மனவெளி திறந்து-12 (கேள்வி – பதில்) டாக்டர். சிவபாலன் இளங்கோவன்





கேள்வி: உளவியல் அதீத உளவியலை நம்புகிறாதா? (பேய், பிசாசு, பூதம், அமானுஷ சக்தி இவற்றை ஏற்கிறாதா? இல்லை என்றால் பலர் பல ஆதர பூர்வ அனுபவம் இருக்கிறது, எனக்குகூட நிறைய நேர்ந்திருக்கிறது. இதனை அத்தனை எளிதாக கற்பனை, மன பிரந்தி என்று சொல்லிவிட முடியாது.)

சம்பத்குமார், மதுரை

பதில்: உளவியல் என்பது அறிவியல் பிரிவு. அறிவியல் இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது. ஒன்று, ஒரு நிகழ்வை தர்க்கரீதியாக விளக்குவது (அனுபவத்தின் அடிப்படையில் அல்ல) இரண்டாவது, அந்த நிகழ்வு எப்போது நடந்தாலும் ஒரே மாதிரியான விளைவுகளையே ஏற்படுத்தும் என்பதை நிரூபிப்பது. இந்த தர்க்க விளக்கம் மற்றும் நிரூபணம் இவை இரண்டை அடிப்படையாகக் கொண்டதுதான் அறிவியல். நீங்கள் அதீத உளவியல் என வரையறை செய்யும் அமானுஷ்ய சக்திகள், மூடநம்பிக்கைகள் போன்றவை அறிவியல் வரையறைக்குள் வராது. நீங்கள் “ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப் பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டு இருப்பது தனி நபர்களின் அனுபவங்களே. நான் முன்பே சொன்னதுபோல அறிவியல் இப்படித் தனி நபர்களின் அனுபவங்களை எப்போதும் அறிவியலாக ஏற்றுக்கொள்ளாது.
“எனக்கு கூட நடந்தது”, “நான் கூட பார்த்திருக்கிறேன்” என்ற தனிநபர் கூற்றுகளையே நாம் எந்த ஒரு மூடநம்பிக்கைகளுக்கும் ஆதாரமாக இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஒருவருக்கு மட்டும் ஏதோ ஒரு சூழலில், ஏதோ ஒரு மனநிலையில் ஏற்படும் அனுபவங்களை நாம் நிச்சயமாக அறிவியலாக கட்டமைக்க முடியாது.

அப்படி என்றால் இந்தப் பேய் பிசாசு அமானுஷ்ய சக்திகள் போன்றவைகளை நம்பும் மக்களின் மனநிலையை எப்படி புரிந்து கொள்வது? இதற்கான உளவியல் விளக்கம் என்ன?

உளவியல் துறை நீண்டகாலமாகவே இவைபோன்ற அமானுஷ்ய நம்பிக்கைகள் (Paranormal Brlief) என்று சொல்லக்கூடிய தர்க்க விளக்கத்திற்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகளுக்கு பின்னணியில் என்ன விதமான உளவியல் இருக்கிறது என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது. இதில் நீங்கள் கவனிக்கத்தக்க ஒரு விஷயம் ஒருவர் பேயை பார்த்து இருக்கிறேன் என்று சொன்னால் அவர் பொய் சொல்கிறார் என்று சொல்லி அறிவியல் அதை நிராகரிப்பதில்லை. அவர் சொல்வதை உண்மை என வைத்துக்கொண்டு அதற்குக் காரணத்தை ஆராய்கிறது.
இதுதான் அறிவியலின் அடிப்படை. நீங்கள் பொய்யையே சொன்னாலும்கூட அது ஒரு வேளை உண்மையாக இருக்குமோ என்ற வகையில்தான் அறிவியல் எப்போதும் ஆராய்ச்சியை மேற்கொள்கிறது. ஆனால் அறிவியலுக்கு எதிரானவர்கள்தான் இப்படி எந்தவகையான ஆழமான கேள்விகளும் இன்றி பொத்தாம்பொதுவாக அதற்கெதிரான கருத்துகளைப் பரப்புவார்கள். அறிவியல் எப்போதும் தன்னைத்தானே விமர்சனம் செய்து கொள்கிறது அந்த விமர்சனங்கள் வழியாகத்தான் உண்மையைக் கண்டடைகிறது. உண்மை மட்டுமே அறிவியலின் நோக்கம். மற்றாம் தேவை.

இப்போது நீங்கள் கேட்ட கேள்விக்கு வருவோம் இந்த அமானுஷ்ய சக்திகளின் மீதான நம்பிக்கைகளின் பின்னணியில் என்ன உளவியல் இருக்கிறது?

