இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய
அன்பு இல் ஆடவர் அலைத்தலின், பலருடன்
வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை,
அழல் போல் செவிய சேவல் ஆட்டி,
நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி 5
பச்சூன் கொள்ளை மாந்தி, வெய்துற்று,
தேர் திகழ் வறும் புலம் துழைஇ, நீர் நயந்து,
பதுக்கை நீழல் ஒதுக்கு இடம் பெறாஅ
அருஞ் சுரக் கவலை வருதலின், வருந்திய
நமக்கும் அரிய ஆயின: அமைத் தோள் 10
மாண்புடைக் குறுமகள் நீங்கி,
யாங்கு வந்தனள்கொல்? அளியள் தானே!

ரு பாலை வனம்.

அந்தப் பாலைவனத்தில் ஒரு ஒத்தையடிப் பாதை.

அந்த ஒத்தையடிப் பாதயில் மனிதப் பிணங்கள் கெடக்கு.

அந்தப் பிணங்களை கழுகுகள் தின்றுகொண்டிருக்கின்றன.

அந்தப் பாதையில் ஒரு நரி வருகிறது.

அந்த நரி, அதன் நிழலைப் பார்த்துக்கொண்டு அதன் நிழலோடு அது விளையாடிக்கொண்டு வந்துகொண்டிருக்கிறது.

அந்த நரி பிணங்களைத் தின்றுகொண்டிருக்கிற கழுகுகளைப் பார்கிறது.

அந்த நரி கழுகுகளைத் துரத்துகிறது.

அந்த நரி அந்தப் பிணங்களைத் தின்கிறது

‘பெரிய குளம்’

ஒரு குளம்.

அது ரொம்பப் பெரிய குளம்.

அந்தப் பெரிய குளத்தில் ஒரு பெரிய வாளை மீன்.

குளத்தில் மடை திறந்ததும் அந்தப் பெரிய வாளை மீன் வாய்க்காலை அடைத்துக்கொண்டு, வாய்க்கால் தண்ணீரில் வந்துகொண்டிருக்கிறது.

நீளமான அந்தப் பெரிய வாய்க்காலில் ஒரு சிறிய முக்கு. முக்கு திரும்பியதும் ஒரு பெரிய வயல். அந்த வயலில் வாமடை திறந்திருக்கிறது. அந்தப் பெரிய வாளை மீன் அந்த வாமடை வழியாக அந்தப் பெரிய வயலில் நுழைகிறது.

வயலில் தொழி உழவு நடந்துகொண்டிருக்கிறது.

உழவு மாடுகள் பின்னத்திக் கால்களை உதறுகின்றன.

சேறு தெரிக்கிறது.

உழவர்களின் முதுகெல்லாம் சேறு. சேறு காய்ந்து காய்ந்து, உழவர்கள் முதுகு பூராவும் புள்ளி புள்ளியாருக்கு.

அந்தப் பெரிய வாளைமீன் அந்தப் பெரிய வயலில் சேற்றில் படுத்துக்கொண்டு புரண்டுகொண்டும் துள்ளிக்கொண்டும் ஓடி ஓடி விளையாடிக்கொண்டிருக்கிறது.

உழவர்கள் அந்தப் பெரிய வாளை மீனைத் தார்க்குச்சியால் அடித்தும் தார் முள்ளால் குத்தியும் அவர்கள் அந்த வாளை மீனிடம் விளையாடுகிறார்கள்.

அந்தப் பெரிய வயலில் இரண்டு பெரிய வரப்புகள் ஒன்று சேருகிற ஒரு மூலையில் அந்தப் பெரிய வாளை மீன் படுத்திருக்கிறது. அந்தப் பெரிய வாளை மீனால் அந்தப் பெரிய வரப்புக்களைத் தாண்டிப் போகமுடியவில்லை.

அந்தப் பெரிய வாளை மீன் அந்தப் பெரிய வயலில் அந்த மூலையில் படுத்துக்கொண்டு அது அங்கேயே துள்ளிக்கொண்டும் புரண்டுக் கொண்டும் சகதியில் விளையாடிக்கொண்டிருக்கிறது.

-நக்கீரர்
நற்றினை 352