நார்வே எழுத்தாளர் நட் ஹாம்சனின்  பசி நாவல் (Hunger/Sult) 1890 ல்  வெளிவந்திருக்கிறது. கா. நா. சு   அருமையாக  மொழிபெயர்ப்பு செய்து இருக்கிறார். கா. நா. சுவின் அயல் இலக்கிய தேடல்  தான் இன்றளவும் மொழி பெயர்ப்பு புத்தங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்க காரணமாக இருக்கிறது. இந்த  நாவலின் பொதுமை என்பது  நாவலின் கதை களமான க்ரிஸடினியாவை மட்டும் எடுத்த  கொள்ள முடியாது. இந்த பிரபஞ்சம் எங்கும்  வியாபித்திருக்கும்  பசி.  ஒரு  நகரத்தில்  வாழும்  இளம்  எழுத்தாளனுக்கு மட்டும் எப்படி  பொருந்தும்?? பசி  என்பது எல்லாருக்குமான பொதுவான  விஷயம் அது தான்  இந்த  நாவல் வெளியான  உடன் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  கிறிஸ்டியானியா நகரத்தின் (‘அங்கிருந்து) வசித்தவன் எவனும் அதைப்பற்றிய நினைவுகளிலிருந்து என்றும் தப்ப முடியாது’ என்பது இப்புத்தகத்தின்  தொடக்கத்தில் வருகிறது. உணவு என்பது எல்லாருக்குமான தேவை. அந்த  தேவையை அடையும் பொருட்டு அதற்குண்டான தேடலின் வலியும் பசியும்  தான் மொத்த நாவலும்.

பசி’ நாவலின் கதைசொல்லி ஓர் இளம் எழுத்தாளன். உணர்வெழுச்சி நிலையில் பசியின்  வேகத்தில் அவன் படைப்புகளை எழுதுகிறான். எப்போதாவது, ஒருசில கதை கட்டுரைகள் சொற்ப ஊதியத்துக்குப் பதிப்பிக்கப்படுகின்றன.  வேறு வேலை தேடும்போதெல்லாம் நிராகரிப்பைச் சந்திக்கிறான். விண்ணப்பக்கடிதத்தில் தேதி தவறாக எழுதியதால் ஒரு கடையில் கணக்கெழுதும் வேலைகூட கிடைக்காமல் போகிறது. உண்மையில் பசி தான் கதையின் நாயகன். வரிக்கு வரி பசி வியாபித்திருக்கிறது. பசி கதைநாயகனை விரட்டுகிறது; புரட்டி எடுக்கிறது; பைத்தியமாக்குகிறது; சிறப்பான கதை எழுதவைக்கிறது; உலகின் மிகச்சிறந்த படைப்பு அது என்று நம்பவைக்கிறது; அது பதிப்புக்கு ஏற்கப்பட்டபின், வேறு எதுவும் நல்லதாக எழுத முடியாமற் செய்கிறது; எழுதிய பக்கங்களைக் கிழத்தெறிய வைக்கிறது; காரணமில்லாமல் ஒரு பெண்ணை வம்புக்கிழுக்கவைக்கிறது; தேவையின்றிப் பொய் சொல்லவைக்கிறது; எதேச்சையாகக் கிடைக்கும் பணத்தை தானம் செய்யவைக்கிறது; தானம் கொடுத்துவிட்டுப் பின்னர் அதே பெண்ணிடமிருந்து மீண்டும் திருட வைக்கிறது; போட்டிருக்கும் சட்டைமுதல் கடைசிக் கோட்டின் பொத்தான்கள் வரை எல்லாவற்றையும் அடமானம் வைக்கச் செய்கிறது.அந்த பித்தானுக்கு பணம் இல்லை என்பதும் அந்த பித்தானை பார்த்து புன்னகைக்கிறான். எப்படியாவது அந்த பித்தான் ஒரு வேலை பசியாவதை ஆற்றும் என்ற நம்பிக்கை தளர்ந்து விடுகிறது அவனுக்கு..

‘உடலில் பசி வயிற்றைத் திருகிற்று. ஒரு விநாடி ஓய்வு கிடைக்கவில்லை. எச்சிலை விழுங்கினேன் – அது உணவாகும் என்று நம்பினேன். பசியையாற்றும் என்று எண்ணினேன்,’ என்கிற வரி lock down லில் இருக்கும் அடித்தட்டு மக்களின் நிலைமையை அப்படியே கண் முன் கொண்டு வந்து  நிறுத்துகிறது..

(யாரவது இந்த  நாவலை திருவாளர் மோடி  அவர்களுக்கு அனுப்பி வைத்தால் பசியின் வலி  ஒரு வேலை புரிய கூடும் .)

எப்போதாவது கிடைக்கும் உணவையும் அதீத பசியால் வாந்தியெடுக்கிறான். தண்ணீர் கூட அவன் வயிற்றில் தங்குவதில்லை. வழியில் கிடைக்கும் மரத்துண்டுகளை, சுரக்கும் உமிழ் நீருக்காய் சப்பி கொல்வதும் குப்பையில் கிடக்கும் ஆரஞ்சு தொப்பையை, தனது சட்டைப் பையை என்று அவன் எல்லாவற்றையும் சுவைத்துப்பார்க்கிறான். தனது கைவிரலைக்கூட உண்ணலாமா என்கிற எண்ணம் அவனை ஆட்கொள்கிறது. ‘கண்கள் திறந்திருக்க நான் செத்துக் கொண்டிருந்தேன். கை விரலை வாயில் போட்டுச் சப்பினேன். உடனே ஒரு பைத்தியக்கார யோசனை தோன்றிற்று. கடித்துப் பார்த்தால்? சிறிதும் யோசிக்கத் தயங்காமல், கண்களை மூடிக்கொண்டு கடித்தேன்.’

