பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் ஒரு மாலைப்பொழுது. இலக்கிய மற்றும் வரலாற்று ஆய்வாளர் சர் தாமஸ் மெக்காலே ஒரு புத்தகத்தைப் படித்துக்கொண்டு இருக்கிறார். அவர் புருவங்கள் உயருகிறது. அப்புத்தகத்தின் நாயகன் ஒரு முரடன், அறிவாளி, மிகுந்த பாசம் காட்டுபவன். ஆனால் அதை தகுந்த அளவிலோ, தனது செயல்களை வெளிக்காட்ட தெரியாதவன். இப்புத்தகம் மட்டுமல்ல மெக்காலே ஆய்வுசெய்த பைரோன் துறையின் (Lord Byron) அத்தனைக் கவிதைகளிலும் நாயகன் இவ்வாறே இருக்கிறான். காதலென்ற பெயரில் தன்மீதும் தன் இணையின் மீதும் உளவியல் வன்முறை நடத்தும் நாயகனுக்கு பைரோன் ஹீரோ என்ற பெயர் சூட்டுகிரார் மெக்காலே.
ஆனால் மெக்காலேக்கு ஒரு விடயம் புலப்படவில்லை போரோனின் ஹீரோக்களை அதிகம் ரசித்தது ஆண்கள் இல்லை அக்காலத்து பெண்கள். தன்மீது ஒரு உளவியல்ரீதியான அதிகாரத்தை ஒரு ஆண் செலுத்தும்போது திமிராமல் அதற்கு வலைந்துகொடுத்து பெண்கள் ஏன் ரசிக்க வேண்டும் என்ற குழப்பத்தில் அவரது கட்டுரையை முடிக்கிறார்.

அர்ஜுன் ரெட்டி (2017)

பைரோன் மட்டுமல்ல, அவருக்கு முன்பு இலக்கியத்திலும் மேடை நாடகங்களில் கோலோச்சிய ஷேக்ஸ்பியர் தனது ‘ஹாம்லேட்’ கதாபாத்திரத்தை இதைப் போலவே தீவிரமாகக் காதலிப்பவனாகவும் அதே சமயம் தன் காதலை மென்மையாக வெளிக்காட்ட தெரியாதவனாகவும் வடிவமைத்தார். ஹாம்லெட் இன்றும் இங்கிலாந்தில் பல மேடைகளில் அரங்கேற்றுப்படுகிறது.
பிரோனின் சமகால எழுத்தாளரான சார்லட்டி பிராண்டி (Charlotte Brontë) தனது ஜேன் அயர் (Jane Eyre) நாவலின் கதாபாத்திரமான ராச்செஸ்ட்டரை (Rochester) இவ்வாறு சொல்கிறார். “அவன் அதிகமாக காதலிப்பவன். ஆனால் அவன் தேடும் காதல் ஏனோ அவன் கைகளுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்கப் பெறுவதில்லை. சிறுவயதிலிருந்து அவன் காதலையே தேடுகிறான். கிடைத்தால் தக்கவைக்கத் தெரியாத மூடன்.”

சார்லட்டின் சகோதரி எமேலி இன்னும் ஒருபடி மேலே சென்று தனது ஹீத்க்லிஃப் (HeathCliff ) கதாபாத்திரத்தை வடிவமைக்கிறார். தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற காதலியைத் திரும்பவும் துரத்திச் செல்கிறான் ஒருவன். அவள் வேறு ஒருவனை திருமணம் செய்த பிறகும் தன்னைக் காதலிக்கும்படி தன்னோடு இருக்கும்படியும் அவளை வற்புறுத்துகிறான். அவள் மறுக்க, அவள் கணவனை நண்பனாக்கி அவள் வீட்டிலேயே தங்குகிறான். குற்ற உணர்ச்சியில் காதலி நோய்வாய்ப்படுகிறாள். அவர் நோய்வாய்ப்பட்டு அதைப் பார்க்க முடியாமல் அவள் அரண்மனையைவிட்டு வெளியேறி விடுகிறான் காதலன்.
கடைசியில் அவள் இறக்கும் தருவாயில் அவளைத் தேடி ஓடி வருகிறான். அவள் இறந்த பிறகு அவளது பிணத்தையும் அவளது குழந்தையையும் எடுத்துச் சென்று தன் வீட்டில் அவளைப் புதைத்து அவளது குழந்தையை அவன் குழந்தையாக வளர்க்கிறான்.

