கேள்வி: என் தாய் படிக்காதவள் எப்போதுமே கரடுமுரடாகத்தான் பேசுவார். என் சிறுவயதில் ஒருமுறை தெருவில் வைத்து எல்லோர் முன்பும் திட்டியதால் அன்று முதல் அவளிடம் பேசுவதில்லை இன்றுவரை பேசுவதில்லை. கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் பேசாமலே இருக்கிறேன் ஒரே வீட்டில் இது அப்போது எழுந்த கோபமாக நீட்சி என்று தெரியவில்லை அவளிடம் திட்டைத் (வன் சொற்கள்) தவிர்க்கவே பேசாமல் இருக்கிறேன் அவர்களை மாற்றமுடியுமா என்று தெரியவில்லை இதை எப்படி எதிர்கொள்வது?

கமல், சென்னை.

பதில்: ஒருவரை உதாசீனப்படுத்த அல்லது காயப்படுத்த நம்மிடம் இருக்கும் எளிமையான வழிகளில் ஒன்று அவரிடம் பேசுவதைத் தவிர்ப்பது. ஒருவருடன் நாம் பேசுவது என்பதே அவருக்கு நாம் தரும் மரியாதை. ஒருவரின்மீது நாம் கொண்டிருக்கும் மதிப்பு என்பது அந்த உரையாடலுக்கு அவசியமானது. ஒரு தற்காலிக ஊடலின் நிமித்தம் அல்லது சிறு மனஸ்தாபங்கள் விளைவாக நாம் எப்போதும் யாராவது ஒருவரிடம் பேசுவதைத் தவிர்த்து கொண்டேதான் இருக்கிறோம். அவருடன் திரும்ப பேசுவது என்பது என்பத பல காரணிகளைப் பொறுத்தது. ஒரே வீட்டில் இருக்கிறோம் அல்லது அருகாமையிலேயே இருக்கிறோம் என்பதற்காக மட்டுமே நாம் நமது சண்டைகளை முடித்துக்கொள்வதில்லை. ஒரே வீட்டில் இருந்து கொண்டும் பத்து வருடங்களுக்கு மேலாக பேசாமல் இருக்கும் கணவன் மனைவிகளையெல்லாம் எனக்கு தெரியும்.

இதில் இருந்து நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ளலாம் ஏதோ சில நிர்ப்பந்தங்களின் நிமித்தமாக மனிதர்கள் சேர்ந்து இருக்கலாம். ஆனால் அன்பு? அன்பை நிர்ப்பந்தித்து பெறவும் முடியாது கொடுக்கவும் முடியாது. ஒருவருடன் உரையாடுவது என்பது பல நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. அதில் முக்கியமானது அவரின்மீது நாம் வைத்திருக்கும் அன்பு மற்றும் மதிப்பு. இவையே அவருடனான உரையாடலை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக இருக்கிறது. எந்தவித மதிப்போ அல்லது அன்போ இல்லாத ஒருவரிடம் அல்லது புதிதாக பேசும் ஒருவரிடம் நாம் பெரும்பாலும் கோபம் கொள்வது கிடையாது. அந்த நபர் நம்மை அவமானப்படுத்தினாலும் அல்லது நம்மை அசிங்கப்படுத்தினாலும்கூட அது அவ்வளவாக நம்மை பாதிப்பதில்லை.

அதுவே நாம் பெருமதிப்பு வைத்திருக்கும் ஒருவர் நம்மை ஒரு சிறு கடும்சொல் சொல்லிவிட்டால் அது நம்மை அத்தனை தூரம் பாதிக்கிறது. ஒரு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறது. இங்கு ஒருவர் என்ன சொல்கிறார் என்பதைவிட அதை சொல்கிறவர் நமக்கு யாராக இருக்கிறார் என்பது முக்கியமானது. ‘ஏன் நாம் பெரு மதிப்பு வைத்திருப்பவர்கள் எப்போதும் நம்மை காயப்படுத்துகிறவர்களாகவே இருக்கிறார்கள்?’. ஏனென்றால் அவர்கள்தான் நமது உணர்வுகளை சமநிலை இழக்கச் செய்கிறார்கள். நமது உணர்வுகளைத் தூண்டாமல் நம்மை யாராலும் கோபப்படுத்த முடியாது. அப்போது கோபம் என்பதே தூண்டப்பட்ட ஒரு அதீத உணர்வுநிலை. ஒரு அதீத உணர்வுநிலையில் நாம் செய்யும் செயல்களும் அல்லது எடுக்கும் முடிவுகளும் அந்த உணர்வுநிலையை சார்ந்ததாகதானே இருக்கும். அந்த நேரத்தில் எந்த விதமான தர்க்க கோட்பாடுகளும் நமக்கு விளங்காது. உங்கள் தாயின் செயல் அல்லது அவரின் உங்கள் மீதான ஒரு கடும்சொல் உங்களது உணர்வுகளைச் சமநிலையிழக்க செய்திருக்கலாம் அதன் விளைவாக உங்கள் தாயின்மீது அளவு கடந்த கோபம் வெடித்த தருணத்தில் உங்கள் தாயைப் பற்றி எதிர்மறையான சிந்தனைகள்தான் அதிகமாக இருக்கிருக்கும்.

