உள்ளார் கொல்லோ தோழி கிள்ளை
வளைவாய்க் கொண்ட வேப்ப ஒண்பழம்
புதுநாண் நுழைப்பான் நுதிமாண் வள்ளுகிர்ப்
பொலங்கல ஒருகா சேய்க்கும்
நிலங்கரி கள்ளியங் காடிறந் தோரே. 5

 

எங்கள் வீட்டில் ஒரு வேப்பமரம் இருக்கிறது. இந்த வேப்பமரத்தில் ஒரு கிளி உட்கார்ந்திருக்கிறது. அந்தக் கிளி அதன் சிவந்த வாயில் தங்கக்காசு மாதிரியே இருக்கிற வேப்பம்பழத்தை வைத்துக் கொண்டிருக்கிறது.

என் மனைவி என் வீட்டில் உட்கார்ந்திருக்கிறாள். அவள், அவள் நகங்களுக்கு சிகப்புச்சாயம் பூசியிருக்கிறாள். அவள் அழகான ஒரு காசு மாலை கோர்த்துக் கொண்டிருக்கிறாள். அவள் அந்தக் காசு மாலையைக் கோர்ப்பதற்கு வேப்பம்பழம் மாதிரியே இருக்கிற தங்கக் காசுகளை அவள் கையில் வைத்திருக்கிறாள்.

நான்

கிளிவாயில் இருக்கிற வேப்பம்பழத்தைப் பார்க்கிறேன்.

நான்

என் மனைவியின் கையில் இருக்கிற தங்கக் காசையும் பார்க்கிறேன்.

என்ன அழகு… என்ன ஒற்றுமை…

நான் அழகான இந்த ஒற்றுமைகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறேன்.

-அள்ளூர் நன்முல்லையார்
குறுந்தொகை 67