எமேலியின் ஹீத்க்லிஃப் கதாபாத்திரத்தை ரசிக்காத பெண்கள் இன்றளவும் இல்லை என்ற நிலைக்கு பெண்கள் அதிகமாக தரவிறக்கம் செய்யும் புத்தகமாக தி வுதரிங் ஹைட்ஸ் (The Wuthering heights) இருக்கிறது.

விக்டோரியன் இலக்கியத்தின் பிற்பகுதியில் (1900களின் வாக்கில்) இருந்து பைரோனிய கதாபாத்திரங்கள் வழக்கொழிய ஆரம்பித்தது. அப்படியே வந்தாலும் பெண்கள் அதிகமாக விரும்பாத கதாபாத்திரமாகவும் சைக்கோக்களாகும் வடிவமைக்கப்பட்டது. உதாரணம்: சார்ல்ஸ் டிக்கன்ஸின் (Charles Dickens) டேவிட் காப்பர் ஃபீல்ட் (David Copperfield).

ரஷ்ய இலக்கியங்களிலும் பைரனின் தாக்கம் பெருமளவு இருந்ததாகக் கூறப்படுகிறது. அலெக்சாண்டர் புஷ்கினின் (Alexander pushkin) யூஜின் (Eugene) ஒரு பைரனின் பிரதிதான். அவன் அழகன், இளையவன், குடி, பெண்கள், புகை என்று சமூகக் கட்டுப்பாடுகளை உடைத்தவன். ஆனாலும் பெருங்காதலன் என்று அவனை வடிவமைத்திருந்தார்.

பின்னாட்களில் உளவியல் தாக்குதல்களும் மன அழுத்தங்களும் அதிகமாக கொண்ட மனிதர்களே பைரோனின் பிரதிகளாக முன் நிறுத்தப்பட்டனர். தமிழில் ‘மூடு பனி’, ‘சிவப்பு ரோஜாக்கள்’ ஆகிய படங்கள் இதில் அடங்கும். ஆனால் சமீபகாலமாக பைரோன் திரும்பி கொண்டிருப்பதாகத்தான் தெரிகிறது.

‘அர்ஜுன் ரெட்டி’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ ஆகிய படங்கள் காதல் என்ற உளவியல் வன்முறையும், அது சார்ந்த மன அழுத்தங்களையும் பெரிதாக பேசுகிறது. இதில் ஏமாற்றம் என்னவென்றால், இந்தக் கதாபாத்திரங்கள் திரும்பவும் பெண்களால் கொண்டாடப்படுவதுதான்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் (2019)

தீவிர மனசோர்வு கொண்டவர்களைக் காதலிப்பது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அது நம்மை எந்தவிதத்திலும் தேவதையாக மாற்றப் போவதும் அல்ல. அப்படியான ஒருத்தரு இணையாக அமைந்தார்கள் என்றால் முதலில் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து அவர்களின் சிகிச்சைக்கு உதவ வேண்டுமே தவிர, அவர்கள் நம்மை துன்புறுத்துவதை ரசிப்பதும், இல்லை அன்பென கடப்பதும் என்றும் காதலாகாது. காதல் அதிக நிம்மதியும் மகிழ்ச்சியும் தர வேண்டிய ஒரு உணர்வு. அதை அவ்வாறே கையாளுங்கள்.

ஆதலால் காதல் செய்வீர் வைய்யத்தீரே!