குறுந்தாட் கூதளி யாடிய நெடுவரைப்
பெருந்தேன் கண்ட இருங்கால் முடவன்
உட்கைச் சிறுகுடை கோலிக் கீழிருந்து
சுட்டுபு நக்கி யாங்குக் காதலர்
நல்கார் நயவா ராயினும் 5
பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே.

உயரமான ஒரு மலை.

அந்த மலையில் ஒரு பெரிய மரம்.

அந்த மரத்தில் ஒரு பெரிய தேன்கூடு இருக்கிறது.

மலை அடிவாரத்தில் ஒரு மனிதன் உட்கார்ந்திருக்கிறான். அந்த மனிதன் அந்தப் பெரிய தேன்கூட்டை ஆசையோடு பார்த்துக் கொண்டிருக்கிறான். அந்தப் பெரிய தேன்கூட்டில் இருந்து தேன் கீழே வடியும் என்று அவன் கைகளை ஏந்திக் கொண்டிருக்கிறான்.

தேன்கூட்டில் இருந்து ஒரு சொட்டுத் தேன்கூட கீழே வடியவில்லை.

அவன் தேன்கூட்டைப் பார்க்கிறான்…

அவன் வெறுங்கையை நக்குகிறான்.

அந்த மனிதன் அண்ணாந்துகொண்டு அந்தப் பெரிய தேன் கூட்டை ஆசையோடு பார்க்கிறான்..

அந்த மனிதன் அவனுடைய வெறுங்கைகளை ஆசையோடு நக்குகிறான்.

அந்த மனிதன் அதே இடத்தில் உட்கார்ந்திருக்கிறான்.

அவனால் எழுந்து நடக்க முடியாது. அவனால் எழுந்து உட்காரவும் முடியாது.

அவனுக்குக் கால்கள் இல்லை.

-பரணர்
குறுந்தொகை 60