இத்தனை பசியிலும் தன்மான உணர்வும் வறட்டுப் பெருமையும் அவனைவிட்டுப் பெரும்பாலும் விலகுவதில்லை. பசியின் உச்சங்களில் அவையும் அவ்வப்போது சமரசத்துக்கு உள்ளாகின்றன. நண்பன் அவனுக்கு இரவலாகத் தந்திருந்த கம்பளியைப் பல நாட்கள் அடமானம் வைக்காமல் பிடிவாதமாக இருக்கிறான். இறுதியில் அடமானம் வைக்கச்செல்லும்போது, அடகுக்கடைக்காரன் மறுத்துவிடுகிறான். ஒருவகையில் அது அவனுக்குத் திருப்தியாக இருக்கிறது. அவச்செயலிலிருந்து தப்பிவிட்டதாக மகிழ்கிறான்.

ஒரு பெண்ணை சந்திக்கிறான். அவனிடம் பணம் இல்லை. அதனால்  அவளிடம் பேச தயங்குகிறான். ஆனாலும் மனதை ஒருவாறு தயார் செய்து கொண்டு அவளிடம்  வம்பு  செய்கிறான்.ஆனாலும் அவளுக்கு ஏதோ ஒரு தருணத்தில் அவனை பிடிக்கிறது.

அதன்  பின்னர் அவனைச் சந்திக்கும் போது அவன்பால் ஈர்க்கப்படுகிறாள். குடி போதையில்தான் அவன் அவ்வாறு நடந்துகொண்டான் என்று நம்புகிறாள். அவனும் முதலில் அதை மறுக்காமல் இருக்கிறான். பிறகு தன்னைப்பற்றியும் தனது ஏழ்மையைப் பற்றியும் கூறுகிறான். தனது பைத்தியகாரத்தனமான சில செயல்களைப்பற்றியும் அவளோடு பகிர்ந்துகொள்கிறான்.

“அன்றுகூட நீ குடித்திருக்கவில்லை. பைத்தியம் போல.’

“பசி, பைத்தியம் ஒன்றுமில்லை. நான் அப்போதுதான் சாப்பிட்டிருந்தேன்,” என்று அப்போதும் அவனது வறட்டு கௌரவத்தை விட்டுத்தராமல் பேசுகிறான்.

அவளைவிட்டு விலகி வெளியேறும் போது:// ’நான் வாசற்படியை விட்டு நகராமல் நின்று பிதற்றிக் கொண்டேயிருந்தேன். பைத்தியமாக இருக்க வேண்டுமா உணர்ச்சி மிகுந்து காணப்படுவதற்கு? அதற்கு அவசியமே இல்லையே! அறிவுள்ள ஏழை கவனிப்பவற்றை பணக்காரன் அறிவுள்ளவன் கவனிப்பதில்லை. பைத்தியகாரன், ஏழை இருவருமே ஒன்றுதான். நெருப்புச் சுட்ட வடுப் போல என் உடலிலும் உள்ளத்திலும் ஆன்மாவிலும் ஏழ்மை வடுக்கள் இருந்தன.’//என்று சொல்லிக்கொண்டே அவளை திரும்ப பார்த்து கொண்டே சென்று விடுகிறான்.

இப்படி பசி  அவனை அலைகழிக்கிறது.அதிலும் அவன் தன் மானத்தை வறட்டு கவுரவத்தை அவனே பழித்து கொள்கிறான், தனது இருப்பை அவனே கேள்வி கேட்கிறான்? ஒவ்வொரு நாளும் மரணத்தை எதிர்கொள்கிறான். மரணத்திற்கு நிகரான வலி யை அனுபவிக்கிறான்.  அதே நேரம் ஒரு கட்டுரை பிரசுரமானதும் அவனுக்கு வாழ்வின் மீது தன்னம்பிக்கை பிறக்கிறது.

மீண்டும் இயலாமை கோவம் பசி  மன  அழுத்தம் மாறி  மாறி  அவனுக்குள் நிகழ்ந்து  கொண்டே இருக்கிறது.

ஏழ்மையின் வாழ்வு பசி  இப்படி தான் இருக்கும் என்பதை நாவல் நமக்கு சொல்வதால் தான் இந்த  நாவல்  நமக்கு  மிக  நெருக்கமாக இருக்கிறது. கடைசியில் அவன் போராடி ஒரு  வேலை வாங்கி கொண்டு கப்பலில் போகிறான். கிறிஸ்டினியாவை விட்டு விடை பெறுகிறான்.பசி தற்காலிகமாக அவனிடம் இருந்து  விடை பெறுகிறது.

உண்மையில் நாவலை வாசித்து  முடிக்கும் போது துயரம்தோய்ந்த ஏழ்மையின் கண்ணீர் அச்சம் பைத்திய நிலை துவண்ட கால்கள், திராணி இழந்த உடல் எல்லாம் கண்முன்னே  வந்து போகிறது. நூறு ஆண்டுகள் ஆகியும் பசியின்  வேதனையை  உடலியல் ரீதியாகவும், ஆன்மாவின் வழியாகவும் நமக்கு சொல்வதால் தான்  இலக்கியம் செவ்வியல் தன்மை  அடைகிறது. மறுபடியும் மறுபடியும் சொல்வேன் இலக்கியமும்  வாழ்வும்  வேறு  வேறு  அல்ல.