அந்த எதிர்மறை எண்ணங்களின் அடிப்படையிலேயே உங்கள் தாயுடன் இனி எப்போதும் பேசுவதில்லை என்ற முடிவை நீங்கள் எடுத்திருக்க முடியும். இந்த முடிவு என்பது மாறக்கூடிய ஒன்றாகத்தான் இருந்திருக்கும். உங்கள் உணர்வு சமநிலையை நீங்கள் அடையும்போது நீங்கள் கொண்டிருந்த இந்த உணர்வு எவ்வளவு அபத்தமானது என்பது உங்களுக்குப் புரிந்திருக்கும். அது நிமித்தம் ஒரு சமரசத்தை தாயுடன் ஏற்படுத்திக்கொள்ள நீங்கள் விளைந்திருக்கலாம். ஆனால் உங்களது ஆளுமை அதை நிராகரித்திருக்கலாம். “நான்” என்பதின் மீதான உங்களது கறாரான தன்மை, உங்களின் சுயத்தின்மீது நீங்கள் கொண்டிருக்கும் ஈகோ என்பதுதான் அவருடன் உரையாடலைத்தொடர்வதில் உள்ள சிக்கல். நாம், நமது தவறுகளை அங்கீகரிப்பதைவிட அதன் காரணமாக மற்றவர்களின் தவறுகளைப் பூதாகரமானதாக மாற்றுவதையேதான் வழக்கமாக செய்து கொண்டிருக்கிறோம்.

உங்கள் தாய் “படிக்காதவர், கரடு முரடாக நடந்து கொள்பவர்” போன்ற விவரிப்புகள் எல்லாம் இதைதான் சுட்டுகின்றன. ஒரு நாள் நடந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் வாழ் நாள் முழுவதும் அவர்களுடன் பேசாமல் இருப்பது என்பது தவறான முடிவு. உங்களது தவறான முடிவை “நான்” என்ற ஈகோவை கலைந்துவிட்டு வெறும் கண்களுடன், திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வதின் வழியாகவே அந்த தவறான முடிவில் இருந்து மீண்டுவர முடியும். நாம் கொண்ட உறவுகளுக்கு இடையே மனஸ்தாபங்களும், கருத்து வேற்றுமைகளும் வருவது இயல்பானதே. அது நிமித்தமாக மோசமான சம்பவங்களோ அல்லது கடுமையான அனுபவங்களோ கூட ஏற்படலாம் அது அந்த நேரத்தில் ஒரு மிகப்பெரிய உணர்வெழுச்சியை நமக்குள் ஏற்படுத்தலாம் அதன் விளைவாக அந்த நபர் தொடர்பாக நமக்குள் பல எதிர்மறை எண்ணங்கள் ஏற்படும். இவை அத்தனையும் தற்காலிகமானதே.

ஒருவர் மீது நாம் கொண்டிருக்கும் அன்பும், மதிப்பும் இவைபோன்ற தற்காலிக நிகழ்வுகளுகெல்லாம் அப்பாற்பட்டது. அந்த நிக்ழ்வு சார்ந்து நாம் நம்மீது செய்துகொள்ளும் சுய விமர்சனம்தான் அந்த நபர்மீதான நமது அன்பை உறுதி செய்யும் ஒன்றாக அமையும். “நீ பேசியிருந்தால் அன்றைக்கே நான் பேசியிருப்பேன்” என பல வருடங்களுக்குப் பிறகு ஒருவரிடம் சொல்வதை காட்டிலும் “இப்படிப்பட்ட சின்ன சின்ன மனஸ்தாபங்களுக்கெல்லாம் உன்மீது நான் கொண்டிருக்கும் மதிப்பையும், அன்பையும் மாற்றிக்கொள்ள மாட்டேன் என அப்போதே சொல்வதுதான் அத்தனை மகத்துவமானது. அதனால் நீங்களும் உங்களை சுயவிமர்சனம் செய்துகொண்டு உங்களது தாயுடன் பேச தொடங்குங்கள்.

கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: manamkelvipathil@gmail.com