கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவிற்கு பின்னர் இந்தியப் பொருளாதாரம் நாள் ஒன்றுக்கு சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் வருமான இழப்பைச் சந்தித்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு அறிவித்துள்ளது நாடு தழுவிய ஊரடங்கைத் தொடர்ந்து இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் பெரும்பங்கு வகிக்கும் விவசாயம், சுரங்கம், உணவு விநியோக சேவைகள், வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து  வர்த்தக நிறுவனங்கள், ஏற்றுமதி இறக்குமதி மற்றும் சில்லறை வணிகம் என ஒட்டுமொத்தமாக 70 சதவீத அளவு தினசரி வருமான வர்த்தகங்கள் முடங்கிப் போயுள்ளன.

இதனால் இந்தியா முழுவதும் உள்ள 7 கோடி சிறு குறு மற்றும் பெரிய வர்த்தகங்களை உள்ளடக்கிய சில்லறை வணிகத் துறை கடந்த ஒரு மாதத்தில் 5.33 லட்சம் கோடி வர்த்தக இழப்பை சந்தித்துள்ளது. இதனை‌ நம்பியுள்ள 45 கோடி மக்களின் வாழ்வாதாரம் பெரும் கேள்விக் குறியாக மாறியுள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட முதல் 15 நாட்களில் மட்டும் சரக்கு போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள தனியார் வாகன உரிமையாளர்களுக்கு சுமார் 35,200 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் நாடு முழுவதும் சுமார் 93 லட்சம் சரக்கு போக்குவரத்து வாகனங்களின் சேவை முற்றிலுமாக முடங்கிப் போயுள்ளன என்று அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் அறிக்கையின்படி இந்திய ரியல் எஸ்டேட் துறை 1 லட்சம் கோடி இழப்பை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் ஊரடங்கால் முடங்கிப் போயுள்ள இந்த காலகட்டத்தில் சர்வதேச அளவில் கடும் சரிவை சந்தித்துள்ள உலக பொருளாதார மந்தநிலையால் இந்திய பொருளாதார வளர்ச்சி மீண்டெழுவதற்கான சாத்தியங்கள் தற்போது இல்லை என்று தெரிவித்துள்ளது சென்ட்ரல் இன்ஸ்டிடியூஷனல் ரிசர்ச் எனும் தரக்குறியீட்டு நிறுவனம்.

இந்திய உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 2020-21ம் நிதியாண்டில் ஒற்றை இலக்க குறியீட்டுடன் உள்ளது எனவும் நாடு தழுவிய முழுமையான ஊரடங்கு காலத்தில் இந்தியா சுமார் 7 முதல் 8 லட்சம் கோடி வரை வர்த்தக இழப்பைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்துள்ளது அந்த நிறுவனம்.

கொரோனா வைரஸ் பரவல் உலகப் பொருளாதாரத்தை சீர்குலைத்தது மட்டுமல்லாமல், இந்திய நிதியாண்டின் இறுதி மாத தொடக்கத்தில் முடக்கப்பட்ட தொழிற்நிறுவனங்களால் கிட்டத்தட்ட முழுமையான வேலை நிறுத்தம் ஏற்பட்டு நாடு முழுவதும் 90 சதவிகித மக்களுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கால் போக்குவரத்து, ஹோட்டல்கள் விருந்தோம்பல் மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் கடுமையான இடையூறு ஏற்படும் அபாயங்கள் உள்ளன என்று அக்யூட் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய 2020-21 முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 1.5 சதவீதம் அதிகரித்து 2.8 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. இது 1991 ஆம் ஆண்டின் பொருளாதார சீர்திருத்தங்களுக்குப் பின்னரான காலத்தில் கவனிக்கப்படும் மிக குறைவான வளர்ச்சி விகிதமாகும்.

ADB எனப்படும் ஆசிய அபிவிருத்தி வங்கி இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்த நிதியாண்டில் 4 சதவிகிதமாக குறைய வாய்ப்புள்ளது என்று கூறியுள்ள இதே வேளையில் எஸ் அண்ட் பி குளோபல் மதிப்பீட்டு நிறுவனம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை 5.5 சதவிகத்தில் இருந்து 3.5 சதவீதமாகக் குறைந்துள்ளது.

ஏற்கனவே மூடிஸ் இன்வெஸ்டர்ஸ் சர்வீஸ் எனும் நிறுவனம் 2020 காலண்டர் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த மதிப்பீட்டை 2.5 சதவீதமாகக் குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் தொற்று உலகப் பொருளாதாரத்திற்கு கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தினாலும் இந்திய பொருளாதாரத்திற்கு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்துச் சென்றுள்ளது.

மத்திய மாநில அரசுகள் உடனடியாக இதுபற்றி தேசிய பேரிடர் கால நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் இந்தியா கடுமையான நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனை குழுவின் உறுப்பினரும் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.