நமது மூளையின் செயல்கள் அத்தனை நுட்பமானது, ஆச்சரியமானதும் கூட. மூளையின் இந்த ஒரு தனிப்பட்ட செயலை மட்டும் எடுத்துக்கொண்டு பார்ப்போம்: நீங்கள் ஒரு மனிதரை பார்க்கிறீர்கள், பார்த்தவுடன் அவரின் பெயர் நினைவுக்கு வருகிறது, உடனடியாக அவரிடம் சென்று அவருக்கும், உங்களுக்கும் இடையேயான அனுபவங்களைப் பற்றி பேசுகிறீர்கள், இந்த சம்பவத்தில் மூளை என்னவெல்லாம் செய்கிறது என்று பாருங்கள், பார்வை என்ற புலனின் வழியாக கடத்தப்படும் அந்த நபரின் வேறு, வேறு பரிமாணங்களை ஆராய்ந்து அதன் அடிப்படையில் மூளை அந்த நபருக்கு ஒரு உருவத்தைக் கொடுக்கிறது அவரின் அடையாளங்களும், அவருடனான நமது அனுபவங்களும் மூளையின் வேறு, வேறு பகுதிகளில் இருந்து மீட்டெடுக்கப்படுகின்றன. இந்தச் செயல்களின் வழியாகவே நாம் அந்த குறிப்பிட்ட நபரை உணர்கிறோம். அந்த நபர் ஒரு ஆணா அல்லது பெண்ணா, உங்களுக்குத் தெரிந்தவரா அல்லது தெரியாதவரா, உங்களின் நண்பரா அல்லது பகைவரா, அவரின் பெயர் என்ன, அவர் என்னவெல்லாம் உங்களுக்குச் செய்திருக்கிறார் இவை அத்தனையும் பார்வை என்ற புலன்கள் தரும் தகவலின் அடிப்படையில் மூளை மீட்டெடுக்கும் செயல்கள்.

உணர்தல் (Perception) என்பது புலன்கள் அனுப்பும் தகவல்களுக்கு (Sensation) அர்த்தங்களைக் கொடுப்பது. அப்போது இவர் யார் என நீங்கள் உணர வேண்டுமானால் அதற்கு முதல் தேவை உங்களது புலன்கள் தகவல்களை அனுப்ப வேண்டும். சில நேரங்களில் குறிப்பாக நாம் மிக பதட்டமாக இருக்கும் தருணங்களில் மூளை தன்னிச்சையாகச் செயல்பட்டு, அதாவது எந்த ஒரு புலன்களும் தகவல்களை அனுப்பாமலேயே ஒரு உணர்தலை ஏற்படுத்தும் இதைதான் perception occurs without any sensation என கூறுவார்கள்.

உதாரணமாக ஒரு அடர்ந்த இருட்டில் நீங்கள் தனியாக இருக்கும்போது ஒரு சிதிலமடைந்த ஒரு பெண் உருவத்தை பார்க்கிறீர்கள். உங்களைப் பொறுத்தவரையில் அந்த உருவம் நிஜம் ஆனால் அப்படி ஒரு பெண்ணே அங்கு இல்லை இதற்குக் காரணம் மூளையின் perception occurs without any sensation செயலே. அந்த அறையில் யாரும் இல்லாவிட்டாலும் கூட ஒரு பதட்ட மன நிலையால் மூளை தன்னிச்சையாகச் செயல்பட்டு பெண் என்னும் உணர்தலை உங்களுக்குள் ஏற்படுத்துகிறது அதைத்தான் நாம் அமானுஷ்ய சக்திகள் என புரிந்துகொள்ளுகிறோம். அதேபோல இப்படிப்பட்ட மனநிலையில், புலன்கள் அனுப்பும் ஒரு தகவலை மூளை தவறாக, வேறு ஒன்றாக அதை உணர்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
உதாரணத்திற்கு ஒரு நடு இரவில் உங்கள் வீட்டிலிருந்து வெளியே செல்கிறீர்கள், உங்கள் மனம் முழுக்க அத்தனைப் பதட்டமாய் இருக்கிறது, அப்போது உங்கள் வீட்டு வாசலில் ஒரு நீண்ட கயிறு கிடைக்கிறது, அந்த கயிறை நீங்கள் பாம்பாக நினைத்துக்கொண்டு அலறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இயல்பாகவே, சில நேரங்களில் நமது மனநிலையை பொறுத்து இத்தகைய அனுபவங்கள் நமக்கு ஏற்படும். இவைகளைத்தான் நாம் அமானுஷ்ய சக்திகள் என நினைத்துக்கொள்கிறோம். நீங்கள் சொல்வதுபோல இவை மனப்பிராந்தி இல்லை, அதாவது கற்பனையல்ல. முழுக்க முழுக்க நிஜம். நிஜமாகவே அவரது உருவத்தைப் பார்க்கிறோம், நிஜமாகவே அவரது குரலைக் கேட்கிறோம், அதற்கு நிஜமாகவே ஒருவர் அல்லது ஒரு சக்தி அங்கு இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

முந்தையை கேள்வி -பதில்:https://bit.ly/2El2mEH

கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி: manamkelvipathil@gmail.com


Tags:
டாக்டர். சிவபாலன் இளங்கோவன், உளவியல் அதீத உளவியல், பேய், பிசாசு, பூதம், அமானுஷ சக்தி, Paranormal Brlief), Sensation, perception occurs without any sensation