வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சில் நீர்
வளையுடைக் கையள், எம்மொடு உணீஇயர்,
வருகதில் அம்ம, தானே;
அளியளோ அளியள், என் நெஞ்சு அமர்ந்தோளே!

ன்னவள் இன்று என்னோடு வருகிறேன் என்று சொன்னாள். அவளை நான்தான் அழைத்துக்கொண்டு வரவில்லை.
இந்தப் பாலைவனத்தில் தாகத்துக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லை.
இந்தப் பெரிய பாலைவனத்தில் நரிகள் தோண்டிய ஒரு சிறிய ஊற்றில் கொஞ்சம் தண்ணீர் கிடந்தது. நரிகள் குடித்ததுப் போக மிஞ்சிய எச்சித் தண்ணீர் அது. அந்த எச்சித் தண்னீரையும் காய்ந்த சருகுகள் மூடிக்கொண்டிருந்தது. அந்தக் காய்ந்த சருகுகள் அந்த எச்சித் தண்ணீரில் அழுகி நாறிக்கொண்டிருந்தது.
குடிப்பதற்குத் தகுதி இல்லாத அந்தத் தண்ணீரை நான் குடித்தேன்.
குடிப்பதற்குத் தகுதி இல்லாத இந்தத் தண்ணீரை என்னவளும் குடிக்க வேண்டுமா?
என்னவளின் அழகான கைகளால் தொட்டுப் பார்ப்பதற்குக்கூட தகுதி இல்லாத தண்ணீர் இது.
என் நெஞ்சில் உட்கார்ந்துகொண்டிருக்கிற என்னவளை இன்று நான் என்னோடு அழைத்துக்கொண்டு வராதது நல்லதுதான்.

சிறைக்குடி ஆந்தையார்
குறுந்தொகை 56