1. மழை.. ஜன்னல்.. தேநீர்

மழையின் ரீமேக்

சக்கரவாகமோ மழையை அருந்துமா..
நான் சக்கரவாகப் பறவை ஆவேனோ..

ஜில்லுன்னு மழையும், சூடா டீயும் ஒண்ணுக்குள்ள ஒண்ணா சேர்ந்தேயிருக்கும்.. மழை நமக்குள்ள காதல் நினைவுகளைக் கிளர்த்துகிறது.. மழையில் நனைஞ்சுகிட்டே ஹெட்போஃன்ல இளையராஜாவின் காதல் பாடல்கள் கேட்டுகிட்டே செய்யும் பயணம் செம்ம போதையா இருக்கும்..

மழைச்சாரல் முகத்தில் தெறிக்க, சாலையோர டீக்கடையில், மழையில் நடுங்குவதாகக் கூறிய காதலியை அணைத்திருக்கும் காதலன், அழகான இளம்பெண் எழுதும் ஒரு கட்டுரைத் தொடரின் முதல் எபிசோட் கதாபாத்திரங்களாக தாங்கள் வரப் போகிறோம் என்றறியாமலேயே டீயில் சர்க்கரைக்குப் பதிலாக முத்தங்களைச் சேர்த்துப் பருகிக் கொண்டிருந்தார்கள்..

சங்கக் காலத்திலிருந்து தற்போது வரை மழை நேரக் காட்சிகள் சுவாரஸ்யமானவை.. காதலர்கள் நெருக்கமாக அணைத்தபடி பைக்கில் சுற்ற ஆரம்பிப்பார்கள்.. பிரிந்திருக்கும் ஜோடிகளின் தாபம் குறுஞ்செய்திகளாகப் பரிமாறப்படும்.. தமிழ் சினிமாவில், மழைக்காட்சிகளில் ஹீரோயின்கள் நிச்சயமாக வெள்ளை ஆடையில் நனைந்து நடனமாடுவார்கள். தெலுங்கில் பல விருதுகளைக் குவித்த வர்ஷம் என்ற சினிமாவை இயக்குநர் ராஜ்குமார் தமிழில் “மழை” என்று ரீமேக்கி ஸ்ரேயா என்கிற அழகான ஹீரோயினை தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.. பண்பலை ரேடியோக்கள் மழைப் பாடல்களைத் தேடிப் பிடித்து ஒலிபரப்பி இளசுகளைக் காதல் நினைவுகளில் மூழ்க வைக்கும்.. இல்லத்தரசிகள் காய்ந்த துணிகளை எடுக்க மாடிக்கு ஓடுவார்கள்.. விவசாயிகள், விதைத்தவை செழிக்க வரும் மழையை வணங்குவார்கள்..

மழைத் தூறல் ஆரம்பித்தாலே குழந்தைகள், மழைத்தண்ணீரில் விளையாடுவதை விட்டு, தொலைக்காட்சிச் செய்தி சேனல்களின் முன் அமர்ந்து விடுவார்கள்.. மழையால் புகழடைந்தவர்களில் வானிலை அறிக்கை ரமணனுக்கே முதலிடம்.. பஜ்ஜி, வடை கடைகளில் வியாபாரம் சூடு பறக்கும்.. நிறைய இன்ஸ்டன்ட் கவிஞர்கள் கவிதை உலகில் புது மொழியை உருவாக்குவார்கள்..

மழை நேரத்தில் டீ குடிப்பது அன்றாட வாழ்க்கையின் அலுப்புகளிலிருந்து சற்றே நம்மை இளைப்பாற வைப்பது… பிடித்தவருடன் பருகும் ஒரு கோப்பை தேநீர்க்குள் காதலும், கதைகளும் நிரம்பி சுவையூட்டும். ஆண் வாசனை நிரம்பிய டீக்கடைகள், பெண்தன்மை உடைய மழையின் வரவால் குதூகலமடையும்..

வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் நான்கு சுவர்களுக்குள் வாழ்க்கையை வாழாது தொலைக்கும் சில பெண்கள் ஜன்னல் வழியாகக் காணும் காட்சிகள் மூலமே உலகை அறிந்துகொள்பவர்கள்.. பார்க்கும் காட்சிகளின் தன்மையை வைத்தே கூட்டிற்குள் இன்னும் சுருங்கிக்கொள்வார்கள். இல்லை சிறகு விரிப்பார்கள்..

ஒர் மழைநேர மாலையில் ஜன்னலருகே தேநீர் அருந்தியபடி அமர்ந்திருக்கும் பெண் சித்திரம் உங்கள் மனக்கண்ணில் காட்சியாக தெரிகிறதா? அப்பொழுது அவள் மனதில் என்னவெல்லாம் ஓடும்..?

