவன் பணம் திருடுவதைப் பஞ்சமி தனது தந்தைக்குச் சொல்கிறாள். பாப்பிக்குஞ்சை விரட்டும் செம்பன்குஞ்சு தன்னிடமிருந்த பணம் அனைத்தையும் பரீக்குட்டியிடம் தருகிறான்.

தந்தை மறுமணம் செய்ததால் அவளது சகோதரி பஞ்சமி கருத்தம்மாவின்  வீட்டிற்குச் செல்கிறாள். கருத்தம்மா இதுவரை ஒரு நல்ல மனைவி யாகவும் தாயாகவும் நடந்துவருகிறாள். ஆனால் பரீக்குட்டியுடன் அவளுக்கிருந்த காதலை அந்த ஊர் மக்கள் பழனியிடம் தவறாக எடுத்துக் கூறுகின்றனர். பழனியின் நண்பர்கள் இதனைக் காரணம் காட்டி அவனைத் தங்களுடன் மீன்பிடிக்க அழைத்துச்செல்வதில் இருந்து விலக்கி வைக்கின்றனர்.

ஆத்திரமடைந்த பழனி கடலில் மிகுந்த ஆழத்துக்குச் செல்கிறான். அவன் வலையில் ஒரு சுறா சிக்குகிறது அப்போது ஒரு பெரிய நீர்ச்சுழி அவனை விழுங்குகிறது. அன்று இரவில் பரீக்குட்டியும் கருத்தம்மாவும் சந்திக்கின்றனர். அந்தச் சந்திப்பின் போது அவர்களின் பழைய காதல் மீண்டும் துளிர்க்கிறது. அடுத்தநாள் கடற்கரையின் ஓரத்தில் கருத்தம்மாவும் பழனியும் கைகோர்த்தபடி இறந்து கிடக்கின்றனர். சற்றுத் தொலைவில் தூண்டில்முள் தொண்டையில் சிக்கியபடி பெரிய சுறா ஒன்றும் கிடக்கிறது.

இந்த நாவல் 1965இல் திரைப்படமாகவும் வெளியாகி விமரிசன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதற்கு ஜனாதிபதி விருது கிடைத்தது. இதை இயக்கியவர் ராமு காரியத். இசையமைத்தவர் புகழ்பெற்ற இசையமைப்பாளர் சலீல் சவுத்ரி. இதன் பாடல்கள் அனைத்தையும் பாடியவர் கே. ஜே. ஏசுதாஸ். “கடலினக்கரப் போனோரே, போய்வரும்போள் எந்து கொண்டுவரும்–கைநிறைய” என்ற பாடல் மிகப் பிரசித்தமானது. “மானசமைனே வரூ” போன்ற பிற பாடல்களும் புகழ்பெற்றவை. தலைமைப் பாத்திரங்களில் ஷீலா, மது ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த நாவலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் புகழ்பெற்ற எழுத்தாளரான சுந்தர ராமசாமி ஆவார்.

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. விசாரணை – க. பூரணச்சந்திரன்
  2. பொம்மை வீடு – க. பூரணச்சந்திரன்
  3. ஹாபிட் – க. பூரணச்சந்திரன்
  4. இரகசியத் தோட்டம் - க. பூரணச்சந்திரன்
  5. பரஜன் - க. பூரணச்சந்திரன்
  6. வீழ்ச்சி - க. பூரணச்சந்திரன்
  7. மாபெரும் கேட்ஸ்பி - க. பூரணச்சந்திரன்
  8. கறைபடிந்த (எல்லை) நிலம் - க. பூரணச்சந்திரன்
  9. சூளாமணி – க. பூரணச்சந்திரன்
  10. மரணப்படுக்கையில் கிடந்தபோது - க. பூரணச்சந்திரன்
  11. விடுதலையா?- க. பூரணச்சந்திரன்
  12. வெள்ளாட்டின் பலி - க. பூரணச்சந்திரன்
  13. மோரூவின் தீவு - க. பூரணச்சந்திரன்
  14. உடோபியா - க. பூரணச்சந்திரன்
  15. பாரன்ஹீட் 451 - க. பூரணச்சந்திரன்
  16. ஆங்கிலேய நோயாளி - க.பூரணச்சந்திரன்
  17. நீலகேசி - க.பூரணச்சந்திரன்
  18. சிங்கமும் சூனியக்காரியும் ஆடையலமாரியும் - க.பூரணச்சந்திரன்
  19. பாடும் பறவையைக் கொல்லுதல் (To Kill a Mockingbird) - க.பூரணச்சந்திரன்
  20. ஆர்ட்டெமியோ குரூஸின் மரணம் - க.பூரணச்சந்திரன்
  21. மால்கம் எக்ஸின் சுயசரிதை - க.பூரணச்சந்திரன்
  22. பீமாயணம் - க.பூரணச்சந்திரன்
  23. நிலவுக்கல் (சந்திரகாந்தம்) - க.பூரணச்சந்திரன்
  24. விலங்குப் பண்ணை - க.பூரணச்சந்திரன்
  25. குண்டலகேசி ஆகிய மந்திரிகுமாரி - க.பூரணச்சந்திரன்
  26. சம்ஸ்கார (சம்ஸ்காரம்) - க.பூரணச்சந்திரன்
  27. ஒரு முதுவேனில் இரவின் கனவு - க.பூரணச்சந்திரன்
  28. தமிழுக்கு அப்பால்-23: டாக்டர் ஃபாஸ்டஸ் - க. பூரணச்சந்திரன்
  29. ஈக்களின் தலைவன் : வில்லியம் கோல்டிங் – க.பூரணச்சந்திரன்
  30. சீவகன் கதை : க.பூரணச்சந்திரன்
  31. அன்னா கரீனினா-க.பூரணச்சந்திரன்
  32. பொன்னிறக் கையேடு : க.பூரணச்சந்திரன்
  33. ஜேன் அயர் : க.பூரணச்சந்திரன்
  34. ஏழை படும் பாடு : க.பூரணச்சந்திரன்
  35. கேட்ச்-22 (இறுக்குப்பிடி-22)  : க.பூரணச்சந்திரன்
  36. புதையல் தீவு : க.பூரணச்சந்திரன்
  37.  மணிமேகலை : தமிழுக்கு அப்பால் -13 : க.பூரணச்சந்திரன்
  38. வழிகாட்டி :க.பூரணச்சந்திரன்
  39. ராபின் ஹூட் : க.பூரணச்சந்திரன்
  40. விசித்திர உலகில் ஆலிஸ்  : க.பூரணச்சந்திரன்
  41. காற்றோடு சண்டையிடும் டான் குவிக்சோட் : க.பூரணச்சந்திரன்
  42. சுதந்திரப் போராட்ட நாவல்களின் முன்னோடி 'ஆனந்த மடம்' : க.பூரணச்சந்திரன்
  43. கலிவரின் பயணங்கள் : க.பூரணச்சந்திரன்
  44. ஜூல்ஸ் வெர்னின் உலகைச் சுற்றி எண்பது நாட்கள் :க.பூரணச்சந்திரன்
  45. பிராம் ஸ்டோக்கரின் டிராகுலா : க.பூரணச்சந்திரன்
  46. அறங்கூறும் நாவல்: பிரதாப முதலியார் சரித்திரம்-க.பூரணச்சந்திரன்
  47. ஷேக்ஸ்பியரின் பன்னிரண்டாம் இரவு- க.பூரணச்சந்திரன்
  48. ராபின்சன் குரூஸோவின் பயணம் -க.பூரணச்சந்திரன் 
  49. தமிழுக்கு அப்பால்(1)-க.பூரணச்சந்திரன்