திருமணம் ஆகாதவளாயிருந்தால், காதலனைப் பற்றிய நினைவுகள், அலுவலகப் பணியின் சுமை, வீட்டிலுள்ளவர்கள் செய்யும் திருமணத்திற்கான வற்புறுத்தல்கள், தோழிகளுடனான பயணங்கள்.. என நீளும்..

திருமணமான பெண்ணாயிருந்தால், கணவர் ஆபிஸில் என்ன செய்து கொண்டிருப்பார், இரவு என்ன சமைப்பது.. பிள்ளைகளின் படிப்பு, எதிர்காலம், பக்கத்து வீட்டினருடனான பிரச்னைகள், வீட்டு வேலைகள்.. இப்படியான சிந்தனைகள்..

திருமணமாகி வேலைக்கும் செல்லும் பெண்ணாக இருந்தால்.. எல்லாவற்றிற்கும் நடுவில் தத்தளிப்பாள்..

ஆக.. இங்கு மழையில் ஒரு இளையராஜாவைத் துணைக்கழைத்துக் கொண்டோ, ரூமியைப் படித்துக் கொண்டோ, இருப்பவர்கள் குறைவுதான்.. மழையைக் கூட இரசிக்க முடியாமல், மனிதர்களை எப்போதும் ஏதோ சிந்தனையுடனும், பொறுப்புடனும் ஏன் அலைய வைத்துக் கொண்டேயிருக்கிறது குடும்பம் என்கிற கட்டமைப்பு..?

இங்கு குழந்தை பிறந்துவிட்டால், அவர்களைப் படிக்க வைத்து, வேலைக்கு செல்ல சொல்லி, திருமணம் செய்து வைத்து, குடும்பம் என்கிற கூட்டிற்குள் சிறைப்படுத்திய பின்புதான் ஓய்கிறது சமூகம்..

சமீபத்தில் வெளிவந்த எதிர்பாராத திருப்பங்கள் நிரம்பிய தம்பி திரைப்படத்தின் இறுதியில் குடும்ப கௌரவத்தைக் காப்பதற்காக, செய்த கொலைகளையெல்லாம் தியாகங்களாகச் சித்தரிக்கும் காட்சியும் வசனமும் இடம் பெற்றது.. இங்கு நடைபெறுகிற ஆணவப் படுகொலைகள், சாதிய கொலைகள் அனைத்தின் பிண்ணணியிலும் குடும்ப கௌரவம் என்ற சொல் குருதியோடு ஒட்டிக் கொண்டு காவு கேட்டுக் கொண்டேயிருக்கிறது. குடும்பம் என்ற கட்டமைப்பு தனி மனிதனின் சிந்தனையை மழுங்கடிக்கிறது.

இதையெல்லாம் கண்டதால்தான், திருமணம் வேண்டாமென்று முரட்டு சிங்கிள்களாக உலவுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது…

அதிகாலை சூரியனையோ, பௌர்ணமியையோ, இரவுப் பயணத்தில் நிலாவையோ என்றாவது பார்த்திருக்கிறீர்களா.. நட்சத்திரங்களுடன் கதை பேசிக் கொண்டே வீடடைந்திருக்கிறீர்களா.. மாலையில் மேகங்கள் பல சித்திரங்களாக உருமாறுவதை ஆச்சரியமாகக் கவனித்திருக்கிறீர்களா.. வழியில் வாலைக் குழைத்து வரும் நாய்க்குட்டியைக் கொஞ்சியிருக்கிறீர்களா.. நம் வீட்டு செடியில் ஒரு குழந்தையின் வருகையைப் போல், பூ மலர்வதைக் கண்களை விரித்து ரசித்திருக்கிறீர்களா…?

ஒரு ரோபோ போல் புரோகிராம் செய்து வைக்கப்பட்ட இயந்திர வாழ்க்கையில், அவ்வப்போது உயிர்த்தலை அளிக்கும் அனைத்தையும் ரசிக்க துவங்கும் போது.. மனதின் எல்லா இறுக்கங்களும் விலகி இவ்வுலகம் புதிதாய் தெரியும்..

வெறும் இருத்தலில் நாட்களைத் தள்ளாமல், நிஜமாக வாழ்தலென்பது வரம்… சரி, தவறுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மழைக்காலத் தேநீரை ரசித்துப் பருகுவது போல வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் நமக்காக வாழத் துவங்குவோம்..!

Cheeeers☕

தொடர்ந்து நனைவோம்..!
அன்பாளினி அகிலா

தொடரின் முந்தைய கட்டுரைகள்:
  1. கொரோனாவும், பயணமும் - அகிலா ஸ்ரீதர்
  2. பெண்கள் தேவதைகள் அல்ல- அகிலா ஸ்ரீதர்